ஓராண்டுப் பயிற்சி

ஸீரோ டிகிரி பதிப்பகம் மற்றும் தமிழரசி அறக்கட்டளை இணைந்து நடத்திய பரிசளிப்பு விழா நேற்று இனிதே நடந்தது.  இப்படித்தான் மற்றவர்கள் எழுதுவார்கள்.  நான் அப்படிப்பட்ட ஆள் இல்லையே?  அதனால் அந்த இனிய விழாவில் என் நண்பன் செய்த குளறுபடியால் நேர்ந்த பிரச்சினைகளையும் எழுதித்தான் ஆக வேண்டும்.  

கிட்டத்தட்ட பத்து லட்சம் ரூபாய் செலவாகியிருக்கும் என்று நினைக்கிறேன்.  அத்தனை பிரம்மாண்டமான விழா.  அதை சாத்தியப்படுத்திய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.  முக்கியமாக தமிழரசி அறக்கட்டளையின் நிர்வாகிகளும் ஸீரோ டிகிரி பதிப்பக நண்பர்களும்.  அவர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

மிகச் சிறப்பான இலக்கிய நிகழ்ச்சி.  மிகச் சிறப்பான கூட்டம்.  நாவல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு என் பாராட்டுகள்.  

***

அன்புக்குரிய வினீத்,

உன்னைப் பற்றி முன்பு எழுதியபோது கூட வினீத் என்று குறிப்பிடாமல் விவேக் என்றுதான் எழுதினேன்.  மற்றவர்களுக்குத் தெரிந்து உன்னைப் பற்றி எழுதினேன் என்றால் அது உன்னை அவமதிப்பது ஆகி விடும் என்பதால் அப்படி.  இப்போது பெயர் குறிப்பிட்டே எழுதுவதன் காரணம், நடந்ததெல்லாம் பொதுவில், சபையில், பலர் முன்னிலையில் என்பதால்.

நீ கோவாவில் செய்த பிழைகளின் போதே உன்னை அவதானித்து விட்டேன்.  நீ செய்வது பிழைகள் அல்ல.  உன் கர்வத்தினாலும் அகங்காரத்தினாலுமே அந்தத் தவறுகளைச் செய்கிறாய்.  ஆனால் அதை கணிப்பதில் எனக்கு அவகாசம் தேவைப்பட்டது.  உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.  இப்போது உறுதியாகி விட்டது.

நீ மார்க்ஸுடன் நெருங்கிப் பழகுவதால் மார்க்ஸ் பற்றி எது தேவை என்றாலும் உன்னைத்தான் அணுகுவார்கள்.  இது நான் உன்னைப் பற்றிச் சொன்னதால் ஏற்பட்டிருக்கும் எண்ணம்.  இதுதான் உண்மையும் கூட.  கோவாவிலேயே உன்னைக் கண்டித்தேன்.  அது பற்றி பெயர் மாற்றியும் எழுதினேன்.  அப்புறம் என் அடுத்த பயணத்துக்கு நான் வரவா என்று கேட்டாய்.  ஒரு கணமும் யோசிக்காமல் சம்மதித்தேன்.  ஆகவே நீ எனக்கு மிகவும் நெருக்கமானவன் என்று நண்பர்கள் நம்புகிறார்கள்.  அதுதான் உண்மையும் கூட.  அதனாலேயே நீ நேற்றைய நிகழ்வை ஒருங்கிணைத்துத் தர உன்னை அழைத்திருக்கலாம்.  எனக்குத் தெரியாது.  ஞாபகமும் இல்லை.  நானே சொல்லியிருந்தாலும் எனக்கு ஞாபகம் இருக்காது.  ஔரங்கசீப் தவிர என் மனதில் இப்போது எதுவும் இல்லை.

நீதான் நேற்றைய நிகழ்ச்சியின் முதல் பாதிக்கான கேப்டன்.  நீதான் அடுத்து யார் பேச வேண்டும் என்று சொல்ல வேண்டியவன்.  அப்படிப் பேசுபவர் யார் என்று அறிமுகம் செய்ய வேண்டியவன்.  மார்க்ஸ் பற்றிய அறிமுக உரை பத்து நிமிடம் பேச வேண்டியவன்.  நீதான் எங்களிடமெல்லாம் தனியாக வந்து ஒவ்வொருவரும் பதினைந்து நிமிடத்துக்கு மேல் ஒரு நிமிடம் கூடப் பேச வேண்டாம் என்று சொன்னவன்.  நீ முதலில் மார்க்ஸ் பற்றி அறிமுக உரை நிகழ்த்த வேண்டும்.  எவ்வளவு பேசியிருக்கலாம்.  ஐந்து நிமிடம்.  ஏனென்றால், ஒவ்வொருவரைப் பற்றியும் வேறு நீ ஒன்றிரண்டு வார்த்தைகள் சொல்ல வேண்டும்.  75 வயது கல்யாணி, 45 ஆண்டுகள் மார்க்ஸுடன் ஒன்றாகக் களப்பணி ஆற்றியவர் அமர்ந்திருக்கிறார்.  நீ பாட்டுக்கு அரை மணி நேரம் வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறாய்.  நீ பேசியது உனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஒருவருக்குமே புரியவில்லை என்பதை அவர்களின் முகத்தைப் பார்த்துமா உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை?  மேடையில் இருந்த நாங்களும் ஆளாளுக்குப் பேச ஆரம்பித்து விட்டோம்.  எங்கள் எல்லோரையும் பதினைந்து நிமிடத்துக்கு மேல் பேச விடாமல் தடுக்க வேண்டிய நீ இருபது நிமிடத்துக்கு மேலும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துப் பதற்றம் கொண்ட காயத்ரி உனக்குப் பின்னால் வந்து நின்று கொண்டு உன்னிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.  அதை அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த அத்தனை பேரும் பார்க்கிறார்கள்.  நீ உன்னுடைய அகங்காரத்தின் காரணமாக, சுரணை கெட்ட தடித்தனத்தின் காரணமாக உண்டாக்கிய அபத்த நாடகத்தை ஒட்டுமொத்த சபையே பார்த்துக் கொண்டிருந்தது.  உன் சட்டையைப் பிடித்து இழுக்காததுதான் குறை.  அந்த அளவுக்கு உன்னையே சுற்றிச் சுற்றி வந்து உனக்கு சீட்டு கொடுப்பதும், சீக்கிரம் முடிங்கள் என்று சொல்வதுமாக இருந்தாள் காயத்ரி.  

ஏன் தம்பி, பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து இப்படி ஒரு விழா நடத்தி விட்டு உன் சட்டையைப் பிடித்துக் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டுமா?  நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?

அத்தனை அபத்த நாடகத்துக்குப் பிறகும் நீ சளைக்கவே இல்லை.  அந்த மைக்கைப் பிடித்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டே இருக்கிறாய்.  தாய்லாந்தில் செக்ஸ் கிளப்புகளில் ஒரு நீண்ட அலுமினியத் தடி தூண் மாதிரி இருக்கும்.  அந்தத் தடியைத் தன் தொடைகளுக்கு நடுவே வருவது போல் மேலும் கீழுமாக வந்து ஆடுவாள்கள் செக்ஸ் தொழிலாளிகள். அவர்களாவது அதைக் காசுக்குச் செய்கிறார்கள்.  நீயோ அந்த மைக்கைப் பிடித்துக் கொண்டு வாய் மைதுனமே செய்ய ஆரம்பித்து விட்டாய்.  

என்ன செய்தும் நீ இறங்கவில்லை.  என்ன நடந்தது தெரியுமா?  நான் இளம் வயதில் கீழே இருந்திருந்தால் எழுந்து நின்று டேய் நிறுத்துடா போதும் என்று கத்தியிருப்பேன்.  காலம் கெட்டு விட்டது.  நேற்று அப்படி யாரும் கத்தாமல் போனதற்காக மனம் மிக நொந்து போகிறேன்.  சமூகத்தில் சுரணை குறைந்து விட்டது.  என் நண்பர் ராகவன் தான் பலமாகக் கை தட்டினார்.  அவரைத் தொடர்ந்து எல்லோரும் கை தட்டினார்கள்.  நீ அதை எப்படி எடுத்துக் கொண்டாய் என்று தெரியவில்லை.  பாராட்டி கை தட்டுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டாயோ.  அந்தக் கோரஸ் கைதட்டலையும் கண்டு நீ பதற்றம் அடைந்தது போல் உன் முகத்தில் தெரியவில்லை.  பொதுவாகவே உன் முகம் ஜென் துறவி போல் உணர்ச்சியே இல்லாமல் இருக்கிறது.  

ஜெனிவாவில் நடந்த ஒரு தொழிலாளர் யூனியன் மாநாட்டில் கலந்து கொண்ட என் நண்பர் சொன்னார்.  உலகின் பல இடங்களிலிருந்தும் தொழிலாளர் சங்கங்களிலிருந்து கலந்து கொள்கின்றனர்.  ஒருத்தருக்கு ரெண்டு நிமிடம்தான்.  அதற்கு மேல் மைக் அணைந்து விடும்.  நம்மூர் கழகம் வேறு சென்று பேசியிருக்கிறது.  இரண்டு நிமிடத்தில் மைக் அணைந்து விட்டது.  எட்டு பத்து மொழிகளில் நாம் பேசுவது உடனுக்குடன் மொழிபெயர்ப்பு ஆகி விடும்.  கழகத்திடம் இதையெல்லாம் விளக்கமாகச் சொல்லித்தான் அனுப்பியிருக்கிறார்கள்.  கழகம் நிறுத்தவில்லை.  மைக் இல்லாததால் கத்திப் பேச ஆரம்பித்திருக்கிறது.  எல்லோரும் கை தட்டி ஆரவாரம் செய்திருக்கிறார்கள் கழகத்தை உட்காரச் சொல்லி.  கழகமோ இன்னும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்திருக்கிறது, நம் பேச்சை ரசிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு.  இங்கே வந்து தலைமையிடம் வேறு வந்து அதேபோல் சொல்லியிருக்கிறது.  அந்த வேலையைத்தான் நீயும் செய்திருக்கிறாய் தம்பி.

நீ செய்த தறுதலைத்தனத்தால் என்ன ஆனது தெரியுமா? அடுத்து பேசிய அத்தனை பேருக்கும் பதற்றம் ஆயிற்று.  எனக்குத் துண்டுச் சீட்டே வந்து விட்டது 2 minutes charu என்று.  என் வாழ்வில் நடந்த பெரிய அவமானமாகக் கருதுகிறேன்.  பத்தே நிமிடத்தில் அந்தச் சீட்டு வந்தது.  அதற்கு மேல் என் வேகம் தடைப்பட்டு விட்டது.  நெருப்பில் நீர் ஊற்றியது போல் ஆயிற்று.  என்னை உருவாக்கிய ஆசானைப் பற்றிப் பேசும் போது நீ செய்த அடாவடித் தடித்தனத்தினால் எனக்கு சீட்டு.  டேய் தம்பி வினீத், நான் நூற்றுக்கணக்கான மேடைகளில் பேசியிருக்கிறேன்.  என்னைப் பற்றி உனக்குத் தெரியும்.  எனக்குக் காலம் கடவுள்.  எங்குமே நேரம் தவறியதில்லை.  எங்குமே நேரம் கடந்தும் பேசியதில்லை.  உன்னால் எனக்குத் துண்டுச் சீட்டு.  

இனி ஒரு ஆண்டுக் காலத்துக்கு நீ வாசகர் வட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தடை விதிக்கிறேன்.  உனக்கு விருப்பமானால் விஷ்ணுபுரம் வட்டத்தில் சேர்ந்து ஒரு ஆண்டுக்குப் பயிற்சி எடுத்துக் கொண்டு இங்கே வா.  என் பேச்சுக்கு மற்ற இடங்களை விட அதிகமாக விஷ்ணுபுரம் வட்டத்தில் மதிப்பு உண்டு.  வேண்டுமானால் நானே சிபாரிசு செய்கிறேன்.