7. பரமசிவனுக்கும் பார்வதிக்கும் நடந்த ஒரு குட்டி உரையாடல்

நித்திரை வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார் பரமசிவன்.  அவர் இப்படிப் புரண்டதில் விழித்துக் கொண்ட பார்வதி “என்ன ஷிவ், நித்திரை வர்லியா, ஏதாவது வாய்வுப் பிரச்சினையா?  அதனால்தான் ராத்திரியில் சக்கரைப் பொங்கலையும் வெண்பொங்கலையும் வச்சு வச்சு அடிக்காதீங்கன்னு அடிச்சுக்கறேன்.  நீங்க என் பேச்சைக் கேக்கறதே இல்லை.  ரொம்ப சொன்னா எதாவது சாபத்தைக் கொடுத்து மாடா போ ஆடா போன்னு அனுப்பி வைச்சிடுவீங்க.  அப்புறம் என்னைக் காப்பாற்ற எங்க அண்ணாதான் கோகுல கிருஷ்ணனா வரணும்…”

“ஏய் பார்வி… புரண்டு படுத்ததுக்கா இத்தனை ரவுசு.  அதுவும் இந்த ராத்திரில பசு பேச்சை எடுக்கிறியே.  நடு ராத்திரில அரசியல் பேசலாமா?  பை த வே, நம்ம ட்ரடிஷன்ல சாபம்னா அது கூடவே  விமோசனத்தையும் எடுத்துட்டேதானே போகுது.  அப்றம் என்னடி?”

சலிப்புடன் சொல்லி விட்டு மறுபடியும் ஒருமுறை புரண்டு படுத்தார் பரமசிவன். 

“என்ன பிரச்சினைன்னு என் கிட்ட சொல்லப்டாதா?   பர்த்தாவுக்கு ஒரு பிரச்சினைன்னா பாரியாள் கவலைப்பட மாட்டாளா?  சமீப காலத்துல நீங்க இப்டி புரண்டு புரண்டு படுத்தது இல்லியேன்னு ஒரு அக்கறையில கேட்டேன்.”

”எல்லாம் உங்க அண்ணனால வந்தது.  அவண்ட்ட ஹாய் ஹலோ ஃப்ரெண்ட்ஷிப்போட போய்டணும்னுதான் பார்க்கிறேன்.  ஆனா ஏதோ ஒரு வசியத்துக்குக் கட்டுப்பட்டாப்ல பேச்சு ஓடிட்றது.  நேத்தைக்குப் பாரு, நான் பாட்டுக்கு என் ஜோலியைப் பாத்துட்டுப் போய்ட்ருக்கச்சே கூப்பிட்டுப் பேசி என் மனசைக் கெடுத்துட்டான்.  இப்போ அவன் சொன்னதையே நெனச்சிட்டு புரண்டுகிட்டிருக்கேன்.”

”ஆனான்னாலும் உங்களுக்கு எங்கண்ணான்னா கொஞ்சம் தொக்குதான்.  அது ஏன் எந்த ஆம்பளைக்கும் வைஃபோட ஃபேமிலின்னா ஆக மாட்டேங்கிறது?”

“எனக்குத் தெரிஞ்சு நிறைய பேரு இந்த மச்சானுங்க பிரச்சினையை நினைச்சு பயந்தே கல்யாணம் பண்ணிக்காம கெடக்கான், தெரியுமா?  ஆனா நான் மாட்டிட்டேன்.  இனிமே தப்ப முடியாது.  அவன் சங்காத்தமே வேணான்னுதான் இருக்கேன்.  ஆனா அடிக்ஷன்.  என்ன பண்றது?  பேசினா மனக்குழப்பம்.  பேசாமலும் இருக்க முடியலை.” 

”ஆமா, உங்களுக்கு அண்ணா மட்டும்தானா அடிக்‌ஷன்?  மெய்ன் அடிக்‌ஷனை விட்டுட்டீங்களே?  நீங்களே அடிக்கிறதுனால உங்கள் பக்தாளும் சேர்ந்து அடிச்சு இந்த இமயமலை பூரா ஒரே கஞ்சா புகை.  என்னால ஒரு வாக்கிங் கூட போக முடியலை.  மேகம் எது, கஞ்சா புகை எதுன்னு கூட தெரியலை.  கமர்றது…”

“இன்னொரு அடிக்‌ஷனை விட்டுட்டியேடி…” என்று சொல்லி பார்வதியைப் பார்த்துக் கண்ணடித்தார் பரமசிவன்.  

”ம்க்கும்.  இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை…  சரி, அது என்ன எங்கண்ணா உங்க மனசைக் கெடுத்த விவகாரம்?”

“ஒண்ணுமில்லடி.  இந்தத் தமிழ் எழுத்தாளப் பயலுக அத்தனை பேரும் உங்கண்ணா பின்னாடியே சுத்தறானுங்க.  அதுதான் எனக்கு டிப்ரஷனை உண்டு பண்றது.  அந்த ஜெயமோகன் பய இருக்கானே, முதல்ல விஷ்ணுபுரம் எழுதினான்.  மன்னிச்சேன்…”

குறுக்கே புகுந்த பார்வதி “என்னது, விஷ்ணு புராணமா?” என்றாள்.

“உனக்கு ஜெனரல் நாலட்ஜ் போறாது.  அடிக்கடி கமல் மாதிரி பேசறே.  ஜெயமோகன் பய எழுதினது விஷ்ணுபுரம்… அதை மன்னிச்சேன்.  ஏன்னா, அடுத்தது சிவபுரம்தான்னு எதிர்பார்த்தேன்.  ஆனா பய எழுதலை.  திரும்பவும் விஷ்ணுதான்.  கொஞ்சம் மாத்தி இப்போ கிருஷ்ணன் கதை.  மஹாபாரதம்.  அதுவும் வியாஸனை விடப் பெருசா எழுதி பட்டையைக் கிளப்பிருக்கான்.  அமெரிக்கா பூரா இப்போ அதுதான் பேச்சு…”

“ஓ.  ஜெயமோகன் அமெரிக்கால இருக்காரா?”

“அட நீ வேறேடி.  அவன் இங்கே பாரதத்தோட கடைசிக் கோடீலதான் இருக்கான்… நாரோயில்ல.  அவனோட பக்தாள்தான் அமெரிக்கால இருக்கறது…சே பழக்க தோஷத்துல பக்தாள்னு வந்துடுச்சு.  ரசிகாள்… ரசிகாள்… அமெரிக்கா பூரா ஊருக்கு ஊரு மஹாபாரத மன்றம். ட்ரம்ப் இருந்ததுனால கொஞ்சம் ஹேப்பியா இருந்தேன்.  அவனுக்கு இந்த மஹாபாரதம், இண்டியன்ஸ் எல்லாம் ஆகாது.  ஆனா அவனையும் வீட்டுக்கு அனுப்பிட்டாங்களா.  இப்போ இந்த ரசிகப் பயலுகளுக்கு எல்லாம் ஒரே கொண்டாட்டமாப் போச்சு…”

“இதுக்கெல்லாமா ஜெலஸி?  எல்லாம் நம் பாரதத்துக்குப் பெருமைதானே ஷிவ்?”

“என்ன டேஷ் பெருமை?  கடவுளாச்சேன்னு டேஷ் போட்டுப் பேசறேன்.  முதல்ல விஷ்ணுபுரம்.  இப்போ மஹாபாரதம்.  சுடுகாட்டுல இருக்கறவனுக்கு ஒரு இட ஒதுக்கீடு கூடவா இல்லாமப் போச்சு?  என்ன இருந்தாலும் அந்த அ. மார்க்ஸ்ங்கிறவன் – அவன் நாஸ்திக படவான்னாலும் – அவன் சொல்றது சரியாப் போய்டுச்சே?  விளிம்பு நிலை மக்களுக்கு விடிவே இல்லியா?  ஆனா இந்த அ. மார்க்ஸ் ஒரு டேஞ்ஜரஸ் பேர்வழி தெரியுமா?”

”அப்டியா?  பேரைக் கேட்டதுமே நினைச்சேன்.”

“நாம விளிம்புநிலை மக்களைப் பத்திப் பேசினோமானா… ’சரி, வாங்க, எல்லாரையும் சமமாவே பாவிக்கிற மதத்திலே சேருவோம்’னு நம்மளையும் மாத்தி விட்ருவான்.  வேற வம்பே வேணாம்.  நானே மதம் மாறினா அப்றம் பாரதத்திலே ரத்த ஆறுதான் ஓடும், இல்லியா?”

”ஏன் இப்டி அர்த்த ராத்திரியிலே கண்டதையும் பேசி எனக்குப் பேதி கிளப்புறீங்க ஷிவ்?”

“என்னடி செல்லம்… பீதியை பேதிங்கிறே.  என்ன ஆச்சு உனக்கு?”

“அட, அது ஒண்ணும் இல்ல ஷிவ்.  நான் பீதின்னுதான் உங்க கிட்ட பேசுவேன்.  ஆனா இதை எப்டியும் இந்த சாரு பய கதையா எழுதும்போது அதை லே அவ்ட் ஆர்டிஸ்ட் பேதின்னுதான் போடப் போறான்.  அதனால நானே பேதின்னுட்டேன்… வேற ஒண்ணும் இல்லை.”

“இல்ல பார்வி.  சாரு பயலை நீ அப்டி எடை போடாதே.  அவன் இந்த விஷயத்தில மட்டும் பயங்கரவாதி.  ஒரு தப்பு விட மாட்டான்.  கவலைப்படாம சரியாவே பேசு.”

“hmmm… சொல்லுங்க…”

“என்னடி. திடீர்னு hmmmனு இங்க்லீஷ்ல போடறே?”

“நாமளும் காலத்துக்கேத்தாப்போல மாடர்னா இருக்கோணுமில்ல.  இப்போல்லாம் கேர்ள்ஸ் chat பண்ணும்போது அதிகமாக யூஸ் பண்ற, மிஸ்யூஸ் பண்ற வார்த்தை hmmm தான்.  நீங்க இன்னும் சுடுகாட்டுலயே உக்காந்துக்கிட்டு ஜெயமோகன் எழுதலை பயமோகன் எழுதலைன்னு புலம்பிட்டு இருங்க…”

“அவன் ஒத்தன் மட்டும்னா கூட விட்ருப்பேன்.  இந்த ட்ரான்ஸ்க்ரஸிவ் பயலும் எப்பொப் பாரு… பெருமாள் பெருமாள்னுட்டுத்தான் உக்காந்திருக்கான்.  அவன் வீட்டுக்கு எதிர்த்தாப்போலதான் என் ஜாகை.  லோகம் பூராவிலேர்ந்தும் என்னை என் ஜாகையில வந்து பார்க்கிறாங்க.  இவன் என் வீட்டைத் தாண்டித்தான் மாதவப் பெருமாள் கோவிலுக்குப் போறான்.  என் பக்கம் திரும்பியும் பார்க்கிறது இல்லை.  மாதவப் பெருமாளை சேவித்து விட்டு என் ஜாகையைத் தாண்டி நேரா அவன் வீட்டுக்குப் போகிறதில்லை.  அப்டியே நேராப் போனா கேசவப் பெருமாள்.  அங்கே ஒரு எட்டுப் போட்டு சேவித்து விட்டுத்தான் போறான் படவா…  அவன் மட்டுமில்லை.  செக்கூலரா ஒத்தன் இருக்கான்.  எதுலயும் பட்டுக்காம இருப்பான்.  எந்த விவகாரமும் இல்லாதவன்.  அவன் கூட என் கிட்டே வாலாட்டினான்.   எஸ்ரான்னு நாமம்.  என்ன பண்ணினான் தெரியுமோ?  உப பாண்டவம்னு எழுதினான்…  புதுமைப்பித்தன் மட்டும்தான் ஏதோ ஒரு சிறுகதை எழுதி என்னைக் காப்பாத்தினான். நான் எப்படி டிப்ரஸ் ஆகாம தூங்கறது, சொல்லு?”

பேச்சு போகும் திசை சரியில்லை என்று எண்ணிய பார்வதி பேச்சை மாற்ற முயற்சித்தாள். 

“ஆமா, அது என்ன ட்ரான்ஸ்க்ரஸிவ்னு ஏதோ சொன்னீங்களே ஷிவ், அது என்ன?”

”இந்நேரம் நீ கூகிளில் தேடியிருப்பேன்னு நினைச்சேன்.  நானும் அதிலேதான் பார்த்தேன்.  ஆனா ஒண்ணும் புரியலை.  சரி, நம்ம ஜெயமோகன் என்ன எழுதியிருக்கான்னு பார்த்தேன்.  எதிர்பார்த்தது இருந்தது.  அந்தப் பய என்னதான் விஷ்ணுவின் கட்சியாக இருந்தாலும் வெவரமானவன்தான். சந்தேகம் இல்லை.  ட்ரான்ஸ்க்ரஸிவ்னா பிறழ்வு எழுத்தாம்.”

“ஓ, எழுத்தெல்லாம் பொரண்டு பொரண்டு இருக்குமா?”

“ம்… உன் தலை…  பிறழ்வு எழுத்துன்னா… இப்போ நேரான சிந்தனைன்னு ஒண்ணு இருக்கா… அதுக்கு மாறானதுன்னு குன்ஸா சொல்லலாம்… அதாவது இங்லீஷ்ல சொன்னா இன்னும் ஈஸியா இருக்கும்.  தாண்டுதல் தார்மீகம் சமூகம் வேலிகள்.”

“இது என்ன இங்லீஷ் மாதிரியும் தெரில.  தமிழ் மாதிரியும் தெரீலயே ஷிவ்.  இது என்ன பாஷை?”

“இதுதாண்டி மொழிபெயர்ப்பு பாஷை.  இப்போல்லாம் இப்டித்தான் மொழிபெயர்க்கிறாங்க.  புரீலயா உனக்கு?  இரு.  இங்லீஷ்லயே சொல்லிர்றேன்.  Violation of moral and social boundaries.”

“அட பகவானே… இதுவா பெரிய விஷயம்.  நம் புராணங்கள் அத்தனையும் ட்ரான்ஸ்க்ரஸிவ் லிட்ரேச்சர்தானே?  ஏன் உங்க ஷிவ் புராணத்துலயே வர்ற பிரம்மனுக்கும் சரஸ்வதிக்குமான உறவு எப்படிப்பட்டது?  ஒரே கர்ப்பத்தில் கிடந்த யமியும் யமனும் மணம் புரிந்து கொள்ளவில்லையா?”

”ஏய் பார்வி…பார்வீ… நிறுத்து நிறுத்து.  பாவம் சாரு.   என்னதான் ட்ரான்ஸ்க்ரஸிவ் எழுத்தாளன்னாலும் அவன் உயிருக்குப் பாதகம் வந்து விடக் கூடாது.  இந்தக் காலகட்டத்தில் இதையெல்லாம் எழுதினா உன் தலை உன் உடம்பில் இருக்காது.”

“ஏன், அந்த ராமசாமி நாய்க்கர் மட்டும் எழுதினாரே?”

“அந்தக் காலம் வேறேடி.  இந்தக் காலம் வேறே.”

”சரி.  அப்போ இந்தப் பேச்சே வேணாம்.  ஏதோ நேத்து நோபல் புக்கர்னு பேச்சு கேட்டுதே…”

“போச்சுடா.  அது இந்த ட்ரான்ஸ்க்ரஸிவ் மேட்டரை விட எரியும் பிரச்சினை ஆச்சே.  அதைத் தொட்டுட்டியா?  அது என்னன்னா, அந்த விஷயம் எல்லாம் நம்ம ப்ஃரெண்ட் இருக்காரே ஜீஸஸ் க்றைஸ்ட், அவரோட அதிகார எல்லைல இருக்கு.  சரியா?  ரொம்ப subtleஆ அந்த கேங்க் இங்கே குத்திக்கிட்டு இருக்கு.”

“எப்டி?”

“கோவில்ல க்ரூப் செக்ஸ் நடக்குதுன்னு எழுதினா நோபல், இந்தியாவின் மேல காறித் துப்புறேன்னு எழுதினா புக்கர்னு அடிச்சுத் தள்ளுது அந்த கேங்க்…”

“அதுல என்ன தப்பு.  நம்ம கோவில் சிற்பங்கள்ள இல்லாததையா எழுதிடப் போறான்?  மேற்கிலே பாவம்ங்கிற கான்ஸெப்டிலேர்ந்து ஆரமிக்கிறாங்க.  நாம ஆரம்பத்திலேர்ந்தே ஹெடோனிஸ்ட் இல்லியா?”

“அடிப்பாவி பார்வி… ஹெடோனிஸ்ட் எல்லாம் தெரியுமா?”

“ஹி.ஹி.  நீங்க தியானத்துல இருக்கும்போது அப்போ அப்போ அந்த சாரு நிவேதிதாவோட ப்ளாக்ல மேய்வேன்.  ஆனா  அவனுக்கு நான் மெயிலெல்லாம் போட்டதில்லை.  ரகசியமா படிப்பேன்.  இன்னிக்குத்தான் வார்த்தையை விட்டு உங்கள்ட்ட மாட்டிக் கிட்டேன்.”

”சேச்சே… நான் என்ன எம்சிபியா.  எனக்கும் ஃபெமினிஸம் பெண் விடுதலையெல்லாம் தெரியும்.  யூ டோண்ட் வொர்ரி.  உனக்கு என்ன வேணும்னாலும் கேளு, தாரேன்…” 

’கிழிஞ்சது’ என்று தனக்குள் முனகியபடி “hmmm…” என்றாள். 

”அதனால இப்போ நான் ஜீஸஸையே நேர்ல பார்த்து கேட்டுர்லாம்னு முடிவு பண்ணிட்டேன், இதோ ஜெருசலேம் கிளம்பணும்…”

“அதுக்கு ஏன் நேர்ல போணும்?  டெலிபதிலயே கேட்கலாமே?  இப்போ வேற ஊரெல்லாம் ஒரே கொரோனாவா கெடக்கு, ஏதொ மூணாவது வேவ், நாலாவது வேவ்னு சொல்றாங்க…  நீங்க வேற இன்னும் தடுப்பூசி கூட போட்டுக்கலை?”

”கல்யாணத்துக்குக் கிளம்பணும்… லேட்டாயிடுத்து… வாங்க போலாம்…”

”என்னடி பார்வி… திடீர்னு என்னன்னமோ உளர்றே… என்ன ஆச்சு உனக்கு?”

“அது ஒண்ணுமில்லை ஷிவ்.  இந்த பா.ராகவனும் சாரு நிவேதிதாவும் பேசிட்டிருந்தானுங்களா… அவனுங்க பேச ஆரமிச்சா நேரங்காலம் தெரியாது.  பாரா பாரியாளுக்குக் கல்யாணத்துக்கு நேரமாச்சு.  ஆம்படயானைக் கூப்பிடறா.”

“அது சரிடி.  அது ஏன் இங்கே கதைக்கு நடுவிலே வந்தது?”

“அது ஒண்ணுமில்லை ஷிவ்.  இந்த சாருவுக்கு கல்பனா சக்தியே போறாது.  எது எது நடக்கிறதோ அது அதை அப்படி அப்படியே எழுதி வைச்சுருவான்.  நாம இங்கே பேசிட்டு இருக்கறதை தட்டச்சு செய்யும் போதே இன்னொரு ட்ராக்ல அவனும் பாராவும் பேசிட்டு இருந்திருக்கானுங்க.  இடையிலே பாராவோட பாரியாள்.  அதுதான் குழப்பம்…  அது போகட்டும்…  you come and hug me, shiv…”