2021

2020 முடிய இன்னும் இருபத்து நான்கு மணி நேரம் இருக்கிறது.  இதுவரை எந்த ஆண்டும் புத்தாண்டு பற்றிப் பெரிதாக யோசித்ததில்லை.  எல்லா நாளும் ஒரே நாளே என்ற மனநிலையே எனக்கு.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காட்டில் அராத்து புத்தக வெளியீட்டு விழா.  கோலாகலம்.  சென்ற ஆண்டு கிழக்குக் கடற்கரைச் சாலை.  அராத்து புத்தக வெளியீடு.  இந்த ஆண்டு புத்தக வெளியீடு இருந்தாலும் நான் வருவதற்கில்லை என்று சொல்லியிருந்தேன்.  இப்போது நண்பர்கள் ஏற்காட்டில் சந்திப்பதாக அறிந்தேன்.  எனக்கு மிக நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்ற நண்பர்களைச் சந்திப்பதில் ஆர்வம் குறைந்து விட்டது.  அதற்குக் காரணமும் நண்பர்களே.  நாம் என்னதான் எழுதினாலும், அவர்கள் என்னதான் நம்முடன் உயிருக்குயிராகப் பழகினாலும்,  அது உளப்பூர்வமான நட்பாக இருப்பதில்லை என்று தெரிய வருகிறது.  நன்கு தெரிந்த நெருக்கமான நண்பர்களைத் தவிர மற்றவர்களை நெருங்க விடவே அச்சமாக இருக்கிறது.  இனி மேற்கொண்டு புதிய நண்பர்களே சாத்தியமில்லை என்ற அளவுக்கு என் வட்டம் குறுகிப் போய் விட்டது.  கமல், ரஜினி போன்றவர்களோடு யாராவது அந்த இருவரின் ஒளி வட்டத்தை மறந்து விட்டுப் பழகுவார்களா என்ன?  இங்கே எழுத்தாளர்களுக்கு அப்படிப்பட்ட ஒளிவட்டமெல்லாம் இல்லை என்றாலும் கூட சினிமா பிரபலங்களை விட எழுத்தாளர்களுக்கு வேறு விதமான மரியாதை இருந்து கொண்டுதான் இருக்கிறது.  அது என்றென்றும் மாறாது என்றே தோன்றுகிறது. 

விமலானந்தா என்று ஒரு அகோரி இருந்தார்.  அவரைப் பற்றி நீங்கள் கூகிளில் தேடினால் கிடைக்காது.  அவர் தன்னை ஒருபோதும் வெளிப்படுத்திக் கொள்ளாதவர்.  போலிச் சாமியார்கள் மிகுந்து விட்ட இந்தக் காலகட்டத்தில் நான் யாருக்குமே தெரியாமல் இருப்பதுதான் நல்லது என்று சொல்லிக் கொண்டவர் அவர்.  ஒரு பத்துப் பதினைந்து பேருக்கு மட்டுமே அவர் யாரெனத் தெரியும்.  அவர்களிடம் கூட அவர் தன்னை முழுசாகக் காண்பித்துக் கொண்டவர் அல்ல.  பொதுவாகவே மனித இனத்தின் மீது நம்பிக்கை அற்றவர்.  அவரைப் பற்றி ஒரே ஒருவருக்குத்தான் தெரியும்.  அவர் விமலானந்தரைப் பற்றி ஒரு ட்ரைலாஜி எழுதியிருக்கிறார்.  விமலானந்தரின் பெயர் கூட விமலானந்தர் இல்லை.  என்ன பெயர் என்றும் ட்ரைலாஜியில் சொல்லவில்லை.  எழுதியவர் ஒரு அமெரிக்கர்.  Dr Robert Svaboda.  இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர்.  புத்தகத்தின் பெயர் அகோரா.  மூன்று புத்தகங்களும் ஆயிரம் பக்கம் வரும். 

இந்தப் புத்தகத்தை நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் படித்திருந்தால் அது என் நல்லதிர்ஷ்டமாக, வாழ்க்கையே வெறுவிதமாக இருந்திருக்கும்.  ஆனால் விதியை மாற்ற முடியாது.  இந்த நூலின் அறிமுகம் உங்களுக்கு இளம் வயதில் கிடைத்தால் அது உங்கள் அதிர்ஷ்டம்.  எனக்கு இந்த 68-ஆவது வயதிலாவது கிடைத்ததே என்று நான் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.  இந்த மூன்று தொகுதிகளையும் படித்து முடிக்க எனக்கு சுமாராக மூன்று மாதங்கள் ஆயிற்று.  இந்த நூலை ஒருவர் ஒரே ஓட்டத்தில் படித்து விட முடியாது.  இது ஒரு கற்க வேண்டிய நூல்.  அதிலும் இரண்டாம் தொகுதியை மட்டும் ஓட்டமாகப் படித்து விட்டேன்.  ஏனென்றால், அதற்கு மட்டுமே ஒரு ஆண்டு ஆகும்.  ஒன்றும் மூன்றும் அனுபவங்களால் ஆனது. 

நூலில் உள்ள விஷயங்கள் பலவும் ஏற்கனவே நான் புத்தகங்களில் படித்து அறிந்தவைதான்.  ஆனால் அவை வெறுமனே புத்தக அறிவு மட்டுமே.  ஆனால் ராபர்ட் எழுதியிருப்பது சாட்சியம்.  அவ்வளவுதான் வித்தியாசம்.  ராபர்ட் சொல்வதெல்லாம் பொய், கப்ஸா என்று கருதி இந்தத் தொகுதிகளை நீங்கள் குப்பையில் வீசியெறியலாம்.  அல்லது, நீங்கள் வேறு ஆளாக மாறி விடலாம்.  நான் மாறி விட்டேன்.  ஏனென்றால், ராபர்ட் சொல்வதெல்லாம் உண்மை என்பதற்கு எனக்கு வேறு பலரின் சாட்சியங்கள் இருக்கின்றன.  ரமண மகரிஷி பொய் இல்லை.  ராமகிருஷ்ணர் பொய் இல்லை.  விவேகானந்தர் பொய் இல்லை.  யோகியின் சுயசரிதை எழுதிய பரமஹம்ச யோகானந்தா சொல்வது பொய் இல்லை.  அதன் காரணமாகவே ராபர்ட் சொல்வதும் பொய் இல்லை.  ராபர்ட் ஒரு ஆயுர்வேத மருத்துவரும் கூட. 

அந்த வகையில் 2020 என் வாழ்க்கையை மாற்றி அமைத்த ஆண்டு.  மூன்று முக்கியமான நாவல்களுக்கான குறிப்புகளும், ஒரு மிக முக்கியமான வரலாற்று நூலுக்கான குறிப்புகளுமாக இந்த ஆண்டு கழிந்தது.  இந்த நான்கு நூல்களையும் ஒவ்வொன்றாக வெளிக் கொண்டு வர வேண்டியதுதான் இப்போதைய என் பணி. 

சீனி பொதுவாக என்னைப் பாராட்ட மாட்டார்.  ஒருநாள் அவரை வாய் விட்டே கேட்டு விட்டேன்.  “இதில் என்ன ஆச்சரியம்?  சச்சின் ஆடிக் கொண்டிருந்த போது செஞ்சுரியாகப் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தார்.  ஒவ்வொரு செஞ்சுரிக்கும் அவருக்கு போன் போட்டுப் பாராட்ட முடியுமா?  சாதனைகள் செய்வதுதான் அவர் வேலை.  சாதனையை முறியடிப்பது அவர் வேலை.  நீங்கள்தானே அடிக்கடி சொல்வீர்கள், பெரியோரைப் புகழ்வதும் இலமே என்று?  அதுதான்” என்றார் பதிலுக்கு.  நோபல், புக்கர் போன்று வாங்கினால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன், தாமதமாகக் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்வேன் என்று முடித்தார்.  அப்படிப்பட்டவருக்கு நேற்று ஒரு கட்டுரை அனுப்பினேன்.  ArtReview Asia குளிர்காலத் தொகுதிக்கான கட்டுரை.  பொதுவாக அவருக்கு நான் அனுப்பியதில்லை.  இந்தக் கட்டுரையை ஏதோ அனுப்ப வேண்டும் என்று தோன்றியது.  படித்து விட்டுப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் இது ஒரு புத்தகத்துக்கான அடிக்குறிப்புகள் என்றார்.  நானும் அந்தத் திட்டத்தில்தான் இருந்தேன். 

இப்போது நான் ஆரம்பித்த இடத்துக்கு வருவோம்.  விமலானந்தா (இப்போதெல்லாம் ஆனந்தா என்றாலே அச்சமாக இருக்கிறது!) எப்படிப்பட்டவர் என்றால், இறந்தவரைப் பிழைக்க வைப்பவர்.  கூடு விட்டுக் கூடு பாய்பவர்.  மும்பையில் ராபர்ட்டோடு பேசிக் கொண்டிருக்கும்போதே நியூயார்க்கில் ராபர்ட்டின் நண்பரோடும் அதே நேரத்தில் பேசிக் கொண்டிருப்பவர்.  ஒரே சமயத்தில் ஒரே ஆள்.  இரண்டு இடங்களில்.  இது பூராவும் அவருடைய பத்து நண்பர்களுக்கும் தெரியும்.  விமலானந்தா அகோரி என்றாலும் அது இந்தப் பத்து பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.  மற்றவர்களுக்கு அவர் ஒரு குடும்பஸ்தர்.  ஒரு எஸ்டேட் ஓனர்.  ரேஸ் குதிரைகள் வளர்ப்பவர்.  கோடீஸ்வரர்.  இந்த அடையாளங்களையும் ஆண்டுகளையும் வைத்துத் தேடினால் நீங்கள் அவருடைய லௌகீக அடையாளத்தை எளிதில் கண்டு பிடித்து விடலாம் என்கிறார் ராபர்ட்.  ஏனென்றால், மும்பையில் ரேஸ் குதிரை வளர்க்கும் சிலரில் இன்ன குதிரைகளின் முதலாளி என்று சொல்லிக் கண்டு பிடிக்கலாம்.  கண்டு பிடித்து என்ன செய்வது?  அவர் இறந்து விட்டார்.  அவருடைய அகோரி அடையாளம் பத்து பேருக்கு மட்டுமே தெரியும்.  அதிலும் ராபர்ட்டைத் தவிர மற்றவர்கள் பற்றி யாருக்கும் தெரியாது. 

அந்தப் பத்து பேரில் ஒருவர்தான் விமலானந்தாவின் வக்கீல்.  விமல் பெரிய எஸ்டேட் ஓனர் என்பதால் உயில் போன்றவையெல்லாம் தேவை அல்லவா?  விமலுக்கு ஒரு மகனும் மகளும் உண்டு.  மகன் டாக்டர்.  ஆனால் விமல் செத்தவர்களைப் பிழைக்கச் செய்வார்.  கூடு விட்டுக் கூடு பாய்வார்.  எல்லாம் பதினெட்டாம் நூற்றாண்டுக் கதை அல்ல.  1983-இல் இறந்தவர். 

விமலானந்தா இறந்ததும் அவருடைய சீடர்களில் ஒருவரான வக்கீல் விமலின் உயிலில் மோசடி செய்து அவருடைய கோடிக்கணக்கான சொத்துக்களை தானே எடுத்துக் கொண்டு விட்டார் என்கிறார் ராபர்ட்.  மகனுக்கும் மகளுக்கும் எதுவும் கிடைக்கவில்லை.  இதுவும் முன்கூட்டியே விமலுக்குத் தெரிந்துதான் இருக்கும் என்கிறார் ராபர்ட்.  ”மரணத்தை ஒத்திப் போடக் கூடிய சக்தியுள்ள நீங்கள் ஏன் இந்த அறுபத்து மூன்று வயதில் சாக வேண்டும்?” என்று ராபர்ட் கேட்கிறார்.  நான் இன்ன தேதியில் இறப்பேன் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ராபர்ட்டிடம் சொல்லி விட்டார் விமல்.  ”எனக்கு மனிதர்கள் அலுத்து விட்டார்கள்.  யாரும் நம்பிக்கைக்குரியவராக இல்லை.  என் சீடர்களையும் சேர்த்தே சொல்கிறேன்.  நீ ஒருத்தன் மட்டுமே விதிவிலக்கு.  நீயும் என் ஞானத்தை அறிந்து கொள்ளும் அளவு பக்குவப்படவில்லை.  என் ஞானத்தில் ஒரு கடுகளவையே உனக்குக் கற்பித்தேன்.  நான் கிளம்புகிறேன்” என்றாராம். 

கடவுளைப் போன்ற ஒரு ஆளிடமே மோசடி வேலை செய்கிறார்கள் என்றால் நானெல்லாம் எம்மாத்திரம்?  அப்படி ஒருசில நெருக்கமானவர்களை இந்த ஆண்டு எனக்கு அறிமுகப்படுத்தியது.  ஆனால் நான் என்ன மகானா?  தெரிந்தவுடனே ஒதுங்கி விட்டேன்.  ஆச்சரியம் என்னவென்றால், என்னிடம் வந்து ஆட்டையைப் போடுவதுதான்.  இந்த மனநிலையைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.  இறந்தவரையே பிழைக்க வைக்கக் கூடிய ஒரு ஆளை எப்படி அவருடைய வக்கீல் மோசடி செய்கிறார்?  பணம் கிடைத்தால் போதும், எவ்வளவு நஷ்டத்தை வேண்டுமானாலும் அடையலாம் என்று நினைக்கிறார்களா?  ஒருமுறை ராபர்ட் ஒரு தொலைக்காட்சி பேட்டி கொடுத்தார்.  தொலைக்காட்சி புதிதாக வந்திருந்த காலகட்டம்.  அதுதான் ராபர்ட்டின் முதல் பேட்டி.  மராத்தி மொழியில் பேசியிருந்தார்.  பேட்டி ஆரம்பித்தது.  விமலின் வீட்டில் ராபர்ட்டும் விமலும் பார்க்கிறார்கள்.  அக்டோபர் 1983.  பேட்டியின் ஆரம்பத்தில் ராபர்ட் தன் ஆயுர்வேத ஆசிரியர்களுக்கு நன்றி கூறுகிறார்.  விமலானந்தாவின் பெயர் இல்லை.  கோபத்துடன் என்னை மறந்து விட்டாயா என்கிறார் விமல்.  ”இல்லை குருஜி,  நீங்கள் கால் உடைந்து படுத்த படுக்கையில் கிடக்கிறீர்கள்.  பேட்டியில் உங்கள் பெயரைச் சொன்னால் உங்களை எல்லோரும் பிடித்துக் கொண்டு தொல்லை கொடுப்பார்கள் என்றுதான் சொல்லவில்லை.”

“அது என்னுடைய பிரச்சினை.  இந்தப் பேட்டி சுத்த நான்சென்ஸ்.  இது வரக் கூடாது” என்று விமலானந்தா சொல்ல, வீட்டில் மின் தடை.  மறுநாள் செய்தித்தாளைப் பார்த்தால் ராபர்ட்டுக்கு அதிர்ச்சி.  மும்பை நகரம் முழுவதுமே மிகப் பெரிய மின் தடை உண்டாகி அது தலைப்புச் செய்தியில் வந்திருக்கிறது.  ஆக, அந்த நிகழ்ச்சி முந்தின நாள் ஒளிபரப்பே ஆக முடியவில்லை.

ராபர்ட் நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு போன் போட்டு “இது என் குரு பண்ணின வேலை. பேட்டியை மீண்டும் எடுத்து விடுங்கள்.  இல்லாவிட்டால் என் குரு உங்கள் ஸ்டேஷனையே எரித்தாலும் எரித்து விடுவார்” என்று சொல்ல பக்கத்திலிருந்து இதைக் கேட்ட விமல் விழுந்து விழுந்து சிரித்தாராம்.  மீண்டும் அந்தப் பேட்டி எடுக்கப்பட்டு மீண்டும் ஒளிபரப்பாகியது.  இருவரும் பார்த்து ரசித்தோம் என்கிறார் ராபர்ட்.

தன் பெயரே வரக் கூடாது என்று சொன்ன விமல் எப்படி இந்தப் பேட்டியில் இப்படி நடந்து கொண்டார் என்று கேட்டார் சீனி.  குருவை வணங்குவது இந்திய மரபு.  அதை எக்காரணங் கொண்டும் மீறலாகாது என்பது விமலின் கருத்து.  இப்பேர்ப்பட்ட ஒருவரை அவருடைய சீடரே அவர் இறந்ததும் ஏமாற்றுகிறார்.  ஆனால் என் நண்பருக்கு ஒரு விஷயம் மறந்து விட்டது.  நாம் எதைச் செய்கிறோமோ அதன் பயன் பத்து மடங்காக நம்மிடமே திரும்பி வரும்.  நாம் செய்யும் நல்லது கெட்டது இரண்டுமே. 

2020 உலக மக்களுக்கெல்லாம் மறக்க முடியாமல் போனது.  இதுவும் கூட மனித இனம் விலை கொடுத்து வாங்கின விஷயம்தான் என்பது என் தீர்மானமான கருத்து.  இயற்கையையும் சக ஜீவராசிகளையும் துன்புறுத்தத் துன்புறுத்த அந்தத் தீமையின் பலனை நாம் அனுபவிக்கிறோம். எதை விதைக்கிறோமோ அதுவே நமக்குக் கிடைக்கிறது.

2021-இல் நாம் அன்பை விதைப்போம்…

***

என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்.  மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai