டியர் ரமேஷ்…

சென்ற பதிவில் ஒரே ஒரு விஷயம் எழுத மறந்து போனேன்.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக போகிற வருகிற நாதாரிக் கும்பலெல்லாம் நீங்களும் உங்கள் பழைய சகாவும் கொடுத்த காலச்சுவடு பேட்டியைக் குறிப்பிட்டு என் மீது காறி உமிழ்ந்து விட்டுப் போனார்கள். அவுங்க எழுதிக் குடுத்த நாவல்தானேயா ஸீரோ டிகிரி? என்று. முறைத்தால், நீ மறுத்தியா என்பார்கள். இப்போது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு பிரபலம் அப்படி என்னை முகநூலில் அவமதித்தது. இப்படியாகத்தான் நான் எழுதிய நாவலை நீங்கள் எழுதியதாக நீங்களே காலச்சுவடில் சொன்னதை இருபத்தைந்து ஆண்டுகளாக என்னிடம் போட்டுப் போட்டுக் காண்பித்துப் படம் எடுத்தார்கள். இப்போது வந்து சொல்கிறீர்கள், நான் எங்கேயும் அப்படிச் சொல்லவில்லையே என்று.

என்ன ரமேஷ் இது, இருபத்தைந்து ஆண்டுகளாக ஏன் சொல்லவில்லை? கி.ரா.வின் கதைசொல்லியில் சொன்னேனே என்றால், அது யாருக்குத் தெரியும்? என் மீது காறி உமிழ்ந்த நாய்களெல்லாம் காலச்சுவடுவை அல்லவா கையில் வைத்திருந்தன? ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் உங்கள் வார்த்தையை நான் எல்லோருக்கும் சொல்லியிருப்பேனே?

அதெல்லாம் போகட்டும். உங்கள் பெயரில் காலச்சுவடு பத்திரிகையில் ஸீரோ டிகிரியை நாங்கள்தான் எழுதிக் கொடுத்தோம் என்று வந்ததே, அதற்கு என்னதான் அர்த்தம்?

எல்லாம் பழைய கதை ரமேஷ். என் வார்த்தைகளுக்கு நான் ஏற்கனவே மன்னிப்புக் கேட்டு விட்டேன். ஒரு பொடியன் என் மீது காறி உமிழ்கிறேன் என்று சொன்னதால் ஏற்பட்ட பதற்றத்தில் சொன்னது. மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள்.

என்றும் உங்களிடம் கற்றுக் கொண்டேயிருக்கும்,

சாரு