ஜெயமோகனும் நானும்…

ஜெயமோகனுக்காக எழுதிய கடிதத்தைப் பதிவு செய்து விட்டுப் பார்த்த போது ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. அமெரிக்காவில் வசிக்கும் ஒரு ஆள் – ஜெயமோகனின் கூடாரத்தில் இருந்தவர் – ஏதோ காரணத்தால் அவரைப் பகைத்துக் கொண்டு என் பக்கம் வந்து முழ நீளத்துக்கு ஜெயமோகனை அவமதித்து ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தைப் பிரசுரம் செய்து அந்த ஆளைக் கன்னாபின்னா என்று திட்டி ஒரு பெரிய கட்டுரை எழுதினேன். அதற்குப் பிறகு நடந்ததுதான் வேடிக்கை. இன்று அதே ஆள் ஜெயமோகனின் தானைத் தளபதிகளில் ஒருவர். எனக்கு அந்த ஆளின் கடிதத்தை இன்னமும் மறக்க முடியவில்லை. என்ன ஒரு வன்மம். ஒரு எழுத்தாளனின் மீது என்ன ஒரு அவமரியாதை! இப்போது அதே ஆள் என்னைத் திட்டிக் கொண்டிருக்கிறார். இவர்களெல்லாம் என்ன இலக்கியத்தைப் படித்து மயிர் பிடுங்கப் போகிறார்கள்? அந்தக் கட்டுரையில் நான் எழுதியிருந்தது நன்கு ஞாபகம் இருக்கிறது. ஜெயமோகனைத் திட்டினால் நான் குஷியாகி விடுவேன் என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது. இதில் ஆங்கில மயிர் வேறு! ராஸ்கல்ஸ். அதைப் போலவேதான் மாவு மேட்டரிலும் நடந்தது. எப்போதடா எழுத்தாளன் வழுக்கி விழுவான். சவுக்கால் அடிப்போம் என்று இந்த சமூகமே காத்துக் கிடந்தது போல் ஜெயமோகனைத் திட்டினார்கள். அவர் மருத்துவமனையில் இருந்ததைப் புகைப்படம் போட்டால் பக்கத்தில் வாட்டர் பாட்டில் இருந்ததற்கு என்ன திட்டு திட்டினார்கள்! தொலைக்காட்சிகளில் கூட திட்டினார்கள். ஜெயமோகனின் நண்பர் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பேர்வழி வேறு வகைதொகை தெரியாமல் கேஸ் ஸ்ட்ராங் ஆவதற்காக ஜெயமோகன் மருத்துவமனையில் இருக்கிறார் என்று எழுதித் தொலைத்தது. பெண்ணின் மீது மாவை விட்டெறிந்தார் என்று பெண்ணியவாதிகளும் அவர் மீது வசை பாடினார்கள். நான் மட்டுமே ஜெயமோகனின் பக்கம் வாதிட்டேன். எழுத்தாளன் அப்படித்தாண்டா இருப்பான், நீங்கள் யாரடா மூடப் பதர்களே அவனை விமர்சிப்பதற்கு என்று கேட்டேன். இதுவே ஒரு டிவி நடிகன் என்றால் ஓடிப் போய் சேவகம் செய்வான் அல்லவா அந்த ரவுடி? அதைத்தான் கேட்டேன். இந்த சமூகம் எழுத்தாளனை மதிக்காத சமூகம். இங்கே நாம்தான் சூதானமாக இருந்து கொள்ள வேண்டும். ஜெயமோகன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தத் தெரியாதவர். அது அவரது வாழ்க்கை முறை. அந்த ஊர்ப் பக்கமெல்லாம் ரொம்ப சூதுவாதான மனிதர்கள் நிரம்பிய பகுதி. அங்கே போய் இப்படி ஒரு அப்புரானியான மனிதர் வாழ்வது எனக்கு எப்போதுமே ஆச்சரியம்தான். என் நண்பர்களிடம் அடிக்கடி இது பற்றி நான் சொல்லி ஆச்சரியப்படுவதுண்டு.

இப்படி கடந்த 30 ஆண்டுகளாக எந்த ஒரு தருணத்திலும் நான் ஜெயமோகனை விட்டுக் கொடுத்ததில்லை. அவரைக் கடுமையாகத் திட்டிக் கொண்டிருந்த காலத்திலும் கூட. இந்த விஷயம் பிச்சைக்காரனின் இந்தக் கடிதத்தைப் படித்ததும் ஞாபகம் வந்தது.

அன்புள்ள சாரு
ஜெயமோகனை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைப்பதாக எழுதியிருக்கிறீர்கள். ஜெயமோகனுடன் கருத்தியல் ரீதியான கடும் மோதலில் நீங்கள் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் , ஒரு வாசகர் ஜெயமோகனைத் தவறாக பேசினால் நீங்கள் பாராட்டுவீர்கள் என நினைத்து அவரைத் தவறாக பேசினார். அவரை கடுமையாக திட்டி அவரை உங்கள் நட்பு வட்டத்தில் இருந்தே வெளியேற்றினீர்கள்

அந்த கால கட்டத்தில் வெளிவந்த கட்டுரைகளில் அவரது மகன் குறித்து உரிமை கலந்த அன்புடன் குறிப்பிட்டிருப்பீர்கள். நானும் அவனும் ரஜினி ரசிகர்கள் என்ற முறையில் எங்களுக்குள் பேச பல விஷயங்கள் இருந்தன என சிறுவனாக இருந்த அஜிதனைக் குறிப்பிட்டு எழுதியிருப்பீர்கள்.
தனிப்பட்ட முறையில் பேசும்போதுகூட அனைவரையும் உயர்வாகக் குறிப்பிட்டாலும் ஜெயமோகனை விசேட மரியாதையுடன் குறிப்பிடுவதை பலரும் அறிவார்கள்.
எழுத்தாளர்களை தமிழச்சமூகம் மதிப்பதில்லை என எழுதும்போது , இப்படி எழுதியிருப்பீர்கள் ; என்னையெல்லாம் விடுங்கள். ஜெயமோகனெல்லாம் ஐரோப்பிய நாடுகளில் பிறந்திருந்தால் சொற்பொழிவுகளில் மட்டுமே லட்சக்கணக்கில் ஊதியம் பெற்றிருப்பார் என எழுதியிருப்பீர்கள்.
இவையெல்லாம் அவரை கடுமையாக விமர்சித்து வந்த காலகட்டத்தில்…

இப்போது ஒரு ஞானி போல கனிந்த நிலையில் இருக்கும் நீங்கள் அவரை உங்கள் நூல்களில் உரைகளில் தொடர்ந்து மேற்கோள் காட்டுவது வேறு விஷயம்
பழைய கால கட்டத்திலுமேகூட அவர் மீதான மரியாதையை பதிவு செய்திருக்கிறீரகள் என்பதுதான் வரலாறு
சில எழுத்தாளர்களின் நூல்களை உங்கள் வாசகர்கள் படிப்பதைப் பாரத்தால் உரிமையுடன் கண்டிப்பீர்கள்.
ஆனால் ஜெயமோகன் எழுத்துடன் கருத்தியல்ரீதியான விமர்சனங்கள் இருந்தாலும் அவரை உயர்வாகவே குறிப்பிட்டுவந்திருக்கிறீர்கள்
பழையவற்றை நினைத்துப்பார்த்தால் உங்கள் மீதான நேசம் அதிகரிக்கிறது
லவ் யூ சாரு
அன்புடன்

பிச்சைக்காரன்