2025ஆ,ம் ஆண்டு என் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இனி எழுத இருக்கும் நாவல்களையும், இப்போது எழுதிக்க்கொண்டிருக்கும் நாவல்களையும் இனிமேல் ஆங்கிலத்திலேயே எழுதலாம் என்று முடிவு செய்து விட்டேன். தமிழில் எழுதி நானே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வது அல்ல. ஆங்கிலத்திலேயே எழுதி விடுவது.
காரணம் என்ன?
பல வெளிநாடுகளில் எழுத்தாளர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் எழுத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. சவூதி அரேபியாவில் அப்துர்ரஹ்மான் முனீஃபின் நாவல்கள் தடைசெய்யப்பட்டன. அவர் சவூதியிலிருந்து வெளியேறி ஜோர்டானில் வாழ்ந்தார். டால்ஸ்டாய் போன்ற எழுத்தாளர்களுக்கு நிகரானவர். இதுபோல் உலகெங்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களுக்கு நடந்திருக்கிறது.
இதற்கும் தமிழ்நாட்டு எழுத்துச் சூழலுக்கும் என்ன வித்தியாசம் என்றால், இங்கே எழுத்தாளர்களை சமூகமே புறக்கணித்து விடும். இதை cancel culture என்றுகூட சொல்ல முடியாது. பெருமாள் முருகனுக்கு நடந்ததுதான் கேன்ஸல் கல்ச்சர். அப்படி நடந்தால் எழுத்தாளர் பயனடைவார். சல்மான் ருஷ்டிக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தாலும் அவர் உலகப் புகழ் அடைந்தார் அல்லவா? கேன்ஸல் கல்ச்சரில் குறைந்தபட்சம் அந்த உத்தரவாதமாவது இருக்கும். தமிழ்நாட்டில் நடப்பதற்குப் பெயர் இன்னும் வைக்கவில்லை. அதாவது, எழுத்தாளன் என்று ஒரு ஜீவன் இருப்பதே சமூகத்துக்குத் தெரியாது.
உதாரணமாக, என்னுடைய காமரூப கதைகள் நாவலை வேறோர் சமூகமாக இருந்தால் தெருவுக்குத் தெரு வைத்துக் கொளுத்தியிருக்கும். என்னை நாடு கடத்தியிருக்கும். என் உயிருக்கு அச்சுறுத்தல் வந்திருக்கும். தமிழ்நாட்டில் எதுவுமே நடக்காது. காது இருந்தால்தானே ஐயா சங்கீதம் கேட்க முடியும்? ஆக, இலக்கிய வாசனையே இல்லாத ஃபிலிஸ்டைன் சமூகத்தில் எப்படி ஒரு இலக்கியப் படைப்புக்கு எதிர்வினையை எதிர்பார்க்க முடியும்?
இந்த நிலையில் என் நாவல்கள் மொத்தமாக 2000 பிரதிகளும், அ-புனைவு நூல்கள் 150 பிரதிகளும் விற்கின்றன. ஒரு ஆண்டுக்கான ராயல்டி 1,30,000 ரூ. கிடைக்கிறது.
நான் ஏன் தமிழில் எழுத வேண்டும், சொல்லுங்கள்?
என் இணையதளத்தில் தினமும் எழுதி வருகிறேன். முன்பெல்லாமல் மாதம் 50,000 ரூ. நன்கொடை அல்லது சந்தா வரும். இப்போது 1000 ரூ. வருகிறது.
நானும் நன்கொடை மற்றும் சந்தா கேட்டு எழுதுவதை நிறுத்தி விட்டேன். காரணம், கேட்டு எழுதினால் யாரும் எதுவும் அனுப்புவதில்லை.
இந்த நிலையில் பத்து தினங்களுக்கு முன்பு என் கண்ணாடி உடைந்து விட்டது. வாங்கி ஆறு ஏழு ஆண்டுகள் ஆகி அதன் ஆயுள் முடிந்து விட்டதே காரணம். காத்தியே (Cartier) பிராண்டு. ஃப்ரேம் விலை ஒன்றரை லட்சம் ரூபாய். லென்ஸ் விலை 50,000/- ஆக, அந்தக் கண்ணாடியின் விலை இரண்டு லட்சம் ரூபாய்.
பெரும் கோடீஸ்வரர்கள் அணியும் கண்ணாடி. சென்னையில் ஒரு கோடீஸ்வர நண்பர் அணிந்து பார்த்திருக்கிறேன். தோக்யோ நகரில் ஒரு கோடீஸ்வர நண்பர் என் கண்ணாடியைப் பார்த்து நெகிழ்ந்து காத்தியேவா என்று கேட்டு, தன் கண்ணாடியையும் காண்பித்தார். அவரும் காத்தியே அணிபவர்.
நிலைமை மாறி விட்டது. யாருமே சந்தாவோ நன்கொடையோ அனுப்புவதில்லை. எனக்கு அதனால் கவலையும் இல்லை. அமெரிக்க வாசகர்களில் ஒரே ஒரு நண்பரைத் தவிர வேறு யாருமே கண்டுகொள்வதில்லை. தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே அவ்வப்போது முந்நூறு ரூபாய் வருகிறது. அது எனக்கு இளநீர் வாங்கிக் குடிக்க உதவுகிறது.
ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் மாதம் பத்தாயிரம் வருகிறது என்று நினைக்கிறேன். சமீபத்தில் கூட சீனிக்கு ஃபோன் செய்து நம்மிடம் இருக்கும் கேமராவை விற்று விடலாமா என்று கேட்டேன். அந்த அளவுக்கு நிதி நெருக்கடி.
கண்ணாடி உடைந்து விட்டதால் பத்து தினங்களாக தடவித் தடவிப் படித்துக்கொண்டிருந்தேன். பிறகு வேறு வழியில்லாமல் லென்ஸ்கார்ட் போய் 2000 ரூபாய்க்கு கண்ணாடி வாங்கிக்கொண்டேன். லென்ஸ்கார்ட் மாணவர்களுக்கானது. அதனால்தான் ரெண்டாயிரம் ரூபாய். ஆனால் ஏதோ கண்களில் கலப்பையை மாட்டிக்கொண்டு படிப்பது போல் இருக்கிறது. அத்தனை கனம். காதுகள் அறுந்து விழுந்தாலும் ஆச்சரியமில்லை. அதனால், எப்போதாவது பணம் கிடைத்தால் காத்தியே வாங்கிக் கொள்ளலாம் என்று இப்போதைக்குத் தேற்றிக்கொண்டிருக்கிறேன்.
சாரு நிவேதிதா வாசகர் வட்டம் என்ற ஒன்று இப்போது இல்லை. எல்லோருக்கும் திருமணமாகி விட்டது. இரண்டு முக்கியஸ்தர்கள் என்னை எப்போதும் திட்டிக்கொண்டும், விமர்சித்துக்கொண்டும், என்னைக் கதற அடித்துக்கொண்டும் இருந்ததால் அவர்களிடமிருந்து விலகி விட்டேன். கத்தினால் என் உயிர் போய் விடும். கடைசியில் கத்தியதில் இரண்டு தினங்கள் நெஞ்சுவலியுடனேயே இருந்து அருகில் இருந்தவர்களை பயமுறுத்தினேன்.
நான் குடித்திருக்கும்போது என்னிடம் வம்பு வைத்துக்கொள்ளாதீர்கள், விவாதிக்காதீர்கள் என்று தலைபாடாக அடித்துக்கொள்கிறேன். அப்போது பார்த்துத்தான் தொலைபேசி அழைப்பு. விவாதம். சண்டை. காட்டுக்கூச்சல். நெஞ்சு வலி. நேரில் பேசி ஒரு முறைகூட சண்டை வந்ததில்லை என்பதை கவனிக்க வேண்டும். எல்லாம் தொலைபேசிதான்.
மது அருந்தும் வேளையில் தொலைபேசியைத் தூர வைத்து விடுங்கள் என்றாள் தோழி. அது என்னால் முடியாது. எனக்கு அதிமுக்கியமான தகவல்கள், அதி அவசரமான வேலைகள் தொலைபேசி மூலமாகத்தான் நடக்கும்.
இந்த விஷயத்தில் அவந்திகா பாராட்டுக்குரியவள். முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொன்னேன், நான் மது அருந்தியிருக்கும்போது எதுவும் விவாதம் செய்யாதே என்று. இன்று வரை கடைப்பிடிக்கிறாள். இலக்கியத்தில் ஒரு புத்தகம்கூடப் படிக்காதவள். ஆனால் இலக்கியம் படிப்பவர்கள் இதுவரை நூறு முறை என்னைக் கத்த வைத்திருக்கிறார்கள். ஒரு நண்பர் அஜித் ரசிகர். இடம் தாய்லாந்தில் ஒரு தீவு. அஜித் பற்றிப் பேசாதீர் என்றேன். குடித்துக்கொண்டிருந்தோம். அருமையான கடற்கரை. இரவு நேரம்.
அஜித் தொல்லை தாங்கவில்லை. ஒரு கட்டத்தில் நான் அமர்ந்திருந்த நாற்காலியையும் மேஜையையும் போட்டு உடைத்து விட்டு என் அறைக்குப் போய் விட்டேன்.
எப்படிப்பட்டவர்களோடெல்லாம் குடிக்க வேண்டியிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். அன்றிலிருந்து என்னோடு அமர்பவர்களை நானும் சீனியும் தேர்ந்தெடுக்க ஆரம்பித்து விட்டோம். எல்லோருடனும் அமர்வதில்லை.
சரி, நெருங்கிய நண்பர்களை என்ன செய்வது?
அதனால்தான் அவந்திகா அடிக்கடி சொல்கிறாள், என்னைத் தவிர உன்னோடு ஒருத்தியும் ரெண்டு நாள் கூட வாழ முடியாது என்று.
உண்மைதான். நீங்கள்தான் இலக்கியம் படித்தும் நான் மது அருந்தும் வேளையில் விவாதம் செய்கிறீர்களே? அடிதடியில்தானே முடியும்?
வாசகர் வட்டத்தில் ஒரே ஒரு நண்பர்தான் இருக்கிறார். நாலெழுத்துப் புனைப்பெயர். மற்றபடி காஞ்சீபுரம் ராஜா என் நண்பர். ஸ்ரீராம் என் நண்பர். சமீபத்தில் ஸ்ரீராமானுஜரின் சீடர்களில் ஒருவரான மல்லன் பற்றி ஒரு சந்தேகம் வந்தது. ஸ்ரீயிடம் கேட்டேன். நம்ப முடியாத அளவுக்கு ஞாபக சக்தி உள்ள அவளுக்குத் தெரியவில்லை. ஸ்ரீராமைக் கேட்டேன். கண்ணிமைக்கும் நேரத்தில் உறங்காவில்லி மல்லன் என்றும், அந்தக் கதை எக்ஸைலில் இருக்கிறது என்றும் சொல்லி, அந்தப் பகுதியை எனக்கு அனுப்பினார். குமரேசன் என்ற பெயரில் இரு நண்பர்கள். பெரும் உதவியாக இருப்பவர்கள்.
இப்படித் தனித்தனியான நண்பர்கள் தவிர வாசகர் வட்டம் என்ற ஒன்று இல்லை. செல்வாவை தீபாவளிக்குத் தீபாவளி என்பதைப் போல, புத்தக விழாவுக்குப் புத்தக விழாவில் சந்திப்பேன். ஆனால் 2026 புத்தக விழாவில் நான் தலைகாட்டப் போவதில்லை.
இதுவரையிலான புத்தக விழாக்களில் இருபத்தோரு தினங்களும் கலந்து கொள்வேன். அதற்கான கார் செலவு மட்டும் ஒரு லட்சம் ரூபாய் இருக்கும். தினமும் மூன்று மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை. அதை ஒரு நண்பர் ஏற்றுக் கொள்கிறார். பல வாசகர்களை சந்திக்கிறேன். புத்தகங்களில் கையெழுத்திடுகிறேன். இனிய சம்பவங்கள். ஆனால் இரண்டு விஷயங்கள் சங்கடம். ஒன்று, கடந்த இருபது ஆண்டுகளாக சக எழுத்தாளர்களும் நண்பர்களும் என்னை body shame பண்ணுகிறார்கள். எத்தனையோ முறை எழுதியும் நிறுத்துவதில்லை. ஒருத்தர் கேட்டால் பரவாயில்லை. பார்க்கின்ற எழுத்தாளர்கள் அத்தனை பேரும் “ஏன் டல்லாக இருக்கிறீர்கள்?” என்று கேட்கிறார்கள். சோதனை என்னவென்றால், இளவட்டங்கள் எல்லோருமே என்ன சாரு, ஜொலிக்கிறீர்கள் என்கிறார்கள். ஆக, பிரச்சினை எங்கே இருக்கிறது?
அடுத்த சங்கடம். இவ்வளவு சிரமப்பட்டு வந்தும் ராயல்டி ஒன்றேகால் லட்சம் என்றால் ஏன் இத்தனை சிரமப்பட வேண்டும்?
இந்த 2025 எனக்குள் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதை என் கவிதைகளைப் படித்து நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம்.
தமிழ்ச் சூழலிலிருந்தே நான் முற்றாக விலக விரும்புகிறேன். சமீபத்தில்கூட தோக்யோ செந்தில் என்னிடம் பேசும்போது “சீலே போகவில்லையா?” என்று கேட்டார். ஸ்ரீயும் அடிக்கடி கேட்பதுண்டு.
இப்போதைக்குப் போவதாக இல்லை.
இரண்டு நாவல்களை உடனடியாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
Anatomy of Dissonance. இருநூறு பக்க நாவலில் மூன்று பகுதிகள். இரண்டு பகுதிகள் முடிந்து விட்டன. மூன்றாவது பகுதியில் இன்னும் ஐம்பது பக்கங்கள் எழுத வேண்டும். கொஞ்சம் சிக்கலான பகுதி.
தியாகராஜா. அதையும் ஆங்கிலத்திலேயே எழுதுகிறேன்.
இனிமேல் என் நாவல்கள் எதையும் தமிழில் எழுதுவதாக இல்லை.
ஒரு நாவல் எழுதினால் சுமார் இருபதாயிரம் பிரதிகளாவது விற்க வேண்டும். 2000 தான் போகிறது. அதற்கே மூன்று ஆண்டுகள் ஆகும்.
மேற்கண்ட வேலைகளை முடிக்கும்வரை வெளிநாட்டுப் பயணம் எதுவும் கிடையாது.
இந்த நிலையில் என்னுடைய இரண்டு நூல்கள் வெளிவந்தது பற்றி முன்பே எழுதியிருந்தேன். ரெண்டு பேர் வாங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
எப்படியும் எனக்கு 150 வாசகர்கள் உண்டு. அவர்கள் எப்படியும் இந்த இரண்டு நூல்களையும் வாங்கி விடுங்கள். இதை எழுதுவதில் எனக்குச் சற்றும் உடன்பாடு இல்லை. 150 பிரதிக்கெல்லாம் ப்ரமோஷன் வேலை செய்ய முடியாது. செய்வது அவலம். இருந்தாலும் ராம்ஜி கேட்டுக் கொண்டதால் எழுதுகிறேன். பதிப்பக நண்பர்கள் எது சொன்னாலும் கேட்பேன். ஏனென்றால், புத்தகமே வாங்காத ஒரு சமூகத்தில் புத்தகம் வெளியிடுவதற்கெல்லாம் தனித் தைரியம் வேண்டும். அந்த வகையில் ராம்ஜியும் காயத்ரியும் போராளிகள்தான். அவர்களுக்காக இதை எழுதுகிறேன். வாங்கி விடுங்கள்.
வால்ட்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்? (கட்டுரைத் தொகுதி)
இன்ஸ்பெக்டர் செண்பகராமனும் திருவல்லிக்கேணி டாஸ்மாக்கும் (சிறுகதைத் தொகுதி) இந்த நூலின் பின்னட்டையில் Non-fiction என்று போட்டிருக்கும். கண்டு கொள்ளாதீர்கள். ஃபிக்ஷன் தான். தவறு என்னுடையதுதான். புத்தகம் அச்சுக்குப் போவதற்கு முன் எனக்குத்தான் வந்தது. அப்போதே நான் கவனித்திருக்க வேண்டும். பொதுவாகவே ஒரு நூலில் பிழை என்றால் அது அட்டையில்தான் இருக்கும். பாருங்கள், இப்போதும் அட்டையில். இந்தப் பிழையை என்னிடம் சுட்டிக்காட்டியவர் ஸ்ரீராம்.
இரண்டு புத்தகங்களையும் வாங்குவதற்கு முகவரி:
Zero Degree Publishing
75&76, I Floor,
Kuppusamy Street, Balaji Nagar,
Padi,
Chennai – 6060050
Contact:+91 8925061999,
eMail:zerodegreepublishing@gmail.com
என் கட்டுரைகளை இந்தத் தளத்தில் வாசிப்பதற்கு நீங்கள் சந்தாவோ நன்கொடையோ அளிக்க விரும்பினால் அதற்குரிய விவரங்கள்:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai