அஞ்சல் துறையில் ஓய்வு ஊதியம் பெறுவதற்கு ஒரு ஏடிஎம் அட்டை கொடுத்திருக்கிறார்கள். அது இந்த அக்டோபருடன் முடிவுக்கு வருகிறது. அதைப் புதுப்பித்துக் கொள்வதற்காக நானும் அவந்திகாவும் அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் சென்றோம். பொதுவாக நாங்கள் இருவருமே அந்தப் பக்கம் செல்வதைத் தவிர்ப்போம். ஏனென்றால், பார்க்கின்ற அத்தனை பேருமே “ஏன் இளைத்துப் போய் விட்டீர்கள், ஷுகரா?” என்று கேட்டு அதற்கு நாலாவிதமான மருத்துவமும் சொல்வார்கள். திரும்பி வரும்போது நம்மை ஒரு பிரேதமாகவே மாற்றித்தான் அனுப்புவார்கள்.
ஆனால் இந்த முறை அப்படி எதுவுமே நிகழவில்லை. அஞ்சல் அலுவலகமும் சரி, அதற்கு மேல் மாடிகளில் இருக்கும் நிர்வாக அலுவலகமும் சரி, இளைஞர்களாலேயே நிரம்பியிருந்தது. அதிலும் பிஹார், உத்தரப்பிரதேசத்து இளைஞர்கள். ஆண்கள் மட்டுமே அல்ல. பெண்கள் அதிகம். அங்கெல்லாம் ஐ.டி. தொழில் அவ்வளவாக இல்லையாம். ஆண்கள் அரசு அலுவலகத்தில் வேலை செய்தால்தான் பெண் கொடுக்கிறார்களாம். ஒரு கோடி ரூபாய் வரதட்சணை. கவுண்டரில் அமர்ந்திருக்கும் இளைஞர்களும் பொதுமக்களுடன் அரைகுறைத் தமிழிலேயே பேசி வெளுத்து வாங்குகிறார்கள்.
நோயாளிக் கூட்டமெல்லாம் வீட்டுக்குப் போய் விட்டது நிம்மதியாக இருந்தது.
அப்போது ஒரு மத்திய வயதுக்காரர் வந்து அவந்திகாவைக் காண்பித்து ஒரு விஷயம் சொன்னார்.
நான் உங்களிடமெல்லாம் ஒரு பெண்மணி பற்றி அடிக்கடி சொல்வேன் அல்லவா, அவர் இவர்தான்.
பக்கத்தில் இருந்த ஒரு புதியவர் என்ன விஷயம் என்றார்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அதே இடத்தில் நடந்ததாம். ஒரு பெண் தன் ஐந்து வயதுச் சிறுவனை அடி அடி என்று அடித்து நொறுக்கிக்கொண்டிருக்கிறார். முதலில் அடிப்பதை நிறுத்துங்கள் என்று குறுக்கிடும் அவந்திகா அந்தப் பெண்ணிடம் என்ன விஷயம் என்று கேட்கிறாள்.
பையன் 700 ரூ. மதிப்புள்ள ஒரு பொருளை துடுக்குத்தனம் பண்ணி உடைத்து விட்டான். பொருளுக்கு உரியவர் எழுநூறை எடுத்து வை என்கிறார்.
அவந்திகா தன் கைப்பையைத் திறந்து அவரிடம் எழுநூறைக் கொடுத்து விட்டு, அந்தப் பையனை தன் இருக்கையிலேயே நீண்ட நேரம் வைத்திருந்து தின்பண்டம் வாங்கிக் கொடுத்து அனுப்பியிருக்கிறாள்.
இப்போது அந்தப் பையன் ஒரு பிரபலமான தொலைக்காட்சி நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருக்கிறான் என்று சொன்னார் கதையைச் சொன்ன நண்பர்.
இப்படி அவந்திகா அந்த அலுவலகத்தில் ஏராளமாகச் செய்திருக்கிறாள். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுநூறு ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. நான் அவளோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவள் அப்படித்தான் செய்வாள் என்பதை கவனித்திருக்கிறேன். இதற்காகவே என் வீட்டுக்கு வரும் நண்பர்களிடம் நான் வற்புறுத்திச் சொல்லியிருக்கிறேன், நீங்கள் எனக்கு பணமாக ஏதாவது கொடுக்க நினைத்தால் அதை அவளுக்குத் தெரியாமல் தனியாகக் கொடுங்கள் என்று. இல்லாவிட்டால் அந்தப் பணமும் தானமாகப் போய் விடும்.
அட்டையைப் புதுப்பித்துக்கொண்டு திரும்பும்போது நீ வீட்டுக்குப் போ, நான் புஹாரியில் போய் சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்றேன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் அந்த அலுவலகத்தில் வேலை செய்த போது நானும் சீனிவாசனும் தினந்தோறும் புஹாரியில் வந்துதான் தேநீர் அருந்துவோம். (இது வேறு சீனி, என்னோடு பணி புரிந்தவர், இன்றும் நெருக்கமான நண்பர்.)
நானும் வருகிறேன் என்று சொன்ன அவந்திகா என் கூடவே அமர்ந்து வெறும் தேநீர் மட்டும் அருந்தினாள். நான் புஹாரியில் வழக்கமாகச் சாப்பிடும் கோதுமை பரோட்டாவும் ஆட்டிறைச்சிக் குழம்பும் சாப்பிட்டேன். பிறகு தேநீர். அண்ணா சாலை புஹாரியில் கிடைக்கும் தேநீர் போல வேறு எங்கும் கிடைப்பதில்லை. நானும் வேறு எங்குமே தேநீர் அருந்துவதில்லை.
திரும்பி வரும்போது எனக்கு அந்தப் புகழ்பெற்ற புறநானூற்றுப் பாடல் ஞாபகம் வந்தது.
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய்அலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன்கைவண் மையே.
அடுத்த ஜென்மத்தில் நன்மை பயக்கும் என்பதற்காக தர்மம் செய்யும் அறவிலை வணிகனாக இல்லாமல், சான்றோர் சென்ற நெறியெனச் செய்யும் தன்மை கொண்டவனாக தர்மம் செய்கிறான் எனப் பாடுகிறார் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
நான் ஜப்பான் செல்கிறேன் என்று என் நெருங்கிய நண்பர் ஒருவர் அஞ்சாயிரம் ரூபாயும், இன்னொரு வாசகர் இருபத்தஞ்சாயிரம் ரூபாயும் அனுப்பியிருக்கிறார்கள்.
சென்ற மாதம் ஒரு நண்பர் ஏன் தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் பணம் இல்லாமல் சிரமப்படுகிறார்கள் என்பதற்கான காரணத்தை விளக்கி எழுதுங்கள் என்று கேட்டிருந்தார்.
என் நண்பர் ஒருவர் ஆங்கில நாவலாசிரியர். உலகப் புகழ் பெற்றவர். ஆனால் அவர் நூல்கள் ஆயிரம் ரெண்டாயிரம்தான் போகும். அருந்ததி ராய் போல வெகுஜனப் பிராபல்யம் இல்லாதவர். சரியாகச் சொன்னால் அவர் புத்திஜீவிகளின் எழுத்தாளர். அவர் ஒரு வருடத்தில் ஒன்பது மாதம் உலக நாடுகளைச் சுற்றிக்கொண்டேதான் இருப்பார். அவர் கையிலும் பரம்பைசா கிடையாது. எப்படி உலகம் சுற்றுகிறார் என்றால், உலகத்தில் உள்ள பெரும்பாலான இலக்கிய அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் அவரை அழைக்கின்றன. வருகைதரு பேராசிரியராக இருத்திக்கொள்கின்றன. இது ஒரு முக்கியமான காரணம்.
இன்னொரு காரணம், மேற்கு நாடுகளில் உள்ள பெரும் செல்வந்தர்கள் இம்மாதிரி எழுத்தாளர்களின் பயணச் செலவை ஏற்கிறார்கள். அவர்களே அதை ஏற்பாடு செய்கிறார்கள்.
உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள எழுத்தாளர் ஸக்கரியா ஆஃப்ரிக்கா கண்டத்தின் தென் மூலையிலிருந்து வட மூலை வரை சாலை வழியாகவே பயணம் செய்து அதை மாத்ருபூமியில் எழுதினார். ஆறு மாதப் பயணச் செலவையும் மாத்ருபூமி பத்திரிகைதான் ஏற்றது. தென்னாஃப்ரிக்காவின் தென்முனை கேப்டவுனிலிருந்து வடக்கு மூலையில் உள்ள அல்ஜியர்ஸ் நகர் வரை சென்றிருக்கிறார்.
அப்படியெல்லாம் தமிழ்நாட்டில் நடப்பதில்லை. இந்தியாவின் ஐந்து பணக்காரர்களில் ஒருவரான ஒரு தமிழர் தினமும் மூன்று கோடி ரூபாய்க்கு தர்மம் செய்கிறாராம். ஆனால் கலைக்கும் எழுத்துக்கும் தர்மம் செய்ய தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்து ஒரே ஒருத்தர்தான் இருக்கிறார். மற்றபடி எனக்கு நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் என் நன்றிக்கடன் என் எழுத்துதான். நீங்கள் எனக்காக செலவு செய்யும் ஒவ்வொரு காசும் என் எழுத்தாக மாறி உங்கள் கரங்களுக்கு வரும் என்பது மட்டும் நிச்சயம்.
இந்த ஜப்பான் பயணம் முடிந்த கையோடு ரொப்பங்கி இரவுகளும் உல்லாசம் உல்லாசம் நாவலும் உங்களுக்குக் கிடைத்து விடும். இரண்டு நாவல்களையும் இணைத்து விடலாம் என்று இருக்கிறேன். உல்லாசம் இலங்கை. ரொப்பங்கி ஜப்பான்.
ஒரு வாரமாக நான் எழுதிக்கொண்டேதான் இருந்தேன். அது ஒரு முன்னுரை. அதற்காகப் படித்தேன். படம் பார்த்தேன். மனுஷா ப்ரபானி திஸாநாயக்க என்ற சிங்கள எழுத்தாளர் எழுதிய குறுநாவல். ஆகம் என்பது தலைப்பு. ஐம்பத்து ஐந்து வயதில் நான் எப்படியிருந்தேனோ அப்படி இருந்த ஒரு வெளிப்படையான மனிதனின் கதை.
என் சுயசரிதையை நான் எழுதினால் அந்தக் கதை மனுஷா எழுதிய ஆகம் மாதிரிதான் இருந்திருக்கும் என்பதால் அந்தக் குறுநாவல் எனக்கு மிக விசேஷமாகத் தோன்றியது. ஏனென்றால், எனக்கு மனுஷாவைத் தெரியாது. மனுஷா என் பெயரைக் கேள்விப்பட்டது கூட இல்லை. விரைவில் அந்தக் குறுநாவல் தமிழில் கிடைக்கும். ரிஷான் ஷெரீஃப் மொழிபெயர்ப்பு.
மனுஷாவின் சிறுகதை ஒன்று வாசகசாலையில் வெளியாகி இருக்கிறது. ஆனாலும் மனுஷா தமிழ் வாசகர்களுக்கு ஆகம் மூலமாகத்தான் அறிமுகமாக வேண்டும் என்று விரும்புகிறேன். சுயநலமே காரணம்.
சிறந்த உலகக் காதல் கதைகள் தொகுப்பில் Leo Tolstoy, Maxim Gorky, Raymond Carver, Lajos Bíró, Pär Lagerkvist, Marguerite Yourcenar, William Saroyan, Vasily Shukshin, Boris Polevoy, Hadjak Gyulnazaryan, Paul von Heyse, Grazia Deledda, Alexander Kobrin, Raymond Carver ஆகியவர்களோடு மனுஷாவின் ‘பின்தொடர்தல்’ சிறுகதையும் இடம்பெற்றிருந்தது.
ஆகம் குறுநாவலுக்கு நான் எழுதிய முன்னுரை பதினைந்து பக்கங்களைத் தாண்டி விட்டது. விரைவில் ஆகம் குறுநாவலும் அதோடு இணைந்த என் முன்னுரையும் உங்களுக்குக் கிடைக்கும். ரிஷான் ஷெரீஃபுக்கு என் வாழ்த்துக்கள். மனுஷாவுக்கு என் அன்பு.
சந்தா மற்றும் நன்கொடை அனுப்புவதற்கான விவரம் கீழே:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
***
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
வங்கி விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai
***