ரத்து செய்யப்பட்ட குறுஞ்செய்தி (குறுங்கதை)

சற்று நேரத்துக்கு முன்பு ஒரு தோழி ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். செய்தி ரத்து செய்யப்பட்டிருந்தது. என்ன சொல்ல விரும்பி, அனுப்பி விட்டு, பின் அதை ரத்து செய்திருக்கிறாள்? எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். பேசினால் சொல் வெளியே போய் விடுகிறது. போன வார்த்தையைத் திரும்ப எடுக்க முடியாது. போனது போனதுதான். அதனால்தான் அதை வடு என்கிறார் வள்ளுவர். ஒருத்தர் என் எழுத்தை கக்கூஸ் என்று சொன்னார். அதாவது பாராட்டாகத்தான் சொன்னார். ஒரு வீடு என்று இருந்தால் பூஜையறையும் இருக்கும், கக்கூஸும் இருக்கும். ஜெ. பூஜையறை. நீங்கள் கக்கூஸ். இதுதான் அவர் சொன்னது. கக்கூஸும் ஒரு வீட்டுக்குத் தேவைதானே என்று விளக்கவும் செய்தார். இனிமேல் எனக்கு போன் செய்யாதே என்று கத்தி விட்டு விட்டு விட்டேன். விடவில்லை. மனதில் அது ஆறாக் காயம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் தான் முன்பு சொன்னதற்காக மனமுருகி மன்னிப்புக் கேட்டார். இனி என்னிடம் பேசாதே என்றுதான் என்னால் சொல்ல முடிந்தது. மன்னிக்க முடியவில்லை. சொல் ரணம்.

அதேபோல் ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு நண்பரிடம் ஏதோ சொல்லியிருக்கிறேன். அவர் மீது எனக்கு மிகுந்த கோபம். மிகுந்த வருத்தம். அதனால் அப்படிச் சொல்லியிருக்கிறேன். இன்று பேசினேன். நான் சொன்னதைச் சொன்னார். எனக்கு ஞாபகம் இல்லை. வாய் தவறிச் சொல்லியிருக்கலாம், மேலும், i dont own it என்றேன். ஆ சார், நீங்கள் சொன்னால் வாய் தவறிச் சொன்னது. நாங்கள் சொன்னால் வருஷக் கணக்கில் சொல்லிக் காண்பித்துக் கொண்டே இருப்பீர்கள், இல்லையா என்றார்.

சரியான கிடுக்கிப் பிடி. நான் மறந்தே போனாலும் அவருக்கு ஞாபகம் இருப்பதால் அதைச் சொன்னதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

வாய் மூலம் தொடர்பு கொண்டால் இதுதான் பிரச்சினை. டெக்ஸ்ட் பண்ணி விட்டால் உடனடியாக அதை டெலீட் பண்ணி விடும் சாத்தியம் இருக்கிறது. மன்னிப்புக் கேட்க வேண்டிய தர்ம சங்கடம் இல்லை. மன்னிப்புக் கேட்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மற்றவர்களை வருத்தமுறச் செய்யாமல் இருக்கலாம் இல்லையா?

வள்ளுவர் காலத்தில் இண்டர்நெட், டெக்ஸ்டிங் போன்ற வசதிகள் இல்லை. இருந்திருந்தால் இந்த டெலீட் செய்யக் கூடிய சாத்தியத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டிருப்பார். சொல் வடுவாகத் தங்கும் முன் நாம் அதை டெலீட் செய்து விடலாம்.

ஆ, சொல்ல மறந்து போனேன் பாருங்கள். தோழிக்கு நான் இரண்டு செய்திகள் அனுப்பி இரண்டையும் உடனுக்குடன் ரத்து செய்தேன். என்ன செய்தி என்று கேட்கிறீர்களா? எதுவுமே இல்லை. சும்மா வீம்புக்குக் காலியாகவே அனுப்பி ரத்து செய்தேன். நீ ஒன்றா, இதோ பார் இரண்டு என்று இரண்டு காலிச் செய்திகளை அனுப்பி இரண்டு முறை ரத்து செய்தேன். நேர விரயம்தான். இருந்தாலும் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்ய வேண்டாமா? ராஸ்கல்…