9. இசை பற்றிய சில குறிப்புகள்

இந்தத் தொடரின் எட்டாவது அத்தியாயம் டிசம்பர் எட்டாம் தேதி (2020) வெளியாகி இருக்கிறது.  சில வாசகர்கள் இந்தத் தொடரை ஆழமாக வாசிக்கிறார்கள் என்று தெரிகிறது.  அவர்கள் மீண்டும் ஒருமுறை தொடரை வாசித்து விட்டு இதைத் தொடரலாம்.  அல்லது, இதைத் தனியாகவும் வாசிக்கலாம்.  இந்த அத்தியாயத்தில் அவ்வளவு ஆழமாகச் செல்லப் போவதில்லை.  வேறொரு பணியில் இருப்பதால். 

பா.ராகவன் சமீபத்தில் எனக்கு ஒரு ஹிந்துஸ்தானி இசைக் கலைஞரை அறிமுகம் செய்தார்.   இசைக்கும் எனக்குமான தீவிரமான சம்பந்தம் கடந்த இருபது ஆண்டுகளாக இல்லை.  கேட்டு ரசிப்பதோடு சரி.  ஆழமாகச் செல்வதில்லை.  அந்த லக்‌ஷுரிக்கு இந்த ஜென்மாவில் நாம் கொடுத்து வைக்கவில்லை என்பதே என் நினைப்பு.  இப்போதும் அப்படித்தான் நினைக்கிறேன்.  ஆனாலும் இப்போது கர்னாடக இசையை ஒட்டு மொத்தமாக எல்லோரும் புறக்கணித்து விட்டதைப் பார்த்த போது என் மனம் மாறி விட்டது.  முக்கியமாக, பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இறந்த போது எழுத்தாளர்களெல்லாம் பொங்கிப் பொங்கி எழுந்த போது மிரண்டு போய் விட்டேன்.  ஜனரஞ்சகமாக என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.  அரசியல்வாதி இறந்தால் பத்துப் பதினைந்து பேர் தீக்குளித்து சாவதில் எனக்கு ஆச்சரியமோ வருத்தமோ ஏற்படாது.  ஆனால் ஒரு சினிமா பாடகர் இறந்த போது – தமிழகமே பொங்கி எழுந்தாலும் எனக்கு ஆச்சரியமில்லை.  அப்படித்தான் நடக்க வேண்டும்.  அதுதான் இயல்பு.  ஆனால் ஜனரஞ்சகத்தன்மைகளை தன் வாழ்விலிருந்து அறவே புறக்கணித்து விட்டு ஞானிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் பொங்கி எழுந்த போது பயந்து விட்டேன்.  இந்த எழுத்தாளர்களெல்லாம் லௌகீக வாழ்வில் ஆசைப்பட்டு பணத்தின் பின்னால் சென்றிருந்தால் இந்நேரம் தமிழ் இலக்கியம் இப்படி ஒரு உலகத் தரத்தில் இருந்திராது.  எல்லோருமே லௌகீகத்தைப் புறக்கணித்தவர்கள்தான்.  எல்லோருமே ஒரு கட்டத்தில் பெண்டாட்டி தாலியை விற்றோ அடகு வைத்தோ சிறுபத்திரிகை நடத்தியவர்கள்தான்.  அவர்களா இப்படி ஜனரஞ்சக ரசிகர்களாக மாறி விட்டார்கள் என்று மிகவும் விசனத்தில் ஆழ்ந்தேன்.  மிக நவீனமான, ஃபூக்கோ தெரிதா போன்றவர்களைக் கற்றவர்கள் கூட அப்படி எதிர்வினை செய்தது என்னை மேலும் குழப்பியது.  Of course, ரொலான் பார்த் ஜனரஞ்சகத்தைத் தீட்டாகப் பார்க்காதீர்கள் என்று சொல்கிறார்தான்.  அவரைக் கற்ற பிறகுதான் தமிழ் சினிமாவையே நான் வேறு மாதிரி பார்க்க ஆரம்பித்தேன்.  ஆனால் பார்த்தும் கூட செவ்வியல் கலைகளைத் தூக்கிக் குப்பையில் போட்டு விட்டு ஜனரஞ்சகர்களைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடுங்கள் என்று சொல்லவில்லையே?  அதிலும் பண்டிட் ஜஸ்ராஜ் இறந்த போது இங்கே ஒரு ஆத்மாவில் கூட அது சலனத்தை ஏற்படுத்தவில்லையே?  அப்போதுதான் தெரிந்தது, இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் செவ்வியல் இசையை முற்றாகப் புறக்கணித்து விட்டார்கள் என்பது.  இதற்கு திராவிட இயக்கமும் பிராமணர்களும் சம அளவு காரணமாக இருக்கலாம்.  அந்த சமூகவியல் ஆய்வுகளுக்குள் எல்லாம் நான் போக விரும்பவில்லை.  ஆனால் அந்த க்ஷணம் முடிவு செய்தேன்,  ஒரு நூறு வாசகர்களையாவது கர்னாடக இசையின் பக்கம் திருப்புவோம் என்று.  திருப்பி விட்டேன் என்று வாசகர்களின் கடிதங்களைப் பார்க்கும்போது தெரிகிறது.  ஒரு வாசகர் ஒரு மிகத் தீவிரமான தாலிபான் அனுதாபியையே கிஷோரி அமோங்கரைக் கேட்டு ரசிக்க வைத்து விட்டதாகச் சொன்னார்.  தாலிபான் அனுதாபி இப்போது தினமும் கிஷோரி அமோங்கர் கேட்கிறார்.   நண்பர் சொன்ன தகவல் கப்ஸா இல்லை என்பதை தாலிபான் அனுதாபியின் ஒரு கட்டுரையிலும் கண்டேன்.  அமோங்கர் கேட்டதைப் பதிவு செய்திருக்கிறார். 

 நாடு திருந்தி விடும். 

பா. ராகவனுக்கு வருவதற்கு முன் சில விஷயங்கள்.  1978-இலிருந்து 1990 வரை வாரம் மூன்று முறையாவது சங்கீதக் கச்சேரிகளை நேரில் கேட்டேன்.  பிரகதி மைதான்.  காதம்பரி தியேட்டர்.  பின்வரிசை இரண்டு ரூபாய் டிக்கட்.  முன் வரிசை மூன்று ரூபாய்.  நான் எப்போதும் பின் வரிசைதான்.  கையில் அந்த ரெண்டு ரூபாய் கூட இருக்காது.  பிஸ்மில்லா கான், மல்லிகார்ஜுன் மன்ஸூர், கிஷோரி அமோங்கர், பண்டிட் ஜஸ்ராஜ் போன்றவர்கள் பின்வரிசை ஆட்களை மேடையில் வந்து தங்கள் அருகிலேயே அமரச் சொல்லி விடுவார்கள்.  எனவே நான் இவர்களையெல்லாம் நேரில் அவர்களின் பக்கத்திலேயே அமர்ந்து கேட்டிருக்கிறேன்.  ஒருமுறை பிஸ்மில்லா கான் வாசித்து முடித்து விட்டு இன்று எப்படி என்று சிரித்துக் கொண்டே கேட்ட போது கையெடுத்துக் கும்பிடுவதைத் தவிர வேறேதும் எனக்குத் தோன்றவில்லை. 

ராகவன் அறிமுகப்படுத்திய கலைஞரின் பெயர் வெங்கடேஷ் குமார்.  கர்னாடகாக்காரர்.  அறுபத்தெட்டு வயது.  பார்க்க நாற்பத்தெட்டு மாதிரி தோற்றம்.  இப்படி ஒரு குரலை நான் இந்த ஜென்மத்தில் கேட்டதில்லை.  அந்த உருக்கம்.  எத்தனையோ பேரைக் கேட்டு உருகியிருக்கிறேன்.  ஆனால் வெங்கடேஷ் குமார் போல் யாரும் வராது என்றே தோன்றுகிறது.  அவரிடம் சொன்னால் ஜஸ்ராஜ் எல்லாம் எங்கே, நான் எங்கே என்று சொல்லி   அடிக்க வருவார்.  நேற்று அப்படித்தான் ஒருவரிடம் ”உங்களின் இசை பற்றிய கட்டுரைகள் எல்லாம் படிக்கும்போது தி.ஜா.வையே படிப்பது போல் இருக்கிறது” என்று சொல்ல மிரண்டு போன அவர் இனிமேல் என்னோடு பேச மாட்டார் என்று நினைக்கிறேன்.  அப்படி எனக்குத் தோன்றுகிறது ஐயா, நான் என்ன செய்ய?  உன்னை வாசிக்கிற போது எனக்கு தி.ஜா. ஞாபகம் வருகிறதே?  மோக முள்ளில் யமுனா கோவிலில் அமர்ந்து கச்சேரியைக் கேட்டு விட்டு பாபுவிடம் இப்படியே உயிர் போய் விட வேண்டும் போல் இருக்கிறதே என்று சொல்லும் தருணத்தை நீ உன்னுடைய கட்டுரைகளில், உன் சங்கீத ரசனையில் கொண்டு வந்து விடுகிறாயே, நான் என்ன செய்ய?

வெங்கடேஷ் குமாரிடமும் எனக்கு அப்படியே தோன்றுகிறது.  ரங்கண்ணாவைப் பார்ப்பது போல் இருக்கிறது.  ராகவன் அறிமுகப்படுத்தியிருக்காவிட்டால் இந்தக் கலைஞனை நான் இந்த ஜென்மத்தில் கேட்டிருக்கப் போவதில்லை.  ராகவனுக்கு ஏதாவது பிரதி செய்ய வேண்டும் என்று தோன்றியது.  ஒரு அற்புதமான மந்திரத்தை வழங்கினேன்.  அதைச் சொன்னால் ஐஸ்வர்யமாகக் கொட்டாது.  நாங்கள் எழுத்தாளர்கள் ஐஸ்வர்யத்தை மதிப்பதில்லை, அதன் தேவை கடுமையாக இருந்த போதிலும்.  அந்த மந்திரத்தைச் சொன்னால் ஞானம் கொட்டும்.  கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும்.  அதில் நீந்தித் திளைக்க மூணு ஜென்மம் வேண்டும். 

உடனே நீங்கள் அனைவரும் ராகவனை அணுகுவீர்கள் என்று தெரியும்.  நான் சத்தியம் வாங்கிக் கொண்டு விட்டேன்,  மந்திரத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று.  அடடா இது என்ன அராஜகம் என்றுதானே நினைக்கிறீர்கள்?  உபதேசத்தை ஊருக்குச் சொன்னால் தனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை, ஊருக்கே வைகுண்டம் கிடைக்குமே என்று நினைத்த ராமானுஜரின் வழி வந்த நான் அப்படிச் சொல்லலாகுமோ?  சொல்லலாம்.  இன்றைய நிலைமை அப்படி.  ஒரு நண்பரிடம் காந்தி பற்றிச் சொன்னேன்.  அது ஒரு புதையல்.  யாரும் காணாத ஒரு புதையல்.  காந்தி புதையல்.  அதை நண்பர் பிரசுரித்தார்.  எப்படி? மகாத்மா காண்டூ.  அதனால்தான் சத்தியம் வாங்கிக் கொண்டேன், யாரிடமும் மூச்சு விடக் கூடாது என்று. 

என் குரு விமலானந்தாவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் சொல்கிறேன்.  எனக்கு ஒரு மந்த்ரம் சொல்லுங்கள் என்று விமலருக்குக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சீடர் ஒருவர்.  இன்னும் மந்த்ரத்தை வாங்கும் அளவுக்கு அவர் வளரவில்லை என்பது குருவின் கருத்து.  சீடரோ மிகவும் தொல்லை தருகிறார்.  ஆன்மீக விஷயங்களில் கடும் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்பது மரபு.  பயிற்சியின் போது உயிரே போனாலும் அதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது.  ஆனால் விமலர் எந்த விதிகளையும் கடைப்பிடிப்பவர் அல்லர்.  உதாரணமாக, விமலரைப் பொறுத்தவரை மூன்று செயல்கள் மன்னிக்க முடியாதவை.  வன்கலவி, குரு துரோகம், சூது.  இந்த மூன்று பாவங்களுக்கும் மன்னிப்பே கிடையாது.  ஆனால் விமலானந்தா மும்பை மற்றும் புனேயின் மிகப் பிரபலமான ரேஸ் குதிரைகளின் முதலாளி.  இது சூது என்ற கணக்கில் வராதா என்று விமலரைக் கேட்கிறார் அவரது வரலாற்றை எழுதும் அமெரிக்க சீடர் ராபர்ட் ஸ்வபோதா. 

“இல்லை ரவி (ராபர்ட்டை சுருக்கி ராபி என்பார்கள் அமெரிக்கர்கள்.  அந்த ராபியை விமலர் ரவி என்று சுருக்கி அழைப்பார்), விமலானந்தா என்பவர் ஒரு கையெழுத்திடாத செக்.  நீ செய்யும் காரியங்களில் உன் கையெழுத்தை இட்டால்தான் அது உன் கர்மாவில் சேரும்.  கையெழுத்து இல்லாத செக்குக்கு மதிப்பு இல்லை.  என் லௌகீக செயல்பாடுகள் எதிலுமே என் கையெழுத்து கிடையாது.  என் அடையாளம் இது அல்ல” என்றார் விமலானந்தா.  இது கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொன்னதும் கூட. 

சீடருக்கு மந்த்ரத்தைச் சொன்னார் விமலர்.  மந்த்ரத்தையும் வெளியில் சொல்லக் கூடாது.  விமலர் மூலமாகத் தனக்கு மந்த்ரம் கிடைத்ததும் வெளியில் வரக் கூடாது.  ஆனால் சில நாட்களிலேயே விமலானந்தாவின் குரு மும்பை வந்தார்.  அப்போது அங்கே விமலரின் சீடரும் வந்தார்.  சீனியர் குருவிடம்  பெருமையாக விமலர் தனக்கு மந்த்ரம் தந்ததைச் சொல்கிறார்.  உடனே சீனியர் குரு, அப்படியா மந்த்ரத்தைச் சொல் என்கிறார்.  சீடரும் சொல்கிறார்.  சீனியர் குரு, அடடா, இந்த மந்த்ரத்தில் ஒரு சின்ன பிழை இருக்கிறது என்று சொல்லி மந்த்ரத்தை மாற்றிச் சொல்லிக் கொடுக்கிறார்.  அது ஒரு செல்லாத மந்த்ரம்.  அப்படி ஒரு மந்த்ரமே இல்லை.  விமலானந்தருக்கு விஷயம் புரிந்து விடுகிறது.  தகுதியில்லாத ஒருவருக்கு மந்திரத்தைக் கொடுத்திருக்கிறோம்.  இப்படித்தான் தகுதியில்லாதவர்கள் கையில் மந்த்ரங்களும் பொக்கிஷங்களும் மாட்டினால் அது குப்பையாக மாறும், மகாத்மா காந்தி மகாத்மா காண்டூவாகத்தான் மாறும்.  அதனால்தான் ராகவனிடம் அப்படி ஒரு சத்தியம் வாங்கிக் கொண்டேன்.  அதனால் அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.   

இப்போது அவர் எனக்குக் கொடுத்த பொக்கிஷம்.  பியா பிதேஷ் கயோ என்ற டும்ரி பாடல்.