1.
அன்பே
கொஞ்ச நேரம்
சும்மா இரு
சொல்லற்றிரு
உன் சொற்கள்
உன் கண்ணீரின்
ஈரம் சுமந்திருக்கின்றன
எரிமலையின் கொந்தளிப்பையும்
பித்தனின் கூச்சலையும்
ஆவேசத்தையும்
கதறலையும்
பிரிவின் பதற்றத்தையும்
அச்சம் சூழ்ந்த
இருளின் தனிமையையும்
கொண்டிருக்கின்றன
நினைவுகொண்ட நாளிலிருந்தே
மனநோயாளிகளோடு
வளர்ந்த நான்
இப்போதேனும் கொஞ்சம்
அமைதியின் நிழலை
விரும்புகிறேன்
உன்னோடு இருந்த காலம்
எனக்கு அந்த
நிழலை வழங்கியது
சொற்களில் வாழும் நீ
எனக்கு சொற்களற்ற
அமைதியை அருளினாய்
நினைவிருக்கிறதா அன்பே
ஒரு பகல் முழுதும் நாம்
சொற்களற்றிருந்தோம்
ஆனால் இப்போது
தொலைவிலிருக்கும் நீ
வலி சுமக்கும் சொற்களை
அனுப்புகிறாய்
கொஞ்சம் சும்மா இரு
சொல்லற்றிரு.
2.
யார் சொன்னது
துயருற்றிருக்கிறேனென்று?
இது ஓர் அதிசய உலகம்
வெளியிலிருந்து காண்போருக்குத்
துயரெனத் தெரிவது
இதனுள்ளே
கவித்துவம்
வாதையெனத் தெரிவது
ஆனந்தம்
பதற்றமெனத் தெரிவது
பரவசம்
பித்தமெனத் தெரிவது
குதூகலம்
சத்தமெனத் தெரிவது
சங்கீதம்
வலியெனத் தெரிவது
இன்பம்
கொந்தளிப்பெனத் தெரிவது
நடனம்
ஆனால் கண்ணே,
சொற்களற்று சும்மா இருக்க
வேண்டுமானால்
நீ வேண்டும்
என்னருகே…