அரசாங்க குமாஸ்தாக்களுக்கு ஒரு பொதுக் குணம் உண்டு. எது சொன்னாலும் யெஸ் சார் என்பார்கள். ஏய் மூளை கெட்ட் முண்டம். யெஸ் சார். நான் 22 வருஷம் குமாஸ்தாவாக இருந்திருக்கிறேன். இதில் பத்தை கழித்து விடலாம். தில்லியில் நான் பணி புரிந்த சிவில் சப்ளைஸில் இந்த குமாஸ்தாத்தனம் கிடையாது. அங்கே எல்லோருமே தனிக்காட்டு ராஜாக்கள். கொஞ்சூண்டு பணிவு எதிர்பார்ப்பார்கள். என் அதிகாரி பெயர் குல்லர். குல்லர் “ரவிஜி, கொஞ்சம் ஷர்மாவைக் கூப்பிடுங்களேன்” என்பார். உடனே நான் இண்டர்காமை அழுத்தி “ஷர்மா ஜி, குல்லர் சாப் புலா ரஹே ஹே(ங்) ஹே(ங்)” என்பேன். எல்லோரையும் பெயர் சொல்லி கூடவே ஜி போட்டு அழைக்கலாம். இங்கேயெல்லாம் நக்க வேண்டும். நான் குமாஸ்தா அல்ல. ஸ்டெனோ. ஸ்டெனோ என்றால் குமாஸ்தாவை விட ரெண்டு மூணு மடங்கு கூடுதலாகக் குனிய வேண்டும். ஒரே ஒரு உதாரணம்.
பீயெம்ஜி சார் சொன்னா மாதிரி செஞ்சுட்டேன் என்றார் ஒரு அக்கவ்ண்ட்ஸ் ஆஃபீஸர். மேலே போகப் போக பணிவு கூட வேண்டும். பீயெம்ஜியோ வட இந்தியர். அலுவலகத்தில் நாலஞ்சு பீயெம்ஜீக்கள் உண்டு என்பதால் அவருக்குக் குழப்பம். எந்த பீயெம்ஜீயைச் சொல்கிறீர்கள் என்றார். கையையும் முன்னே நீட்டக் கூடாது. பீயெம்ஜி சாரைத்தான் சொல்றேன் சார். நான் தான் குறுக்கே புகுந்து உங்களைத்தான் குறிப்பிடுகிறார் என்றேன். அதனால் நான் முரடன். உங்களை என்று சொல்லி விட்டேன். மீசை வைத்திருந்தேன். இன்னமும் ஞாபகம் இருக்கிறது. தியாகராஜன் என்ற அய்யர் பீயெம்ஜி என் மீசையையும் பெயரையும் பார்த்து விட்டு (அறிவழகன்) உடனேயே அட்மினை அழைத்து என் எதிரிலேயே “என்னய்யா ஆளை அனுப்பிருக்கே. ஸ்டெனோவை அனுப்புனா யாரையோ அனுப்பிருக்கே. அவரு மீசையும் பேரும்… என்ன ஆளுய்யா நீ?” என்று போனில் திட்டி விட்டு, என்னைப் பார்த்து வாயைத் திறக்காமலேயே நான்கு விரல்களைப் பின்னால் அசைத்தார். வெளியே போ என்று பொருள். ங்கோத்தா புண்ட மவனே என்று முணுமுணுத்தபடி வெளியே போனேன். அந்த ஆளுக்கும் கேட்டிருக்கும். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் எல்லா நேரமும் எகிறிக் கொண்டே இருக்க முடியுமா? அடிமைத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் ஊறி விடும். இன்னொரு விஷயம். குமாஸ்தாக்களுக்கு யூனியன் உண்டு. எகிறலாம். ஸ்டெனோக்களுக்கு இல்லை. எகிறினால் நாகர்கோவிலுக்குப் பணிமாற்றம்.
அதன் ஹேங் ஓவராகத்தான் இன்னமும் அந்த அடிமைத்தனம் என்னிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது போல. ஒரு வீட்டுக்குப் போனால் அந்த சோஃபாவின் ஒட்டில்தான் அமர்வேன். ஒரு மேடையில் கடைசியில் அமர்வேன். நேற்றுப் பிறந்த வாண்டு என்னிடம் வந்து அவரைப் படிச்சிங்களா, இவரைப் படிச்சிங்களா என்று மிரட்டினால், ஐயோ நாம் யாரையும் படிக்கவில்லையே என்று அவர்களையெல்லாம் காசு கொடுத்து வாங்குவேன். ஆனால் புரட்டிப் பார்த்தால் ரண குப்பையாக இருக்கும். தலையில் அடித்துக் கொண்டு இனிமேல் யார் பேச்சையும் கேட்கக் கூடாது என்று நினைத்துக் கொள்வேன், அடுத்த வாண்டு வந்து மிரட்டும் வரை.
அப்படித்தான் நடந்துள்ளது இப்போதும். கீழே அராத்து எழுதியுள்ளதைப் பாருங்கள்.
“சாரு நிவேதிதா நவீனைப்பற்றி எழுதி இருந்ததையும் அதற்கு நவீன் பதில் அளித்து இருந்ததையும் பார்த்தேன். நவீன் பதில் கடிதத்துக்கு சாரு எலிமெண்டரி ஸ்கூல் பையன் மாதிரி பதில் கொடுத்ததை ரசிக்க முடியவில்லை. சாருவின் வெள்ளந்தித்தனம் என எடுத்துக்கொண்டு அதைக் கடக்க முடியாது.
வாசிப்பு என்பது மிக மிக பர்ஸ்னல். தேர்ந்தெடுத்தான் வாசிக்க முடியும். தேர்ந்த வாசகன் அல்லது இலக்கிய விமர்சகன் என்று சொல்லிக்கொள்பவன் வேண்டுமானால் எல்லாவற்றையும் வாசிக்க வேண்டும். எழுத்தாளனுக்கு அந்த தோள்வலி தேவையில்லை.
இங்கே தொடர்ந்து இதைக் கட்டமைத்து வருகிறார்கள்.
நீ அவன வாசிச்சியா ? இவனை வாசிச்சியா ? இவனையெல்லாம் வாசிக்காம நீ என்ன எழுத்தாளன் என!
இது என்ன மடமா ? இதுவரை எழுதிய மடாதிபதிகள் எல்லாரையும் வாசித்து முடித்து , கட்டை வேகும் போது நாலு வரி எழுதி விட்டு சாவதற்கு?
கல்வி கரையில; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந்த் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து
நாலடியார் இப்படி சொல்கிறது. இந்த நாலடியாரை நான் மனப்பாடம் செய்திருக்கிறேன். இப்போது எதற்கு வம்பு என்று காப்பி பேஸ்ட் தான் செய்தேன்.
ஒரு தனிப்பட்ட மனிதனைச் சந்திக்கையில் கூட , நீ அதைப் படிச்சி இருக்கியா ? இதைப் படிச்சி இருக்கியா என்று கேட்பதே வன்முறைதான்.
ஒரு எழுத்தாளரிடம் உரையாடும் போது , அவரிடம் இருந்து என்ன தெரிந்து கொள்ளலாம் , என்ன கற்றுக்கொள்ளலாம் அல்லது என்ன மாதிரியான சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளலாம் என்பதுதான் முறையாக இருக்குமே ஒழிய , அவர் என்ன படித்திருக்கிறார், எதைப் படிக்கவில்லை என்று குவிஸ் ப்ரோக்ராம் போல கேள்வி கேட்டு, ஓ, நீ இதைப் படிக்கவில்லையா என ஒரு முடிவுக்கு வருவது அபத்தம்.
என் தோழி ஒருமுறை அவர் பாய் ஃபிரண்டை சந்திக்க அழைத்தார். நான் வழக்கமாக ஆண்களை சந்திக்க ஆர்வம் காட்டுவதில்லை என்றாலும் போய்த் தொலைந்தேன். போனவுடன் அந்த பாய் ஃபிரண்ட் , எஸ்.ராமகிருஷ்ணனை படிச்சி இருக்கீங்களா ? அவர் கதைகளைப் பற்றி உங்க கிட்ட பேசணும் என்றார்.
ஏறு ஏறு என்று ஏறி விட்டேன். இப்போது அவர்களுக்குள் பிரேக் அப் ஆகி விட்டது வேறு விஷயம்.
எஸ்.ரா எனக்கு ஓரளவு பிடித்த எழுத்தாளர்தான். அது அல்ல பிரச்சனை. என்னை சந்திக்கையில் , என் கதைகளைப் பற்றி பேச வேண்டும் அல்லது நல்லா கும்முன்னு இருந்த நமீதா மார்க்கெட் ஏன் போச்சி , இப்ப காசுக்கு அவங்க என்ன பண்றாங்க என்று பேசுவதில் சிக்கல் இல்லை. இந்த சின்ன நுணுக்கம் தெரியாமல் என்ன மயிரு ?
நீங்கள் இளையராஜாவை சந்தித்து , அநிருத் மியூசிக்கைப் பற்றி உங்க கிட்ட விவாதிக்கலாம்னு இருக்கேன் என்று சொன்னால் செருப்பால் அடிக்க மாட்டாரா? அஜீத்திடம் சென்று விஜய் படங்களின் அழகியல் , சிம்புவின் வாழ்க்கை முறை , ஜெயம் ரவியின் நளின நடிப்பு என்று உரையாட முடியுமா ? ஆனால் இது எல்லாம் இலக்கியத்தில் சாத்தியம்.
எங்கள் கூட்டத்தில் சாரு படைப்புகள் பற்றி எப்போதாவதுதான் பேசுவோம். என் புத்தகங்கள் பற்றி மூச். சாரு எப்போதும் அடுத்த எழுத்தாளர்களைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருப்பார். ஆனால் அதற்கு முதலில் நாம் நண்பர்களாக வேண்டும்.
பொதுதேர்வு நடந்து கொண்டிருக்கும் போது பறக்கும் படை என்று ஒன்று வரும். பிட் அடிப்பவர்களைப் பிடிப்பதற்கு. அதைப்போல திடீரென்று ஒரு டீ குடிக்க சந்தித்து விட்டு , நீ என்ன படிச்சிருக்க ? கோணங்கி படைப்புகளைப் பத்தி விவாதிக்கணும் என்றெல்லாம் சொன்னால் , பைத்தியம் என்றுதான் தோன்றும். அந்த ஒரு சந்திப்பில் ஒரு எழுத்தாளன் சொன்னதை வைத்து , ” உலக இலக்கியத்தை தன் கைக்குள் வைத்திருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ” என்று எழுதுவதற்கு மிக மிக அதிக தடித்தனம் வேண்டும்.
அப்படி எழுதியதைக் கூட எடுத்துக்கொள்ளலாம் , அதுதான் அவர் இயல்பு என்று. இப்போது அதை நியாயப்படுத்தி சொல்லி இருக்கும் காரணம் தான் , எரிச்சல் ஊட்டுகிறது. ஒருவன் பிக்பாக்கெட்டாக இருக்கலாம் , தப்பேயில்லை. அவன் சூழ்நிலை அல்லது தன்னியல்பு என எடுத்துக்கொள்ளலாம். அது பிக்பாக்கெட் இல்லை , ஆக்சுவலி என அவன் அதற்கு ஒரு விளக்கம் மற்றும் நியாயம் கற்பிக்கும் போதுதான் அவன் பிக்பாக்கெட்டை விட ஆபத்தானவனாக ஆகிறான்.
இதில் பல அபத்தங்கள் இருக்கின்றன. சாரு படித்ததையே படிக்கவில்லை என்பார். தான் எழுதியதையே யாரோ எழுதியது என்று நினைப்பார். ஒரு மணி நேர சந்திப்பில் ஒரு எழுத்தாளனிடம் குவிஸ் மாஸ்டர் போல கேள்வி கேட்பதே ஒரு அபத்தம். அதை வைத்து ஒரு முடிவுக்கு வருவது அதைவிட அபத்தம். அந்த அபத்தமான முடிவை வைத்து அசிங்கப்படுத்தி எழுதுவது அயோக்கியத்தனம். அதை இவ்வளவு இலகுவாக சமாதனப்படுத்திக் கடப்பதை என்னவென்று சொல்வது ?
இங்கே தமிழ் லெஜெண்டை எல்லாம் யாராலும் ஒரு டீக்கடையில் சந்தித்து உரையாட முடியும் என்ற ஒரே விஷயம் தான் இவ்வளவு அபத்தங்களுக்கும் காரணம்.
சாரு நவீனுக்கு எழுதிய பதில் கடிதத்தில் பள்ளி மாணவன் போல ஒவ்வொன்றாக லிஸ்ட் போட்டு இருந்ததை படித்து கொலை வெறி ஆனேன். சாரு செய்தது ஒரு தவறான முன்னுதாரணம். இதை மிக வன்மையாக கண்டிக்கிறேன்.
கு.ப.ரா எழுதிய சிறிது வெளிச்சம் (இதானே பெயர் ) உலகத் தரம் என்பார் சாரு. அது ஒரு மேலை நாட்டு பாணியில் பாவனை செய்த கதை என்பேன் நான். சம்பத்தின் இடைவெளி போல இதுவரை உலகில் வந்ததில்லை என்பார் சாரு. அது ஒரு ஃபேக் நாவல் என்பேன் நான். க,நா.சு வின் அசுரகணம் குப்பை. குப்பையோ குப்பை என்பேன் நான். மோகமுள்ளை கிண்டல் அடித்து தற்கொலை குறுங்கதைகள் எழுதி இருக்கிறேன். லா.ச.ராவின் அபிதா ஒரு அபத்தம், சுத்த அயற்சி மற்றும் சிரங்கு சொறிதல் என்று எழுதி இருக்கிறேன். அப்புறம் என்ன மூத்தோர் புடிங்கி?
சாருவின் புதிய எக்ஸைல் நாவலை வெளிவருவதற்கு முன்பே நாங்கள் , அவ்வளவா நல்லா இல்லை என்று விமர்சித்து இருக்கிறோம். இந்த இலக்கிய ஸ்டிக் எடுத்துக்கொண்டு வந்து எழுத்தாளர் குதத்தில் சொருகி டெஸ்ட் செய்வதெல்லாம் ரொம்ப ரொம்ப பழைய காலத்து வழக்கொழிந்து போன விஷயம். இந்த வேணுகோபால் கதையையே எடுத்துக்கொண்டால் , அதுவும் மரண ஃபேக். இவர்தான் தமிழர்களின் பாலியலை எழுதுகிறார் என்று கொடி பிடித்தால் இதை விட மடையன் வேறு எவனும் இருக்க மாட்டான்.
ஒரு எழுத்தாளரைச் சந்தித்தால் , அவர் என்ன எழுதி இருக்கிறார் என்று பாருங்கள் , பேசுங்கள். அதைப்பற்றி விவாதியுங்கள். உங்களுக்குப் பிடித்த கொள்கைகள் , உங்கள் கோஷ்டி எழுத்தாளர்கள் மற்றும் படைப்புக்களை அவர் படித்து இருக்கிறாரா என்று சேனிட்டரி இன்ஸ்பெக்டர் மாதிரி இன்ஸ்பெக்ஷன் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் , அவர் கோபித்துக்கொண்டால் , குறைந்த பட்சம் உங்கள் இயல்போடு இருங்கள். சப்பைக் கட்டுக் கட்டாதீர்கள்.