ஜோஜி

காலையிலிருந்து பத்து மணி வரை எழுத்தும் படிப்புமாக இருக்கும் நிலையில் இடையில் ஏதேனும் ஒரு அரை மணி நேரம் சினிமாவுக்கோ இசைக்கோ ஒதுக்குவேன்.  நாவல் முடியும் வரை இரவு ராணுவ ஒழுங்குடன் பத்து மணிக்குப் படுக்கைக்குச் செல்வது நடக்காது.  பன்னிரண்டு கூட ஆகும்.  அந்தத் தருணத்தின் ஓட்டத்தை விட்டால் அது பிறகு கிடைப்பது கடினம்.  ஆனால் பன்னிரண்டுக்குப் படுத்தால் காலை என் வசம் இல்லை.  ஆறு மணிக்குத்தான் எழுந்து கொள்ள முடியும்.  ஆறு மணி நேர உறக்கம் எனக்கு அதிகம்.  ஐந்து மணி நேரம் போதும்.  ஆனால் எந்த ஆறு மணி நேரம் என்பது முக்கியம்.  பத்திலிருந்து நாலு அற்புதம்.  ஆனால் பன்னிரண்டுக்குப் படுத்து ஆறு மணிக்கு எழுந்தால் ஏதோ பத்து நாள் தூங்காதது போன்ற அலுப்பு தேகத்தில் பரவிக் கிடக்கிறது.  நேற்று பதினோரு மணிக்கு எழுத்து வேலையை முடித்து விட்டு உறங்கச் செல்லும் முன் நெட்ஃப்ளிக்ஸை ஓட்டியபோது ஜோஜி என்ற படம் தென்பட்டது.  எந்தப் படமாக இருந்தாலும் அஞ்சு பத்து நிமிஷம்தான்.  மேற்கொண்டு மறுநாள்தான் பார்ப்பேன்.  ஆனால் நேற்று ஜோஜியிலிருந்து எழுந்து கொள்ள முடியவில்லை.  பன்னிரண்டரை வரை பார்த்து முடித்து விட்டுத்தான் படுத்தேன். 

சூரமொக்கைப் படமான சூரரைப் போற்று, சுல்தான், செப்டிக் டேங்க்கையும் விடக் கொடூரக் கொலைபாதகப் படமான மண்டேலா போன்றவற்றைப் பார்த்து நொந்து போயிருந்த எனக்கு ஜோஜி பெரும் ஔஷதமாக இருந்தது.  மேலே சொன்ன மரண மொக்கைப் படங்களை ஏன் மறக்க முடியவில்லை என்றால், தவறுதலாக கழிவுநீர் சாக்கடையில் விழுந்து விட்டோம் என்றால், பிறகு என்னதான் பன்னீரில் குளித்தாலும் அந்த அருவருப்பான அனுபவத்தை மனதிலிருந்து எடுக்க முடியுமா?  மறக்க முடியுமா?  அப்படித்தான் இருந்தது மண்டேலா.  அந்தப் படத்தை ஐந்து நிமிடம் பார்த்ததற்கே எனக்குத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் போல் இருந்தது.  என்னைத் தற்கொலைக்குத் தூண்டினார் என்று அந்த இயக்குனர் மீது கேஸே போடும் அளவுக்குக் கோபம் வந்தது.   நீ என்ன டேஷுக்குப் பார்த்தாய் என்று கேட்பார்களே என்றுதான் பொத்திக் கொண்டு இருந்து விட்டேன். 

அந்தப் படத்தின் ஆரம்பத்தில் பத்து இருபது பேர் பொதுவெளியில் ரெண்டுக்குப் போகிறார்கள்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு மரத்தடி.  அதிகாலை இருட்டாம்.  ஒருத்தன் இன்னொருத்தன் ஆய் போய்க் கொண்டிருக்கும்போது அவன் மேல் உட்காரப் போய் விடுகிறான்.  உடனே அப்படி உட்காரப் போனவன் ”நமக்கு டிஜிடல் இண்டியாதான் பெஸ்ட்” என்று சொல்லியபடி அந்த ஆள் தன் அலைபேசியை எடுத்து அதில் உள்ள டார்ச் லைட்டைப் போட்டு அந்த வெளிச்சத்தில் வெளிக்குப் போக இடம் தேடுகிறான்.  அப்போதே நமக்குத் தற்கொலை உணர்வு ஆரம்பித்து விடுகிறது.  யார்யா அந்த டைரக்டர்?  அவர் திருமுகத்தை ஒரே ஒரு தடவையாச்சும் கண்ணாரக் காண வேண்டும். 

இதற்கெல்லாம் ஒரு மாற்றாக அமைந்தது ஜோஜி.  தமிழ் மாற்று சினிமா மொக்கைகளெல்லாம் ஜொஜி மாதிரி படங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.  இத்தனைக்கும் ஒரு சாதாரண த்ரில்லர் கதை.  தினந்தோறும் தினத்தந்தியில் வரும் சம்பவம்.  அதை உலகத் தரத்தில் எடுத்தது மட்டும் அல்ல; ஒரு சராசரியான மனிதனை இந்தக் குடும்ப அமைப்பும் அதன் உறுப்பினர்களும் எப்படி ஒரு கொலைகாரனாக மாற்றி விடுகிறார்கள் என்பதை எத்தனை எதார்த்தமாகவும் கலாபூர்வமாகவும் காண்பிக்க முடியுமோ அந்த அளவுக்கு எடுத்திருக்கிறார் இயக்குனர்.  மிக அருமையான ஒரு சினிமா அனுபவம்.  இன்னொரு ஆச்சரியம், மலையாளத்தில் இப்படிப்பட்ட படங்கள் ஒரு வருடத்தில் ஆறு ஏழாவது வந்து விடுகின்றன.  தமிழில் இப்படி நடப்பதே இல்லை.  ஏன் இங்கே ஏகாரம் என்றால், பருத்தி வீரனைப் போன்ற நல்ல படங்கள் கூட ஹீரோ, ஹீரோயின், வில்லன், பாட்டு, காமெடி ட்ராக், சண்டை என்று வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவைப் பின்பற்றித்தான் வர வேண்டியிருக்கிறது.  ஜோஜி மாதிரி ஒரு படம் தமிழில் இல்லை.