172. டிஸம்பர் 18

அந்நியன் சமாச்சாரத்தை இனி ஒருபோதும் எழுத மாட்டேன்.  அது என் வாசகர்களுக்குக் கொஞ்சம் மனக்கிலேசத்தை அளிப்பதாக அறிகிறேன்.  இவர் ஏன் இதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதாகவே பல கடிதங்கள் வந்துள்ளன.  இனி அந்த சப்ஜெக்டைத் தொட மாட்டேன்.  அதுவே கடைசி. 

நான் தீபாவளி அன்று ஊரில் இருக்கத் தேவையில்லை; பொங்கலுக்கும் இருக்க வேண்டாம்; ஏன், ஊரே கொண்டாட்டமாய்க் கிடக்கும் ஜனவரி ஒன்று கூட ஊரில் இல்லாமல் போனால் அத்தனை பிரச்சினை வராது.  ஆனால் டிசம்பர் 16 நான் ஊரில் இருந்தே ஆக வேண்டும்.  ஊரில் என்றால் வீட்டில் என்று பொருள்.  வருஷம் பூராவும்தான் தனியாய்க் கிடக்கிறேன், என் பிறந்த நாள் அன்றாவது வீட்டில் இருந்து தொலை என்பது அவள் பிராது.  ஒவ்வொரு பெண்ணும் புருஷன் எப்போதடா ஊருக்குப் போவான், கொஞ்சம் ஃப்ரீயாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.  இவள் இப்படி.  டிசம்பர் 16 அன்று ஊரில் இருப்பதால் டிசம்பர் 18-உம் ஊரில்தான் இருக்க வேண்டும்.  வருஷம் பூராவும் வீட்டுச் சிறையில் கிடக்கிறேன், என் பிறந்த நாள் அன்னிக்காவது கொஞ்சம் நண்பர்களோடு குடித்துக் கொண்டாடி ஜாலியாக இருக்கக் கூடாதா என்று கேட்க வேண்டும் என்று தோன்றும்.  நம்மை நாமே காட்டிக் கொடுத்துக் கொள்ளக் கூடாது என்று சும்மா இருந்து விடுவேன்.  ஆக, மொத்தத்தில் பிறந்த நாளை என் விருப்பப்படி ஜாலியாகக் கொண்டாடியதே இல்லை.  இருங்கள்.  நான் எழுத்தாளன் என்பதால், என் கதையை நானே சொல்லிக் கொள்ளும் அனுகூலம் இருக்கிறது.  என் கதையை அவந்திகாவிடம் கேட்டால் அவள் வேறு மாதிரி சொல்வாள்.  இவர் வீடே தங்கினதில்லை,  ஏதோ கடந்த ரெண்டு வருஷமாத்தான் பிறந்த நாள் அன்று வீட்டில் இருக்கிறார் என்பாள்.

எது எப்படியோ, கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் 18 அன்றும் மிலிட்டரி ரெஜீமில்தான் இருந்து கொண்டிருக்கிறேன்.  நல்லவேளை, மாலை நேரம் மட்டும் கொண்டாட்டமாகக் கழிந்து விடும், ராம்ஜி புண்ணியத்தில்.  தமிழ்நாடு கிரிக்கெட் க்ளப்பின் மொட்டை மாடியில் – சென்னையில் எனக்கு மிகப் பிடித்த இடங்களில் அது ஒன்று – பதினைந்து நண்பர்களுக்கு விருந்து கொடுப்பார் ராம்ஜி.  பதினைந்து பேரில் பத்து பேர் மது அருந்த மாட்டார்கள்.  செல்வா, ஸ்ரீராம் போன்ற டீடோட்டலர்கள் கொஞ்சம் பேர், மீதிப் பேர் வண்டி ஓட்ட வேண்டும் என்று வடை பஜ்ஜியும், அசைவர்களாக இருந்தால் சிக்கன் மட்டன் என்றும் ஒதுங்கி விடுவார்கள்.  நான் பொதுவாக ரெண்டு பாட்டில் ஒயின் சாப்பிடுவேன்.  ஆனால் சந்திப்பு முடிந்து தாலிபான் பகுதிக்குள் நுழைய வேண்டும் என்பதால் ரெண்டு கிளாஸோடு முடித்துக் கொள்வேன்.  ரெண்டு கிளாஸையெல்லாம் அம்மணியால் கண்டு பிடிக்க முடியாது. (என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ’இப்டி லிமிட்டா இருந்தா சரி, கண்டுக்காம விட்ருவோம்’ என்று கூட இருக்கலாம்.)  என்னைப் பொறுத்தவரை ரெண்டு கிளாஸோடு நிறுத்துவதெல்லாம் என் தேசத்துக்கே செய்யும் அவமானம். உலகம் பூராவும் ’இந்தியக் குடி’ என்றால் என்ன அர்த்தம் கொண்டு இருக்கிறது?  குடித்தால் நினைவு தப்பும் வரை குடிப்பதுதானே நம் தேசியப் பாரம்பரியம்?  ஆனால் நான் man of extremes என்ற காரணத்தால் ரெண்டு போத்தல் அடித்தாலும் நிதானம் தவறாது.  அது சிலருக்கே வாய்த்தது.  எல்லாம் பழைய கதை.  இப்போதைக்கு ஆண்டுக்கு ஒருமுறை ரெண்டு கிளாஸ் ஒய்ன் என்பதுதான் எதார்த்தம்.

ஆனால் இந்த ரெண்டு கிளாஸ் ஒய்னால் சென்ற ஆண்டு எனக்குப் பத்தாயிரம் ரூபாய் நட்டமாகி விட்டது.  என் நண்பர் ஒருவர் பிறந்த நாள் பரிசாக எனக்கு ஒரு கவர் கொடுத்தார்.  கவருக்குள் கரன்சி என்பது தெரிந்தது. பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டேன்.  வீட்டுக்கு

வந்ததும் மறந்து போனேன்.  மறந்ததற்குக் காரணம் ரெண்டு கிளாஸ் ஒய்ன்.  முன்புபோல் ஒய்ன் வழக்கமாக இருந்தால் தெரியாது. வருடத்துக்கு ஒருமுறை என்றால் சுற்றுகிறது.  காலையில் பார்த்தால் பேண்ட்டுக்குள் கவர் இல்லை.  ரெண்டு நாள் கழித்து கவர் பற்றிச் சொன்னாள் அவந்திகா.  ”பத்தாயர் ருவா இருச்சுப்பா.  பத்தாயர் ருவாய்க்கு ஒரு செலவு இருந்திச்சு.  என்ன பண்லாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்.  இதை எடுத்துக்கவா?”  என்ன பதில் சொல்ல முடியும்?  ரெண்டு கிளாஸ் ஒய்னுக்குப் பத்தாயிரம் ரூபாய் நட்டமா?  “இதையெல்லாம் என்னம்மா கேட்டுக்கிட்டு?  சே.  எடுத்துக்க.  உனக்கு இல்லாததா?”

பத்தாயிரம் ரூபாய்க்கு ஏன் எனக்கு இந்த மனக்குழப்பம் என்றால் அந்தப் பணம் எல்லாம் காந்திக் கணக்கில் போய் விடும்.  காந்திக் கணக்கு என்றால், தர்மம்.  டிசம்பர் பதினெட்டா?  அடுத்த மாதம் பொங்கல்.  அப்போதுதான் ஒரு பணிப்பெண் வந்து சேர்ந்திருந்தார்.  இருபத்திரண்டு வயதுதான் இருக்கும்.  அந்தப் பெண்ணுக்கு பொங்கலுக்கு ஒரு சுடிதார் எடுக்க வேண்டும்.  இத்தனைக்கும் கிறிஸ்தவப் பெண்.  ஆனால் அவந்திகாவுக்கு எடுப்பதால் அவருக்கும் எடுக்க வேண்டுமாம்.  எல்லாம் அவந்திகாவின் யோசனை.  ஏழைகளுக்கு உதவுவது என்ன பாவமா?  தப்பே இல்லை.  ஆனால் அவந்திகாவின் ராசி என்னவென்றால், அவள் யாருக்காவது செய்தால் அவர்கள் வேலையை விட்டு நின்று விடுவார்கள்.  நான் ஒன்றும் வாய் திறக்கவில்லை.  திறந்தால் நீ வாய் வைத்தாய் அதனால் நின்று விட்டாள் என்று என் மீது பிளேட்டைத் திருப்புவாள்.  அந்தக் கிறிஸ்தவப் பெண்ணும் சுடிதார் வாங்கிக் கொண்டதும் வேலையை விட்டு நின்று கொண்டார்.  ஒன்றரை மாதம்தான் வேலை செய்தது. சுடிதாருக்கு மூவாயிரம் காலி.  தனக்கு மூவாயிரத்துக்கு சுடிதார் வாங்கியதால் பணிப்பெண்ணுக்கும் அதே விலையில் வாங்க வேண்டுமாம்.  சின்னப் பெண் அப்பா, பாவம்.  அவள் இஷ்டத்தில் நான் குறுக்கிடுவதில்லை.  இப்படியே தர்ம காரியங்களில் என் பிறந்த நாள் பரிசு பத்தாயிரமும் காலி.

பொதுவாக இப்படி வரும் பணத்தை நான் ரொம்பக் கமுக்கமாக ஒளித்து வைத்து விடுவேன்.  என் நூலகப் புத்தகங்களைப் பிரித்தால் அவற்றில் அவ்வப்போது நீங்கள் ஐநூறு ரூபாய் நோட்டுகளைப் பார்க்கலாம்.  எல்லாம் இந்த மாதிரி ஒளித்ததுதான்.  இப்படியாவது ஒளிந்து கிடக்கட்டும், ஏழைகளுக்கு உதவக் கூடாது என்கிறாயா என்று நீங்கள் கேட்கலாம்.  நான் என்ன செய்யட்டும்?  இவள் உதவினால் அவர்கள் வேலையிலிருந்து நின்று விடுகிறார்கள்.

இது சென்ற வார தீபாவளி உதாரணம். ஒன்பதாயிரம் ரூபாய்க்கு பத்து துப்புரவுத் தொழிலாளிகளுக்கும் புடவை வாங்கிக் கொடுத்தாள் இல்லையா? அதில் மூன்று பேரை கடவுளே நிறுத்தி விட்டார்.  அவர்களை வேறு சரகத்துக்கு மாற்றி விட்டதால் புதியவர்கள் வந்திருக்கிறார்கள்.  பழையவர்கள் வயதில் மூத்தவர்கள்.  தர்மத்துக்கும் யேசுவுக்கும் கட்டுப்பட்டவர்கள்.  (சாதிக் கொடுமையால் கிறிஸ்தவத்துக்கு மாறியவர்கள்)  புதியவர்கள் இளைஞர்கள்.  காலையில் எட்டு மணிக்கு வர வேண்டும்.  மதியம் ஒரு மணிக்கு வருவார்கள்.  வந்த பிறகும் பத்தும் நிமிடம் குப்பைகளை இடமாற்றம் செய்து விட்டுப் போய் விடுவார்கள்.  ஒரு பையனிடம் கேட்டேன்.  இவுங்க குடுக்குற பிசாத்துக் காசுக்கு இதுவே அதிகம் சார் என்றான். 

எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுத்தம் செய்யும் இரண்டு பணிப்பெண்களும் புடவை வாங்கிக் கொண்ட பிறகு பனிரண்டு மணிக்குத்தான் வருகிறார்கள்.  முன்பு ஒன்பது மணிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.  அதனால் அவந்திகாதான் கீழே போய் தரைத் தளத்தை சுத்தம் செய்கிறாள்.  ஒரு சர்விஸ் மாதிரி பண்றேம்ப்பா என்றாள்.  செய் செய் என்று சொல்லி விட்டேன்.  நான் அவளுடைய எந்த வேலைக்கும் குறுக்கே நிற்பதில்லை. அவள் அரசியலுக்குப் போயிருந்தால் சுட்டுக் கொன்றிருப்பார்கள். குடும்பத்தில் இருப்பதால், அதுவும் ஒரு எழுத்தாளனைக் கல்யாணம் செய்து கொண்டிருப்பதால் சுதந்திரமாக இருக்கிறாள்.  இரவு ஒரு மணிக்குப் படுத்து (அதுவரை ஆன்மீக நூல் வாசிப்பு) காலை(!) ஒன்பது மணிக்குத் திருப்பள்ளி எழுச்சி.  ஒன்பதரை வரை தியானம்.  பத்து மணிக்கு பூனைகளுக்கு உணவு எடுத்துக் கொண்டு கீழே போனால் முன்பெல்லாம் பத்தரைக்கு வருவாள்.  இப்போது புடவை எடுத்துக் கொடுத்ததிலிருந்து தரைத் தளத்தைப் பெருக்கி விட்டு பதினொன்றரைக்கு வருகிறாள்.  அப்புறம்தான் காலை உணவு. 

அதனால் இந்தப் பிறந்த நாள் சந்திப்பில் யாரேனும் கவர் கொடுத்தால் அப்படியே ராம்ஜியிடம் கொடுத்து விடலாம் என்று இருந்தேன்.  அதுதான் ரொம்பப் பாதுகாப்பான இடம்.  அப்புறமாக அவர் எனக்கு ஜிபே மூலம் அனுப்பி விடுவார்.  ஆனால் அதற்கு வழியில்லாமல் கொரோனா கெடுத்து விட்டது.        

கொரோனா புண்ணியத்தால் வருடத்துக்கு ஒருமுறை கிடைக்கும் ரெண்டு கிளாஸ் ஒய்னுக்கும் கேடு வந்தது.  இந்த டிசம்பர் பதினெட்டை வீட்டுக்குள்ளேயே கொண்டாடி விடலாம் என்று முடிவு.  கொரோனா மட்டும் காரணம் அல்ல.  அசோகாவை முடிக்காமல் வெளியே கிளம்பக் கூடாது என்ற எண்ணமும் சேர்ந்து கொண்டது.  இல்லாவிட்டால் இந்நேரம் நான் கோவாவில் இருக்க வேண்டிய ஆள்.  என் வட இந்திய நண்பர் ஒருத்தர் கோவாவில் ஒரு ஹெரிடேஜ் பங்களா வைத்திருக்கிறார்.  இன்னும் இரண்டு மாதம் இந்த வீட்டில் தனியாகத்தான் இருப்பேன், வாருங்கள் என்று அழைத்தார்.  கடலுக்கு எதிரே கோட்டை போன்ற பழங்காலத்து வீடு.  பணியாட்கள் உண்டு. பார் உண்டு. நெருங்கிய நண்பர்.  போகவில்லை.  அசோகா அசோகா என்றேன்.  என்ன, அசோகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியா என்று கேட்டார்.  எழுத்தாளன் என்றால் வட இந்தியர்கள் எப்படி யோசிக்கிறார்கள் பாருங்கள். அவர் சொல்லித்தான் எனக்கு அசோகா பல்கலைக்கழகம் பற்றியே தெரியும்.   

ஆகவே வரும் டிசம்பர் 18 அன்று மாலை ஏழு மணி அளவில் ஸூம் மூலம் நண்பர்களை சந்தித்து உரையாடலாம் என்று இருக்கிறேன்.  இதுவரையிலான நமது ஸூம் சந்திப்புகள் அனைத்தும் என்னுடைய உரைகளால் மட்டுமே நிரம்பியிருக்கும்.  உரையாடல் இருக்காது.  உரையாடல் நேரமும் கேள்வி பதில்தான்.  மிகவும் தீவிரமான வகுப்பறைச் சூழல் அது.  ஆனால் இந்தச் சந்திப்பில் பொதுவாகப் பேசலாம் என்று நினைக்கிறேன்.  நான் அல்ல; எல்லோரும் பேசலாம்.  இருந்தாலும் ஒரு பொது நாகரீகமும் பேணுவீர்கள் என்று நம்புகிறேன்.  ஏனென்றால், இதை நான் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.  இரண்டு சம்பவங்களைச் சொல்கிறேன்.  ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்.  மூன்று பேர்.  ஒரு ஒருங்கிணைப்பாளர்.  ஒரு மணி நேரம்.  இதில் ஆளுக்குப் பதினைந்து நிமிடம் என்பதுதானே கணக்கு?  மூவரில் ஒருவர் சினிமா இயக்குனர்.  சினிமாக்காரர்களுக்குத் தமிழ் ஜனங்கள் கொடுத்திருக்கும் இடத்தின் காரணமாக, அவர்களில் தொண்ணூறு சதவிகிதத்தினர் தங்களைத் தாங்களே சே குவேராக்களாகவும், அம்பேத்கர்களாகவும், சாக்ரடீஸ்களாகவும், காமராஜர்களாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படி ஒரு இயக்குனர் என் பக்கத்தில் இருந்தார்.  ஒருங்கிணைப்பாளர் ஐந்து நிமிடம் பேசி விட்டு இயக்குனரைப் பேச அழைத்தார்.  இயக்குனர் ஒரு இருபது நிமிடம் பேசினார்.  விளம்பர இடைவேளை வந்தது.  அடுத்து இன்னொருத்தரைப் பேச அழைத்தார் ஒருங்கிணைப்பாளர்.  அவர் பேச ஆரம்பிக்கும்போதே இயக்குனர் குறுக்கிட்டு மறுக்க, அவர் பதில் சொல்ல, இவர் பேச, இவரே திரும்பவும் ஒரு பத்து நிமிடம் பேசினார்.  பிறகு அவர் ஒரு பத்து நிமிடம்.  எனக்கு மைக் கிடைத்த போது நிகழ்ச்சி முடிந்து விட்டது.  என்னை எதுக்குய்யா செட் ப்ராபர்ட்டியா வச்சுக்கக் கூப்டிங்களா என்று கேட்டேன் ஒருங்கிணைப்பாளரை.  அதிலிருந்து அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குச் செல்வதை நிறுத்தி விடவில்லை. 5000 ரூ. பணம் கொடுங்கள், வருகிறேன் என்று சொல்லி வருகிறேன்.  போய் சும்மா உட்கார்ந்திருந்து விட்டு வர அஞ்சாயிரம் என்றால் போகலாம்தானே?  ஆனால் இப்போது அழைத்தால் அதற்கும் நேரம் இல்லை.  நான் அந்த இயக்குனர் பெயரைச் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.  சமூகத்தைத் திருத்தக் கிளம்பியவர்.  தன்னைத் திருத்திக் கொள்ளத் தெரியவில்லை.  இப்படி சமூகம் திருத்தக் கிளம்புவர்கள் அத்தனை பேருமே ஃபாஸிஸ்டுகளாகத்தான் இருக்கிறார்கள். 

அவராவது இயக்குனர்.  இன்னொருவர் எழுத்தாளர்.  ஒரு மூத்த எழுத்தாளர் பற்றிய ஆவணப் படம்.  மூத்த எழுத்தாளரும் வந்து அமர்ந்திருக்கிறார்.  மேலும் மூவர்.  என்னையும் சேர்த்து.  மூவருமே எழுத்தாளர்கள்.  ஒருவர் அந்த இயக்குனர் மாதிரி.  இன்னொருவர் என்னை விட அப்புராணி.  மூத்த எழுத்தாளரோ பரம சாது.  கேட்டால் மட்டுமே வாயைத் திறப்பார். அதுவும் ஓரிரு வார்த்தைகள்தான். ஆவணப் படம் எடுக்க ஆரம்பித்ததுமே மைக்கைப் பிடுங்கிக் கொண்டார் நம் superbrat எழுத்தாளர்.  கொடுத்தார் ஒரு லெக்சர்.  லெக்சரை முடிக்கும் போது மூத்தவரிடம் கேள்வி வேறு கேட்டார்.  வாஸ்தவத்தில் அது கேள்வியே அல்ல.  கொடுத்த பத்து நிமிட லெக்சருக்கு அபிப்பிராயம் கேட்கிறார்.  அபிப்பிராயத்தை அரை நிமிடத்தில் சொல்லி முடிக்கிறார் மூத்தவர்.  உடனே எழுத்தாளர் பதில். பதில் ஒரு பத்து நிமிடம். இந்த ஆவணப் படத்தில் நானும் அந்த இன்னொரு அப்புராணி எழுத்தாளருமாக ரெண்டு பேர் செட் ப்ராப்பர்ட்டி ஆனோம்.  சிலர் இதுபோலவே வாழ்நாள் பூராவும் இருந்து விட்டுப் போகிறார்கள்.  ஆச்சரியம்தான். 

ஏன் இதை இத்தனை விஸ்தாரமாகச் சொல்கிறேன் என்றால் இதை வாசிப்பதன் மூலமாகவாவது நாம் நம்மைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாம் என்றுதான்.  ஆனால் இதையெல்லாம் எழுதுவதால் என்ன நடக்கும் தெரியுமா? ஏற்கனவே தொணதொணவென்று பேசிக் கொண்டிருப்பவர்கள் இதிலிருந்து எதையுமே கற்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டேதான் இருப்பார்கள்.  உண்மையிலேயே விஷயம் தெரிந்தவர்கள், பேசுவதற்கு விஷயம் இருப்பவர்கள், பேச வேண்டியவர்கள் இதையெல்லாம் தனக்கென்று எடுத்துக் கொண்டு வாயை மூடிக் கொள்வார்கள்.  அதுதான் தொடர்ந்து நடக்கிறது.  எனவே, சபையில் எப்படிப் பேச வேண்டும் என்பதற்கு எந்த எழுதப்பட்ட விதியும் கிடையாது.  நாமாக உணர்ந்து கொள்ள வேண்டியதுதான்.  எதை சபையில் சொன்னால் ரசிப்பார்கள் என்ற உணர்வு இருக்க வேண்டும். சபை எப்படிப் பட்டது என்று தெரிந்திருக்க வேண்டும்.  பட்டிமன்றக் கூட்டமா?  இலக்கிய வாசகர்களா?  என்ன மாதிரி சபை என்ற உணர்வு இருக்க வேண்டும்.  பேச வேண்டிய விஷயம் இருந்தால் அதைச் சொல்லத் தயங்கவே கூடாது. பேசியே ஆக வேண்டும். அதே சமயம், சபையில் இத்தனை பேர் இருக்கும்போது நாமே எல்லோருடைய நேரத்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற அடிப்படையான மனிதாபிமானமும் இருக்க வேண்டும்.

டிசம்பர் 18 சந்திப்பின் முதல் அம்சம், வகுப்பறைச் சூழல் இருக்காது.  என்னுடைய லெக்சர் இருக்காது. உடை விஷயங்களில் பப் சட்ட விதிகள்தான்.  பப் போயிருந்தால் தெரிந்திருக்கும்.  பெண்கள் என்ன வேண்டுமானாலும் உடையணியலாம்.  ஆனால் ஆண்கள் முண்டா பனியன் எல்லாம் அணிந்து எல்லோரையும் பயமுறுத்தக் கூடாது.  புதுமைப்பித்தன் கூட்டத்தில் என் நண்பர் முண்டா பனியனோடு வந்து பலரையும் மிரள வைத்து விட்டார்.  இந்த நண்பர் என்னிடம் கூட்டத்துக்கு முன் – அதாவது முந்தின நாளே போன் செய்து “சாரு, குளித்து விட்டா வர வேண்டும்?” என்று கேட்டு எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர்.  சே, நம் ஆட்கள் எவ்ளோ இன்னொசெண்டா இருக்காங்க என்று நினைத்தேன்.  அவர் கேட்டதற்குக் காரணம், சனிக்கிழமை இரவு அவருக்கு அதிகாலை மூன்று மணி வரை ஒரு முக்கியச் சந்திப்பு இருந்தது.  இரண்டு மணி நேரம்தான் உறங்கி விட்டு வர வேண்டும்.  அதற்காகக் கேட்டார்.  ”என்னங்க இது, நாம் என்ன பஜனைக் கூட்டமா நடத்துறோம், அப்டியே வாங்க சும்மா” என்றேன்.  அப்டியே வாங்க என்றதும் முண்டா பனியனோடு வந்து விட்டார்.  நானே பயந்து விட்டேன்.  பெண்கள் என்ன ஆனார்களோ? 

ஏன் என்றால், இதற்கு முன்பே இது ஒரு பிரச்சினை ஆகியிருக்கிறது.  சில பேர் காணொலியில் வெறும் லுங்கியோடு அமர்ந்திருக்கிறார்கள்.  அது பெண்களுக்கு லஜ்ஜையாக இருக்கிறது என்பது புகார்.  என்னங்க இது? இதையெல்லாமா ஒரு எழுத்தாளன் வந்து அறிவுரை பகர்ந்து கொண்டிருப்பான்?  ஒரு சபையில் முண்டா பனியனோடு வருவதையாவது ஓரளவு புரிந்து கொள்ளலாம்.  பனியன் கூடவா போடாமல் வெற்று உடம்போடு வருவார்கள்?  இது பற்றி பத்ரி சேஷாத்ரி பெரிய கட்டுரையே எழுதியிருக்கிறார்.  ஒரு விடியோ சந்திப்பைக் கூட எப்படி எதிர்கொள்வது என்று நமக்குத் தெரியவில்லை என்றால் நாம் எப்படி ஒரு காட்டுமிராண்டி சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?  நான் அந்தச் சந்திப்பிலேயே சொன்னேன்.  நீங்கள் முண்டக்கட்டையாகக் கூட சந்திப்பில் இருங்கள்.  ஆனால் காணொலி மூடியிருக்க வேண்டும்.  கொரோனா காரணமாக நம்மால் நேரில் கூட்டம் போட முடியவில்லை.  அதனால் காணொலி மூலமாகச் சந்திக்கிறோம்.  அதற்கென்று ஒரு மரியாதை, நாகரீகம் இல்லையா?  நான் வீட்டில் எப்போதுமே ஒரு நாலு முழ வேட்டிதான்.  சட்டை போட்டே பத்து மாதம் ஆகிறது.  ஆனால் சந்திப்பு என்று வரும்போது அதற்கேற்ற பரிவாரங்களோடுதானே அரங்கேற வேண்டும்?  எனவே ஆண்கள் உடை விஷயத்திலும் ஆடியோ விஷயத்திலும் சற்றே கவனமாக இருங்கள்.  சில சமயங்களில் நம் வீட்டுச் சத்தங்கள் எல்லாம் வந்து பேசுபவர்களுக்குக் குறுக்கீடு செய்கின்றன.

இந்த ஆடை விஷயத்தையும் விரிவாக எழுதுவதன் காரணம், ஆண்களில் பெரும்பான்மையோர் predators ஆக வாழ்ந்து கொண்டிருப்பதன் சூழல்தான்.  உதாரணமாக, என்னுடைய ஒரு சந்திப்பில் நான் வெகு சீரியஸாகப் பேசிக் கொண்டிருக்கிறேன்.  அப்போது யாரோ ஒரு பையன் ஒரு பெண்ணிடம் ஹாய் அனு ஹாய் அனு என்று தொடர்ந்து மெஸேஜ் கொடுத்த வண்ணமே இருந்திருக்கிறார்.  எதில்?  ஸூம் மெஸேஜ் பாக்ஸில்.  அந்தப் பெண்ணுக்கு.  அந்தப் பெண்ணுக்கும் அந்தப் பெண்ணுக்கும் முன்பின் தெரியாது.  என் சந்திப்பில் காணொலியில் பார்க்க முடியும்.  அவ்வளவுதான்.  இந்தப் பெண் பதிலே சொல்லவில்லை.  விட வேண்டியதுதானே?  தொடர்ந்து விடாமல் ஹாய் அனு.  அன்னபூர்ணி என்ற என் முழுப் பெயரை சுருக்கிக் கூப்பிட இவர் யார் சார் என்று கேட்டார் அந்தப் பெண். ஆகவே பெண்களுக்கு ஆண் என்றாலே முதலில் எடுத்த எடுப்பில் வருவது ஒரு பயம்தான்.  அதனால்தான் உடை விஷயத்தில் சற்று கவனம் என்கிறேன்.   

அடுத்து, நம்முடைய மாதாந்திர சந்திப்புகளில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.  அதன் எண்ணிக்கை லிமிட் நூறு.  நம் மாதாந்திர சந்திப்புக்கு எண்பது பேர் வருகிறார்கள்.  கடைசி வரை இருப்பவர்கள் ஐம்பது பேர்.  பணம் அனுப்பிப் பெற்றுக் கொள்பவர்கள் ஐம்பது பேர்.  போதும்.  ஆனால் இந்த டிசம்பர் 18 சந்திப்பில் அப்படி அல்ல.  யார் யார் கலந்து கொள்கிறீர்கள் என்று எனக்குத் தெரிய வேண்டும்.  முகம் தெரியாதவர்களோடும் என்னால் உரையாட முடியும்.  ஆனால் முன்பே என்னிடம் தெரிவித்து விட வேண்டும்.  ஏனென்றால், டிசம்பர் 18 சந்திப்பு என்பது ஒரு தனிப்பட்ட சந்திப்பு.  அங்கே நான் யாரைச் சந்திக்கப் போகிறேன் என்ற விவரம் எனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.  அவர் எனக்கு முற்றிலும் புதியவராகக் கூட இருக்கலாம்.  உங்கள் நண்பராகவும் இருக்கலாம்.  ஆனால் எனக்குச் சொல்லி விட வேண்டும்.  இதில் நான் மிகவும் உறுதியாக இருக்க விரும்புகிறேன்.  இந்தப் பயிற்சியையும் எனக்கு அளித்தது அவந்திகா தான்.  அவளுக்கு யாராவது உறவிடமிருந்து போன் வந்திருக்கும்.  அந்த உறவுக்கு அன்று பிறந்த நாளாக இருக்கும்.  உடனே போனை என்னிடம் கொடுத்து பேசச் சொல்லி விடுவாள்.  நான் கொலைவெறியாகும் தருணங்களில் ஒன்று அது.  பாவனையாக வாழ்த்து சொல்லி விட்டு போனை வைத்ததும் அவந்திகாவிடம் கத்துவேன்.  போனில் வந்தவர் என் பிரியத்துக்குரியவராகக் கூட இருக்கலாம்.  ஆனால் திடீர் திடீரென்று என்னால் பேச இயலாது.  மேலும், நான் ஒரு லௌகீக மனிதன் அல்ல.  என்னால் இப்படியான உறவுகளைப் பேண இயலாது.  அதிலிருந்தே நான் யாரிடம் பேசுவது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன்.  எனவே யாராக இருந்தாலும் ஸூம் சந்திப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் என்னைத் தொடர்பு கொண்டு “வருகிறேன்” என்று சொல்லி விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.  சொல்லி விட்டு வராமல் இருக்கலாம்.  பாதகம் இல்லை.  உடனே இதையும் ஒரு கடும் விதியாக எடுத்துக் கொண்டு செல்வாவோ வித்யாவோ ராம்ஜியோ சந்திப்புக்கு வராமல் மறுநாள் நான் கேட்கும் போது, ”வர்லாம்னுதான் நினைச்சேன், ஆனா நீங்கதான் முன்னாலயே சொல்லிருக்கணும்னு சொல்லியிருந்தீங்களா, நான் அப்டி சொல்ல மறந்துட்டேன், அதனால ஃப்ரீயா இருந்தும் கலந்துக்க முடியாமப் போச்சு” என்று சொன்னால் உங்களோடு ஒரு வருஷத்துக்குப் பேச மாட்டேன்.  குடும்பம் என்பது வேறு. விதிகள் வேறு. நீங்களெல்லாம் உள்வட்டம்.  எப்போது வேண்டுமானாலும் வரலாம்.  சொல்லிக் கொண்டு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

மாலை ஏழு மணிக்குச் சந்திக்கலாம் என்று நினைக்கிறேன்.  இன்னும் நாள் இருக்கிறது.  மற்ற விவரங்களை பிறகு தெரிவிக்கிறேன். மனோ தான் ஒருங்கிணைப்பார் என்று நினைக்கிறேன்.  அதையும் சொல்கிறேன்.

என் நண்பர்கள் ஒவ்வொருவரும் விசேஷமானவர்கள்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேஷத் தன்மை உண்டு.  ஸ்ரீராமின் விசேஷம் அவரது நம்பமுடியாத ஞாபக சக்தி.  நான் சொல்லியிருந்த ஒரு விபரப் பிழையை நீங்கள் யாருமே சுட்டிக் காட்டவில்லை.  அந்நியன் கட்டுரை ஒன்றில் ஒரு கொலைகாரன் கதை சொல்லியிருப்பேன்.  ஞாபகம் இருக்கிறதா? ஒரு தலித் இளைஞன்.  ஊரே அவரைத் திட்டுகிறது.  அவன் எந்தக் காரணமும் இல்லாமல் போகிற போக்கில் ஒரு வாட்ச்மேனின் தலையை வெட்டி போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு போய் வைத்து ஜெயிலுக்குப் போய் ரெண்டு வருடத்தில் திரும்பி வருகிறான்.  அவனைக் கேவலமாகப் பேசியவர்கள் இப்போது சார் சார் என்கிறார்கள்.  அ. மாதவன் எழுதிய கதையாக இருக்கும் என்று எழுதியிருந்தேன்.  ஞாபகம் உண்டா?  இல்லாவிட்டால் அந்நியன் கட்டுரைகள் ரெண்டையும் திரும்பப் படியுங்கள்.  அது மாதவன் எழுதிய கதை அல்ல. புதிய எக்ஸைல் நாவலில் நான் எழுதியது!  இதைச் சொன்னவர் ஸ்ரீராம்.  வேறு யாருமே சொல்லவில்லை.  யாருமே எக்ஸைல் படிக்கவில்லை!

***

என் சக எழுத்தாளர்கள், மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்.  மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai

***