”வயசாய்டுச்சே”, ”எழுபது வயசாச்சு, இன்னுமா இப்படிப் பேசறீங்க” என்றெல்லாம் அக்கறை என்ற பெயரில் தொடர்ந்து வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பவன் நான். மிக நெருங்கிய நண்பர்கள் கூட விதிவிலக்கு இல்லை. கொடுமை என்னவென்றால், நாற்பது வயதிலிருந்தே இந்த அக்கிரமத்தை எதிர்கொண்டு வருபவன் நான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் காலை ஆறு மணி அளவில் சாந்தோம் தேவாலயம் வாசலில் ஒரு நண்பர் என்னுடைய சிவந்த கண்களைப் பார்த்து “ஏன் சாரு, நேத்து நைட் தூங்கலியா, அடடா, வயசானா இப்டித்தான் நைட்ல தூக்கம் கெட்டுப் போகும்” என்று கேள்வி கேட்டு பதிலும் சொன்னபோது, நான் சொன்ன பதிலை இங்கே எழுத முடியாது. எக்ஸைல் நாவலில் எழுதியிருக்கிறேன், படித்துப் பாருங்கள். இந்தியாவின் இந்த சமூக வியாதி பற்றி பெருந்தேவி எழுதியிருப்பதை இங்கே பகிர்கிறேன். கீழே வருவது பெருந்தேவி:
Body shaming குறித்து சாரு நிவேதிதா ஒரு சிறு கட்டுரை எழுதியிருக்கிறார். உண்மைதான். நம் ஊரில் உடலையும் வயதையும் சுட்டிக்காட்டிப் பேசுவது ரொம்ப, தாங்க முடியாத அளவுக்கு அதிகம். யாருக்காவது நாற்பது வயதானாலேயே அவர்களை கிழட்டு லிஸ்டில் மாற்றிவிடுவதை இங்கேதான் பார்க்க முடியும். சாருவின் தளத்தில் பகிரப்பட்டிருக்கும் வளனின் பதிவு சொல்வதைப் போல மேற்கில் எண்பதைத் தாண்டி (இங்கே –யும் போட மாட்டேன்) ஜோடியாக நடனமாடுபவர்கள், தொலைதூர ஓட்டப்பயணத்தில் பங்கெடுப்பவர்கள் நிறைய உண்டு. நம் ஊரிலோ தலையில் இரண்டு நரைக் கற்றையோடு தெரிந்தவர்கள் வீட்டுக்கோ ஓட்டலுக்கோ போனால் ”சர்க்கரை போடலாமா, சுகர் இல்லியே?” என்று சற்றும் கூச்சப்படாமல் கேட்கிறார்கள். “வழக்கம்போல போடுங்க” என்றால் ஒரு படி மேலே போய் “சுகர் இன்னும் வரலியா, பரவாயில்லையே” என்று உடல்நலம் “விசாரிப்பவர்கள்” உண்டு.அதேபோல ageism சம்பந்தமான நகைச்சுவை எனும் அவலம் நம் ஊரில்தான் உண்டு. மேற்கத்திய நாடுகளில் வேலை விண்ணப்பங்களில்கூட வயது கேட்க மாட்டார்கள். இங்கே வயதைக் குறிப்பிட வேண்டாத விண்ணப்பத்தைப் பார்ப்பது அபூர்வம். வேலைக்கே இப்படி என்றால் திருமணம், கம்பேனியன்ஷிப் ஆகியவற்றைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஐம்பது வயதானால் பாடையில் ஏறிப் படுத்துக்கொண்டுவிட வேண்டும், அறுபது வயதானால் சுடுகாட்டுக்கு வழி கேட்டுக்கொண்டு போய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.பல குடும்பங்களில் பெற்றோருக்கு அவர்களே வாங்கிய, கட்டிய வீடு என்றால்கூட பிள்ளைகள் கல்லூரி போகத் தொடங்கிவிட்டாலோ அல்லது அவர்களுக்குத் திருமணமாகி பேரப் பிள்ளைகள் எடுத்துவிட்டாலோ தனிப் படுக்கையறை கிடையாது. அல்லது பெற்றோர்கள் தனியறைக்குள் இருந்தால் அதற்காக அவர்களை அவமானப்படுத்தும் வகையில் இங்கே சமூகச் சொல்லாடல்கள் உள்ளன. ”கிழவி,”கிழட்டுப்பய,” “பெரிசு,” “வயசான காலத்தில” போன்ற வார்த்தைகளை அறிவுஜீவிகள் கூட பயன்படுத்தத் தயங்குவதில்லை. “மூத்த” என்ற சொல்லை நான் வெறுப்பதுகூட அதனால்தான். இங்கே அந்த சொல் இலக்கிய அனுபவம் / பணி சார்ந்த காலக்கணக்காக இல்லாமல் வயதைச் சார்ந்ததாக உள்ளது.எண்பது, தொண்ணூறு வயதுவரையிலும் (’கூட’ இங்கே சேர்க்கமாட்டேன்) ஆக்டிவ் செக்ஷுவல் வாழ்க்கை ஒருவருக்கு உண்டு. அது அடிப்படை உரிமை, தேவை. ஆனால் பேரப் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது தங்கள் பெற்றோரின் இன்றியமையாத கடமை என்றே நினைக்கின்ற பிள்ளைகளிடம் இது குறித்தெல்லாம் எந்தப் புரிதலையும் எதிர்பார்க்க முடியாது. வாழ்க்கையில் நான் எடுத்த சில முடிவுகளுக்கு வருந்தியிருக்கிறேன். விலை கொடுத்திருக்கிறேன். ஆனால் ஒரு நொடிகூட வருந்தாத முடிவு என்றால் திருமணம் செய்துகொண்டு குடும்ப நிறுவனத்தில் நுழைந்துவிடக்கூடாது என்ற முடிவுதான். இந்த உருப்படியான முடிவால் பல கொடுமைகளிலிருந்து தப்பித்திருக்கிறேன்.