கால சுப்ரமணியனின் லயம்

சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஸ்ரீராமுடன் திருநெல்வேலி சென்றிருந்தேன்.  இலக்கியவாதிகள் நிறைந்த ஊர்.  ஆனால் அவர்கள் யாருக்கும் என்னைப் பிடிக்காது.  எனக்கும் அப்படியே.  நான் சென்றிருந்தது ஒரு அம்மனை தரிசிக்க.  ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அத்தனை பிரபலம் அடையாத அம்மன்.  முஸ்லிம் பெண்கள்தான் அதிகம் காணப்படுவார்கள்.  கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கை.  நான் இரண்டு முறை சென்றிருக்கிறேன்.  கேட்டது கிடைத்தது.  ஆனால் நான் கேட்பதும் கொடுப்பது மாதிரி சின்னதாகத்தான் கேட்பேன்.  நோபல் பரிசு வேண்டும் என்றெல்லாம் பேராசையாகக் கேட்பதில்லை.  அதெல்லாம் மனித ரூபத்தில் நடமாடும் சாமிகள்தான் தருகிறார்கள் என்று கேள்விப்படுகிறேன்.  சிலையாக இருக்கும் சாமிகள் அளந்துதான் கொடுக்கின்றன.  அதற்கேற்றாற்போல நாமும் சூதனமாகத்தான் கேட்க வேண்டும்.  எக்கச்சக்கமாகக் கேட்டு விட்டு அம்மனைத் திட்டக் கூடாது.  என்ன இருந்தாலும் அம்மன் சிறுதெய்வம்தானே?  விஷ்ணு, சிவன் போன்ற பெருதெய்வம் இல்லை அல்லவா?  அதனால் அதன் சக்திக்கேற்றப்படிதான் கேட்பதும் கொடுப்பதும் நடக்கும்.

அம்மனைப் பார்த்து விட்டு பக்கத்து ஊரில் உள்ள ஒரு கோவிலுக்குப் போகலாம் என்றார் ஸ்ரீராம்.  இளைஞர் என்றாலும் ஸ்ரீராம் ஒரு கோவில் பைத்தியம்.  நான் சொன்னேன், இந்த அம்மனைப் போலவே இன்னொரு சிறுதெய்வம் இந்த ஊரில் உண்டு, அதைக் காண்போம்.  அந்த சிறு தெய்வத்தின் பெயர் லேனா குமார். இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான சிறு தெய்வங்களால்தான் தமிழ் இத்தனை தூரம் வளர்ந்திருக்கிறது, தமிழ் இலக்கியம் இப்போது இத்தனை சிறப்பான நிலையில் இருக்கிறது.  இப்படிப்பட்டவர்கள் தமிழின் முக்கியமான நாவல்களையோ சிறுகதைகளையோ எழுதியிருக்காமல் இருக்கலாம்.  ஆனால் – மிக நிச்சயமாகச் சொல்வேன் – இவர்களால்தான் தமிழ் இப்போதைய நிலையில் இருக்கிறது. 

அஃ பரந்தாமன் என்று ஒருவர்.  அஃ என்ற பெயரில் ஒரு பத்திரிகை நடத்தினார்.  யார் யார் எந்தப் பெயரில் பத்திரிகை நடத்துகிறார்களோ அந்தப் பெயர் அவர்களின் இயல்பான முதல் எழுத்தை, தந்தையாரின் பெயரை அழித்துப் போட்டு விட்டு அதன் இடத்தில் ஏறிக் கொள்ளும்.  வெளி என்ற பத்திரிகை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  முத்தமிழ் என்கிறோம்.  முத்தமிழில் மூன்றாவதாக இருக்கும் நாடகம் என்றால் எஸ்.வி. சேகரையே சொல்லுவோம்.  தமிழ் சமூகத்துக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.  ஆனால் அந்த நாடகத் தமிழுக்காக ஒரு இதழை நடத்தினார் ரங்கராஜன்.  பல ஆண்டுகள் வெளிவந்தது.  அதனால் ரங்கராஜன் வெளி ரங்கராஜனாக மாறினார்.  இப்படி நூற்றுக்கணக்கான சிறுபத்திரிகை ஆசிரியர்கள்.  இவர்களெல்லாம்தான் தமிழை வளர்த்த தெய்வங்கள். 

அவர்களில் ஒருவர்தான் கால சுப்ரமணியன்.  லயம் என்ற சிறு பத்திரிகையின் ஆசிரியர்.  மற்ற சிறு பத்திரிகைகளுக்கும் லயத்துக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.  பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தமிழை சர்வதேசத் தரத்துக்கு எடுத்துக் கொண்டு போன அதி முக்கியமான ஆளுமை தர்மு சிவராமு.  ஒக்தாவியோ பாஸ் போன்ற மேதைகளோடு சரி சமமாக அமர்ந்து பேசக் கூடிய அளவுக்குத் தகுதி படைத்த ஒரே ஆளாக இருந்தவர் சிவராமுதான்.  ஆனால் அவர் சக எழுத்தாளர்களோடு சிநேகமாகப் பழகும் தன்மை கொண்டவர் அல்ல.  மேலும், அவர் காலத்திய எழுத்தாளர்கள் பலரும் நவீனத்துவத்துக்கு வந்த பிறகும் சனாதனத்தை முழுவதும் உதறியவர்களாக இல்லை.  வெளிப் பார்வைக்கு அப்படி இருப்பார்களே தவிர சிந்தனையில் சனாதனம் ஒட்டிக் கொண்டிருக்கும். சிவராமு சனாதனத்துக்கு எதிரானவர்.  நவீனத்துவவாதி.  அதே சமயம் இந்திய மரபை நிராகரிக்காதவர்.  மரபின் சாரத்தைச் செரித்துக் கொண்டவர்.  பிரபஞ்ச ஓர்மையை அடிச்சரடாகக் கொண்டவர்.  இது என்னுடைய மதிப்பீடு.  ஆனால் இப்படிப்பட்ட மதிப்பீடுகளையும் கூட நிராகரிக்கக் கூடிய கலைப்பித்து கொண்டவர் சிவராமு.  சிவராமுவின் இந்தத் தன்மையினால் அவர் எழுத்தைத் தமிழ்ச் சூழலில் வெளியிட முடியாத நிலை இருந்ததால் கால சுப்ரமணியன் தர்மு சிவராமுவுக்காகவே லயம் பத்திரிகையைக் கொண்டு வந்தார்.  இதுதான் மற்ற சிறு பத்திரிகைகளுக்கும் லயத்துக்குமான வித்தியாசம். 

மட்டுமல்லாமல் தர்மு சிவராமுவின் கவிதைகள், கட்டுரைகள், புதினங்கள் ஆகியவற்றைத் தொகுத்து ஆறு பெரும் தொகுதிகளாகவும் வெளியிட்டிருக்கிறார் கால சுப்ரமணியன்.  தொடர்புக்கு kasu.layam@gmail.com

தொலைபேசி: 94426 80619

இத்தனையும் இன்று ஞாபகம் வரக் காரணம், இன்று முகநூலில் கால சுப்ரமணியன் எழுதியிருந்ததை காயத்ரி எனக்கு அனுப்பியிருந்தாள்.  அதைக் கீழே தருகிறேன்.  அதைப் படித்தால் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் யார் யாரெல்லாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்.  தமிழ் இலக்கியத்துக்கு 5000 ஆண்டு பாரம்பரியம் இருப்பதாகத் தொல்காப்பியத்தைப் படிக்கும்போது உணர முடிகிறது.  பல நூற்றுக்கணக்கானவர்களின் பெயர்கள் காணவில்லை.  அவர்கள் எழுதியது கிடைக்கவில்லை.  ஆனால் 5000 ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கும் சங்கிலித் தொடர்பின் கண்ணிகள் இவர்கள்தான்.  அவர்களில் ஒருவர் ராணி திலக்.  அவர் பற்றிய குறிப்பும் கால சுப்ரமணியனின் பின்வரும் பதிவில் உண்டு.  இவர்களெல்லாம்தான் தமிழை வாழ வைப்பவர்கள்.  வயதில் நான் மூத்தவன் என்றாலும் இவர்களைக் கை கூப்பி வணங்குகின்றேன்.

இனி கால சுப்ரமணியன் முகநூலில் எழுதியது:

எழுத்தாளர் மாறாட்டம்

——————————-

தமிழில் பத்திரிகைகளில் எழுதிப் பிரபலமாக முன்பு இருந்த எழுத்தாளர்கள்  பலரும் இன்று அடையாளமற்று போயிருக்கிறார்கள். சிறுபத்திரிகைகளில் ஒன்றிரண்டு சுமாரன படைப்புகளை எழுதியவர்கள் இன்றும் கூட நினைக்கப்படுவது உண்டு.

மணிக்கொடியின் துணை ஆசிரியராக இருந்து அதிலும் எழுதி பிரபலமான பத்திரிகைகளிலும் பல கதைகளை எழுதியவர்  கி.ரா. என்றழைக்கப்பட்ட ஏ.கே. ராமச்சந்திரன். மணிக்கொடி கிரா என்று இப்போது அடையாளப்படுத்தவேண்டிய அளவுக்கு, இன்று கிரா என்றால் கி.ராஜநாராயணன் என்று முன்னணிக்கு வந்துவிட்டார். ( எஸ்.ராமகிருஷ்ணன் என்றால்  முன்பு ஒரு முக்கியமான மார்க்சீய எழுத்தாளர், பின்பு க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன், இன்று எஸ்.ரா. // ஞானி பின்பு ஞாநி வந்தபின் கோவை ஞானி ஆனார். பண்ணன் என்ற ஒரு ‘ஞானி’யும் இவர்களுக்கு முன்பிருந்தே பல புத்தகங்களை எழுதிய கோவைக்காரர் உண்டு.). ஒவ்வொரு மணிக்கொடி இதழ் வெளிவரும் போதும் கிராவின் மோதிரம் அடகுக்கடைக்குப் போகுமாம். அவர் பின்பு ஜெமினி கதை லாக்காவில் சேர்ந்தார். அங்கு பின்பு வந்துசேர்ந்து பணிபுரிந்த அசோகமித்திரன், கிராவால் ஆன்மிக விஷயங்களில் நாட்டம் செலுத்தியிக்கிறார். ஒருசில அமி கதைகளில் கதாபாத்திரமாகவும் கிரா வந்திருக்கிறார். குறிப்பாக மானசரோவர் நாவலில் கோபால் என்ற முதன்மைப் பாத்திரம் கிரா தான் (இதைக் கண்டுபிடித்து அமியிடம் அவரது சீடர் ஆக விளங்கிய R P ராஜநாயஹம் விசாரித்தபோது அவரே வியந்ததாக தன் முகநூல் பதிவொன்றில் எழுதியிருக்கிறார். இத்தகவல் அசோகமித்திரன் சிறப்புமலரைக் ’கனவு’ வெளியிட்ட போது ‘அசோகமித்திரனின் திரையுலக கதாபாத்திரங்கள்’  என்ற கட்டுரையாகவும் முன்பே வெளிவந்தது. இந்தப் பதிவில் மேலும் வருவது இத்தகவல்கள் …..-ஔவையார் படத்தில், வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இவர் (கிரா) பெயரை டைட்டிலில் பார்க்கலாம்.

க.நா.சு தன் ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலை இவருக்கும் சேர்த்து சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

அந்த நூலில் மணிக்கொடி கி.ரா. பற்றி  க.நா.சு சொல்வது,

 ‘‘கி.ராமச்சந்திரனின் சொந்த வாழ்க்கை அவ்வளவு சுத்தமானதல்ல.  அந்தக் காலத்தில் ஒரு சாமியார்

ஒருவர் இருந்தார்.  ஒரு சாரார் அவரை கயவன், அயோக்கியன் என்றும், அவர் மகான், சித்தர் என்று மறுசாராரும் அபிப்பிராயம் கொண்டிருந்தனர்.  அந்த சாமியாரிடம் மணிக்கொடி கி.ராமச்சந்திரனுக்கு மிகுந்த ஈர்ப்பு இருந்தது’’. 

கி.ராமச்சந்திரனே கூட கடைசியில் ஒரு சாமியாராகவே மாறிவிட்டார்! தி.ஜானகிராமன் ஒரு முறை அவரை சாமியாராக சந்திக்க நேர்ந்து, பின் க.நா.சு.விடம் உயர்வாக ‘‘கனிந்த சாமியாராகத்தான் ராமச்சந்திரன் தெரிந்தார்’’ என கூறியிருக்கிறார்.

அதன் பின்னாலொரு தடவை க.நா.சு வீட்டிற்கு வந்து கி.ரா பூஜையெல்லாம் செய்தாராம்.ஆனால் மணிக்கொடி கி.ராமச்சந்திரன் மாயமாய் மறைந்து விட்டார்.  என்ன ஆனார்,  அவருடைய மரணம் எப்படி, எப்போது சம்பவித்தது என்று யாருக்குமே தெரியாது….. R P ராஜநாயஹம்).

அந்தக் காலத்தில் ஒரு சாமியார் ஒருவர் இருந்தார் என்று சொல்வது காரைச் சித்தரைத்தான். அவருடைய பக்தர்களாக அம்புஜம்மாள், கிரா, சதுசுயோகி, ந.பிச்சமூர்த்தி போன்றோர் இருந்திருக்கிறார்கள். மானசரோவர் நாவலில்  ஒரு சித்தரைப் பெயரில்லாமல் அமி ஒரு முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு வந்திருக்கிறார். இந்த காரைச்சித்தர் பற்றியும் அவரது கனகவைப்பு நூல் பற்றியும், ஆய்வுநோக்கில் கரைச்சித்தரின் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றுவந்த பிறகு சந்தேகித்து மானசரோவரை மீண்டும் படித்து  அதில் வரும் சித்தர் காரைச்சித்தர்தான் என்று நான் கண்டுபிடித்ததை் பற்றி இதே முகநூல் பதிவு ஒன்றில் முன்பு விரிவாக விளக்கியிருக்கிறேன்.

சமீபத்தில் “கொனஷ்டை கதைகள்’‘ என்ற இன்னொரு அறியப்படாத எழுத்தாளரின் தொகுப்பை ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் எழுத்து பிரசுரத்தில் கொண்டுவந்தார் கவிஞர் ராணிதிலக். இப்போது குட்ந்தையில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர். அவர் இரு வாரங்களுக்கு முன் ந.சிதம்பர சுப்ரமணியத்தின் எழுத்து பத்திரிகையில் வந்த “விண்ணும் மண்ணும்“ என்ற தொடர் கட்டுரையை (ஜீரோ டிகிரி பதிப்பகத்துக்காக) ஜெராக்ஸ் செய்து தரவேண்டும் என்பதற்காக எனக்குப் போன் செய்தார். அப்போது தான் கிராவின் சிறுகதைத் தொகுப்புகளையெல்லாம் சேகரித்து ஒரு தொகுப்புக் கொண்டுவரும் நிலையில் தயாரித்துவிட்ட தகவலைச் சொன்னார். நானும் குடந்தையில் கிடைக்கும் சில பழைய பதிப்புகளை ஜெராக்ஸ் செய்துதரக்கேட்டேன். தி.ஜா.வின் இதுவரை அறியப்படாத “கானாஞ்சலி’‘ என்ற மொழிபெயர்ப்புக் கதையை அனுப்பி உதவினார். (சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சாகித்ய அகாதமியின் ஆதரவில் சு.வேணுகோபால் ஒருங்கிணைப்பில் நடக்கும் தி.ஜானகிராமன் நூற்றாண்டு நினைவு இரு நாள் கருத்தரங்கில் நான் “தி.ஜா.வின் மொழிபெயர்ப்புகள்“ என்ற புதியதோர் தலைப்பில் பேச /கட்டுரை வாசிக்க இருப்பதால் இது மிக உதவியாக இருந்தது). குமுதினியின் திவான்மகள் நாவலை ஸ்கேன் செய்து அனுப்புவதாகவும் உறுதி அளித்தார். முன்தினம் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதுதான், அசோகமித்திரனும் ஆன்மீகமும் என்ற ஜெயமோகன் (இணையதளக் கட்டுரையில்) பதிவில் கி.ரா.வை கி.ரா. கோபாலன் என்று மாற்றித் தவறாக வெளிப்படுத்தியிருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டார். இந்த மாறாட்டம் நிகழ்வது இயல்புதான். அவரது சின்னச் சின்னத் தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டி காட்டமாக விமர்சிப்பவர்களுக்கும் இந்த விஷயம் அடியோடு தெரியாது என்பதால் இது பற்றி இங்கே விவரிக்க வேண்டி வந்தது. ‘இரவு‘ நாவலில் கடைசிப் பக்கங்களொன்றில் சாமர்செட்மாம் தாமஸ்மான் ஆக்கப்பட்டு மாறாட்டம் நிகழ்ந்ததைப் போல இதுவும் ஒரு நினைவுப் பிசகுதான். கனவு வெளியிட்ட அசோகமித்திரன் சிறப்புமலர் வெளிவருவதற்குத் துணை நின்றவர் ஜெயமோகன் என்று நினைவு, எனவே அதில் வந்த ராஜநாயஹம் கட்டுரையை அவர் கட்டாயம் வாசித்திருப்பார். இருந்தாலும் இந்தக் கவனப் பிசகு. நிற்க.

கி.ரா.கோபாலனின் “மாலவல்லியின் தியாகம்“ என்ற (ஒரு சார்வாக கதாநாயகன் வரும்) வித்தியாசமான ஒரு சரித்திர நாவல் இணையதளத்தில் மின்நூலாக இலவசமாகக் கிடைக்கிறது. https://www.chennailibrary.com/gopalan/gopalan.html

அதில் உள்ள ஆசிரியரைப்பற்றிய குறிப்பு இது –

“அன்று பத்திரிகைகளில் பிரபலமாக விளங்கிய கி.ரா. கோபாலன் என்ற ஒரு எழுத்தாளரும் இருந்திருக்கிறார்.

தமிழ் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு கி.ரா. கோபாலன் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல; நல்ல கவிஞருமாவார். சித்திரக் கலையிலும் மிகுந்த அனுபவம் உள்ளவர். “காட்டூர் கண்ணன்” “கோணல்” “துதிக்கையார்” முதலிய புனைபெயர்களில் நீண்ட காலமாகக் கல்கி பத்திரிகையில் எத்தனையோ கவிதைகளையும், ஹாஸ்யக் கட்டுரைகளையும், அரசியல் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவருடைய எண்ணற்ற சிறுகதைகளையும் “ராணி மாதவி, ராஜாளி மடம், அபலை அஞ்சுகம்” முதலிய அருமையானபெரிய நாவல்களையும் வாசகர்கள் படித்து மகிழ்ந்திருப்பார்கள். “மாலவல்லியின் தியாகம்” என்ற சரித்திரத் தொடர்கதை கல்கியில் வெளிவந்த போது படித்துப் பாராட்டாதவர்கள் இல்லை. பின்னால் இந்தக் கதையில் அவர் எழுதி வைத்திருக்கும் திடுக்கிடும் சம்பவத்தைப் போலவே திரு. கி.ரா. கோபாலன் 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி சுதந்திர தினத்தன்று அனைவரையும் திடுக்கிடும்படி செய்து விட்டு மறைந்துவிட்டார். அவருடைய இளம் மனைவியையும் எட்டு வயதிலிருந்து மூன்று மாதக் குழந்தை வரையில் இருக்கும் உலகம் தெரியாத ஐந்து குழந்தைகளையும் தனியே விட்டு விட்டு சென்ற அவரின் மறைவு வேதனை அளிப்பதாகும். அவருடைய மறைவு தமிழ் நாட்டுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் மிகப் பெரிய நஷ்டமாகும்.”

மாலவல்லியின் தியாகம் எழுதத் தூண்டுகோலாய் இருந்த குடந்தை நாகேசுவரசாமி கோயில் சந்நியாசியைப் பற்றி விவரித்திருக்கிறார் கோபாலன்.

கிராவோடு தொடர்புடைய காரைச்சித்தர், கிரா கோபாலனுக்கு நாவல் எழுதத் தூண்டுகோலாய் இருந்த ஒரு சந்யாஸி, இது ஒரு எதேச்சையான தொடர்பு.

கிரா மாயமாய் மறைந்துவிட்டார். ஆனால் மேலே உள்ள குறிப்பில் கி.ரா.கோபாலனின் இளவயது மரணத்தை ‘மறைந்துவிட்டார்“ என்று எதேச்சையாகப் பதிந்திருப்பதைக் காண முடிகிறது.

இந்திரா பார்த்தசாரதி கும்பகோணத்து கிரா கோபாலனைப் பற்றி “ஜெயமாருதி வாசகசாலை” என்ற கட்டுரையில் இவ்வாறு எழுதியுள்ளார் –

“1945-ல், கும்பகோணம் சாரங்கபாணி கீழச் சன்னதித் தெருக்கோடியில் ஆராவமுதுக்குச் (பெருமாளைச் சொல்கிறேன்) சொந்தமான ஒரு மண்டபம் இருந்தது. கோயிலுக்குச் சொந்தமான பல மண்டபங்கள் அந்தக் காலத்திலேயே தனியார்வசம் போய்விட்ட காரணத்தால், ‘பெருமாளுக்கு இன்னும் சொந்தமாக இருந்த மண்டபம்’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அப்போது இருந்த கோயில் நிர்வாகி படித்தவராக இருந்திருக்க வேண்டும். அந்த மண்டபத்தில் ஒரு வாசகசாலை நடத்த அனுமதித்திருந்தார். அந்தக் காலத்து தினசரிகள், வார, மாதப் பத்திரிகைகள் அனைத்தும் வரும். நிறையப் பேர் படிக்க வருவார்கள். சுதந்திரப் போராட்டக் காலம் அது. அந்த வாசக சாலையை நடத்துவதில் கி.ரா.கோபாலன் என்பவர் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.

கி.ரா.கோபாலன் இளம்வயதிலேயே மறைந்த ஒரு நல்ல எழுத்தாளர். ‘கல்கி’ இதழ் ஆரம்பித்த புதிதில் நடத்திய சிறுகதைப் போட்டியில் (அது தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் முதல் போட்டியாகக்கூட இருக்கலாம்) முதல் பரிசு பெற்றவர். அந்தக் காலத்துப் பிரபல எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்ட போட்டி அது.

க.நா.சுப்ரமணியம் கதை அனுப்பலாமென்று நினைத்தாராம். ‘‘அதுக்குள்ளே ரா.கி. (கல்கி) என்னைக் கூப்பிட்டு ஜூரியா இருக்கச் சொல்லிட்டார். ஒருவேளை நானும் கதை அனுப்பிச்சுடுவேன்னு பயந்துட்டாரோ என்னவோ?’’ என்று க.நா.சு. பிற்காலத்தில் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

பரிசு பெற்ற கதையின் பெயர் ‘ஏழ்மையில் இன்பம்’என்று நினைக்கிறேன். லேசான அங்கதச் சுவையுடன் வறுமையைப் படம்பிடித்துக் காட்டும் கதை. புதுமைப்பித்தன் பாதிப்பாக இருக்கலாம்.

வாசகசாலையின் பெயர் ‘ஜெயமாருதி வாசகசாலை’., வாசகசாலையின் லோகோ அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு விண்ணில் பறப்பதுபோல் இருக்கும். அந்தப் படத்தை வரைந்தவரும் கோபாலன்தான்!

கி.ரா.கோபாலன் எழுத்தாளர் மட்டும் இல்லை; நல்ல ஓவியர். தமிழ் சாகித்தியங்களும் எழுதியிருக்கிறார். இதைப் பற்றி ஒரு முக்கிய செய்தியைப் பதிவு செய்தாக வேண்டும்.

அவர் ‘நித்திரையில் வந்து என் நெஞ்சில் இடங்கொண்ட’ என்ற ஓர் இசைப்பாடலை இயற்றி அக்காலகட்டத்தில் மிகப் பிரபலப் பாடகராக இருந்த என்.சி. வசந்த கோகிலத்திடம் கொடுத்திருக்கிறார். பாட்டு நன்றாக இருந்ததால் இசைத் தட்டாக வெளியிட ஒப்புக்கொண் டார். ஆனால், இசைத்தட்டு வெளிவந்த போது, இயற்றியவர் பெயராக ‘சுத்தானந்த பாரதி’ பெயர் இருந்தது. கோபாலன் கோபத்துடன் வசந்த கோகிலத்தைப் பார்க்கப் போயிருக்கிறார். வசந்த கோகிலம் கணவர் ‘சாச்சி’ (சதாசிவம்) சொல்லியிருக்கிறார்: ‘ ‘உன் பேரை யாருக்குத் தெரியும்? அதுக்காக ரெக்கார்ட் கம்பெனி சுத்தானந்த பாரதியார் பெயரைப் போட்டிருக்கான். நல்லா விற்கணுமில்லையா? உனக்குப் பணம் வந்தாச்சு இல்லையா, பேசாமெ இரு. கேசு, கீஸுன்னு அலையாதே. டேய்… யார்றா அங்கே, இவருக்கு நூறு ரூபா கொடு. நானும் பணம் தர்றேன், போறுமா?’’

கோபாலன் இதைச் சொன்னது என் மனத்திரையில் இன்னும் அப்படியே நிழலாடுகிறது.

———

இது இபா பதிவு.

அந்த நூறு ரூபாயை வாங்காமல் திரும்பிவிட்டார் கிரா கோபாலன். இவர் பல கிருதி/கீர்த்தனைகளை எழுதியிருப்பதாகவும் சபாக்களில் பல இசை மேதைகள் இவரது பாடல்களைப் பாடியிருப்பதாகவும் தினமணி எஸ். சிவக்குமார் சொல்கிறார். நவீன இலக்கியத்தின் பழைய விஷயங்களைப் போலவே இசை பற்றி தகவல் ஞானமும் நிரம்பப் பெற்றவர் சிவக்குமார் என்பதால் நம்பலாம்..

கொசுறு

வ.ரா (வா.ரா), கு.ப.ரா (கு.பா.ரா), லா.ச.ரா (ல.சா.ரா), ஈ.வெ,ரா (ஈ.வே.ரா) என்றெல்லாம் குழப்பங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. சு.ரா. தன் பெயரை சுந்தர ராமசாமி என்று பிரித்து எழுத வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். கல்கி துணை ஆசிரியர்கள் யாரோ ‘மௌனி’ என்ற பெயரில் (மௌனி பெயர் பிரபலமாகாத ஆரம்ப காலத்தில்) எழுதிய ஒரு கதையையும் கட்டுரையையும் கூட, (பழசு பற்றிய புதிய நவீன) ஆய்வாளர்கள் மறுபிரசுரம் செய்வதையும் சமீபத்தில் கண்டிருக்கிறோம். இப்படி மாறாட்ட ஆடல் வகைகள் பல உண்டு.

நண்பர் ராணிதிலக், கிரா கதைகளைத் தொகுத்ததைப் போலேவே கிரா கோபாலனின் கதைகளையும் தொகுப்பதாகத் தெரிகிறது.

கிரா கோபலன் தானே சித்திரம் வரைந்து கல்கியில் வெளியிட்ட ஒரு தொடர்கதை விபரம் கீழே: