கரடி வேஷம் போட்டால் கடிக்காமல் இருக்கலாமா?
அன்பான அறிவிப்பு தலைப்பை விட இதுதான் இந்தக் கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பாக இருக்கும். பரவாயில்லை. மேலே செல்வோம்.
நான்தான் ஔரங்கசீப்… நாவல் இந்துத்துவர்களுக்குப் பிடிக்க வாய்ப்பு இல்லை. நாவலில் பாதிக்கு மேல் அல்லது இறுதிப் பகுதியில் முஸ்லிம்களுக்கும் பிடிக்காமல் போகலாம். அந்த இடம் இன்னும் வரவில்லை. இப்போது இந்துத்துவர்கள் நாவலைத் திட்டி ஒரு ஸ்டார் போடுகிறார்கள். அதனால் ரேட்டிங் ஐந்து நட்சத்திரத்திலிருந்து குறைந்து 4.4 வந்து விட்டது. ஸீரோ ரேட்டிங் வந்தாலும் நானோ வாசகர் வட்டத்தினரோ கவலையே பட மாட்டோம். ஆனாலும் கரடி வேஷம் போட்டால் கடிக்காமல் இருக்க முடியுமா? ரேட்டிங் என்று வந்து விட்டால் நம் வேலையைக் காண்பிக்கத்தானே வேண்டும்? அதனால் நேற்று பார்க் பக்கம் போய் எனக்கு வணக்கம் சொன்னவர்களையெல்லாம் பிடித்து உட்கார வைத்து பிஞ்ஜ் ஆப்பை டவுன்லோடு செய்ய வைத்து ஐந்து நட்சத்திரம் போட வைத்தேன். படித்தெல்லாம் பார்க்க வேண்டாம். ஐந்து நட்சத்திரம் போட வேண்டும். ஒரு அன்பர் “ஏய்யா சோழன் வரலாற்றை எழுதவில்லை?” என்று கேட்டு ஒரு நட்சத்திரம் போட்டார். 4.5 ஏறியது ஒரே ஓட்டில் 4.4 வந்தது. உடனே ராகவனையும் அவருடைய நண்பர்களையும் அழைத்து அஞ்சு அஞ்சு நட்சத்திரம் போடச் சொன்னேன். 4.5 ஏறியது.
இன்றே என் நண்பர்கள் அனைவரும் போய் நான்தான் ஔரங்கசீப்… ஐப் படிக்காமலேயே அஞ்சு நட்சத்திரம் போட்டு விடுங்கள்.
ங்கொய்யால…வேற என்னய்யா பண்றது? ஔரங்கசீப் பற்றி ஒரு உலகத் தரமான நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்காக சுமார் 150 புத்தகங்களையாவது படித்திருப்பேன். சினிமாக்காரன் தும்மினால், குளிக்கும்போது புதுப் பட ஐடியா வந்தால் நொட்டிக் கொண்டு போய் கவர் ஸ்டோரி போடும் ஊடகங்கள் ஔரங்கசீப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. தினந்தோறும் 1800 பேர் படிக்கிறார்கள். எட்டரை கோடி மக்கள் தொகையில். நூறிலிருந்து 1800 பெரிய முன்னேற்றம்தான் என்றாலும் கேவலம் கேவலம்தான்.
எப்படியோ. உடனடியாகப் போய் அஞ்சு நட்சத்திரம் போடுங்கள். ஒருவர் ஒரு தபா தான் போடலாம். அதனால் உங்கள் மனைவி, கேர்ள் ஃப்ரெண்ட், மகன், மகள் எல்லாரையும் அஞ்சு நட்சத்திரம் போடச் சொல்லுங்கள். படிக்கவெல்லாம் வேண்டாம்.
இதனால் என்ன பயன் என்கிறீர்களா? எதனாலுமே எந்தப் பயனும் இல்லை என்கிற போது இதற்கெல்லாம் போய் அலட்டிக் கொள்ளாதீர்கள். அஞ்சு நட்சத்திரத்தை அழுத்துவதில் என்ன நட்டம் ஆகி விடப் போகிறது? அவ்ளோதான் மேட்டர்.