மனு ஸ்மிருதி

மனு ஸ்மிருதி பற்றிக் கருத்து கூறுபவர்கள் பெரும்பாலும் மனுவைப் படித்தது இல்லை. ஒரு வார்த்தை கூட. நான் அதை ஆங்கிலத்திலும் தமிழிலும் பலமுறை வாசித்திருக்கிறேன். இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளும் சரி தானா என்றும் சம்ஸ்கிருதத்தோடு ஒப்பிட்டும் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் சில சமயங்களில் மொழிபெயர்ப்பாளர்களே தங்கள் வசதிக்கேற்ப தகிடுதித்தங்கள் செய்வதுண்டு.

இப்போது மனு ஸ்மிருதி பற்றிய பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு இது எல்லாமே ஒரு கேளிக்கை. இலக்கிய வாசிப்பே இல்லாத ஒரு கூட்டத்தில் இது எதிர்பார்க்கக் கூடியதும்தான். இது குறித்து எழுத வேண்டாம் என்றே முடிவு செய்தேன். ஏற்கனவே மொழி என்ற கட்டுரை மூலம் பிராமணர்களிடமிருந்து ஏச்சும் பேச்சும் அ-பிராமணர்களிடமிருந்து பிராமண அடிவருடி, இந்துத்துவா என்ற வசைகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறேன். திரும்பவும் சொல்கிறேன். எனக்கு பிராமணக் கொச்சை ரொம்பவும் பிடிக்கும். அதேபோல் எல்லா பேச்சு வழக்கும் பிடிக்கும். கொங்குத் தமிழ், நாஞ்சில் தமிழ், பிள்ளைமார் தமிழ், பிராந்தியவாரியான இஸ்லாமியர் தமிழ், குறிப்பாக நாகூர் தமிழ் எல்லாமே பிடிக்கும். இதில் பெரும்பாலானவை அழிந்து போய் விட்டன. காரணங்கள் பல. முக்கியக் காரணங்கள் இரண்டு. ஒன்று, தமிழே இன்று ரொம்ப மொண்ணையாக்கப்பட்டு விட்டது. இன்னொன்று, இந்த இனக்குழு வாரியான பேச்சு மொழியை மக்கள் ஜாதியோடு சம்பந்தப்படுத்திக் கொள்கிறார்கள். பிராமணக் கொச்சை பிராமணனுக்குத் தெரியவில்லை. அவன் பொதுத் தமிழைப் பேசுகிறான். இதுதான் என் குற்றச்சாட்டு. ஆனால் ஒருசிலர் பொதுவெளியில் வந்து பிராமணக் கொச்சையைப் பேசி கல்லடி படுகிறார்கள். பட வேண்டியதுதான் என்று நான் எழுதினால் பிராமணர்கள் திட்டுகிறார்கள். எவ்வளவு விளக்கினாலும் புரியாதா? நைட்டியைப் போட்டுக் கொண்டு கோவிலுக்கு வராதீர்கள் என்றால் புரியாதா? அவ்வளவுதான். வீட்டில் பேச வேண்டியதை வெளியே கொண்டு வராதீர்கள். ஆனால் இவர்கள் வீட்டிலும் பேசுவதில்லை. தங்கள் தனித்தன்மையை இழந்த அனாதைகள் நாலு நிரட்சரகுட்சிகள் கிரிக்கெட் வர்ணனையில் பிராமணக் கொச்சையில் உளறும்போது புளகிக்கிறார்கள்.

இன்னும் ஒரு உதாரணம் தருகிறேன். சென்னை விளிம்புநிலை மாந்தர் மொழி. த்தா, போய்னே இருந்தெ(ங்)… ம்மால போதைல வந்து மோத்றான் த்தா… இதன் விரிவு, ங்கோத்தா, நான் பாட்டுக்குப் போய்க் கொண்டு இருந்தேன், போதையில் வந்து மோதுகிறான் ங்கொம்மால. இது ஒரு அற்புதமான சென்னை மொழி. இதை ஒருவர் வந்து தொலைக்காட்சியில் பேசினால் எப்படி இருக்கும்? அதேதான் பிராமணக் கொச்சையை ஊடகத்தில் கேட்டாலும் இருக்கிறது. மேலும், நாலு பேரும் பிராமணர்கள். வேறு சாதியே அங்கே இல்லை. இது எதைக் காட்டுகிறது?

இப்படியாக நான் சொல்வது எதையுமே புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் திட்டிக் கொண்டிருப்பதால்தான் மனு பற்றியும் பேசவில்லை. மனு ஸ்மிருதியை விமர்சித்துத்தான் எழுதுவேன். எழுதினால் ஏற்கனவே இந்தியப் பாரம்பரியத்தின் மீது பெரியாரிய நெருப்பை வைத்துக் கொளுத்திக் கொண்டிருக்கும் அரைகுறைகளின் பக்கம் பேசுவது போல் இருக்கும். ஒரு பக்கம் இந்துத்துவ வெறியர் கூட்டம். இன்னொரு பக்கம் எதுவுமே தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத அரைவேக்காட்டு அரசியல் கூட்டம். இதில் நான் ஒரு கருத்தைச் சொன்னால் என்னையும் எதிலோ ஒன்றில்தான் சேர்க்க ஆசைப்படுகிறார்கள். இந்த நிலையில்தான் எதைப் பற்றியுமே கருத்து சொல்லாமல் வாளாயிருக்க வேண்டியிருக்கிறது.

இந்தக் கட்டத்தில் ஜெயமோகனின் பின்வரும் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நான் எழுதியதாகவே கொள்கிறேன். நீங்களும் அப்படியே எடுத்துக் கொள்ளலாம். ஜெ. என் பளுவைக் குறைத்து விட்டார்.