அன்புள்ள சாரு ஐயா:
தங்களின் எளிய வாசகன் நான். அரசியல் பற்றிய இந்த கேள்வி உங்களுக்கு சிரமத்தை அளித்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.இன்னும் நான்கு நாட்களில் தேர்தல் வர இருப்பதால் உங்கள் பதில் தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு தெளிவான சிந்தனையை வழங்கும் என மிக ஆழமாக நம்புகிறேன்.முக்கியமாக உங்கள் வாசகர்களுக்கு.தாங்கள் உட்பட எல்லோரும் தங்களுக்கு விருப்பமான கட்சியை இதுவரை தேர்வு செய்து வைத்திருப்பார்கள்,பல பேர் ஒரே கட்சிக்காக வெற்றியோ தோல்வியோ தொடர்ந்து வாக்களிப்பார்கள்,அந்த ரகம் தான் நான்.இதுவரை இரண்டு மக்களவை தேர்தல் மற்றும் ஒரு சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளேன்.மூன்று முறையும் ஒரே கட்சிக்குத் தான் வாக்களித்துள்ளேன்.இனி மேலும் அவர்களுக்குத்தான்.ஏனெனில் என்னுடைய கொள்கை மற்றும் குடும்ப உறுப்பினர் அரசியலில் உள்ளதால் இந்த தொடர் ஆதரவு.எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு என்பதை கேட்பதற்கு எந்த உரிமையும் எனக்கு கிடையாது.ஆனால் உங்கள் பார்வையில் எந்த கட்சி 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதையும் அதற்கான காரணத்தை தாங்கள் வாயிலாக அறிய மிகவும் விரும்புகின்றேன்.மீண்டும் கூறுகின்றேன் கேள்வி சிரமத்தை அளித்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
வாசகன்: கண்ணன்.
அன்புள்ள கண்ணன்,
நடைமுறை அரசியல் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று இருந்தேன். ஏனென்றால், ஏற்கனவே எல்லாம் பலமுறை எழுதினதுதான். புதிதாக எழுத எதுவும் இல்லை. ஆனால் கமல் வரவே கூடாது என்று உறுதியாக இருக்கிறேன். சினிமாவினால் கலாச்சாரம் அழிந்தது போதும். அரசியலும் சமூக வாழ்வும் நாசமாகப் போக வேண்டாம். எம்ஜியார் சினிமா கவர்ச்சியால் மட்டும் வரவில்லை. அவருக்கு அரசியல் பின்னணி இருந்தது. அவரை இங்கே கொண்டு வரக் கூடாது.
எனக்கு இங்கே இருக்கும் இரண்டு கட்சிகளையும் பிடிக்காது. தமிழகத்தில் ஐம்பது சதம் அப்படித்தான். ஆனால் வேறு வழியில்லை. அதனால்தான் மாற்றி மாற்றி வாக்களிக்கிறார்கள். அந்த “முறை”யின்படி பார்த்தால் இப்போது திமுகதான். ஆனால் திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் மக்களின் மனதில் ஒரு கிலியை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். மதுரையில் ஒரு மிகப் பெரிய போலீஸ் அதிகாரியையே ஒரு ரவுடி போலீஸ் ஸ்டேஷனிலேயே நுழைந்து கன்னத்தில் அறைந்ததெல்லாம் தெரியும்தானே? அதனால்தான் பயம். அதிமுகவில் அந்த அளவுக்கு இறங்க மாட்டார்கள். அவர்கள் கவனமெல்லாம் பணம் பண்ணுவதுதான்.
இப்போது அதிமுக வந்தால் அது பாஜக என்ற வலதுசாரி இந்துத்துவ சக்திக்கு அதிக பலம் கிடைத்தது போல் ஆகி விடும். அது இஸ்லாமியரிடையே பெரும் கிலியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அடுத்த நாடாளுமன்றம் காங்கிரஸுக்குப் போனால் மதமாற்ற சக்திகள் பெரும் பலத்துடன் இந்தியாவுக்குள் நுழையும் என்று இந்துக்கள் அஞ்சுகிறார்கள். இந்து மதமே அழிந்து போய் விடுமோ, இந்தியாவிலேயே இந்து மதம் சிறுபான்மையாகி விடுமோ என்பது அவர்களின் கவலை. காங்கிரஸின் – ராகுலின் – செயல்பாடுகளும் அந்த பயத்தை அதிகப்படுத்துவது போலவே இருக்கிறது.
ஆனாலும் நான் பாஜக ஆதரவாளன் அல்ல. பாஜக தொடர்ந்து இந்தியாவை ஆட்சி செய்தால் ஜெர்மனியில் 1940களில் ரத்த ஆறு ஓடியது போல் இங்கேயும் ரத்த ஆறு ஓடும். அதே சமயம் உலகம் பூராவும் பரவியிருக்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்தையும் மறுப்பதற்கில்லை. ஐரோப்பாவே இப்போது தலைகீழாக மாறி விட்டது. இந்தியாவின் எதிர்காலம் எனக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை.
ஆனால் இதற்கெல்லாம் அரசியல்வாதிகள் காரணம் இல்லை. மக்கள்தான் இதை உருவாக்குகிறார்கள். கொஞ்சம் கூட சிந்தனையோ ஜீவகாருண்யமோ ஜனநாயக உணர்வோ இல்லாத இளைஞர் கூட்டம் பெருகினால் ஒரு தேசம் இப்படித்தான் ஆகும். அதே சமயம், இந்தப் பிரச்சினைக்கெல்லாம் பதில் இந்திய மரபிலேயே இருக்கிறது. எல்லா மனிதர்களிலும், எல்லா உயிர்களிலும் இறைவனைப் பார்ப்பதுதான் தீர்வு. அதை உணர்வதற்கு ஓர் எளிய வழி, காந்தியை இன்னும் சற்று அதிகமாக அறிந்து கொள்வதும், பயில்வதும், பணம் – புகழ் – அதிகாரத்தின் பின்னால் அலையாமல் இருப்பதும்தான்…