இளையராஜா – இசை – மனநோய் கூடாரங்களின் கூக்குரல் – அராத்து

(பின்வரும் கட்டுரையை ஃபேஸ்புக்கில் படித்தேன். இங்கே பகிர வேண்டும் என்று தோன்றியது. மிக மோசமான தமிழில் மிகச் சிறந்த அவதானங்களைக் கொண்ட கட்டுரை. இதில் உள்ள கருத்துக்களோடு எனக்கும் உடன்பாடு உண்டு. பொதுவாக இப்படி நான் பகிரும் கட்டுரைகளை எழுதியவரின் அனுமதி இன்றி மொழியை சரி பார்த்தே பகிர்வேன். அதற்கெல்லாம் இப்போது நேரம் இல்லை. அதனால் அராத்து எழுதிய கொச்சைத் தமிழை மாற்றாமலேயே இங்கே பகிர்கிறேன்.

இளையராஜா பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். என்னைப் பொருத்தவரை தமிழ் சினிமாவின் எத்தனையோ இசை ஜாம்பவான்களில் அவரும் ஒருவர். அவ்வளவுதான். அதற்கு மேல் எதுவும் இல்லை. எனக்கும் அராத்துவைப் போலவே ராஜாவை விட யுவன் பிடிக்கும். இளையராஜா கமல்ஹாசனைப் போல ஒரு மெகலோமேனியாக். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அவரவர் விதி.

– சாரு)

பலரும் இளையராஜாவின் ஒரு பழைய விடியோவை பகிர்ந்து புளகாங்கிதம் அடைந்துகொண்டிருந்தார்கள். என்ன என்று பார்த்தால்,”குச்சி வச்சி டக் டக் போடு , டொக் டொக் போடு , இத மாத்து , அத வாசி , நான் மார்தட்டி சொல்வேன் , நீங்க கேக்கற இந்த சவுண்ட் எல்லாம் நான் கிரியேட் பண்ணதுன்னு கர்வமா சொல்வேன் .”இளைய ராஜாவின் இசை மேதமை பற்றி எனக்குத் தெரியாது. எனக்கும் இசைக்கும் பெரிய சம்மந்தம் இல்லை.

ஒரு ரசிகன் என்ற அளவில் மட்டுமே. ஆனால் ஒருவர் உளறினால் எனக்குத் தெரிந்து விடும். இளையராஜா முதன்மையாக திரை இசையமைப்பாளர். சினிமா என்று வந்தாலே கலை இரண்டாம் பட்சம் தான். அது புரிந்துகொள்ளக் கூடியதும் ஆகும். தவறும் இல்லை. பணமும் லாபமும் முதன்மையாக இருக்கும் இடத்தில் கலைக்கு என்ன வேலை ?

ஒரு படத்துக்கான சாங் கம்போஸிங் ஒரு நாளில் முடிப்பது , ரெண்டு மூணு படத்து ரீ ரெக்கார்டிங்கை பேரலலாக செய்வது என பாவம் இளையராஜா செக்கு மாடு மாதிரி உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஒரு உழைப்பாளியாக , ஒரு டிசிப்ளினிஸ்டாக அவர் மீது எப்போதும் மரியாதை உண்டு. நமக்கு ஒவ்வாத விஷயத்திலும் மரியாதை இருக்க வேண்டும் அல்லவா ? இளையராஜா தன்னை கலைஞனாக உணர்ந்திருந்தால் , ஏன் ஒரு கலைஞன் செக்கு மாடு மாதிரி சுத்த வேண்டும் என ஒருக்கணமாவது யோசித்திருப்பார். லௌகீகக் காரணங்கள்தான் எனக்கு முதன்மையாகத் தெரிகிறது. பண ஆசை என முரட்டடி அடிக்க எனக்கு விருப்பமில்லை. தன்னைத் தாண்டி எவனுக்கும் சினிமாவில் சான்ஸ் கிடைத்து விடக்கூடது என மொக்கை படங்கள் முதல் பெரிய பட்ஜட் படங்கள் வரை தபேலாவையும் , லாலா லா வையும் வைத்துக்கொண்டு எல்லா ப்ராஜக்டுகளையும் எடுத்திருக்கிறார். இங்கேதான் இளையராஜாவுக்கும் ஏ ஆர் ரஹ்மானுக்குமான வித்தியாசத்தைப் பார்க்கிறேன். புகழின் உச்சம் மற்றும் கமர்ஷியல் ஹிட் என இருக்கையிலும் எல்லா படத்தையும் இழுத்துப்போட்டுக்கொண்டு அடுத்த இசையமைப்பாளர்களுக்கான வழிகளை அடைக்க வில்லை. இன்னும் கேட்டால் ஒத்துக்கொண்ட படங்களே ஏ ஆர் ரஹ்மானால் டிலே ஆகும். ஒரு கலைஞன் இப்படித்தானே இருக்க வேண்டும்.

இளையராஜாவுக்கு முன்னும் பின்னும் இசையமைப்பாளர்கள் இப்படி இருந்ததில்லை. அவர் மகன் யுவன் ஷங்கர் ராஜா உட்பட . கொசுறு : எனக்கு இளையராஜா இசையை விட , யுவன் இஷ்டம். ஏ ஆர் ரஹ்மானை விடவும் கொஞ்சம் அதிகமாக.யுவன் மட்டுமே அவர் வாழும் காலத்தின் மனிதர்களின் மனதை இசையாக்கினார் என்பது என் அப்ஸர்வேஷன். இளையராஜா ரொமாண்டிசைசேஷன் , ஏ ஆர் ரஹ்மான் ஃபேண்டசி என்றால் , யுவன் மட்டும் தான் தரையில் கால் பதித்து இசையாட்டம் ஆடினார்.இளையராஜாவின் பல படங்களின் இசை செக்கு மாடு டெம்ப்ளேட் இசை என்றாலும் , பெரிய பட்ஜட் படங்களுக்கு கொஞ்சம் அதிகம் வயலின்கள் வாசிக்கப் படும் + பேஸ் + டிரம்ஸ் கொஞ்சம் அதிரும். இசை பற்றி தெரியாத எனக்கே இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களைக் கேட்கையில் இசையே இல்லை எனத் தெரிகிறது. நீங்கள் வேண்டுமானால் இப்போது 80 , 90 களில் வந்த ஒரு சூப்பர் ஹிட் பாடலைக் கேளுங்களேன். ஆண் குரல் மற்றும் பெண் குரலே முதன்மையாக ஒலிக்கும். இசை சும்மா உப்புக்குச் சப்பாணி போல , நள்ளிரவில் மாட்டு வண்டியோட்டி தூங்குகையில் , மாடு தானாக வண்டியிழுத்துச் செல்லும் அல்லவா ? அப்போது லொடக் , முடக் , பொடுக் என இரவின் மௌனத்தில் ஏதோ சத்தம் கேட்குமே அது போல கடமைக்கு தபேலா ஒலித்துக்கொண்டு இருக்கும். இதை நான் நூற்றுக்கணக்கான பாடலக்ளைக் கேட்டு விட்டுச் சொல்கிறேன். பல்லவிக்கும் அநுபல்லவிக்கும் நடுவில் ஒரு இடம் வரும் அல்லவா ? அங்கே சில வயலின்களை உச்ச ஸ்தாதியில் ஒலிக்க விட்டு கிளுகிளுப்பு ஏற்றுவார். மற்றபடி பெரும்பாலான இளையராஜாவின் பாடல்களில் பின்னணி பாடகர்கள் மற்றும் கோரஸ் ஆட்களின் ராஜ்ஜியம் தான். இதுவா ஐயா இசை ?

“கற்பூர நாயகியே கனகவல்லி , ஆயி மகமாயி கருமாரி அம்மா” வுக்கும் இளையராஜா பாடல்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? இந்தப் பாடலுக்கு இசை : கண்மணி ராஜா . இந்த ஆல்பத்தில் உள்ள அனைத்து பாடல்களும் இளையராஜா பாடல்களைத் தாண்டி ஹிட். எல் ஆர் ஈஸ்வரி வெளுத்து வாங்கியிருப்பார். நம்மூர் ரொமாண்டிசைஸிங் இடியட்ஸை இன்னும் மெண்டல் ஆக்கியத்தில் அன்னாருக்கு ஒரு பெரிய பங்கிருக்கிறது. நம் ஆட்களுக்கு ஃபீலிங்கே இருக்காது. மோடு முட்டிகள். எதோ கொரில்லா குரங்கை விட கேவலமாக மனித ஃபீலிங்கே இல்லாதது போல பேசுவார்கள். எங்கோ எப்போதோ மனம் மரத்து தரை தட்டி விட்டது போல. அம்மா பாசமா ? இளையராஜா இசையால் , சாரி பாடலால்தான் வந்தது என்பார்கள் . ஏண்டா நாய் பூனைக்குக் கூட அம்மா பாசம் தெரியுமேடா ?அப்பா மேல் மரியாதை , தங்கை பாசம் , நட்பு , துரோகம் , காதல் …அவ்வளவு ஏன் ? இரவில் மனைவியை மேட்டர் செய்யக் கூட இளைய ராஜா பாடல்களால் தான் மூட் வந்தது என்பார்கள். அப்பா செத்தது , குழந்தை இறப்பில் மீண்டு வந்தது என லிஸ்ட் நீளும். இதை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியவில்லை.

அடிப்படை உணர்வோ , உணர்ச்சியோ இல்லாத ஜடங்களா இந்த இனம் ? இல்லையே ஐயா ! சங்க இலக்கியத்தில் இல்லாத உணர்வுகளா ? உணர்ச்சிகளா ? இலக்கியம் கொடுப்பதெல்லாம் மேன்மையான , நுட்பமான உணர்வுகள். ஒரு தாய்ப்பாசம் எல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளாக புழு , பூச்சி , நாய் , பூனை , யானை வரை அனுபவித்து வரும் உணர்வுகள் தானே ? இதை தட்டி எழுப்ப ஏன் இவர்களுக்கு இளையராஜா ?

70களில் தொடங்கி தமிழ்க்கலாச்சாரம், தமிழர் வாழ்வியல் என்பதே ஒழிந்து சினிமா வாழ்வியலாக மாறியது. சினிமா என்பது எண்டர்டெயின்மெண்ட் என்பது தாண்டி வாழ்வியலாக ஆனது இந்தக் காலகட்டத்தில்தான். சினிமா தான் மதம், சினிமா ஹீரோதான் ஆதர்ஸம் என தமிழர்கள் சீரழியத் தொடங்கினார்கள். ரசிகர் மன்றங்கள் அமைத்து சீரழிவின் உச்சத்துக்குச் சென்றார்கள் தமிழர்கள். முதல்வர் முதற்கொண்டு சினிமாவில் இருந்து தேர்ந்தெடுத்தார்கள். இப்போது நம்மிடையே நடைமுறையில் இருக்கும் அம்மா பாசம் ,அப்பா மேல் மரியாதை , அண்ணன் – தங்கை உறவு , நட்பு , காதல் எல்லாம் இயல்பானது அல்ல. எல்லாம் சினிமா உருவாக்கிக்கொடுத்து ரொமாண்டிசைஸ் செய்து வைத்திருப்பதால் உருவானது. அதனால்தான் உருப்படா வெட்டியாகப் போனது. இவ்வகை ஃபீலிங் எல்லாம் தனக்குத் தானே தனியறையில் சொறிந்து கொள்வது. அப்பா அம்மா இருக்கும்போது ஒரு மயிரும் புடுங்காமல் செத்த உடன் சொறிந்து கொள்ள இளையராஜா இசை பயன்படும். நீண்ட நெடுங்கால பண்பாடு கொண்ட ஒரு இனத்துக்கு அடிப்படையாக வாழ ஒரு சினிமாவா சொல்லிக்கொடுக்க வேண்டும் ?

இதில் இளையராஜாவின் பங்கும் அதிகமானது. காதலுக்கு ஏங்குவது , கையை அறுத்துக்கொள்வது , சம்மந்தம் இல்லாமல் தெருவில் எவளையாவது பார்த்து விட்டு , அவளே தேவதை என நினைத்துக்கொண்டு , சம்மந்தம் இல்லாமல் தாடி வளர்த்து திரிவது என ஒரு சமூகத்தையே மெண்டலாக்கி வைத்ததில் இயக்குநர்களுக்கு நிகராக இளையராஜாவையும் சொல்லலாம். கணவன் மனைவியாக ப்ராக்டிக்கலாக ஜாலியாக வாழ்கையில் இளையராஜா இசை தேவைப்படாது.அதற்கு பாடலே அவரிடம் இருக்காது என்பது வேறு விஷயம்.அங்கு உங்களுக்கு ஏ ஆர் ரஹ்மானோ , யுவனோ , ஹாரிஸோ , அநிருத்தோ தான் தேவைப்படுவார்கள். அட எம்.எஸ் . விஸ்வநாதன் கூட துணைக்கு வருவார். விடலைத்தனமான காதல் , தோல்வியடைந்த காதல் , எக்ஸ் நினைத்து ஏங்குதல் , எக்ஸ் சிரமப்படுதல் , அம்மா செத்து அழுதல் போன்றவற்றிற்கு அள்ள அள்ளக்குறையாமல் பாடல்கள் இருக்கும். ஒரு சமூகத்தை மனதளவில் நோய்வாய்ப்பட்ட சமூகமாக ஆக்கி , அந்த நோய்க்கு , குணமாக்கவே முடியாத ஒரு மருந்தை கொடுப்பதுதான் இளையராஜாவின் பாடல்கள். அடிக்‌ஷனில் சாவு நாயே !தெரிந்து செய்தார்களா அல்லது தெரியாமலேயே சரியாகச் செய்தார்களா எனத் தெரியவில்லை. ஏ ஆர் ரஹ்மான் மற்றும் யுவன் சங்கர் ராஜா இதைப்போன்ற சீட்டிங் எதுவும் அவர்கள் இசையில் செய்யவில்லை. இசை தெரியாதவர் இளையராஜா என்று சொல்ல வரவில்லை . ஹே ராம் உட்பட அதைப்போன்ற இசையை அதற்கு முன் தமிழ்த் திரைப்படத்தில் நாம் அனுபவதித்ததில்லை. ஆனால் அவர் பெரும்பாலும் அவருக்குத் தெரிந்த இசையை எப்படி பயன்படுத்தியிருக்கிறார் என்பதே என் வாதம்.

அதுவும் கலைஞன் , கர்வம் , மார் தட்டி சொல்வேன் என்றெல்லாம் உளறும் போது இதையெல்லாம் சொல்ல வேண்டியத் தேவை வந்தது.நீங்க கேட்டுட்டு இருக்கிறது எல்லாம் நான் உருவாக்கிய சத்தம் (சவுண்ட் என்கிறார் , மியூசிக் என்று சொல்லவில்லை) எனச் சொல்லும் போதுதான் பரிதாபமாக இருக்கிறது.ஏனய்யா , நீங்கள் சும்மா , டக் , டொக் , டும் , டம் என உருவாக்கும் சத்தத்திலேயே இவ்வளவு கர்வம் கொள்கிறீர்களே ?எத்தனை சித்தாந்தங்கள் , தத்துவங்கள் , இலக்கியங்கள் உருவாக்கியிருக்கிறார்கள் ? எத்தனை பெரிய பெரிய விஷயங்கள் எல்லாம் ஒரு தனி மனித சிந்தனையில் உருவாகியிருக்கின்றன ?

எத்தனை கலைகள் மானுட குலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி நாகரீகத்தின் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தி இருக்கின்றன? நீங்களே கண்டு பிடித்த உங்கள் சொந்த சத்தம் அப்படி என்ன செய்து விட்டது இளையராஜா சார்? எத்தனை கலைஞர்கள் சினிமாவைச் சாராமல் தங்கள் கலை சார்ந்து தனிப்பட்ட முறையில் செயல்பட்டு சாதனை செய்து நீங்கா புகழ்பெற்றிருக்கிறார்கள் ?நீங்கள் சினிமா சாராமல் , சினிமாவில் செயல்படாமல் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என தனித்துப் பெயர் பெற்றிருக்க முடியுமா ?சினிமாவில் ஒரு டப்பாங்குத்து பாட்டு , மொக்கை காதல் தோல்வி பாட்டு போட்டு விட்டு எப்படி தைரியமாக , நான் சொந்தமாக சத்தம் உருவாக்குகிறேன் , அது இது என கூசாமல் பேச முடிகிறது ?சினிமா இல்லை என்றால் நீங்கள் இல்லை இளையராஜா சார். சொந்தமாக , சுயம்புவாக இலக்கியம் உருவாக்கியவர்களே , இது ஒரு பண்பாட்டின் தொடர்ச்சி , இலக்கியத் தொடர்ச்சி என பேசுகிறார்கள். “கலக்டிவ் இண்டெலிஜென்ஸ்” பற்றி எல்லாம் உங்களுக்கு ஏதாவது தெரியுமா ?

நீங்கள் தான் கலக்டிவ் பிஹேவியரை மாற்றியவர் ஆயிற்றே !அசோகமித்திரனை சில ஆயிரம் பேருக்குத்தான் இப்போது தெரியும். ஆனால் உலகம் உள்ள வரை அவரது தனித்துவமான கலைக்கும் , கலைப்பங்களிப்புக்கும் நினைவு கூறப்படுவார். அவர் தனித்துவமான கலைஞன். தஸ்தாவெஸ்கி இன்றும் உயிரோடு உலாவிக்கொண்டு இருப்பதைப்போல. இவர்கள் எல்லாம் உருவாக்கியதற்கும் நீங்கள் சொந்தமாக(!) உருவாக்கிய சத்தத்திற்கும் வித்தியாசம் இருப்பது உங்களுக்குப் புரியாது. பரோட்டா மாவில் , எலந்த பழத்தைக் கலந்து , நான் சொந்தமா கண்டு புடிச்ச் பரோட்டா என ஒரு பரோட்டா மாஸ்டர் புஷ்டி முடக்கி வெயிட் காட்டுவதை பார்த்து மகிழ்வது போல பார்த்து மகிழ்ந்தேன் சார். சும்மா சினிமாவில் டக்கு டொக்கு , டம்மு , டிம்மு என போட்டு விட்டு உங்களுக்கு ஏன் இளையராஜா சார் இவ்வளவு வாய்க்கொழுப்பும் கர்வமும் ? அதைக்கட்டிக்கொண்டு அழ ஒரு முட்டாள் மெண்டல் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பதுதான் உங்கள் சாதனை சார்.