Pithy thoughts – 18

அன்னையாகி நின்ற

ஸ்மாஷன் தாராவிடம்

என் தந்தையைக் காண்பி

எனக் கேட்டேன்

மூன்று ஆண்டுகள்

மசானத்திலே

சவ சாதனம் செய்தேன்

மனமிரங்கிய தாரா

தந்தையைக் காணும்

மந்திரம் தந்தாள்

அதைப் பார்த்த

நகரசபை ஊழியரொருவர்

மந்திரவாதியெனச் சொல்லி

எனை அடித்து விரட்ட

இந்தப் பெருநகரம்

சவ சாதனத்துக்கு ஆகாதென

மணிகர்ணிகா மகாமசானம்

சென்றேன்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்

இந்த மகாமசானத்தில்

பிரேதம் எரியாத ஒரு கணமில்லை

மசானத்தை சும்மா

எட்டிப் பார்த்து விட்டுப் போனால்

உனக்கு வரும்

மசான சத்தியம்

மசானத்திலேயே

வாழ்ந்து பார்த்தால் வரும்

வேறொரு சத்தியம் சொல்லும்

நீயும் இப்படித்தான்

செத்துப் போவாயென

கோடீஸ்வரன் பிச்சைக்காரன்

பதினாலு வயதுக் கன்னிப் பெண்

தொண்ணூறு வயதுத் தொண்டுக் கிழம்

பால்மணம் மாறா பச்சிளங்குழந்தை

மகாத்மா காமக் கொடூரன்

பிரேதத்திலெதுவும் வித்தியாசமில்லை

மூளையின் மீதங்கள் ஒட்டிக் கொண்டிருந்த

கபாலத்தில்

சோறு பொங்கி உண்டேன்

க்ஷணமொரு பிரேதம்

தினமொரு கபாலம்

ஒன்பது மாத உச்சாடனத்துக்குப் பிறகு

கேட்டது ஒரு சப்தம்

”அடேய் மூடா

நான் மஹாகாலனென அறிவாயா

என்னைக் கண்டால்

காலம் உன்னைக் கொண்டு விடும்

நீ எனக்குள் ஆகி விடுவாய்.”

”துறந்தவன் துறவி

நான் துறப்பதற்கும்

ஏதுமில்லாதவன்

நான் உன்னைக் கண்டே ஆக வேண்டும்.”

”அப்படியானால் இனி

நிழல்போல்

உன்னை பின் தொடர்வேன்.”

அந்தக் கணத்திலிருந்து

என் மரணமும்

உன் மரணமும்

எல்லார் மரணமும்

எப்போது வரும்

எப்படி வருமெனத்

தெரிந்து போனது எனக்கு

என் கனவில் வந்து

இதையெல்லாம்

கதைபோல் சொன்ன

அகோரியிடம் கேட்டேன்

”இவ்வளவுதானா?”

“காலனுன் பின் தொடர்வதை

நீ அறிய மாட்டாய்

நான் அறிந்திருக்கிறேன்

அவ்வளவுதான்.”