தலைப்பிடப் படாத ஒரு குறுங்கதை: காயத்ரி. ஆர்

செப்டம்பர் 30,2024

சின்னப் பூனை ஒன்று எங்கோ கத்தும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே கண்விழித்தேன். மணியைப் பார்த்தால் 5.45. கண் எரிந்தது. இன்னும் கொஞ்சம் தூங்கினால் தேவலாம்போல் இருந்தது. மாமரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூவிக்கொண்டிருந்தாலும், பூனையின் குரல் தனித்துக் கேட்டது. தலைமுடியை அள்ளி முடிந்துகொண்டு தூக்கக் கலக்கத்தில் தள்ளாட்டமாய் பால்கனியில் நின்று பார்த்தேன். பூனைக்குட்டி எதிர் அபார்ட்மெண்டில் இருக்கிறது போல. கியா கியாவென்று சத்தம் அதிகமாக இருந்தது. பல் தேய்த்துவிட்டு கீழிறங்கிப் பார்க்கலாம் என்று பேஸ்டை பிரஷ்ஷில் பிதுக்கிக் கொண்டிருந்தபோதே எங்கள் அபார்ட்மெண்ட்டின் கீழே சத்தம். பல் தேய்த்துக்கொண்டே மறுபடி பால்கனி சென்று எட்டிப் பார்த்தால், கார் நிறுத்துமிடத்தில் சாம்பல் நிறத்தில் ஒரு குட்டி ஊரைக் கூட்டிக் கொண்டிருந்தது. ஒன்றரை மாதக் குட்டியாக இருக்கலாம். அம்மாவை விட்டு எப்படிப் பிரிந்து வந்தது? பாவம் பசி! எவரேனும் அடித்துத் துரத்துவதற்கு முன் அதற்கு இத்தணுண்டு பாலை வைத்துவிட்டு வரலாம் என்று மனம் பரபரத்தது. வேகவேகமாக பல் தேய்த்துவிட்டு, எனக்கும் பையனுக்குமாக கஞ்சி காய்ச்சுவதற்கு, இரண்டு ஸ்பூன் கஞ்சிப் பொடியைப் போட்டு வேண்டுமளவு நீர் ஊற்றிக் கரைத்து அடுப்பில் சின்ன பர்னரில் தாழ்த்தி வைத்தேன். அப்புறம் சரி செய்து கொள்ளலாம் என்று எல்லாக் குப்பைகளையும் அடைக்கும் சமையலறை சிங்குக்கு கீழ் உருட்டி ஒரு காலி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் டப்பாவில் சிறிது பாலை ஊற்றி எடுத்துக் கொண்டு படியிறங்கினேன்.

நேற்று மதியம் கீழே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வாண்டுகள் இந்தப் பூனையை ஒரு கட்டப்பையில் போட்டுக்கொண்டு வந்து ‘அங்கிள், பின்னாடி மரத்தில் இருந்தது. நீங்கள் வளர்க்கிறீர்களா’ என்று இவரிடம் கேட்டதுகள். ஏற்கனவே இரண்டு பூனைகளையும் அவற்றைக் கொண்டு வந்த என்னையும் கஷ்டப்பட்டு வளர்த்துக் கொண்டிருப்பதால் முடியாது என்று சொல்லி அவர்களை திருப்பி அனுப்பி விட்டார். அதே பூனைதான் இப்போது கீழே பகளம் பண்ணிக் கொண்டிருந்தது. அம்மாவிடமிருந்து பிரிந்து வந்து விட்டதா, இல்லை, இந்தப் பொடியன்கள் பிரித்து விட்டார்களா தெரியவில்லை. குனிந்து மாடிப்படியின் அடியில் பார்த்தேன். தட்டுமுட்டு சாமான்கள் மத்தியில் முட்டை கண்ணை வைத்துக் கொண்டு விழித்துப் பார்த்தது டைகர். ஆமாம். மிருகங்களைப் பார்த்தவுடனே எனக்குள் ஒரு பெயர் தோன்றி விடும். எங்கள் வீட்டிலிருக்கும் டாட்டூவின் நாமகரணம் கூட அப்படித்தான்.

கொரொனா காலத்தில் ஒரு சுபயோக சுபதினத்தில் இதே போல பார்க்கிங்கில் சத்தம் கேட்க கீழிறங்கிப் பார்த்தால் எங்கள் காரினுள் இருந்துதான் சத்தம் வந்துகொண்டிருந்தது. ஆனால் பூனை எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. எங்கள் வாட்ச்மேன் ரவி ஒரு பக்கெட் தண்ணீரைக் கொண்டு வந்து காரில் மேல் கொட்டினார். எங்கிருந்து வெளியே வரும் என்று காத்துக் கொண்டிருந்த எங்களுக்கு குரல் மட்டுமே கேட்டது. என்ன தோன்றியதோ என்னவோ இவர் பானெட்டைத் திறக்கவும் அங்கு நனைந்த காலிகோ பூனை ஒன்று நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தது. ‘டாட்டூடூ’ என்று வாரியணைத்து பையில் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். அநேகமாக பத்தாவது படிக்கும்போதுதான் எனக்கு இந்த வியாதி தொற்றியிருக்க வேண்டும். பக்கத்து வீட்டு பால்காரர் மகள் கவிதா ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்த போது ‘அட, மணியா’ என்றதும் அதன் பெயர் மணி ஆனது. அதன் பிறகு டாலர், ஆர்த்தி, புஸ்கி, சில்க்கு,பட்டாணி என்று பல ஜீவன்கள் எங்கள் தோட்டத்துக்கு வந்து போயின.

இந்த ‘பார்த்தவுடன் ஞானஸ்நான’ விஷயத்தில் ஒரே ஒரு முறை தவறு செய்து விட்டேன். தவறென்று ஒரேடியாகச் சொல்லிவிட முடியாது. அருள்வாக்கு போல உள்ளிருந்து பீறிட்டு வரும் ஒரு சொல் எப்படித் தப்பாகிப் போகும்? என் அக்கா மகன் ஒரு நாள் அவனுடைய சிநேகிதன் வீட்டில் நாய் மூன்று குட்டிகள் போட்டிருக்கிறது என மரக்கலர் குட்டி ஒன்றை எடுத்து வந்தான். அந்த வேளையில் நான் அங்கு இருக்க வேண்டும் என்று கர்மக்கணக்கில் எழுதியிருந்தது. அதைப் பார்த்தவுடன் ‘சேஷாத்ரி’ என்று அள்ளி கட்டிக் கொண்டேன். வழமைபோல் அது சேஷுவாகியது. பிறிதொரு நாள் நான் அக்காள் வீட்டில் இருந்த சமயத்தில் பெரியப்பா வர, சேஷு பெருங்குரலில் குரைக்க, ‘அடக்கும்மா அதை’ என்றார் பெரியப்பா. ‘சும்மா இருடா சேஷு’ என்று நான் கத்த, சேஷாத்ரி பெரியப்பா கோபித்துக் கொண்டு வந்த வழியே திரும்பிப் போனார்.

‘டைகர் வா, வா’ என்று அழைத்து பாலைக் கொண்டு போய் வைத்தேன். அங்கிருந்து நகராமல் பயந்து கத்திக் கொண்டிருந்தவனை எடுத்து பால் கிண்ணத்தின் அருகில் வைத்தேன். குடிக்கவில்லை. ‘ஓ, நீ பெரியிடத்து வகையறாவா’ என்று கொஞ்சினேன். இந்த வகையறாக்கள் பாலைத் தொடவே தொடாது. அம்மாவிடம் குடிக்கும் பாலோடு சரி. பிறகு மீன், சிக்கன் இல்லாவிட்டால் கடையில் கிடைக்கும் பூனை உணவுகள் மட்டுமே சாப்பிடும். ஏதோ வீட்டில் வளரும் பூனை போட்டிருக்கும் குட்டியாகத்தான் இருக்க வேண்டும். எப்படி இங்கு வந்ததோ தெரியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. நான் தூக்கி வைத்துக் கொண்டால் அமைதியாக இருந்தது. கீழே விட்டால் அலறிற்று. ‘சரி! உனக்கு விஸ்காஸ் கொண்டு வரேன். அடுப்புல வேற கஞ்சி இருக்கு’ என்று அதை கீழிறக்கி விட்டு தடதடவென்று படியேறினேன். என் பின்னாலேயே நாலு படியேறிய டைகர் நாலாவது படியில் நின்றுகொண்டு விராட் விராட்டென்று கத்த ஆரம்பித்தது. ‘இதோ வரேன், வரேன்’ என்று அதை ஆற்றுப்படுத்திக் கொண்டே கதவைத் தள்ளினால் திறக்க முடியவில்லை. கீழே வரும் அவசரத்தில் சாவி எடுக்காது வந்து விட்டேன். ஆட்டோ லாக். இவர் காலையில்தான் மும்பை கிளம்பிப் போனார். நானும் சின்னவனும்தான் வீட்டில். ஐயையோ! எப்பேர்ப்பட்ட ஓலத்துக்கும் எழுந்திருக்காத என் சின்னவன் எப்படி இந்த டிங் டாங்கிற்கு எழுத்திருக்கப் போகிறான் என்று பயம் பீடித்தது. பத்து முறை காலிங்பெல்லை அழுத்தியும் கதவைத் திறக்கவில்லை.

நான் கீழிறங்கும்போது மணி ஆறிருக்கும். எட்டரை மணிக்குத்தான் ஜானகி வருவாள். அவளிடம் ஒரு வீட்டுச் சாவி எப்போதும் இருக்கும். இரண்டரை மணி நேரம் இந்த அழுக்கு நைட்டியோடு வாசலில் உட்கார வேண்டுமா? எதிர்த்த வீட்டில் வயதான ஜோடி . நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களை எழுப்பினாலும் சின்னவனின் போன் நம்பர் இன்னும் மனப்பாடமாகவில்லை. ஒன்பது மணிக்கு ஆபீஸுக்குக் கிளம்ப வேண்டும், சமைக்க வேண்டும். அட பகவானே! அடுப்பில் கஞ்சி. கஞ்சி பொங்கிக் கொட்டி அடுப்பு அணைந்து போனால்? இரண்டு மணி நேரம் காஸ் வீடு முழுக்கப் பரவி…சின்னவன் எழுந்து லைட் சுவிட்சைப் போட்டால்… வியர்த்து நைட்டி உடம்போடு ஒட்டியது. ஆண்டவா, பூனைக்குப் பரிதாபப்பட்டது ஒரு குத்தமா?

மறுபடி காலிங்பெல்லை அடித்தேன். முன்பொரு முறை விடாமல் அடித்து மணி செயலிழந்து விட்டதால் விட்டு விட்டு அடித்தேன். அவன் எழுந்து வரும் சந்தடியே இல்லை. சற்று அடங்கியிருந்த டைகர் மறுபடி குரலை உயர்ந்த ஆரம்பித்தது. இப்போது டைகரின் பசி, என் அழுக்கு நைட்டி எல்லாம் மறந்து போய் அடுப்பில் வைத்திருந்த கஞ்சி மட்டுமே பூதாகர கவலையாகியது. சரி, கீழே இறங்கி எதிர்ப்படுவோரிடம் போனை வாங்கி ஷ்யாமைக் கூப்பிட்டு சின்னவனுக்கு போன் அடிக்கச் சொல்லலாம் என்று நினைத்தபோது, யாரோ படியேறி வரும் சத்தம் கேட்டது. சரி, வருபவர் யாராயினும் உதவி கேட்கலாம் என்று முடிவு செய்தேன்.

மேலே ஏறி வந்தது பேப்பர் போடும் பையன். ஆறடி உயரத்தில் இருப்பான். என் பெரிய மகன் வயதிருக்கும். வாசலில் கோலம் போடும் போது, யோகா கிளாஸ் செல்லும் போது என சில முறை அவனைப் பார்த்திருக்கிறேன். பையன் வயது தானே என்று முதல் முறை பார்த்தபோது ஸ்நேகபூர்வமாக சிரித்தேன். அவனைப் பார்த்து இதுவரை எந்தப் பெண்ணும் சிரித்ததில்லையோ என்னவோ அல்லது என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டானோ அன்றிலிருந்து எப்போது என்னைப் பார்த்தாலும் ‘குட் மார்னிங்’ சொல்லி விட்டு ஏதோ பேச முயற்சிப்பான். சட்டென்று அவனைப் பிடிக்காமல் போயிற்று. இவன் ஏதோ சரியில்லை என்று மூளைக்குள் மணியடித்தது.

அடுப்பில் கஞ்சி…கீழே டைகரின் அலறல்…பேப்பர் பையன்…ரவி வேலையை விட்டுப் போன பின் எங்கள் அபார்ட்மெண்டுக்கு சரியானபடி வாட்ச்மேன் கிடையாது. வாட்ச்மேன் என்று சொல்லிக் கொண்டு எங்கள் அபார்ட்மெண்டில் வளைய வந்துகொண்டிருக்கும் ஒரு ஜீவன் அடிக்கடி தன் ஊருக்குப் போய் விடும் அல்லது இங்கிருந்தாலும் முழு போதையில் பாதி நாட்கள் இருக்கும். இருப்பது நாலே வீடு. என் மருமகள் அடிக்கடி சொல்வாள். ‘ஆண்ட்டி, நீங்க பால்கனில ஒண்ணு, வாசல்ல ஒண்ணுன்னு இரண்டு கேமரா பொருத்துங்க. எப்பவும் நல்லது’ என்று. ‘செய்யணும்’ என்று தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறேன்.

பல்லைக் காட்டிக்கொண்டே பேப்பர் பையன் என்னிடம் பேப்பரைக் கொடுத்தான். நான் பதற்றமாக இருப்பதை அவன் கண்டுகொண்டான். ‘என்ன ஆச்சு மேடம்’ என்றான்.

வீட்டுக்கு வெளியில் என்னை நானே பூட்டிக்கொண்டு விட்டேன் என்று அவனுக்குத் தெரியக் கூடாது என்று நினைத்தேன்.

‘ஒண்ணுமில்லப்பா, பூனை கத்துது பாருங்க. அதுக்கு பால் எடுத்து வந்தேன். பட்டினப்பாக்கம் வழியா போனீங்கன்னா அந்தப் பூனையை அங்க விட்டுடறீங்களா? எப்படியோ பிழைச்சுக்கும்’ என்று அவனுக்கு பூனை காட்டும் சாக்கில் அவனை சீக்கிரம் கீழே இறக்கலாம் என்று நினைத்தேன்.

ஒருவர் மட்டுமே இறங்க சாத்தியப்படும் குறுகலான படிக்கட்டு. நாலு வீடுதான் என்பதால் லிஃப்ட் இல்லை. எதிர் வீட்டுக்கும் எங்களுக்கும் இருக்கும் இடைவெளி கம்மி. ஐந்து புள்ளி ஐந்து வரிசைக் கோலம் இருவரும் போட்டால் நடுவில் ஒரு ஆள் நிற்க இடமிருக்கும். அங்கு அவன் நின்று கொண்டிருந்தது சங்கடமாக இருந்தது.

‘இல்லங்க, நான் பேப்பர வச்சுகிட்டு பூனையை எடுத்துப் போக முடியாது’ என்று சொல்லிவிட்டு கீழிறங்க யத்தனித்தான். பெருமூச்சுடன், சின்னவன் மேல் அதி பயங்கர கோபத்துடன், மறுபடி மணி அடித்தேன். ஐந்து முறை தொடர்ந்து அடித்துவிட்டு தரையைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.

‘மேடம்’ என்ற குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினேன். பேப்பர் பையன். இவன் இன்னும் போகவில்லையா? கதவு திறக்காததைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான். அடி வயிற்றிலிருந்து பயம் பீறிட்டது.

‘வண்டி ஓட்டிகிட்டு வரும்போது கண்ணுல ஏதோ விழுந்துட்டது. என்னன்னு பாக்கறீங்களா’ என்று இடது கண்ணின் ரப்பையை இழுத்துப் பிடித்துக் கொண்டு என் பக்கத்தில் வந்தான். சிறிது நேரத்துக்கு முன்பு வரை சரியாகத்தானே இருந்தான்?

எனக்கு பயத்தில் பேச்சு வரவில்லை. அவன் ஆகிருதிக்கு முன் நான் சுண்டெலி. ஆறடிக்கு முன் ஐந்தடி எம்மாத்திரம்! அவன் ஏதாவது என்னை செய்தால் கூட கேட்பதற்கு நாதியில்லை. கேமரா பொருத்தச் சொன்னாளே குட்டி, கேட்காமல் விட்டுவிட்டேனே. இவன் என்னை ஏதாவது செய்து விட்டால்? நான் ஒத்துழைக்கவில்லையென்றோ, கத்துவேன் என்றோ என்னைக் கொன்று போட்டால்? அவன் ஒரு கைக்குள் என் கழுத்து சுலபமாக அடங்கி விடும். என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாமல் போய் விடும்.

அதை விட, சின்னவன் பத்து மணிக்கு எழுந்து லைட்டைப் போட்டால்… பூனைப் பசியை அடக்க நினைத்த எனக்கு இப்படி ஒரு முடிவா? ஒரு சின்னத் தவறால் என் குடும்பமே அழியப் போகிறதே. ஆண்டவா! எங்களைக் காப்பாற்று!

பேப்பர் பையன் பக்கத்தில் வந்தான். ‘மேடம், பாருங்களேன்.’

அவன் வியர்வை வாடை குமட்டியது.

மியாவ், மியாவ், மியாவ்…

திரும்பாமலே கையை மட்டும் பின்னுக்குக் கொண்டு போய் காலிங்பெல்லை நான்கைந்து முறை அடித்தேன்.

அவன் கெட்ட எண்ணத்தோடுதான் பக்கத்தில் வருகிறான் என்று சர்வ நிச்சயமாகத் தெரிந்தது. இன்னும் சரியாக விடிந்திருக்கவில்லை.

‘இல்லப்பா, இந்த வெளிச்சத்துல ஒண்ணும் தெரியாது’ என்று முனகினேன். தொடை நடுங்க ஆரம்பித்தது. ‘போடா அங்கிட்டு. உன் அம்மாவிடம் ஊதச் சொல்’ என்று கத்த வேண்டும் என நினைத்தாலும் ஏதாவது செய்து விடுவானோ என்ற பயம் தடுத்தது. சுற்றிலும் பார்த்தேன். ஒரு குச்சி கூட இல்லை. எதிர் வீட்டின் காலிங்பெல் பக்கம் போக முடியாதவாறு அடைத்து நின்று கொண்டிருக்கிறான்.

‘பரவால்ல, பாருங்க’ என்று இன்னும் அருகில் வந்தான். நான் பின்னகர்ந்து போய் வீட்டுக் கதவோடு ஒட்டிக் கொண்டேன். என்னைத் தொட்டால் வலது கால் முட்டியை வேகமாக ஓங்கி விடலாமா, வேலைக்காகுமா என்று கணக்குப் போட்டேன். இப்படி ஒருத்தியைக் கலவரப்படுத்துவதும் வன்புணர்ச்சிக்கு சமானம் இல்லையா? இன்றைக்கு என்ன தேதி, செப்டம்பர் 30. என் கடைசி நாளாக இது இருக்குமோ? பரவாயில்லை. ஆனால் என் குழந்தைக்கு இது கடைசி நாளாகாமல் காப்பாற்று ஆண்டவா என்று நினைத்தபடி அவன் தொட்டால் பதிலடி கொடுக்கத் தயாராக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,‘பக்கத்துல வராத, தள்ளிப் போ’ என்று சீறி ஒரு அடி முன்னால் வைத்தேன். அவன் இதை எதிர்பார்க்காது ஒரு அடி பின்னால் நகர்ந்தான்.

‘என்ன மேடம், நான் என்ன செஞ்சேன். ஒரு சின்ன உதவி தான கேட்டேன். இதுக்குப் போய் கோவப்படுறீங்க’ என்று சொல்லி விட்டுக் கீழிறங்கினான். நெஞ்சைப் பிடித்துக்கொண்டு படிக்கட்டில் உட்கார்ந்தேன். உட்கார்ந்த மாத்திரத்தில் மியாவ் மியாவ் என்று வித்தியாசமாக பெருங்குரலில் டைகர் கத்த, எழுந்து வேகமாகப் படியிறங்கிப் பார்த்தால் காம்பவுண்டு சுவரின் கீழ் சுருண்டு விழுந்து கிடந்தது.

‘ஒண்ணுமில்ல வழில இருந்தது. அதனால் உதைச்சேன்’ என்றபடி சிரித்துக் கொண்டு போனான் பேப்பர் பையன். மேலே கதவு திறக்கும் சத்தம் கேட்டது. தாவி படியேறினேன்.

‘அம்மா, இந்த நேரத்துல வெளில என்ன பண்ற’ என்ற சின்னவனின் கேள்வியை உதாசீனம் செய்து, அவனைத் தள்ளிக் கொண்டு சமையலறைக்குள் ஓடி அடுப்பை அணைத்து, அப்படியே அலமந்து கீழே உட்கார்ந்து கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 6.15.