நேற்று என் பிறந்த நாளை நான் கொண்டாடவில்லை. நாள் முழுவதும் ஔரங்கசீப்பின் அறுபத்தெட்டாவது அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருந்தேன். இந்த அத்தியாயத்தை எழுதி முடிக்க இரண்டு நாட்கள் ஆயின. இதோ இப்போதுதான் முடித்தேன். இப்போது 19.12.2021 காலை ஏழரை மணி. வாக்கிங் செல்லவில்லை. நேற்று மாலை மட்டும் வாசக சாலை நண்பர்கள் அளித்த பரிசை வாங்கிக் கொள்வதற்காக தக்கர் பாபா வித்யாலயம் சென்றேன். அதில் செல்வான இரண்டு மணி நேரத்தை இரவு கண் விழித்து சரி செய்தேன்.
என் பிறந்த நாள் அன்று வாழ்த்து கூறிய அத்தனை நண்பர்களையும் என் இதயத்தில் இருத்தி நன்றி கூறுகிறேன். நாளை அது பற்றி விரிவாக எழுதுகிறேன்.
இதற்கிடையில் இன்று காலை ஜெயமோகன் அருண்மொழி நங்கையின் பனி உருகுவதில்லை நூல் ஸீரோ டிகிரி பதிப்பகம் மூலம் வெளிவருவது பற்றி சிறிய குறிப்பு ஒன்றை எழுதியிருந்தார். இந்த ரெண்டு வரிக் குறிப்பில் கூட நாகர்கோவில் குசும்பு போகவில்லை. ”அருண்மொழி கணக்கில் சிதம்பரம்காரரான மௌனிகூட தஞ்சாவூர்தான்” என்று எழுதியிருக்கிறார் ஜெ.
கடவுளே சண்டைக்கு வந்து விடுவார். சிதம்பரம், மாயவரம், கும்பகோணம், நாகப்பட்டினம், திருவாரூர் எல்லாமே தஞ்சாவூர் மாவட்டம்தானே? நீங்கள் பாட்டுக்கு விழுப்புரத்தைத் தலைநகராக வைத்து நாளை ஒரு தனி மாநிலம் உருவாக்கினால் அது தமிழ்நாடு இல்லை என்று ஆகி விடுமா ஜெயமோகன்?
திருச்சியில் பிறந்த இந்திரா பார்த்தசாரதியே தஞ்சாவூர் மாவட்டம்தான். ஏனென்றால், திருச்சியும் தஞ்சைக்குள்தான் அடக்கம்.
அருண்மொழி நங்கையின் நூல் ஜனவரி 2 வெளியாகிறது. நானும் பேசுகிறேன். மீதி தஞ்சாவூர் கதையை அப்போது சொல்கிறேன்.
ஜெ. கட்டுரை கீழே.
அருண்மொழியின் நூலும் சீரோ டிகிரியும்- பதில் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
https://www.jeyamohan.in/160661/?utm_source=feedburner&utm_medium=email