பிறந்த நாள் அன்று வந்த ஒரு கடிதம்…

தமிழில் எழுத்தாளனாக இருப்பது, இந்தியாவில் பெண்ணாகப் பிறப்பதைப் போல.  எவன் எப்போது கையைப் பிடித்து இழுப்பான், பலாத்காரம் பண்ணுவான் என்று தெரியாது.  எழுத்தாளனுக்கு அப்படிப்பட்ட பிரச்சினை இல்லை.  வேறு விதமான ஒரு பிரச்சினை இது.  தமிழ் எழுத்தாளனுக்கு மட்டும்தான்.  வேறு மொழி எழுத்தாளர்களுக்கு நான் சொல்வதே புரியாது. 

நீங்கள் ஒரு மருத்துவர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  ஒரு விமானியும் வந்து நான் மருத்துவர் என்று சொல்ல மாட்டார்.  மருத்துவர் என்றால் மருத்துவர்தான்.  அதிலேயே சித்த மருத்துவர், ஆயுர்வேத மருத்துவர், யுனானி மருத்துவர் என்றும், அலோபதி என்றால் கண், காது, மூக்கு, தொண்டை, பல், மூளை, பாலுறுப்பு என்று ஒவ்வொரு உறுப்புக்கும் மருத்துவர் என்று பார்க்கலாம்.  வேறு யாருமே உங்கள் தொழிலை என் தொழில் என்று உரிமை கொண்டாட மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் செஃப், மருத்துவர், ட்ரைவர், ஆசிரியர், தொலைக்காட்சி பிரபலம், நடிகர் என்று எல்லோருமே எழுத்தாளர் என்று சொல்லி உங்கள் தொழிலைப் பிடுங்கப் பார்ப்பார்கள்.  இதற்குத் தலைமை வகிப்பவர் கமல்.  கமலே அப்படி என்பதால் மற்றவர்களுக்கும் பயம் விட்டுப் போயிற்று. 

இந்த நிலையில் புத்தகங்களாவது எத்தனை விற்கும் என்று பார்த்தால் இருநூறு.  அதிக பட்சம் ஐநூறு. 

இதுவும் இன்ன பிற காரணங்களினாலும் ’என்னெத்த எழுதி, என்னெத்தப் பாத்து’ என்ற விரக்தி நிலையிலேயே இருப்பேன். ஆனாலும் சுவாசித்தே ஆக வேண்டும் என்பது போல எழுதியே தீர வேண்டும்.  ஏன் என்றெல்லாம் கேட்டால் பதில் இல்லை.  அவ்வப்போது தோன்றுவதைச் சொல்வேன். பறவை பறப்பது போல, மரம் வளர்வதைப் போல என்று. 

பதினெட்டாம் தேதியும் வழக்கம் போல் நாலு மணிக்கு எழுந்து வந்தேன்.  நான் வருடா வருடம் பிறந்த நாளை சீரும் சிறப்புமாகக் கொண்டாடும் ஆள்.  மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப்பில் வைத்து ராம்ஜி ஒரு விருந்து கொடுப்பார்.  பத்துப் பதினைந்து பேர் வருவார்கள்.  இனிமேல் அம்மாதிரி விருந்துகள் தேவையில்லை என்று முடிவு செய்து விட்டேன்.  அதற்கான சூழல் எனக்கு இல்லை.  இனிமேல் எல்லா விருந்தும் கேளிக்கையும் வெளியூரில்தான்.  சென்னையில் இல்லை.  மேலும், என்னைச் சந்திப்பவர்கள் யார் என்று முடிவெடுப்பதில் நான் இன்னும் அதிக கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.  அநேகமாக புதியவர்களைத் தவிர்க்கவே விரும்புகிறேன். 

மேலும், ஒரு முக்கியமான காரணமாக, இனிமேல் கேளிக்கைகளுக்கு என் வாழ்வில் இடம் இல்லை என்றே தோன்றுகிறது.  கடந்த மூன்று தினங்கள் வெளியூர் சென்றிந்தேன்.  மூன்று நாளும் ஔரங்கசீப்புக்குத்தான் படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தேன். 

கொரோனா பிரச்சினைகள் முடிந்து வெளிநாடு கிளம்பும் வரை இனி கேளிக்கைகள் இராது. 

கிழக்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா ஆகிய இடங்களைப் பார்க்க வேண்டும்.  பயணக் கட்டுரைகளை விட மாயமான் வேட்டை போன்ற கதைகளையும் நாவல்களையும் எழுத பயணம் உதவும்.

மேலே குறிப்பிட்ட இருண்மையான எழுத்துச் சூழலை வெளிச்சமாக்கும்படி இரண்டு விஷயங்கள் பதினெட்டாம் தேதி அன்று நடந்தன.  ஒன்று, போகன் சங்கர் எழுதியது.  அதை நீங்கள் இந்த ப்ளாகில் படித்திருப்பீர்கள். 

என் மொழி நடை எப்படி இதுபோல் அமைந்தது அல்லது உருவானது என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை.  நான் இப்போது படித்திருப்பது போல் இருபத்தைந்து வயதில் தமிழில் நவீன இலக்கியமும் படித்தது இல்லை; செவ்வியல் இலக்கியமும் படித்தது இல்லை.  இது அப்போதைய நிலை.  அசோகமித்திரன், ஆதவன், எம்.வி. வெங்கட்ராம், சம்பத், கு.ப.ரா., தி. ஜானகிராமன் போன்ற ஒருசிலரையே படித்திருந்தேன்.  ஜி.நாகராஜன் எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஈர்க்கவில்லை.  புதுமைப்பித்தனை கருத்தியல்ரீதியாக அணுகி நிராகரித்து விட்டேன்.  என் இலக்கிய வாழ்வில் நிகழ்ந்த மிகப் பெரிய விபத்து என்றே இப்போது தோன்றுகிறது. 

பாரதி பெயரைக் குறிப்பிடாததற்குக் காரணம், அவரைக் குறிப்பிட்டாலும் குறிப்பிடாவிட்டாலும் பாரதியைத் தாண்டாமல் எந்த நவீன எழுத்தாளனும் பேனா பிடிக்க முடியாது.    

எனவே என்னுடைய தமிழ் நடைக்கு என்ன காரணம் என்று என்னால் சொல்ல இயலவில்லை.  தஞ்சாவூர் என்று சொல்லலாம்.  தஞ்சாவூர்க்காரன் இயல்பிலேயே இசை ரசிகனாக இருப்பான் என்பதைப் போல.  அந்தக் காற்றுக்கும் மண்ணுக்கும் மொழிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?  தெரியவில்லை.  ஆனால் இருக்க வேண்டும். 

இது எல்லாமே ஹேஷ்யங்கள்தான்.

போகன் சங்கருக்கு என் மனமார்ந்த நன்றி. 

அதேபோல் என் பிறந்த நாள் அன்று வாழ்த்திய அத்தனை பேருக்கும் என் நன்றி.  தனித்தனியாகத்தான் நன்றி அனுப்ப வேண்டும் என்று நினைத்தேன்.  ஆயிரக்கணக்கான பேர்.  ஔரங்கசீப் இல்லையென்றால் அதையும் செய்திருப்பேன்.  இன்று இரவுக்குள் அடுத்த அத்தியாயம் அனுப்ப வேண்டும். 

பதினெட்டாம் தேதி வழக்கம் போல் நாலு மணிக்கு எழுந்து போனை இயக்கினேன்.  ஒரு மெயில் கண்ணில் பட்டது.  அதில் ஒரு பெண் பெயர் இருந்தது.  முந்தின நாள்தான் அதே பெயரில் பத்தாயிரம் ரூபாய் பணம் வந்திருந்ததால் ஒருவேளை அவர்தான் இவரோ என்று படிக்க ஆரம்பித்தேன்.  கண் கலங்கி விட்டது. 

மனித வாழ்வில் எழுத்து என்ன செய்கிறது, என்ன செய்ய முடியும் என்பதற்கு அந்தக் கடிதம் என்றென்றும் ஒரு சாட்சியாக நிற்கும்.  எங்கேயோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் இப்படிப் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்.  அவருக்காகத்தான் நாம் எழுதுகிறோம். 

இந்தக் கடிதத்தை வெளியிடலாமா வேண்டாமா என்று நான்கைந்து தினங்களாக யோசித்துக் கொண்டிருந்தேன்.  சில அந்தரங்கமான தகவல்கள் இருந்தாலும் அது யாரையும் பாதிக்காது.  அனுமதி இல்லாமல் நான் யார் கடிதத்தையும் வெளியிடுவது இல்லை.  இன்று அந்தப் பெண்ணிடமே கேட்டேன்.  பெயர் இல்லாமல் வெளியிடலாம் என்றார். 

நான் மாணவர்களிடமிருந்தும், சக எழுத்தாளர்களிடமிருந்தும், வீட்டிலிருந்து வீட்டை நிர்வகிக்கும் பெண்களிடமிருந்தும் பணம் வாங்குவதில்லை.  அதனால் அந்தப் பெண்ணிடம் இனிமேல் பணம் அனுப்ப வேண்டாம் என்று எழுதினேன்.  அதற்கும் ஒரு பதில் வந்தது.  அதையும் வெளியிடுகிறேன். 

கூடிய விரைவில் ப்ளாகில் பணம் அனுப்பும் முறையை எளிதாக்க சீனி சில ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். 

எனக்குக் கிடைக்கும் பணத்தை நான் பயணத்துக்கும் பூனைகளுக்கும் மட்டுமே பயன்படுத்துகிறேன்.  என் செலவு என்று எதுவுமே இல்லை.  அதை நண்பர்கள் கவனித்துக் கொள்கிறார்கள்.  பயணத்துக்கு ஆகும் சில லட்சங்களைத்தான் நண்பர்களிடம் கேட்க முடியாது.  எனவே நீங்கள் அனுப்பும் பணம் பெரும்பாலும் பயணத்துக்கு மட்டும்தான். 

இனி வருவது அந்த வாசகியின் கடிதம்.  எழுதியவரின் வயது முக்கியம்.  25.  இந்த வயதில் எனக்கு யாரும் இத்தனை தெளிவான தமிழில் எழுதியது இல்லை.  அதுவும் ஒரு ஆச்சரியம்.  பொதுவாக இவ்வளவு நீண்ட கடிதத்தைத் திருத்த எனக்கு ஒரு மணி நேரம் ஆகும்.  இதில் நான் கையே வைக்கவில்லை. 

Beloved Charu,

சென்ற வருடம் தங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பி இருந்தேன். அதற்கு பதில் அனுப்பி ‘keep in touch’ என எழுதியிருந்தீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள். அக்கடிதத்தைப் பார்க்கவே எனக்கு எட்டு மாதம் ஆகிவிட்டது. அக்கடிதத்தை அனுப்பிய பின் எனக்குத் திருமணம் நடந்துவிட்டது.  நேரமின்மை காரணமாக பார்க்க இயலவில்லை.

என் பெயர் …  வயது 25. குமுதத்தில் வந்த கனவு கேப்பச்சினோ மற்றும் சாட்டிங் தொடர் மூலம் நீங்கள் எனக்கு அறிமுகம் ஆனீர்கள்.

அக்கால கட்டத்தில் நான் வீட்டுச் சிறை சூழ்நிலையில் இருந்தேன். என் அப்பா ஒரு ஆணாதிக்கவாதி, பாசிஸ்ட், தீவிர சாதிப் பற்று மற்றும் மதப்பற்று உடையவர். என் வீட்டில் எந்தப் புத்தகமும் வாங்க அனுமதி கிடையாது. என்றாவது ஒரு நாள் என் உறவினர் வீட்டிற்குச் செல்லும்போது என் அப்பாவுக்குத் தெரியாமல் எடுத்து வந்து படிப்பேன்.  சிறு வயதில் இருந்தே நான் நன்றாகப் படிக்கும் பெண்.  எனக்கு புத்தகத்தின் மீதும் ஓவியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் உண்டு. நான் பார்ப்பதற்கு அழகான பெண். என் அப்பா என்னை கல்லூரிக்குச் செல்ல அனுமதிக்காததற்கு அதுவும் ஒரு காரணம் என்று கூறலாம்.

ஏழு வருடங்களாக வீட்டுச் சிறை வாழ்க்கை வாழ்ந்தேன். என் அம்மா மிகவும் அழகாக இருப்பார். திருமணமான நாள் முதல் என் அப்பா என் அம்மாவை சந்தேகப்பட்டு துன்புறுத்தி வருகிறார்.  எங்கள் வீட்டுக்கு யாரும் வரவும் முடியாது. நாங்களும் எந்த வீட்டிற்கும் செல்ல முடியாது. என் அம்மா கிட்டதட்ட ஒரு நடைப்பிணம் போல தான் வாழ்கிறார். காலம் செல்லச் செல்ல என்னையும் சந்தேகப்பட்டு துன்புறுத்த ஆரம்பித்து விட்டார்‌. புத்தகம் படிக்கக் கூடாது. போன் பேசக்கூடாது. தொலைக்காட்சி பார்க்கக் கூடாது.  எப்போதும் இறைவனின் நாமத்தையே ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். அவர் கெட்ட வார்த்தைகளில் அசிங்கமாகப் பேசும் போது எதிர்த்துப் பேசாமல் அதைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். முதலில் நான்கு வருடம் மிகுந்த மன அழுத்தத்தில் என்னையே மறந்த நிலையில் இருந்தேன். என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாது‌. இயல்பிலேயே நான் ஒரு உற்சாகமான பெண்.  ஆனால், இக்கொடூர நாட்களில் நான் மிகவும் மனச்சோர்வுடன் தூங்கிக் கொண்டே இருப்பேன். என்ன செய்வதென்றே தெரியாது.  அழுது கொண்டே இருப்பேன். எதற்கென்றே தெரியாது. பல முறை தற்கொலை எண்ணங்கள் வந்து போய் இருக்கின்றன.  துன்பமான காலகட்டத்தில் எல்லாம் பல கேள்விகள் மனதில் தோன்றும். ஆனால் அதற்கன பதில் மட்டும் கிடைக்கவே இல்லை.  அப்போதுதான் உங்கள் கட்டுரைகளை குமுதத்தில் படிக்க நேர்ந்தது.  உங்கள் எழுத்தில் வாழ்வைப் பற்றிய வித்தியாசமான அணுகுமுறை இருந்தது.

எனக்கு சரியென்று பட்ட, என் மனம் நம்பிய பதிலை உங்கள் எழுத்தைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தரவில்லை. சமீபத்தில் ‘இச்சைகளின் இருள்வெளி’ என்ற புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. குடும்பக் கட்டமைப்பில் உள்ள வன்முறை பற்றிய சரியான புரிதல் கிடைத்தது.   Marital rape என்பதைப் பார்த்து வளர்ந்தவள் நான். அப்புத்தகத்தில் காமம் பற்றிய உரையாடல் எனக்கு பெரிய திறப்பாக இருந்தது.

உறவுக்காரர் ஒருவர் விடுமுறைக்காக எங்கள் வீட்டுக்கு வந்து செல்லும் போது அவரது போனில் உங்கள் பிளாகை தேடி படிப்பேன். உங்கள் எழுத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.  ஒரு தெளிவு பிறந்தது; ஒரு நண்பன் கிடைத்தது போன்ற உணர்வு எனச் சொல்லலாம்.  யாரும் இல்லாத உலகில் எனக்கு இன்று கிடைத்த ஒருவர் நீங்கள்தான். எனக்குத் தெரிந்த ஒரே நபர் நீங்கள்தான். தினசரி எந்தப் பிரச்சினையை சந்திக்க நேர்ந்தாலும் உங்களைத்தான் நினைத்துக் கொள்வேன். நீங்கள் எழுதிய ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிக் கொண்டு அப்பிரச்சினையை எதிர்கொள்வேன். நாட்கள் போகப் போக அந்த நரகத்தில் பல சரியான முடிவுகளை எடுத்தேன். என் அப்பாவை எதிர்க்கத் துணிந்து என் அம்மாவை பல துன்பங்களிலிருந்து தைரியமாகக் காப்பாற்றினேன்.

தனிமையில் வாடிய பெண்ணின் மனதில் இவ்வாழ்க்கை பற்றியும், உணர்வுகளைப் பற்றியும், விடுதலை பற்றியும் எழுந்த பல அடிப்படையான கேள்விகளுக்கு உங்களது எழுத்து பதிலளித்தது. பின்னர் நீங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தும் இசையை கேட்கத் தொடங்கினேன்.  நீங்கள் அறிமுகப்படுத்திய உலகத் திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கினேன்.   புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் நீங்கள் அறிமுகப்படுத்தும் பல எழுத்தாளர்களை தேடித் தேடிப் படித்தேன். பணம் இருந்தும் என்னால் பணம் செலுத்தி எதையும் படிக்க முடியாது. ஏனெனில் பணத்தை செலவு செய்யும் அதிகாரம் என் கையில் இல்லை.  பிடிஎஃப் ஆக டவுன்லோட் செய்து பல புத்தகங்களைப் படித்தேன். 

நீங்கள் அறிமுகப்படுத்திய ‘This blinding abscence of light’ புத்தகத்தை பிடிஎஃப் ஆக தேடிப்பிடித்து படித்தேன். அப்புத்தகம் வாழ்க்கை பற்றிய புரிதலை வேறு தளத்துக்கு எடுத்து சென்றது. நான் Atheist. ஆனால் இறை நம்பிக்கையின் வலிமையை சரியான புரிதலோடு தற்போது அணுக அப்புத்தகம்தான் காரணம். என் அப்பாவுக்குத் தெரியாமல் என் உறவினர்களின் உதவியால் பல ஆங்கிலப் புத்தகங்கள் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். கடந்த இரண்டு வருடங்களாக வீட்டுக்குத் தெரியாமல்தான் புத்தகங்கள் படித்தேன். தற்போது திருமணம் ஆகிவிட்டது. வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  என் கணவர் சரியான புரிதலோடு எனக்கு உறுதுணையாக இருக்கிறார். தற்போது என்னால் புத்தகங்கள் வாங்க முடிகிறது. தங்களது புத்தகங்களைப் படிக்க முடிகிறது. யூடியூபில் உள்ள உங்களது அனைத்து உரைகளையும் கேட்டுள்ளேன்.

நான் என்ற பிம்பத்தையும் என்னைச் சூழ்ந்துள்ள பிற அனைத்தையும் பார்க்கும் perspective மாறியதற்குக் காரணம் நீங்கள்தான். இப்போது மோசமான சூழ்நிலைகளைக் கூட சிரித்தபடி கடந்து செல்கிறேன்.  பிராணிகள் மீது அன்பு செலுத்த கற்றுக் கொடுத்தீர்கள். நான் இப்போது ஒரு முயல் குட்டி வளர்க்கிறேன்.

எனக்கு இலக்கியம் எல்லாம் தெரியாது.  உங்கள் எழுத்தில் உள்ள ஏதோ ஒரு மாயாஜாலம் மனிதனின் விடுதலை உணர்வை எழுப்புகிறது. வாழ்க்கையில் வீணான விஷயங்களில் இருந்து வெளியே வரக் கற்றுக்கொடுத்து, மகிழ்ச்சியாகவும் வாழ வழிகளைக் காண்பிக்கிறது.  என் வாழ்க்கையை நீங்கள்தான் மீட்டுக் கொடுத்தீர்கள்.  எனக்கு உங்களை மட்டும்தான் தெரியும்.  ஒவ்வொரு முறை நீங்கள் சந்தா அனுப்புவது பற்றி எழுதும் போதும் அதை மற்றவர்கள் இகழ்ந்து பேசும் போதும் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்கும். நம்மால் பணமிருந்தும் அனுப்ப வழி தெரியவில்லையே என்று. ஆனால், நம்பிக்கை இழக்கவில்லை. அக்கால கட்டத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்க்க ஆரம்பித்தேன். எப்படியாவது எதிர்காலத்தில் அனுப்பி விட வேண்டும் என்ற நோக்குடன் சேர்த்தேன்.  அது ஒரு கனவாகவே இருந்தது.  இப்போது அதற்கு நேரம் வந்து விட்டது.  நான் சேர்த்து வைத்த பணத்தை உங்கள் பிறந்த நாளன்று அனுப்பி விட்டேன். என் கனவு நிஜமாகி விட்டது. 

என் வாழ்க்கையை மீட்டுக் கொடுத்துள்ளீர்கள்; அதற்கு எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது. என் ஆயுளில் பாதி கொடுக்க வழி தெரிந்தாலும் கொடுத்துவிடுவேன். என்னால் கொடுக்க முடிந்தது இந்தப் பத்தாயிரம்தான். அடுத்த ஆண்டுக்கான சேமிப்பு தொடங்கிவிட்டது.  அடுத்த ஆண்டு இன்னும் அதிகம் அனுப்ப முயல்வேன்.  தொலைத் தொடர்பு முறையில்  படிக்கத் தொடங்கியுள்ளேன். நன்றாகப் படித்து இலக்கியத்திற்கு சேவை செய்ய ஆசை.  மொழி பெயர்ப்புத் தளத்தில் இயங்க ஆசை. வருங்காலத்தில் உங்களது புத்தகங்களை வாங்கி நூலகங்களுக்கு வழங்கி எழுத்துக்கு சேவை செய்ய ஆசை.  தங்களது கட்டுரைத் தொகுப்பில் இருந்து படிக்கத் தொடங்கி உள்ளேன்.  இதிலேயே எண்ணிலடங்காத திறப்புகள் கிடைத்தன. சென்ற வருடம் தங்களுடைய பிறந்த நாளன்று கடிதம் அனுப்பினேன். அதற்கு தாங்கள் பதிலளித்தது எனக்குப் பெரிய சாதனை. தற்பொழுது உங்களுக்கு என்னால் பணம் செலுத்த முடிந்தது எனக்கு இன்னொரு சாதனை.

இதற்காகத்தான் கடிதம் எழுதினேன். உங்கள் நேரத்தை விரயமாக்கி இருந்தால் மன்னிக்கவும்.  மறுபடியும் தொந்தரவு செய்ய மாட்டேன்.  உங்களை ஒரு முறையாவது வாழ்வில் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றும். நீங்கள் புத்தகக் கண்காட்சிக்கு வர நேர்ந்தால் உங்களை ஒரு முறை பார்த்துச் சென்று விட ஆசை. உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். என்னால் முடிந்ததை செய்வேன். சிந்திக்க கற்றுக் கொடுத்தீர்கள். வாழ கற்றுக் கொடுத்தீர்கள். கண்களில் கண்ணீர் நிரம்ப இதை எழுதுகிறேன்.

முடிவாக,

You have shaped me, You have made me a better, kinder, and more thoughtful person through your words.  At this very moment, I am unable to find a suitable word to express my gratitude.

Words alone are not enough to express how happy I am.  You are celebrating another year of your life! Just when the caterpillar thinks that it is all grown up, it becomes a butterfly.

Charu, You are a regal person.

Happy Birthday, butterfly!

***

மேற்கண்ட கடிதத்துக்கு நான் ரெண்டு வரி பதில் எழுதினேன்.  பணம் அனுப்ப வேண்டாமே என்று.  அதற்கு இப்படி ஒரு பதில் வந்தது:

டியர் சாரு,

என்ன சொல்வது என்றே தெரியவில்லை.  என் கடிதத்துக்கு நீங்கள் பதில் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு பதிலளிக்க நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. I owe this present life to you. நான் அனுப்பியது பெரிய தொகை எல்லாம் ஒன்றும் இல்லை சாரு. அந்தப் பணம் உங்களுக்கானது. அது என்னால் அனுப்ப முடிந்த சிறிய தொகை. கு ப ராஜகோபாலன் பற்றி நீங்கள் ஆற்றிய உரையில் ஞானம் பற்றி நீங்கள் கூறியிருப்பீர்கள. பல எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வழியாக ஞானம் உங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் எழுத்துக்களை படித்து நான் ஞானம் பெறுகிறேன். என் வாழ்வில் உங்கள் எழுத்து ஏற்படுத்திய தாக்கத்தைப் போல பலர் வாழ்விலும் ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்தியிருக்கு. அதில் சந்தேகமே இல்லை. ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் உள்ள நடைமுறைத் தேவைகள் மற்றும் சிக்கல்கள் பற்றி  உங்கள் எழுத்தை படித்து தான் அறிந்தேன்.

பயணம் செல்வது என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரியும். ‘நிலவு தேயாத தேசம்’ போன்ற புத்தகத்தை கொடுத்த ஒரு எழுத்தாளனை விரும்பும் இடத்திற்குப் பயணம் செய்ய இயலாத நிலையில் வைத்திருப்பது இந்த சமூகத்தின் அவலம் இல்லையா. எங்கோ இருக்கும் நீங்கள் என் வாழ்வில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த காரணம் உங்கள் எழுத்தின் மூலம் சமூகத்தின் மீது காட்டிய அக்கறைதானே? அப்படியெனில் ஒரு எழுத்தாளனின் வாழ்வின் மீது நான் அக்கறை காட்ட வேண்டியது என் கடமை அல்லவா?  என்னை பணம் அனுப்ப வேண்டாம் என்று சொல்வது உங்கள் பெருந்தன்மை. ஆனால், அனுப்ப வேண்டியது என் கடமை. இதுதான் உங்கள் எழுத்தைப் படித்து நான் கற்றுக்கொண்டது. இது உங்களுக்கானது என்று மட்டுமில்லை சாரு.  ஒரு சமூகத்திற்கு ஞானத்தை வழங்கும் ஒரு எழுத்தாளனுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை. என் எதிர்காலத்திலும் இதை தொடர்வேன். கொடுக்கும் போதுதான் சாரு மனம் நிம்மதி அடைகிறது. உங்கள் எழுத்தை நீங்கள் அடைந்திருக்கும் அந்த ஞானத்தை நானும் அடைய என்னால் செய்ய முடிந்த ஒரு மிகச் சிறிய செயல். ஔரங்கசீப் தொடரை படித்துக்கொண்டிருந்தேன். ஆனால் அதில் வரும் பல செய்திகளுக்காக, அதைப் பற்றித் தேடுவதற்காக நேரம் ஒதுக்க வேண்டி இருந்ததால் நிறுத்தி வைத்திருந்தேன். இப்போதே மறுபடியும் தொடருகிறேன். புத்தகக் கண்காட்சிக்கு தாங்கள் எப்போது வருவீர்கள் என்று தெரிந்தால் தங்களை வந்து சந்திப்பேன். இதற்குமேல் தங்களது மகத்தான நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை.

அன்புள்ள,


சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai