நேற்று நடந்த க்ளப்ஹவ்ஸ் சந்திப்பு பிரமாதமாக இருந்தது. ஆறரைக்குத் தொடங்கி ஒன்பதரைக்குப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். இன்னும் மூன்று மணி நேரம் கூடப் போயிருக்கும். இனிமேல், மாதம் ஒருமுறை இப்படி வாசகர்களையும் நண்பர்களையும் சந்திக்கலாம் என்று இருக்கிறேன். அடுத்த சந்திப்பு குறித்த நாள் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். மொத்தம் 370 பேர் கலந்து கொண்டார்கள். ஒரு கட்டத்தில் அது 320 ஆனது. அதற்குக் கீழே குறையவில்லை. கேரளத்தில் டி.சி. புக்ஸ் சந்திப்பில் 1000 பேர் கலந்து கொள்கிறார்கள். இன்னமும் நாம் எண்ணிக்கையில் பலஹீனமாகத்தான் இருக்கிறோம். பலரும் சந்தித்துப் பேசுவதற்கான ஒரு நல்ல முன்றில் க்ளப்ஹவ்ஸ். கலந்து கொண்டவர்களில் முக்கால்வாசிப் பேர் இளைஞர்கள் என்பது இன்னொரு சந்தோஷம். ஒரு எழுத்தாளரை அறிந்து கொள்ள இப்படிப்பட்ட சந்திப்புகள் நல்ல வாய்ப்பாக இருக்கும். எனக்குமே இத்தனை இளைஞர்களை ஒரு சேரப் பார்த்தது மிகவும் உற்சாகமாக இருந்தது. படிப்பதை விட கேட்பது சௌகரியமானதுதான்.
ஸூம் சந்திப்பை விடப் பல மடங்கு புரட்சிகரமானதாகத் தெரிகிறது க்ளப்ஹவ்ஸ். இங்கே ஒரு உரையாடல் அறையில் அமர்வதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. பேசுவதற்கு மட்டுமே அனுமதி தேவை. ஒருங்கிணைப்பாளர் அனுமதித்தால் மட்டுமே நீங்கள் பேசலாம். மற்றபடி யார் வேண்டுமானாலும் வரலாம். போகலாம். ஸூம் மாதிரி பணம் கட்டி நேரத்தை வாங்க வேண்டியதில்லை. இவ்வளவு பேர்தான் அளவு என்பது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. நம்மை யாரும் பார்க்க முடியாது என்பது இன்னொரு பெரிய வசதி. எனவே அலைபேசியை ஒரு இடத்தில் வைத்துப் பேச விட்டு விட்டு அவர்கள் பேசுவதைக் கேட்டபடியே நாம் நம்முடைய மற்ற வேலையைச் செய்து கொண்டிருக்கலாம். உதாரணமாக, சமையல். எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும், எவ்வளவு பேர் வேண்டுமானாலும் பேசி உரையாடிக் கொள்ளலாம் என்பது மற்றொரு பெரிய விஷயம்.
கேள்விகளின்போது ஒன்றே ஒன்றை மட்டும் தவிர்த்து விடுங்கள். பேரன்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?, பெருமாள் முருகன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? – இது போன்ற தனிப்பட்ட கேள்விகள் வேண்டாம். அதுவும் எடுத்த எடுப்பில் ஒரு அன்பர் அப்படி ஒரு கேள்வி கேட்டார். அப்படிக் கேள்வி கேட்க விரும்பும் அன்பர்கள் என்ன செய்யலாம் என்றால், இன்ன எழுத்தாளர் பெயரில் ஒரு கருத்தரங்கம் அமைத்து என்னை அழைத்தால் வந்து ரெண்டு மணி நேரம் கூட உரையாற்றுவதற்குத் தயாராக இருக்கிறேன்.
சந்திப்பில் கலந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கும், கேள்வி கேட்டவர்களுக்கும் நன்றி. சில கேள்விகளுக்கு நான் பதில் சொல்லவில்லை. காரணங்கள்: சில கேள்விகள் புரியவில்லை. சில கேள்விகளுக்கு பதிலே தெரியவில்லை. ஜக்கி அளவுக்கு பகவான் எனக்கு மூளையைக் கொடுத்திருந்தால் டக் டக் என்று பதில்களை அள்ளி விட்டு எல்லோரையும் திணற அடித்திருக்கலாம். அத்தனை மூளையும் இல்லை. அதனால் இருப்பதை வைத்துத்தான் மொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும் சந்திப்பு பிரமாதமாகவும் உற்சாகமாகவும் இருந்ததாக உணர்ந்தேன். நண்பர்களும் அப்படியே அபிப்பிராயப்பட்டார்கள். மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம்.