உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நடந்திருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்றே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் தினந்தோறும் நடக்கின்றன என்பேன். எனக்கே சரியாகத் தெரிவதில்லை. ஒரு சித்தர் மற்றவர்களைக் கட்டிப் பிடிக்கும்போது அவர்கள் மயக்கம் போட்டு விழுவதைப் பார்த்தேன். என்னையும் கட்டிப் பிடித்தார். சீ என்று அருவருப்பாகத்தான் இருந்ததே தவிர மயக்கமும் வரவில்லை, மண்ணாங்கட்டியும் வரவில்லை. ஆனாலும் அற்புதங்களை மறுக்க மாட்டேன். ஏனென்றால், தினமும் இல்லாவிட்டாலும் – தினமும் நடந்தால் அது அற்புதம் இல்லையே? – அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. சூரியன் தோன்றுவதே அற்புதம்தானே என்றெல்லாம் பேசக் கூடாது. பின்வரும் அனுபவச் சுடரில் வரும் பிரத்தியேகமான அற்புதமாக இருக்க வேண்டும். அனுபவத்தின் இறுதியில் ஒரு வாக்கியம் வருகிறது. எல்லோருக்குமான மந்திரித்த விபூதியை ஏனோ எந்தச் சித்தரும் பொதுவில் கொட்டி வைப்பதில்லை.
ஏனோ தினமும் உதிக்கும் சூரியன்தான் எல்லோருக்குமான அந்த மந்திரித்த விபூதி என்று தோன்றுகிறது.