இந்த முறை ஜப்பான் பயணத்தில் ஒரு பெரிய பிழை செய்து விட்டேன். கவனக் குறைவுதான் காரணம். சென்ற ஆண்டு சென்ற போது ஜப்பானில் தங்கியது 12 நாட்கள். 27 செப்டம்பர் கிளம்பி 8 அக்டோபர் திரும்பினேன். சரியாக 11 நாட்கள். பயணத்தில் இரண்டு நாட்கள் போக சுற்றிப் பார்க்கவும் தங்கவும் ஒன்பது நாட்களே கிடைத்தன. நேரமும் திட்டங்களும் மிகவும் இறுக்கமாக இருந்தன. அடுத்த முறை வரும்போது மூன்று வாரம் தங்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கவனமில்லாமல் இந்த முறையும் பன்னிரண்டு நாட்களே ஜப்பானில் இருக்குமாறு ஆகி விட்டது. அக்டோபர் 11 கிளம்பி 12 தோக்யோ சேர்கிறேன். அங்கிருந்து 24 அன்று சென்னை கிளம்புகிறேன். ஆக, இந்த முறையும் பதினோரு நாட்கள்தான். வயிற்றெரிச்சலாக இருக்கிறது. எப்படி இத்தனை முக்கியமான விஷயத்தை கவனிக்காமல் விட்டேன் என்றே புரியவில்லை.
சென்ற முறை பதினோரு நாட்கள் என்பது அதிகம். ஏனென்றால், அப்போது நான் தோக்யோ நண்பர்களின் விருந்தினனாக இருந்தேன். அவர்களுக்கு அதிக செலவு வைக்கக் கூடாது. நான் நீண்ட நாட்கள் தங்கினால் அவர்களுக்கும் தொந்தரவு. பணச் செலவை விடுங்கள், முதலில் விடுப்பு கிடைக்காது. ஆனால் இந்த முறை நானேதான் செலவு செய்து கொண்டு செல்கிறேன். அப்புறம் ஏன் பதினோரு நாட்களில் திரும்பி வர வேண்டும்? இன்னும் மூன்று நாட்களாவது அங்கே தங்கியிருக்கலாமே? இங்கே வந்து என்ன அலுவலகமா செல்லப் போகிறேன்? தீபாவளி 31ஆம் தேதிதான். நான் 29ஆம் தேதி திரும்பினால் கூட பிரச்சினை இல்லை. 11 கிளம்பிப் போய் 17 நாட்கள் அங்கே இருந்து விட்டு 28 கிளம்பியிருக்கலாம்.
தோக்யோ நண்பர்களைத் தொந்தரவு செய்யாமலேயே தங்கலாம். கூட நண்பர் இருப்பதால் நாங்களே கூட ஹொக்கய்தோ போன்ற இடங்களுக்குச் சென்று வரலாம். யாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நான் தனியாகச் சென்றிருந்தால் அது சாத்தியம் இல்லை. என்னால் எந்த இட்த்திலும் தனியாகப் பயணம் செய்ய இயலாது. சீலேயில் செய்தேன் என்றால் என் கூடவே நிழலைப் போல் ஒரு வழிகாட்டி இருந்தார். என் ஒரு ஆளுக்கு ஒரு வழிகாட்டி. அதனால் ஒருவருக்கு சீலே பயணத்தில் எத்தனை செலவு ஆகுமோ அதை விட மூன்று மடங்கு எனக்கு ஆனது.
நாங்கள் சிறிதாகத் திட்டமிட்டதால் பதினைந்து நாட்களுக்கே வீசா கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் அங்கே 12ஆம் தேதி முதல் 24 வரை இருக்கிறோம். இப்போது நான் 27ஆம் தேதிக்கு டிக்கட்டை மாற்றி விடலாமா, அதற்கு இன்னும் அதிகப்படியாக எத்தனை செலவாகும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். அப்படிச் செய்தால் ஜப்பானில் இன்னும் இரண்டு நாள் கிடைக்கும்.
இத்தனை லட்சம் செலவு செய்து ஏன் இப்படி அடித்துப் பிடித்துக்கொண்டு சென்னைக்கு ஓடி வர வேண்டும் என்று எனக்குப் புரியவே இல்லை. எப்படி இந்தத் தேதி விஷயத்தை கவனிக்காமல் விட்டேன் என்று நொந்து கொள்கிறேன்.
சென்ற முறை நண்பர் லெனின் என்னோடு வந்தார். தோக்யோ செல்லும்போது மட்டும்தான். திரும்பும்போது அவர் என்னோடு வரவில்லை. முன்கூட்டியே திரும்பி விட்டார். சென்னையிலிருந்து கிளம்பிப் போய் கோலாலம்பூர் விமான நிலையத்தில் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டும். லெனின் இருந்ததால் பொழுது போவது சிரமமாக இல்லை. லெனினின் வங்கி அட்டை வேலை செய்யவில்லை. ஆனால் என் அட்டை வேலை செய்ததால் அளவாக மது அருந்தி பொழுதைப் போக்கினோம். தோக்யோ போய்ச் சேர்ந்த உடனேயே கே.எல்.லில் செலவழித்த பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார் லெனின். இக்காலத்தில் அரிதான விஷயம்.
எனக்கு விமானத்திலோ, விமான நிலையத்திலோ புத்தகம் படிக்கப் பிடிக்காது. அது எவ்வளவு சுவாரசியமான புத்தகமாக இருந்தாலும் சரி. காரணம், வீட்டில் இருக்கும்போது படிப்பும் எழுத்தும் தவிர வேறு எதுவும் செய்வதில்லையாதலால் வெளியிடங்களில் படிப்பதில்லை, எழுதுவதும் இல்லை. வீட்டில் இருக்கும்போது மாதக்கணக்கில், வருடக் கணக்கில் குடிப்பதில்லையாதலால் வெளியில் இருக்கும்போது குடிக்கப் பிடிக்கும்.
ஆனால் தோக்யோவிலிருந்து திரும்பும்போது நான் தனி. சொல்லி வைத்தாற்போல் என் வங்கி அட்டைகளும் வேலை செய்யவில்லை. கிரெடிட் கார்ட் கூட வேலை செய்யவில்லை. கையில் டாலரும் இல்லை. என் கையில் யென் இருந்தது. செல்லாது என்று சொல்லி விட்டார்கள். ஐந்து மணி நேரம் தேத்தண்ணி கூட குடிக்க முடியாமல் பசியோடு சென்னை விமானத்துக்காகக் காத்திருந்தேன். நள்ளிரவு வேறு. தூங்கவும் முடியாமல் நரக வேதனை.
இந்த முறை அப்படி இருக்காது. ஆனால் இப்போதைக்குக் கைவசம் டாலர் இல்லை. மாற்ற வேண்டும். வங்கி அட்டைகள் எப்போதுமே எனக்கு பீதியைத்தான் ஏற்படுத்துகின்றன. ஆக்ஸிஸ் வங்கி அட்டைக்காக ட்விட்டரில் போட்டு மிரட்டித்தான் வாங்க வேண்டியிருந்தது. இன்று வாடகை அனுப்ப வேண்டும். ஆக்ஸிஸ் மூலம் அனுப்ப முயன்றேன். அஞ்சாயிரம்தான் அனுப்ப முடியும் என்று வந்தது. அடப் போங்கடா என்று நினைத்துக்கொண்டு ஐசிஐசிஐ மூலம் அனுப்பினேன். ஐசிஐசிஐ எத்தனையோ தேவலாம்.
முடிந்தவர்கள் சந்தா/நன்கொடை அனுப்பி வையுங்கள். பலரும் ஒரே மாதத்தோடு நிறுத்தி விட்டார்கள். கவனிக்கவும்.
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா.
ராஜா என் அட்மின். அதனால் ராஜா என்ற பெயர் பற்றிக் குழம்ப வேண்டாம்.
***
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
வங்கி விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai
***