சைத்தானுடன் ஓர் உரையாடல்

சைத்தானை நான் சந்தித்த போது

என்

கழுத்தெல்லாம் கோரைப்பல் தடங்களிலிருந்து

குருதி கொட்டிக் கொண்டிருந்தது

மூக்கிலிருந்தும்தான்

பற்களும் ஒன்றிரண்டு உடைந்து விட்டன

கை கால் சேதமும் உண்டு

ஆக மொத்தம்

குற்றுயிரும் குலையுயிருமாய்த்தான்

சைத்தானிடம் போய்ச்

சேர்ந்தேன்.

என்னைத் தஞ்சம் அடைந்தவர்களை

அந்த நாசமாய்ப் போன கடவுளைப் போல்

நான்

சோதிக்க மாட்டேன்

முதலில் இந்தக் காயங்களுக்கு

சத்திர சிகிச்சை செய்து

விடுவோம் வலி

தெரியாமலிருக்க இதோ

கொஞ்சம்

பருகு நாட்டுச்

சாராயம்

என்றான் சைத்தான்

மன்னித்துக் கொள்ளுங்கள் மிஸ்டர் சைத்தான்

நான் நாட்டுச் சாராயம் பருகுவதில்லை

ரெமி மார்ட்டின்தான் பழக்கம்

என்றேன்.

அந்தக் கொடுப்பினையெல்லாம்

நமக்கில்லை அப்பனே

நானோ ஒடுக்கப்பட்டவன்

ஆனானப்பட்ட கடவுளாலேயே

சபிக்கப்பட்டவன்

ஊருக்கும் உலகுக்கும் வேண்டாதவன்

நமக்கெல்லாம் ஆகுமா

சீமைச் சாராயமென்றான்

சைத்தான்.

ஆபத்துக்குப் பாவமில்லையென்று

நாட்டுச் சாராயத்தையே

அன்றைய தினம்

குடித்து வைத்தேன்.

வலியில்லாத சத்திர சிகிச்சை

குருதி கொட்டுவதும் நின்று போனது

இப்போது சொல் என்ன விஷயம்

என்றான் சைத்தான்

நீதி நேர்மை நியாயம்

தர்மம் அறம் சத்தியம்

நல்லொழுக்கம் கற்பு

பிறன்மனை நோக்காமை

என்று விதவிதமான ஆயுதங்களால்

தாக்கப்பட்டேன்

கடவுளின் சிப்பாய்களால்

மனித இனமே அழிந்து விடும் போலிருக்கிறது

என்று புலம்பினேன்.

பொய்மைக்கு முன்னால்

மாமலையும் கடுகாமேயெனத்

தெரியாதா உனக்கு

என்றான் சைத்தான்.

நமஸ்கரித்து நன்றி பகன்றேன்.

அது சரி, என் பெயரைப் புனைப்பெயராய்க் கொண்ட

கவிஞன் எப்படி இருக்கிறான் எனக் கேட்டான்.

வறுமை தாளாமல்

இப்போது அவன் கடவுள் கட்சியில் சேர்ந்து விட்டான்

என்றேன்.

ஓ மை காட், இப்போது நன்றாக இருக்கிறான் இல்லையா?

இல்லை மிஸ்டர் சைத்தான்,

கடவுளே கவிஞர்களைத் திட்டி விட்டதால்

கொஞ்சம் சிரமதசையில்தான் இருக்கிறான்

தங்களோடு இருந்தபோது கையில்

பணம் புரளாவிட்டாலும்

தோழிகள் புரண்டார்கள்

இப்போது அதற்கும் வழியில்லை

என்றேன்.

சரி, எதிரியிடமிருந்தாலும்

என் ஆசி அவனுக்குண்டு

என்று சொன்ன சைத்தான்

என் ஜேபியில் இரண்டு தாயத்துகளைப் போட்டான்

ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்தேன்.

நயவஞ்சகம் துரோகமெனக் கண்டிருந்தது

கடவுளின் சிப்பாய்களோடு போராட

இது போதும் என்றான்.