பூச்சி 174: வாழ்க்கை வரலாறு

தமிழில் எழுத்தாளர்கள் தங்கள் சுயசரிதையை எழுதுவதற்கோ அல்லது அவர்களின் வரலாற்றை மற்றவர்கள் எழுதுவதற்கோ தோதான வாழ்க்கை அவர்களுக்கு அமைவது இல்லை. ஒரு சாதாரண மத்தியதர வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் ஒரு தமிழ் எழுத்தாளனின் வாழ்வில் எப்படி சுவாரசியமான திருப்பங்கள் இருக்கக் கூடும்?  வாய்ப்பே இல்லை.  ஆனால் விளிம்பு நிலையில் வாழும் எழுத்தாளருக்கு அது சாத்தியம்.  துரதிர்ஷ்டவசமாக தமிழ் எழுத்தாளர்கள் யாரும் விளிம்புநிலையில் வாழ்வது இல்லை.  பட்டினி கிடந்து செத்திருக்கிறார்கள்.  ஆனாலும் அது விளிம்புநிலை வாழ்க்கை இல்லை.  தர்மு சிவராமு எந்த வேலைக்கும் போகாமல் நண்பர்களின் உதவியில்தான் வாழ்நாள் பூராவும் வாழ்ந்தார்.  அவருடைய அறை வாடகையை யார் கொடுத்திருப்பார்கள்?  யார் புத்தகம் வாங்கிக் கொடுத்திருப்பார்கள்?  மூன்று வேளை சாப்பாட்டுக்கு வழி?  எல்லாம் நண்பர்கள்தான்.  ஆனாலும் அது விளிம்புநிலை வாழ்க்கை இல்லைதான்.  விளிம்புநிலை வாழ்க்கை என்றால் நண்பர்களின் தயவுகூட இருக்கக் கூடாது.  ஜி. நாகராஜன் மட்டும்தான் ஞாபகம் வருகிறார்.  குடித்து விட்டு சாக்கடையில் கிடந்த மனிதர்.  ஆனால் அவர் அப்படி மாறிய பிறகு எழுதவில்லை என்று நினைக்கிறேன். 

இப்போதைய விளிம்பு நிலை எழுத்தாளன் ஃப்ரான்சிஸ் கிருபா மட்டும்தான்.  தெருவில் வலிப்பு நோயால் அவதியுற்றுக் கொண்டிருந்த ஒரு நபரைக் காப்பாற்றப் போன கிருபாவை கொலைகாரன் என்று சொல்லி ஜெயிலில் அடைத்து விட்டது போலீஸ்.  வலிப்பு நோய்க்காரர் வலிப்பிலேயே இறந்து விட்டார்.  உதவி செய்து கொண்டிருந்த கிருபாவின் மீது கொலைப்பழி.  அதுவும் பத்திரிகையில் நடுத்தெருவில் கொலை; பைத்தியம் கைது.  இப்படி செய்தி எழுதிய பத்திரிகைக்காரத் தம்பியைப் பிடித்து கொலைக் கேஸில் உள்ளே தள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். கிருபாவின் தோல் கருப்பு, நீண்ட முடியும் தாடியுமாக இருப்பார்.  உடல்வாகோ, ஊட்டச்சத்து இல்லாததாலோ எலும்பில் தோல் போர்த்தியவராகத் தோற்றம்.  பைத்தியம் என்று முடிவு கட்டி விட்டார்கள்.  நல்லவேளை, ஃப்ரான்சிஸ் கிருபா சக எழுத்தாளர்களின் செல்லப்பிள்ளை என்பதால் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியே வந்தார்.  அதற்குள்ளேயே ஒரு நாகர்கோவில்காரர் “எழுத்தாளனாக இருந்தால் என்ன?  உள்ளே போட்டு சாத்துங்கள் அந்த ஆளை” என்று எழுதினார்.  அடடா, என்னே எழுத்தாளர் ஒற்றுமை! 

இப்படிப்பட்ட எழுத்தாளர்களும் தமிழில் கம்மி.  அதாவது, வாழ்க்கை வரலாறு எழுதக் கூடிய அளவுக்கு எழுத்தாளர்களின் வாழ்வில் எதுவுமே நடப்பதில்லை.  தினமும் ஒன்பது மணிக்கு வங்கிக்கோ அரசு அலுவலகத்துக்கோ போக வேண்டும்.  அதிகாரியாக இருந்தாலாவது வாழ்க்கை வண்ணமயமாக இருக்கும்.  எழுத்தாளன் குமாஸ்தா.  அப்புறம் என்ன வாழ்க்கை?  நாற்காலியைத் தேய்க்கும் வாழ்க்கைதான்.  பதினோரு மணிக்குக் காப்பியோ டீயோ.  ஒரு மணிக்கு லஞ்ச்.  ஐந்து மணிக்கு வீடு.  வீட்டுக்கு வந்தால் மனைவி மற்றும் குழந்தைகளின் பிச்சுப் பிடுங்கல்.  பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்குள் விழி பிதுங்கி அறுபது வயதில் முதுமை தட்டி வேலையிலிருந்து ஓய்வு.  பிறகு அமெரிக்காவில் இருக்கும் பிள்ளை அல்லது பெண் வீட்டுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பயணம்.  அமெரிக்காவும் நரகம்.  சனி ஞாயிறுகளில் பையனோ மருமகனோ காரை எடுத்துக் கொண்டு வெளியே அழைத்துப் போனால்தான் உண்டு.  இல்லாவிட்டால் வாரம் முச்சூடும் ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டு டீவி பார்த்துக் கொண்டு முகநூலில் ஏதாவது கவிதை எழுதிக் கொண்டு இந்த ஜெயமோகன் மட்டும் எப்டி இவ்ளோ எழுதுறான் என்று குமைந்துகொண்டு நாட்களை ஓட்ட வேண்டியதுதான்.

ஐயோ, நான் யாரையும் மனதில் வைத்துக் கொண்டு எழுதவில்லை.  தமிழ்ச் சமூகம் தன் எழுத்தாளனுக்கு இந்த வாழ்க்கையைத்தான் கொடுத்திருக்கிறது என்கிறேன்.  மலையாள எழுத்தாளர் ஸக்காரியாவை எடுத்துக் கொள்ளுங்கள்.  மாத்ருபூமி பத்திரிகை அவரை ஆஃப்ரிக்காவுக்கு அனுப்பியது.  ஆறு மாதம்.  கீழ் முனையிலிருந்து மேலே அல்ஜீரியா வரை சாலை மார்க்கமாகவே பயணம் செய்து அந்த அனுபவத்தை எழுதினார்.  எத்தனை லட்சம் செலவானதோ!  ஒரு நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்திருக்கிறது.  ராணுவம் இவரை அடுத்த நாட்டுக்கு விமானத்தில் போகச் சொல்லியிருக்கிறது.  இவர் அதற்கு மறுத்து விட, பிறகு ராணுவ வாகனத்திலேயே அடுத்த நாட்டின் எல்லை வரை கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள் ராணுவ அதிகாரிகள். 

தமிழ்நாட்டில் அந்த மரியாதை எல்லாம் மிஷ்கினுக்கும் ஷங்கருக்கும்தான் கிடைக்கும்.  நமக்கு நம் மனைவி கட்டிக் கொடுக்கும் டிஃபன் பாக்ஸில் உள்ள எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோதான் கிடைக்கிறது.  ஆனால் எழுத்தில் சுரத்து இல்லாமல் இல்லை.  என்னதான் வாழ்வது குமாஸ்தா வாழ்க்கை என்றாலும் படைப்புகள் அத்தனையும் எல்லா உலக எழுத்தாளர்களுக்கும் சவால் விடுபவைதான்.  சந்தேகமே இல்லை.  எந்த விதத்திலும் எந்த சர்வதேச எழுத்தாளனின் படைப்புக்கும் நிகரான படைப்புகள் இங்கே தமிழில் உண்டு. 

வெளிநாடுகளில் எழுத்தாளனை வெளிநாடுகளுக்குத் தூதராக அனுப்பி விடுகிறார்கள். உள்ளூரில் இருந்தால் பிரச்சினை என்று சொல்லி அலெஹோ கார்ப்பெந்தியரை அவர் வாழ்நாள் முழுவதும் கூபாவின் தூதராக பாரிஸுக்கு அனுப்பி வைத்து விட்டார் காஸ்ட்ரோ.  மற்ற லத்தீன் அமெரிக்க சர்வாதிகாரிகள் எல்லாம் எழுத்தாளர்களைக் கொன்று விட்டார்கள்.  பாப்லோ நெரூதா ஒரு பிரபல உதாரணம்.  மருத்துவர்கள் மூலமாக அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உயிரைப் பறிக்கும் விஷம் ஊசி மூலம் செலுத்தப்பட்டது.  நல்லவேளை, ஒக்தாவியோ பாஸ் தூதராகவே வாழ்ந்தார். 

தூதரை விடுங்கள்.  அதெல்லாம் ரொம்ப தூரம்.  இங்கே ஜெயிலில் கூடப் போட மாட்டார்கள்.  ஏன், ஃப்ரான்சிஸ் கிருபாவைப் போட்டார்களே என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.  அவரை அவருடைய தோற்றத்தைப் பார்த்து பைத்தியம் என்று சொல்லி கொலை கேஸில் உள்ளே தள்ளியது இங்கே உள்ள பைத்தியக்காரக் கூட்டம்.  எழுத்தாளன் என்று உள்ளே தள்ளவில்லை.  தமிழ்நாட்டில் அந்தப் ”பெருமையைக்” கூடத் தட்டிக் கொண்டு செல்பவர்கள் சினிமாக்காரர்கள்தான்.  இலங்கையில் உள்நாட்டுப் போர்.  இங்கே தமிழர்களுக்கு ஆதரவாக எத்தனையோ பேர் எழுதினார்கள்.  ஆனால் உள்ளே போனது புரட்சிக்கார அமீர்.  சமீபத்தில் கூட கல்வி முறை பற்றி விமர்சிப்பவர் நடிகர் சூர்யா.  அதில் நீதிமன்றத்தைப் பற்றி ஒரு கருத்து சொல்லப் போக, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கொண்டு வந்தார்கள் சில வழக்கறிஞர்கள்.  உடனே, சூர்யா ஏழைக் குழந்தைகளின் படிப்புக்காகச் செய்யும் நற்காரியங்களைப் பட்டியலிட்டு அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.  அப்படித்தான் நினைக்கிறேன்.  நான் சொல்வது சரியா? 

இங்கே எல்லா சமூக நிகழ்வுகளுமே சினிமாக்காரர்களை மட்டுமே சுற்றிச் சுற்றி நடக்கின்றன.  அது பற்றி எனக்கு ஒன்றும் பொறாமை இல்லை.  சமீபத்தில் முகநூலில் ஸ்டாலின் பற்றி ஒரு மீம் பார்த்தேன்.  அவர் வீட்டு முகப்பில் மழை நீர் வந்து விட்டது.  ஸ்டாலின் வாசலில் நிற்கிறார்.  படத்தில் ஒரு அதிமுக கிண்டல்காரர் “கேட் தான் மூடியிருக்கிறதே?  தண்ணி எப்டி உள்ள வந்துச்சி?” என்று ஸ்டாலின் நினைப்பதாகக் கூறுகிறது அந்தப் படம்.  அடடா, மற்ற அரசியல்வாதிகள் எல்லாம் பெரிய சாக்ரடீஸ் போங்கள் என்று நினைத்துக் கொண்டேன்.  அவர்களையெல்லாம் ஒப்பிட்டால் ஸ்டாலின் தான் இங்கே சாக்ரடீஸ், இங்கர்சால், ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா எல்லாம்.  இந்தத் தமிழ் ஜனங்களின் தகுதிக்கு இவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமியே ரொம்ப அதிகம்.  இவர்கள் தகுதிக்கு இவர்களுக்கு முதல் மந்திரியாக இருக்க லாயக்கானவர்கள் எஸ்.வி. சேகர், ஹெச். ராஜா, செல்லூர் ராஜு போன்றவர்கள்தான்.  ஏதோ இந்த மக்களில் ஒன்றிரண்டு நல்லவர்கள் இருக்கிறார்கள் போல, எடப்பாடி, ஓ.பி.எஸ்., ஸ்டாலின் போன்றவர்களையெல்லாம் நாம் தலைவர்களாக அடைந்திருக்கிறோம்.  இருங்கள், இருங்கள்.  கொஞ்ச

நாளில் உங்கள் கொட்டத்தை எல்லாம் வந்து அடக்கப் போகிறார் அந்தப் பெண்மணி.  மெரீனா சமாதியில் தரையில் அடித்துச் செய்த சத்தியத்தை நீங்கள் மறந்தாலும் நான் மறக்கவில்லை.  கொஞ்சம் பொறுங்கள்.

ஆஹா, சினிமாவில் ஆரம்பித்து அரசியலில் முடிந்து விட்டதே.  மன்னியுங்கள்.  அப்படியே இழுத்துக் கொண்டு ஓடி விட்டது.  இங்கே எல்லாமே சினிமாக்காரர்களைச் சுற்றித்தான் நடக்கின்றன.  அது குறித்து எனக்கு ஒரு பொறாமை உணர்வும் கிடையாது.  காரணம், மக்களுக்கேற்ற மகராசன்.  எழுத்தாளனுக்கு ஏன் ஒரு ரோலர் கோஸ்டர் வாழ்க்கை அமைவதில்லை என்பது பற்றி நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.  அதை மறந்து விடக் கூடாது.  எப்படி அமையும்?  ஆஃபீஸ், லஞ்ச் பாக்ஸ், வீடு, குழந்தை, எல்கேஜி அட்மிஷன், பிறகு காலேஜ் அட்மிஷன்.  இத்தனைப் பிச்சுப் பிடுங்கல் இடையே பைத்தியம் பிடிக்காமல் இருப்பதே பெரிய விஷயம்.  இதில் சக எழுத்தாளன் என்ற ஸைக்கோப் பயலை வேறு சமாளித்தாக வேண்டும்.  நேற்றுதான் பொண்டாட்டி பிஎஃப்பில் கடன் வாங்கி, போதாததற்கு அவள் வளையலையும் அடகு வைத்து ஒரு கவிதைத் தொகுதி போட்டான்.  உடனே அது ஒரு குப்பை என்று ஒரு சிறு பத்திரிகையில் மதிப்புரை வந்திருக்கிறது.  குப்பை என்று சொல்லி விட்டிருந்தாலாவது பரவாயில்லை.  இதை எழுதியவர் ஒரு நபுசகராகத்தான் இருக்க வேண்டும்.  முத்தம் என்ற கவிதையைப் படித்தால் அதில் கொஞ்சமும் காமம் சொட்டவில்லையே?  முத்தம் பற்றியே தெரியாமல் எப்படி முத்தக் கவிதை?  நபும்சகம்தானே இப்படி எழுத முடியும்?  இப்படிப் போகிறது மதிப்புரை. 

வரட்டும்டா, வரட்டும்.  அடுத்த மாதம் உன் நாவல் வருதுல்ல?  கவனுச்சிக்கிறன்.  கிழி கிழின்னு கிழிக்கிறேன் வா. 

காலையில் தர்மபத்தினி கேட்பாள், என்னங்க, ராவிலே சொப்பனம் கிப்பனம் கண்டீங்களா கிழி கிழி கிழின்னு சொல்லி பல்லை நறநறன்னு கடிச்சுக்கிட்டே இருந்தீங்களே?

இப்படிப்பட்டவன் எப்படி வாழ்க்கை வரலாறு எழுத முடியும் சொல்லுங்கள்.  அவனுக்கும் தன்னைப் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை.  மற்றவர்களுக்கும் எதுவும் இல்லை.  ஆனால் சந்திர பாபுவின் வாழ்வை எடுத்துக் கொள்ளுங்கள்.  அதை மட்டும் ஒரு வாழ்க்கை வரலாறாக எழுதினால் அது ஒரு காவியம் இல்லையா?  சாவித்திரி?  அதை எழுதினால் காளிதாஸனின் அமர காவியம் போல் இருக்கும். யாருக்குக் கிடைக்கும் அந்த வாழ்க்கை?  சோக வாழ்க்கைதான்.  பிழியப் பிழிய சோகம்.  கடைசி நாட்களில் அவர் வாழ்ந்த வாழ்க்கையை நாம் ஷேக்ஸ்பியரில் கூடக் காண முடியாது.  ஆளையே அடையாளம் தெரியவில்லை.  ஜெமினியின் வாழ்க்கை காஸனோவாவின் புகழ்பெற்ற சுயசரிதை போல் இருந்திருக்கும். எம்ஜியாரின் வாழ்க்கை முழுக்க முழுக்க மேஜிகல் ரியலிஸ நாவல். அந்தக் காலத்து புராணக் கதைகளை ஒத்தது அவர் வாழ்க்கை.  எம்.ஆர்.  ராதாவின் வாழ்க்கையும் மிக ரசமானது.  எம்கேடியின் வாழ்க்கை, சுந்தாராம்பாளின் வாழ்க்கை எல்லாம் ரோலர்கோஸ்டர். இப்போதைய சினிமாக்காரர்களின் வாழ்க்கை மார்க்கி தெ ஸாதின் நாவல்களுக்கு ஒப்பானவை.  அவற்றின் ஒருசில அத்தியாயங்களை மிர்ச்சி சுசித்ரா போன்றவர்கள் அவ்வப்போது ரகசியமாக நமக்குக் காணக் கொடுத்து விடுகிறார்கள்.  இதில் படுபயங்கரமான சுவாரசியம் கொண்ட அத்தியாயம் நாலு எழுத்து நடன நடிகருடையது.  பெயரைச் சொன்னால் என் மீது கேஸ் போட்டு விடுவார். அச்சு அசல் சாத்-இன் நாவல்தான் அவர் வாழ்க்கை.

ஆனால் சினிமா உலகம் படு ரகசியமான ஒரு மர்ம மாளிகை.  ரகசியத்தை வெளியே சொன்னால் சொல்பவர்களின் தலை சுக்குநூறாய் வெடித்து விடும்.  ஜெயகாந்தனுடைய வாழ்க்கை ஒரு ரோலர்கோஸ்டர் வாழ்க்கை.  அவர் கொஞ்சூண்டு அதை எழுதினார்.  தன் சினிமா உலக அனுபவங்களையும் எழுதினார்.  ஆனால் ஜெயமோகனாலும் ராமகிருஷ்ணனாலும் எழுத முடியாது.  எனக்கோ தெரியாது. 

ஆக, வாழ்க்கை வரலாறு எழுதக் கூடிய அளவுக்கு ஆளுமைகள் பலர் இருந்தும் எழுத முடியாத சூழல்.  எழுதக் கூடிய துணிச்சல் உள்ள எழுத்தாளர்களுக்கோ வாழ்க்கையே இல்லை.  இப்படிப்பட்டதொரு வறிய நிலையிலும் நான் சில அதி சுவாரசியமான வாழ்க்கை வரலாறுகளைப் படித்திருக்கிறேன்.  சுந்தர ராமசாமி க.நா.சு. பற்றி எழுதியது.  க.நா.சு. புதுமைப்பித்தன் பற்றி எழுதியது.  சு.ரா. பற்றி ஜெயமோகன் எழுதியது. தஞ்சை ப்ரகாஷ் க.நா.சு. பற்றி எழுதியது.  இது எல்லாமே மிக அருமையான வாழ்க்கை வரலாறுகள்தான்.  ஆனால் இவர்கள் எல்லோருமே இன்னும் சற்று உள்ளே சென்று எழுதி இருக்க வேண்டும்.  உதாரணமாக, நான் ஜெயமோகனின் ரசிகனாக, தீவிர வாசகனாக இருந்தால் “இப்படி ஒரு வரலாறே தமிழில் எழுதப்பட்டதில்லை” என்று பேர் வாங்கும் அளவுக்கு எழுதியிருப்பேன்.  வாழ்க்கை வரலாற்றில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன.  எழுத்து பற்றி பத்து சதம்.  வாழ்க்கை பற்றி தொண்ணூறு சதம்.  ஏனென்றால், ஒரு எழுத்தாளனின் எழுத்து பற்றி வெளி நபர்களுக்கே தெரியும்.  அதை ஒரு வரலாற்றுக்காரர் எழுத வேண்டியது இல்லை.  ஒரு எழுத்தாளனின் பக்கத்தில் இருக்க நீங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.  அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  எழுத்தாளனின் கூடவே இருக்கும் அவன் மனைவியால் அதை எழுத முடியாது. குருவின் உண்மையான வரலாற்றை எழுதக் கூடியவன் சிஷ்யன் மட்டுமே.  குருவுக்கு நமது மரபில் மூன்றாவது இடம்.  தெய்வத்துக்கே நான்காவது இடம்தான்.  இது சரியானதுதான்.  இதை மிகச் சரியாகப் பயன்படுத்தியவர் தொ.மு.சி. ரகுநாதன் மட்டுமேதான்.  புதுமைப்பித்தனின் வரலாற்றைப் பிரமாதமாக எழுதியிருக்கிறார். ஆனால் ரகுநாதன் பித்தனை விட மிகவும் சிறியவர்.  பித்தனின் அந்திமக் காலத்தில் அவரை நெருங்கியவர்.  பித்தனும் அற்பாயுசில் போனவர்.  எனவே கூட இருந்த மூன்று நான்கு வருடங்களில் அவர் பார்த்த பித்தனைப் பற்றி பின்னி எடுத்து விட்டார்.  ஆனால் க.நா.சு., ப்ரகாஷ், ஜெயமோகன், சு.ரா. யாருமே ரகுநாதன் அளவுக்கு எழுதவில்லை. இத்தனைக்கும் ரகுநாதனின் இலக்கிய சாதனை ஒன்றும் அவ்வளவு சிலாக்கியமானது இல்லை. 

எழுத்தாளர்களின் வாழ்க்கைச் சூழல் பற்றிச் சொன்னேன். உலகத் தரமான படைப்புகளை அளித்தாலும் அவ்வளவாகப் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாத அவலமான குமாஸ்தா வாழ்க்கை இவர்களுடையது.  அப்படிப்பட்ட குமாஸ்தா வாழ்க்கைதான் எனக்கும் லபித்தது என்றாலும் என்னுடைய வாழ்க்கையும் ஒரு சந்திரபாபுவின் வாழ்க்கையைப் போல ஒரு ரோலர்கோஸ்டர் வாழ்வாக அமைந்து போனது விதிப்பயன் என்றே சொல்ல வேண்டும்.  இல்லாவிட்டால் – ஒருமுறை அல்ல, இரண்டு வெவ்வேறு சமயங்களில் கடுமையான போதையில் இருந்த இரண்டு நண்பர்கள் – என்னால் சமாளிக்கவே முடியாத உடல் வலு கொண்டவர்கள் – என்னைக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் எல்லாம் நடக்குமா?  இத்தனைக்கும் இப்படி ஒரு கொலை முயற்சி நடக்கும் என்று அறிந்தே ஒரு பயில்வான் போன்ற நண்பரை பாடிகார்டாக அழைத்துப் போயிருந்தேன்.  அவருக்கு என்ன சிறுநீர் கிறுநீர் வராதா?  போனார்.  அதற்குள் ரசாபாசம் ஆகி விட்டது.  நல்லவேளை, ஒன்றுக்கு இரண்டு பாடிகார்டுகள் எனக்கு.  அதில் ஒருவர் காப்பாற்றி விட்டார். 

பார்க்கில் நடந்து கொண்டிருப்பேன்.  தமிழ்நாட்டின் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் ஒருவரின் வலது கை வந்து என்னிடம் சொன்னது, சாரு ஜாக்கிரதையாக இருங்கள்.  பெரிய இடம் உங்கள் மீது கோபமாக இருக்கிறது. (போங்கடா dickhead என்று மனதில் நினைத்துக் கொண்டு) என் உயிர் எப்போது போக வேண்டும் என்று பிறக்கும் போதே எழுதப்பட்டு விட்டது, அதனால் நான் என்ன தடுத்தாலும் எங்கே போய் ஒளிந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது, மயிரே போச்சு என்று சொல்லி அனுப்பினேன். 

இதையெல்லாம் நண்பர்களிடம் சொன்னால் என் நெருங்கிய நண்பர்கள் நம்புவார்கள்.  மற்றவர்கள் புருடா என்பார்கள்.  இந்த புருடா என்ற வார்த்தைதான் என் வாழ்க்கையை ரோலர்கோஸ்டராக ஆக்குகிறது.  மற்றவர்களால் நம்ப முடியாத ஒரு வாழ்வை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  மூன்று மணி நேரம் போகம் செய்வது பற்றி ஒரு நாவலில் எழுதினேன். உடனே எல்லோரும் கிண்டல் செய்தார்கள்.  ஒரு சக எழுத்தாளர் “சாருவுக்கு செக்ஸ் பற்றி எதுவும் தெரியவில்லை” என்று எழுதினார்.  நான் என்ன என் நாவலுக்கு கோனார் நோட்ஸா எழுத முடியும்?  நான் பதினேழு பதினெட்டு வயதில் ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தேன்.  இருபத்திரண்டு வரை.  சாமியாராகப் போய் விடுவேன் என்று வீட்டில் பயந்தார்கள்.  அப்போது தஞ்சாவூரில் ஒரு சாமியார் எனக்கு ஹதயோகத்தில் சிலதைக் கற்றுக் கொடுத்தார்.  சிலதுதான்.  அதில் ஒன்று வஜ்ரோலி.  இந்த வஜ்ரோலி தெரிந்தவர்களால் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் போகம் செய்ய முடியும்.  இது பற்றி நான் இதுவரை ஒரு வார்த்தை எழுதியதில்லை.  இப்போதும் எழுதப் போவதில்லை.  ஏனென்றால், வஜ்ரோலி என்பது ஒரு aphrodisiac ஆக மட்டுமே பயன்படுத்தக் கூடியது அல்ல.  அது ஒரு வாழ்க்கை முறை.  அதை நான் எல்லோருக்கும் கற்பிக்க முடியாது.  பெண்ணையும் சரி சமமாக பாவிப்பவர்களுக்கு மட்டுமே என்னால் அதைப் பூரணமாகக் கற்பிக்க முடியும்.  இங்கே நான் வஜ்ரோலி என்ற பெயரை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சொல்வதே பெரிய விஷயம்.  ஏன் இதுவரை சொல்லவில்லை என்றால், யாரிடமும் சொல்லக் கூடாது என்பது என் குருவின் ஆக்ஞை. சொல்லி விட்டு, மௌனமேவ உசிதம் என்றார் சம்ஸ்கிருதத்தில்.  ஏன் என்றேன்.  மௌனம் சர்வார்த்த சாதகம் என்றார். வாய் விட்டுச் சொன்னால் மெய் விட்டுப் போகும், சொல்லாதே, பலிக்காது. இப்போது மட்டும் ஏன் சொல்கிறேன் என்றால், குரு இல்லாமல் இதைக் கற்க முடியாது. இன்னொன்று, நான் காமத்தைக் கடந்து விட்டேன்.

ஒரு உதாரணத்துக்கு இதைச் சொன்னேன்.  குமாஸ்தா வாழ்க்கையிலும் ரோலர்கோஸ்டர் வாழ்க்கை வாழ முடிந்தது.  மேலும், ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை அவன் என்னதான் குமாஸ்தாவாக வாழ்ந்தாலும் அவன் ஒரு கலைஞனாக இருந்தால் அது நிச்சயம் ஒரு நாவலைப் போலத்தான் இருக்கும்.  ரைஸ் மில் அய்யர் சிதம்பரத்தில் ஒரு சாதாரண ரைஸ் மில் ஓனர்தான்.  சிதம்பரம் மக்களுக்கு.  ஆனால் அவர் வாழ்வில் 1000 பக்கங்களுக்கான நாவல் இருந்தது.  ரைஸ் மில் அய்யர், மணி அய்யர் என்று அழைக்கப்பட்ட மௌனியின் வாழ்க்கை மிகப் பயங்கரமான நெளிவு சுளிவுகளைக் கொண்டது.  A mythical life indeed.  யாரும் பதிவு செய்யவில்லை.  நகுலனின் வாழ்வும் அப்படியே.  ஆனால் நகுலனே பதிவு செய்து விட்டார். 

இன்னொரு அற்புதமான சுய பதிவு உ.வே.சாமிநாதய்யருடையது.  என் சரித்திரம்.

அதனால் சீனியிடம் சொல்லி விட்டேன், நான் உயிருடன் இருக்கும்போதே என் வாழ்க்கையை எழுதி விடுங்கள் என்று.  அதில் ஒரு அத்தியாயம் இந்த ஆவநாழி பத்திரிகையில் வந்திருக்கிறது. 

https://drive.google.com/file/d/17SE-W1dXT9fmsQeeIYVUwhnhZ0tbFSRP

***

என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்.  மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai

***