என் இறுதி யாத்திரையில் கலந்து கொள்ளத் தடை செய்யப்பட்ட நண்பன் (முடிவில் மாற்றம் செய்யப்பட்ட சிறுகதை)

“உயிரினங்களிலேயே மனித இனம்தான் ஆகவும் நன்றி கெட்ட இனம்” என்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.  அப்போதெல்லாம் ‘மனித இனத்துக்கு சுய விமர்சனம் நன்றாக வருகிறது’ என்று நினைத்துக் கொள்வேன்.  மனிதர்களோடு எனக்கு சகவாசம் கம்மி என்பதால் எனக்கு இது பற்றி அதிகம் தெரியாது.  என்னைப் பொறுத்தவரை நான் நன்றி மறப்பதில்லை என்றும் உறுதிபடச் சொல்ல முடியாது.  ஏனென்றால், என் உயிர்மூச்சான கொள்கைகள், கோட்பாடுகள் என்று வரும்போது இந்த நன்றி பன்றியையெல்லாம் தூக்கிப் போட்டு விடுவேன்.   எனக்குக் கொள்கை, கத்தரிக்காய் என்று இருப்பதைப் போல்தான் மற்றவர்களுக்கும் வேறு ஏதேதோ இருக்க வேண்டும்.  அதனால் பொதுவாகவே மனித இனம் இந்த நன்றி என்ற அற்ப விஷயத்தை அற்பமாகவே பார்த்து வருகிறது என்பதை நீங்களும் உங்கள் வாழ்க்கையில் உணர்ந்திருக்கலாம்.  ஆக, மனித இனமே இப்படித்தான் என்கிற போது என் நண்பர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?  பத்துக்கு ஒன்பது பேருக்கு நன்றி ஒரு பன்றி.  ஆனால் சிக்கல் எங்கே தோன்றுகிறது என்றால், நன்றி பன்றியாவதில் இல்லை;  முதுகிலும் குத்தி விட்டுச் செல்லும்போதுதான்.  இரண்டு நண்பர்களைப் படிக்க வைத்தேன்.  அப்போது நானே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த காலம்.  கொலைப் பட்டினி கிடந்த காலமும்கூட.  கொடும் வட்டிக்குக் கடன் வாங்கிப் படிக்க வைத்தேன்.  விசேஷமான படிப்பு என்பதால் பெரும் செலவு.  வட்டிக்காரன் வரும் போதெல்லாம் அலுவலகத்திலிருந்து காணாமல் போய் விடுவேன்.  பிறகு அவந்திகாதான் தன் கைவளையை விற்று அந்தத் தொகையை அடைத்தாள்.  அந்த நண்பர்கள் பிறகு ஸீரோ டிகிரி என்ற என்னுடைய நாவலைத் தாங்கள் எழுதிக் கொடுத்ததாகச் சொன்னார்கள். 

இதனாலெல்லாம் ’மனித இனம்தான் நன்றியைப் பன்றியாக நினைக்கிறது’ என்ற தீர்மானத்துக்கு வர முடியாமல் கடந்த மூன்று மாதங்களாக மூன்று சம்பவங்கள்.  மூன்றுமே ஒரே காரியம்.  ஆனால் மூன்று முறை.  மூன்று மாதங்களுக்கு முன்பு ஒருநாள் நான் எம்மார்ஸி நகரில் காலை நடையில் ஈடுபட்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் போது மண்டையில் தடிக்கம்பால் தாக்கியதுபோல் ஒரு அடி.  பொறி கலங்கி விட்டது.  பார்த்தால் காகம்.  இத்தனைக்கும் நான் கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்த சாந்த்தோம் நெடுஞ்சாலை அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வந்ததிலிருந்து முப்பது காகங்களுக்கு உணவு கொடுத்து வருகிறேன்.  பூனை உணவைத்தான் கொடுக்கிறேன்.  சோறு கொடுத்தால் கீழே சிந்தி குப்பையாகிறது என்று புகார் வந்ததால் பூனை உணவுதான்.  பூனை உணவு கொலைக்காசு.  பிச்சை எடுத்துதான் இந்தக் காரியத்தைச் செய்து வருகிறேன்.  ஆனால் சாந்த்தோமில் இப்படி நான் ஒரு அறச்செயலில் ஈடுபடுவது இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எம்மார்ஸி காகத்துக்கு எப்படித் தெரியும்?  அதனால்தான் பொறி கலங்குவது போல் அடித்தது.  பிறகு, இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் அதே இடத்தில் நடக்கும் போது மீண்டும் பொறி கலங்குவது போல் ஒரு அடி.  அதே காகமா, வேறா என்று நமக்கு எப்படித் தெரியும்?  பிறகு போன மாதமும் அதே இடத்தில் மீண்டும் பொறி கலங்கும் அடி.  க்ரிக்கெட் மட்டையால் அடித்தது போல் என்றுதான் எழுதினேன்.  ஆனால் க்ரிக்கெட் மட்டையை நான் தொட்டது கூட இல்லை.  அதனால்தான் தடிக் கம்பினால் என்று எழுதி விட்டேன்.  ஆனால் பொறி கலங்க என்று எழுதியதில் கற்பனை சிறிதும் இல்லை.  பொறி கலங்கத்தான் அடித்தன காகங்கள்.  இதற்காக நான் காகங்கள் எல்லாமே நன்றி கெட்டவை என்ற முடிவுக்கு வர முடியுமா, சொல்லுங்கள்?  

காகம் இப்படியென்றால், மனிதர்கள் செய்வது முதுகுக் குத்து.  காகம் மாதம் ஒரு முறை. மனிதர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை.  ஆரம்பத்தில் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.  ஆனால் நமக்கெல்லாம் தமிழ் சினிமா மூலம்தானே ஞானம் கிடைக்கிறது.  அதேபோல் எனக்கும் தமிழ் சினிமாவின் ஸ்பீல்பெர்கான இயக்குனர் சிவாவின் விவேகம் என்ற படத்தைப் பார்த்து இம்மாதிரி முதுகுக் குத்து அனுபவங்களை எப்படி ‘டீல்’ செய்வது என்று தெரிந்து விட்டது.  மேற்படி படத்தில் தல அஜித்தை ரஷ்ய ராணுவமோ போஸ்னிய ராணுவமோ எதிர்த்துத் துப்பாக்கிச் சூடு நடத்தும்.  ’தல’ ஒற்றை ஆள்.  பொது வாழ்விலும் ’தல’ ஒற்றை ஆள்தானே?  கலையிலும் வாழ்விலும் ஒன்றே போல் வாழ்பவர் எங்கள் ’தல’.  ’தல’ புராணம் போதும்; படத்துக்கு வருவோம்.  ’தல’யின் உடம்பு பூராவும் தோட்டாக்கள் பாயும்.  இது ஒன்றும் சூப்பர் மேன் படம் அல்ல.   நாய் வளர்ப்பவர்களுக்குத் தெரியும்.  நாய் உடம்பில் குத்திக் கொண்டிருக்கும் உன்னியைப் பிடுங்கிப் போடுவது போல் நம் ’தல’ அந்தத் தோட்டாக்களைத் தன் உடம்பிலிருந்து பிடுங்கிப் பிடுங்கி எறிவார்.  சே, இத்தனை எளிய வழி இருக்கும்போது நாம் ஏன் இத்தனை மன உளைச்சல் அடைந்தோம் என நினைத்துக் கொண்டு நானும் முதுகில் குத்தப்படும் போதெல்லாம் அம்புகளையும் கத்திகளையும் பிடுங்கிப் பிடுங்கிப் போட ஆரம்பித்தேன்.  இப்போதெல்லாம் அதுவே ஒருவித ’மஸாக்கிஸ்ட்’ போதை ஆகி விட்டது.  நான் அடிக்கடி சொல்வேன் அல்லவா, நான் ஆண் பாதி, பெண் பாதி என்று.  அந்தப் பெண் பாகம் மேலெழுந்து இந்தியப் பெண்களைப் போல் மஸாக்கிஸ இன்பம் பெற ஆரம்பித்து விட்டது.  இப்போதெல்லாம் யாராவது முதுகில் குத்தவில்லை என்றால் முதுகு அரிக்கிறாற்போல் தோன்றுகிறது. 

மேற்கு நாடுகளில் மஸாக்கிஸ்ட் க்ளப்புகள் இருக்கும்.  அங்கே போய் ஜீஸஸ் க்றைஸ்ட் போல் கைகளைப் பக்கவாட்டில் நீட்டி நின்று கொண்டால் நம்மைக் கட்டையோடு பிணைத்து சாட்டையால் அடிப்பார்கள்.  ஊசியால் குத்துவார்கள்.  இன்னும் பலவித ஆக்கினைகள் நடக்கும்.  அதற்குரிய கட்டணத்தைக் கட்டி விட்டு ரத்த விளாறாக வெளியே வந்து விடலாம்.  நம் இந்தியக் குடும்பப் பெண்கள் இத்தனை வெளிப்படையாக இல்லாமல் இலை மறைவு காய் மறைவாகச் செய்வார்கள்.  சில பேர் அம்மனுக்கு வேண்டிக் கொண்டு அங்கே போய் குப்புறப் படுத்துக் கொள்வார்கள்.  கோவில் பூசாரி காலில் ஆணிகள் அடித்த கட்டைச் செருப்புடன் அவர்கள் மீது ஏறி நடப்பார்.  இங்கே கோவில்களே மஸாக்கிஸ்ட் கிளப்புகளாகச் செயல்படுவதால் தனியாக மஸாக்கிஸ்ட் கிளப்புகள் இல்லை என்று நினைக்கிறேன்.

என்னைப் போன்ற எழுத்தாளர்களின் மஸாக்கிஸத் தேவைகளை நண்பர்களே கவனித்துக் கொள்கிறார்கள்.  சமீபத்தில் அப்படி ஒரு முதுகுக் குத்து.  ஆனால் முந்தைய முதுகுக் குத்துகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால், குத்தியவருக்கு இப்படிச் செய்திருக்கிறோம் என்றே தெரியாது.  அவர் மனதில் சாருவுக்கு மாலை போடுகிறோம் என்று நினைத்திருப்பார்.  நானும் வழக்கம் போல் முதுகிலிருந்து கத்தியை உருவித் தூக்கியெறிந்து விட்டு ’ஔரங்கசீப்’ நாவல் எழுதும் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

நேற்று நற்றிணை யுகனுக்கு ஃபோன் செய்தேன்.  மூன்று மாதங்களுக்கு முன்னால் போன் பண்ணினீர்களே, என்ன விஷயம் என்று கேட்டேன்.  ஔரங்கசீப் சிறப்பாகச் செல்கிறது என்று சொல்லத்தான் போன் பண்ணினேன் என்றார்.  இதற்காக ஒரு பத்தாயிரம் பக்கம் படித்திருப்பீர்கள் போலிருக்கிறதே என்று கேட்டு, மேலும் பலவாறு பாராட்டினார்.  பத்தாயிரம் பக்கம் கூட முக்கியம் அல்ல.  அந்தப் புத்தகங்களைச் சேகரிப்பதுதான் பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது.  புத்தகங்களைச் சேகரிக்கவே பத்து இருபது லட்சம் ரூபாய் செலவாகும் போல் தெரிந்தது.  ஒரு புத்தகம் லண்டன் நூலகத்தில் மட்டுமே கிடைக்கிறது.  அதுவும் வெளியே கொடுக்க மாட்டார்கள்.  பத்து நாள் லண்டனில் தங்கிப் படிக்க வேண்டும்.  இப்படி.  நல்லவேளையாக, அந்தக் குறிப்பிட்ட நூல் மும்பை கருவூலத்தில் இருப்பதை அமெரிக்காவிலிருந்து வித்யா சுபாஷ் தெரிவித்தார்.  அதை மும்பையில் வசிக்கும் என் நண்பர் மனோஜ் தன்னுடைய நண்பர்களிடம் சொல்லி, குறுந்தகட்டில் பதிந்து அனுப்பினார்.  இப்படி ஒரு நூறு புத்தகங்களைச் சேகரித்தேன்.  எல்லாமே 250 – 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை.  இப்படியாக ஒரு 30,000 பக்கங்களைப் படித்து குறிப்புகள் எடுத்திருக்கிறேன்.  அந்தக் குறிப்புகளை மட்டும் பிற்காலத்தில் வெளியிடலாம் என நினைக்கிறேன்.  ஔரங்கசீப் 1000 பக்கம் வரலாம்.  அல்லது, 1500உம் போகலாம்.  அதற்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  ஒவ்வொரு அத்தியாயம் முடிந்ததும் புவனேஸ்வரி, ஸ்ரீராம், அராத்து, வினித், ப்ரஸன்னா போன்ற பத்து நண்பர்களைத் தவறாமல் கேட்டு விடுகிறேன்.  அலுப்பு அடிக்கிறதா என்பதே கேள்வி.  இதில் முதல் இருவரைத் தவிர மற்ற மூவரும் ‘cynic’ ஜாதி.  அப்படி இருந்தும் எல்லோருமே படு சுவாரசியமாக இருக்கிறது என்று சொல்வதால் தொடர்ந்து எழுதுவதற்கான ஊக்கம் கிடைக்கிறது.  இன்னமும் எனக்கு எக்ஸைலை பாதியிலேயே முடித்து விட்டோமே என்ற ஆற்றாமை இருக்கிறது.  இன்னும் 500 பக்கத்துக்கான மேட்டர் இருந்தும் 1000 பக்கத்துக்கு மேல் போகக் கூடாது என்பதால் அதோடு நிறுத்தி விட்டேன்.  (எவன் இப்படியெல்லாம் அளவு வைக்கிறான், ராஸ்கல்?)

முதுகுக் குத்து பற்றிய கதையில் ஏன் திடீரென்று ஔரங்கசீப் என்றால், சில சமயங்களில் நாம் எழுதுவது நம்மையே பாதிக்கும் அல்லவா?  அப்படி ஔரங்கசீப் என்னை ஒருவகையில் பாதித்தது.  உயிரோடு இருக்கும்போது முதுகில் குத்திக் கொன்று விட்டு, பிணத்தைப் புதைத்து மேலே அலங்காரமான கல்லறை மண்டபம் கட்டுவது மொகலாயர் வழக்கம்.   மிகப் பிரம்மாண்டமாக இருக்கும்.  அதை என் வாழ்க்கையிலேனும் செய்யலாகாது என்று முடிவு செய்தேன்.  ஜஹானரா சொல்கிறாள்.  ”என் கல்லறையின் மீது சலவைக் கல் மண்டபம் கட்டாதீர்.  உள்ளே புதையல் இருக்கிறது என்று உடைத்து விடுவார்கள்.  வெறும் புற்களே போதும்.  புற்களைச் சிதைத்தால் மீண்டும் புற்கள் முளைக்கும்.”  

முகநூலில் தினமும் சிலரைத் தடை செய்வேன்.  கைபேசியிலும் தடை செய்வேன்.  இப்போதுதான் முதல் முதலாக என் மரணத்துக்குப் பிறகும் ஒருவரைத் தடை செய்யப் போகிறேன்.  நேற்று ஒரு நண்பருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.  ”திரு எக்ஸ் என் இறுதி யாத்திரைக்கு வரக் கூடாது என்று விரும்புகிறேன்.  தாங்கள் தயவுசெய்து அதை எனக்கு இப்போதே உறுதிப் படுத்தினால் நான் நிம்மதியாக இருப்பேன்.”  என்னை விட பதினெட்டு வயது சிறியவரான அவர் “சே, இப்படியெல்லாம் பேசாதீர்கள் சாரு, மரணம் என்பது நிச்சயமில்லாதது என்கிற போது நீங்கள் என்னை outlive செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது” என்று பதில் மெஸேஜ் அனுப்பினார். 

ஜோக் அடிக்காதீர்கள்.  நான் சீரியஸாகப் பேசுகிறேன்.  மிஸ்டர் எக்ஸ் என் இறுதி யாத்திரைக்கு… ஓ, எழுதியதையே திரும்ப எழுதுகிறேன்.  கூடாது.  கதை கச்சிதமாக இருக்க வேண்டும்.  திரும்பவும் முன்பு அனுப்பிய குறுஞ்செய்தியையே நன்கு அழுத்தமாகப் புரியும்படி எழுதி அனுப்பினேன். 

சரி, நானும் சீரியஸாகவே பதில் சொல்கிறேன்.  நான் எப்படி அவரை ‘வராதீர்’ என்று சொல்ல முடியும்?

அப்படியெல்லாம் தர்ம சங்கடம் வேண்டாம்.  இந்தக் குறுஞ்செய்தியை அவருக்கு அனுப்பினால் போதும்.  புரிந்து கொள்வார். 

அதோடு இந்த நண்பரும் புரிந்து கொண்டார்.  ஆக, மரணத்துக்குப் பிறகும் ஒருவரைத் தடை செய்தாயிற்று. 

அத்தனை வெறுப்பா என்று கேட்கிறீர்களா?  சேச்சே.  அப்படியெல்லாம் இல்லை.  இவருக்குத்தான் இவர் என்னை முதுகில் குத்தியதே தெரியாதே?  அவர் எனக்கு மாலை போட்டதாக அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறார்?  சாணிக்கும் சந்தனத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஆட்களையெல்லாம் நீங்கள் வெறுப்பீர்களா?  பரிதாபம்தான் பட முடியும்.  நான் அந்தப் பரிதாபம் கூடப் படுவதில்லை.  ஏனென்றால், மற்றவர்களைப் பார்த்துப் பரிதாபம் கொண்டால் நாம் ஏதோ அவர்களை விடப் பெரிய ஆள் என்ற ஹோதா வந்து விடுகிறது.  அப்படி வரக் கூடாது.  அதற்கு நீங்கள் மற்றவரைப் பார்த்துப் பரிதாபம் கொள்ளக் கூடாது. 

சரி, அப்படி தான் ஒருத்தரை முதுகில் குத்தியதே தெரியாத அப்புராணி மனிதரை ஏன் மரணத்தின் போது ஒதுக்கி வைக்க வேண்டும்?  அவர் என்ன தெரிந்தா அந்தத் தவறைச் செய்தார்?  தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் அதற்கான தண்டனையை அவர் ஏற்றே ஆக வேண்டும்.  ஏனென்றால், இப்படிச் செய்தால் அவர் யோசிக்க ஆரம்பிப்பார்.  இனிமேலாவது மாலை போடுவதாக நினைத்து யாரையும் முதுகில் குத்த மாட்டார்.  ஏதோ நம்மால் முடிந்த சமூக சேவை!

அது எப்படி, இத்தனைத் திண்ணமாக ஏதோ காலண்டரில் குறித்து வைத்திருப்பது போல் சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம்.  ஆம், திண்ணம்தான்.  நான் கர்மா, பாவ புண்ணியம் ஆகியவற்றை நம்புகிறேன்.  அதன்படி என் மரண நாள் குறிக்கப்பட்ட பிறகுதான் நான் ஜனனம் கொண்டிருக்கிறேன்.  நான்கு வெவ்வேறு இடங்களில், நான்கு வெவ்வேறு கால கட்டங்களில், நான்கு வெவ்வேறு சோதிடங்கள் என் ஜாதகக் கட்டங்களைப் பார்த்து என் ஆயுளை ஒரே மாதிரி கணித்தார்கள்.  ஒரே ஆண்டு.  அதுவும் தவிர தியாகராஜர் தன் கீர்த்தனைகளில் இதற்கெல்லாம் ஆதாரம் தருகிறார். 

அதனால்தான் அவ்வளவு திட்டவட்டமாக நண்பருக்கு அந்தக் குறுஞ்செய்தியை அனுப்பினேன்:

”திரு எக்ஸ் என் இறுதி யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டாம் எனச் சொல்லுங்கள்.”

சுமார் அரை மணி கழித்து நண்பரிடமிருந்து இப்படி ஒரு குறுஞ்செய்தி வந்தது:

“சாரு, உங்கள் குறுஞ்செய்தியை எக்ஸுக்கு அனுப்பினேன். எக்ஸ் இவ்வாறு ஒரு பதிலை அனுப்பினான். அந்தப் பதில்:

‘அவசியம் சாருவின் இறுதி யாத்திரையில் கலந்து கொள்வேன். ஆனால் இப்போதே நீ அதை அவரிடம் சொல்லி விடாதே.’”