பேரின்பம் எது?

ஒரு கலந்துரையாடலின் போது நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. வாழ்க்கையில் உங்களுக்குப் பேரின்பம் தரக் கூடியது எது?

ஒரு நண்பர் பெண் என்றார்.  பெண்களுடன் இருப்பது, பெண்களோடு பேசுவது, பெண்களோடு பழகுவது இத்யாதி.  ராஜேஷ் (கருந்தேள்) விடியோ கேம்ஸ் என்றார்.  விளையாட்டுப் பிள்ளை என்று நினைத்துக் கொண்டேன்.  கிருஷ்ணா (விஞ்ஞானி) வாசிப்பதே பேரின்பம் என்றார்.  அதிலும் குறிப்பாக, சாருவின் எழுத்து.  கார்த்திக் (கிருஷ்ணகிரி) இசையே பேரின்பம் என்றார்.  இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுவது என்று சொல்வார் என எதிர்பார்த்தேன்.  சாலை வழிப் பயணத்தின் இன்பத்தையும் இசை மிஞ்சி விட்டது போல.  சுற்றில் அடுத்து அமர்ந்திருந்தது நான்.  எனக்குப் பேரின்பம் குடிப்பது என்றேன்.  குடிப்பதற்குத் தமிழ்நாட்டில் அர்த்தம் வேறு.  இரண்டு வாரங்களுக்கு முன்பு எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் காவல்காரருக்குக் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்கவே முடியாமல் போனது.  வேலையிலிருந்து நின்று விட்டார்.  சென்ற வாரம் இன்னொரு காவல்காரருக்கும் அதேபோல் உயிருக்கே ஆபத்தாகி விட்டது.  குடியே காரணம்.  இப்படி நூற்றுக்கணக்கான உதாரணங்கள்.  இங்கே குடி என்றால் பாலிடால் மாதிரி.  உயிரை எடுத்து விடும்.  சமீபத்தில் என் நண்பர் ஒருவர் தன்னுடைய தம்பி இறந்து விட்டதாகச் சொன்னார்.  ஐயோ, அவர் வயது நாற்பதுதானே இருக்கும் என்றேன்.  ஆமாம், குடி என்றார் நண்பர்.  இப்படி பாதி சாவுகள் குடியினால்.  அல்லது, இப்படிச் சொல்லலாம்.  டாஸ்மாக் குடிகாரர்களுக்கு ஆயுள் அம்பதுதான்.  நான் மேலே குறிப்பிட்ட காவல்காரர்களின் வயதும் அம்பதுதான்.  இந்தக் குடிக்கும் நான் சொன்ன குடிக்கும் சம்பந்தமே இல்லை.  நான் சொன்ன குடி என்பது ஐரோப்பியக் குடி.  அங்கே 85 வயது ஆள் காலையிலேயே ஒரு லிட்டர் பியரைக் கையில் வைத்துக் கொண்டு முழ நீள சுருட்டைக் குடித்துக் கொண்டிருக்கிறான்.  நான் புகைப்பதில்லை.  ஆனால் குடி ஐரோப்பியக் குடிதான்.  ஐரோப்பியக் குடியில் ஈடுபட்டால் சொத்து சேர்க்க முடியாது.  வீடு கட்ட முடியாது.  வைன் மட்டுமே குடிப்பேன்.   அதிலும் ஃப்ரெஞ்ச் வைன் மிதமாக இருக்கும்.

நண்பர்கள் அனைவரும் நான் எழுத்து என்றோ வாசிப்பு என்றோ சொல்வேன் என எதிர்பார்த்தார்களாம்.  வாசிப்பு எனக்கு இன்பமானது அல்ல.  என்னைப் பொறுத்தவரை வாசிப்பு என்பது கற்றல்.  கற்றல் சற்று சிரமமான காரியம்தானே?  குறிப்புகள் எடுக்காமல் நான் வாசித்ததே இல்லை.  குறிப்புகள் எடுக்காமல் வாசிக்கக் கூடிய நூல்களையும் நான் வாசித்தது இல்லை.  எழுத்து பேரின்பம் இல்லையா?  சத்தியமாக இல்லை.  வாசகருக்குத்தான் பேரின்பம்.  எழுதுபவருக்கு இல்லை.  மெழுகு போல் என்னை உருக்கி அல்லவா எழுதுகிறேன்?  அதிலும் என்னுடைய எழுத்தினால் நான் பலரையும் இழந்து கொண்டே இருக்கிறேன்.  காமரூப கதைகள் நாவலால் நாலைந்து கொலைகள், தற்கொலைகள் நடந்திருக்கும்.  ராஸ லீலாவினால் நான் இழந்த நட்புகள் அநேகம்.  ராஸ லீலாவை எழுதி பதினைந்து இருபது ஆண்டுகள் இருக்கும்.  சமீபத்தில் என் நண்பர் ஒருவரின் பணியிடத்தில் இன்னொரு நண்பர் இவரிடம் வந்து “எனக்கு சாருவின் எழுத்து பிடிக்கும்.  ஆனால் ராஸ லீலாவில் அவர் எக்ஸ் பற்றி அவதூறாக எழுதி விட்டார்.  அதை மட்டும் மன்னிக்கவே முடியாது” என்றாராம்.  இதேபோல் விகடன் கண்ணனும் என்னிடம் ஒருமுறை சொன்னார்.  எனக்கு எல்லாமே கச்சாப் பொருள்தான்.  நானே எனக்குக் கச்சாப் பொருள்தான்.  யார், எவர் என்று தெரிந்து விடாமல்தான் எழுதுவேன்.  இருந்தாலும் சில சமயங்களில் தெரிந்து விடுகிறது. 

இப்படி எழுத்து எனக்கு அநேக இன்னல்களையே கொண்டு வருகிறது.  மேலும், எழுத்து என்ற பௌதிகச் செயலை எடுத்துக் கொண்டாலும் துன்பம்தான்.  எவ்வளவோ படிக்க வேண்டியிருக்கிறது.  எழுதுவதற்கான சூழலும் உடல் வலுவும் முக்கியம்.  சமீபத்தில் கூட அந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது.  எல்லா எழுத்தாளர்களிடமும் கேட்கப்படும் மிகப் பிரியமான கேள்வி.  எழுதுவதற்கு உங்களுக்கு உகந்த நேரம் எது?  சில பேர் நள்ளிரவு என்பார்கள்.  சிலர் அதிகாலை என்பார்கள்.  எனக்கு அப்படிப்பட்ட லக்‌ஷுரி எதுவும் கிடையாது.  மார்க்கி தெ சாத்-க்கு மனநோய் விடுதியிலும் பிறகு சிறையிலும் எழுதுவதற்கான காகிதங்களும் எழுதுகோலும் மறுக்கப்பட்டன.  அவர் கழிப்பறையில் உள்ள டிஷ்யூ பேப்பரில் தன் ஆயிரம் ஆயிரம் பக்க நாவல்களை எழுதிக் குவித்தார்.  எழுதுவதற்கான பென்ஸிலை அவருக்குக் கடத்தி வந்து கொடுக்க ஆட்கள் இருந்தார்கள்.  எழுதி முடித்ததும் பிரதியைக் கடத்தி விடுவார்.  அது ஸ்வீடனில் பிரசுரமாகும்.  ஃப்ரான்ஸில் அவர் எழுத்துக்குத் தடை.  இப்படிப்பட்ட ஆளிடம் போய் “எழுதுவதற்கு உங்களுக்கு உகந்த நேரம் எது?” என்று கேட்டால் அவர் என்ன சொல்வார்?  என் நிலை அதை விடக் கொஞ்சம் தேவலாம்.  அறையில் ஏர்கான் இருக்கிறது.  கணினி வசதி.  ஆனால் எழுதுவதற்கான சூழல் கொஞ்சமும் இல்லை.  இதில்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  நாற்பது ஆண்டுகளாக இதுதான் நிலை.  இரவில் எழுதுபவனாக இருந்தால் பிரமாதமாக ஒரு தொந்தரவு இல்லாமல் எழுதலாம்.  ஆனால் எனக்கு ஒன்பதுக்கெல்லாம் உறக்கம் வந்து விடும். 

ஆக, எழுத்து என்னைப் பொறுத்தவரை இன்பம் தரக் கூடியது அல்ல.  இது ஒரு masochist act.  உங்களுக்குத்தான் பேரின்பம். 

பெண்கள் என்று சொன்ன நண்பருக்குப் பெண்களிடம் அனுபவம் இல்லை என்று நினைத்துக் கொண்டேன்.  பூனையும் நாயும் எங்காவது நட்பாக இருக்க முடியுமா?  பெண்கள் பூனை.  ஆண்கள் நாய்.  பெண்களின் உளவியல் ஆட்டங்களையும், சமயங்களில் பேயாட்டங்களையும், whims and fancies ஐயும், பாய்ச்சல்களையும், எரிமலை வெடிப்புகளையும் தாங்குவதற்கு ஒரு ஆண் இனிமேல்தான் பிறக்க வேண்டும்.  கையில் சவுக்கு வைத்துக் கொண்டிருக்கும் ஆணாதிக்கவாதிகளைப் பற்றி நான் பேசவில்லை.  பெண்களோடு பழகுவது பல நிபந்தனைகளை உள்ளடக்கியதாக உள்ளது.  அதுதான் ஆண்-பெண் உறவில் மிகப் பெரிய பிரச்சினை.  எனக்கோ நிபந்தனையே பிடிக்காது.  எனக்கு சீனியோடு பழகுவது போல் இயல்பாக ஒரே ஒரு பெண்ணோடு கூட பழக இயலவில்லை.  சீனியோடு மட்டுமே நிபந்தனை இல்லாமல் பழக சாத்தியமாகி இருக்கிறது.  சீனி போல் ஒரு பதினைந்து ஆண்கள் உள்ளனர்.  அவர்கள் அத்தனை பேரோடும் எந்த நிபந்தனையும் இல்லாத ஜாலியான நட்புதான்.  ஆ, ஒரே ஒரு பெண்ணை மறந்து போனேன்.  அவர் மட்டும் விதிவிலக்கு. 

ஆக, குடியில்தான் எந்த நிபந்தனையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.  உடம்பு கெட்டுப் போகும் என்பதை நான் நம்பவில்லை.  தெலுங்கு நடிகர் புனித்தின் மரணத்தை விட அதிர்ச்சிகரமான மரணம் வேறு ஏதேனும் உண்டா? 

30 ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு ஒரு நண்பர் இருந்தார்.  அவர் ஒரு கவிஞர்.  குடிகாரர் என்று பெயர் எடுத்தவர்.  எல்லோரும் ”இப்படிக் குடித்தால் சீக்கிரம் செத்து விடுவீர்கள்” என்று தடுப்பார்கள்.   அவர் “எனக்கு சோதிடம் தெரியும்டா.  என் வயது தொண்ணூறுன்னு சொல்லுது கட்டம், கவலையே படாதே” என்பார்.  இப்போது எண்பதை நெருங்கும் என்று நினைக்கிறேன்.  நிச்சயம் தொண்ணூறு வரை இருப்பார்.  ஒரு நூறு பேருக்கான குடியை அவர் மட்டுமே குடித்திருக்கிறார்.  அவர் வட துருவம் என்றால் நான் தென் துருவம்.  குடியில்.  அவர் குடித்தால் ரோட்டுச் சாக்கடையில் கிடப்பார்.  நான் அதற்கு நேர் எதிர்.

எனவேதான் குடி என்றேன். 

(பி.கு. மறுநாள் சீனியிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.  வெவ்வேறு இடங்களில் குடிப்பது பிடிக்கும் என்றார்.  வெவ்வேறு இடங்கள் என்றால் வெவ்வேறு நாடுகள் என்று அர்த்தம்.)