அன்பு என்றால் என்ன? அப்படி ஒன்று இருக்கிறதா?

சாரு,

இப்போதுதான் உங்களுடைய சாய் வித் சித்ராவில் பார்க்காமல் விடுபட்ட பாகங்களைப் பார்த்து முடித்தேன். உங்கள் பேட்டியில் மற்றவர்கள்மீது உள்ள அன்பினால் செய்வதாக வெவ்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளின் பின்புலத்தில் சொல்லியிருந்தீர்கள். எனக்கு அன்பு என்றால் என்னவென்றே புரிவதில்லை, புரிந்துகொள்ளவும் முடிவதில்லை. பொதுவாகக் கேட்கிறேன், அது நிஜமான ஒன்றா?

-ப்ரஸன்னா 

ப்ரஸன்னா,

தலைக்கு மேல் வெள்ளம் என்ற நிலையில் ஔரங்கசீப்பை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  என்னால் மற்ற எழுத்தாளர்களைப் போல் இரவில் கண் விழிக்க முடிவதில்லை.  ஒருநாள் மாலை ஆறு மணிக்கு சீனிக்கு ஃபோன் போட்டேன்.  எடுக்கவில்லை.  பொதுவாக அந்த நேரத்தில் எடுத்து விடுவார்.  என் வெளியுலகத் தொடர்பே சீனியும் டார்ச்சர் கோவிந்தனும்தான்.  இதுவும் இல்லையென்றால் தனிமைச் சிறை மாதிரி ஆகி விடும்.  பிறகு ஏழரை மணி போல் போன் செய்தார் சீனி.  தூங்கிக் கொண்டிருந்தாராம்.  அடப் பாவி, இந்த நேரத்திலா என்றேன்.  இரவு முழுவதும் எழுதினாராம்.  காலை ஆறு மணிக்குப் படுத்து எட்டுக்கே எழுந்ததால் மாலையில் உறக்கம். 

இப்படி கன்னாபின்னாவென்று வாழ்வதுதான் எழுத்தாளனின் அடையாளம்.  நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. இதுவரை என்னை யாரும் உறக்கத்திலிருந்து எழுப்பியதே இல்லை.  இரவு பத்துக்குப் படுத்து காலை நான்கு மணிக்கு எழுபவனை யார் எழுப்ப முடியும்?  இதிலும் என்னை வென்றவன் என் நண்பன் வினித் தான்.  கோவாவில் காலை ஆறு மணி வரை பேசிக் கொண்டிருந்து விட்டுப் படுத்தவனை ஒன்பது மணிக்கு எழுப்பி சாப்பிடப் போலாமா என்று கேட்ட மகாத்மா அவன். 

இந்த நேர ஒழுங்கின் காரணமாக நான் பகலில்தான் எழுதியாக வேண்டும்.  ஆனாலும் உங்கள் கடிதங்கள் எனக்கு ஒரு அடிக்‌ஷன் மாதிரி ஆகி விட்டன.  உங்களுடைய இந்தக் கடிதத்துக்கு பதில் எழுதாமல் என்னால் ஔரங்கசீப் ஒரு வார்த்தை எழுத முடியாது. 

அன்பு என்ற வார்த்தைதான் உலகில் அதிகமாக வன்புணர்ச்சி செய்யப்பட்ட வார்த்தை.  அன்பின் பெயரால்தான் தீர்க்கதரிசிகள் கடவுளின் சாட்சி சொன்னார்கள்.  அன்பின் பெயரால்தான் மதங்களைத் தோற்றுவித்தார்கள்.  அந்த மதத்தின் பெயரால்தான் ஆயிரம் ஆண்டுப் போர்களெல்லாம் நடந்தன.  மனித இனமே மதத்தின் பெயரால்தான் அழிந்தது.  அழிந்து கொண்டும் இருக்கிறது.  மனிதர்கள் மதத்தின் பெயரால்தான் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு சாகிறார்கள்.  மதமோ அன்பின் பெயரால் நின்று கொண்டிருக்கிறது. 

நான் ஒரு ரகசிய அமைப்பில் இருக்கிறேன்.  ரகசியம் என்றால் அரசுக்கோ மற்ற மதங்களுக்கோ எதிரானது அல்ல.  அந்த அமைப்பில் உள்ள விஷயங்களை யாரும் வெளியே சொல்லக் கூடாது.  சொல்ல மாட்டேன் என்று சத்தியப் பிரமாணம் செய்து கொடுக்க வேண்டும்.  செய்தும் கொடுத்தேன்.  இப்போது நான் செய்த சத்தியத்தை மீறிக் கொண்டு இருக்கிறேன்.  இப்படி எழுதுவதே நான் செய்த சத்தியத்தை மீறுவதாகும். 

இப்படிப்பட்ட cultகளுக்கு நான் முழுக்க முழுக்க எதிரானவன்.  ஆனாலும் அன்பின் காரணமாகவே அதில் நான் இருக்கும்படியான சூழல்.  திருமணத்துக்கு எதிரான நான் திருமண வாழ்வில் இல்லையா, அது போல. அந்த அமைப்பின் அடிநாதம் அன்பு.  சக உயிர்களை நேசிப்பதே அந்த அமைப்பின் அடிச்சரடு.  ஆனால் நம்முடைய இறைவனைத் தாண்டி வேறு இறை சக்தி எதுவுமே இல்லை என்பது அந்த அமைப்பின் வாசகம்.  அந்த அமைப்பின் நம்பிக்கை.  எப்படி இருக்கிறது, பார்த்தீர்களா?  அன்பின் அடிப்படையில் இயங்கும் அமைப்பு மற்றவர்களின் கடவுளை கடவுளே இல்லை என்கிறது. இது ஃபாஸிஸம் இல்லையா? 

அன்பு என்ற பெயரால்தான் உலகில் பெரும்பாலான அயோக்கியத்தனங்களும் வன்முறைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.  குடும்பம் என்பது மிகக் கொடூரமான வன்முறையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு.  அன்பு என்ற பெயரால்தான் இந்த வன்முறை நடந்து வருகிறது. 

என் நண்பருக்கு 65 வயது ஆகிறது.  ஐம்பது வயது வரை தன் மனைவிக்காகவும் மகளுக்காகவும் வாழ்ந்தார்.  இப்போது மகளின் குழந்தைக்காக வாழ்கிறார்.  அவருடைய ஒரு நிமிடம் கூட அவருக்கானது இல்லை.  எப்போதுமே ரயிலைப் பிடிக்கும் அவசரத்தோடுதான் ஓடிக் கொண்டிருப்பார்.  கேட்டால், பேரனை பள்ளியில் விட வேண்டும்.  இப்போது கொரோனா காலத்தில் ஏது பள்ளி என்று கேட்டால், ஸூமில் பாடம் நடத்தும் போது கூடவே ஒருவரும் இருக்க வேண்டும்.  தாய், தகப்பன் இருவருக்கும் அலுவலக வேலை.  தாத்தாதான் பேரனின் கேர்டேக்கர். 

இதோடு முடிந்திருந்தால் இதை எழுதியே இருக்க மாட்டேன்.  என்னிடம் அடிக்கடி, வாழ்க்கை முடிந்து விட்டது சார், இனிமேல் செத்து விடலாம் என்கிறார்.  துக்கத்தினால் சொல்லவில்லை.  கைப்பு உணர்வினால் சொல்லவில்லை.  ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்டே விட்டேன்.  மற்றவர்களுக்காகவே வாழ்ந்து வாழ்ந்து அலுத்து விட்டது, போதும் என்றார்.  இத்தனைக்கும் பயணம், இலக்கியம், விளையாட்டு, யோகா என்று பல்வேறு விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்.  இளைஞனைப் போல் துடிப்பானவர். ஆனால் பேரனை வளர்க்க வேண்டிய காரணத்தினால் அவரால் எதிலும் ஈடுபட முடியவில்லை. 

அன்பு என்ற பெயரால் மதமும் குடும்பமும் மனிதனைக் கொன்று கொண்டிருக்கின்றன. 

நான் அடிக்கடி குறிப்பிடும் தஸ்தயேவ்ஸ்கியின் A Nasty Incident என்ற கதையைப் படித்துப் பாருங்கள்.  அன்பு என்ற பெயரால் எத்தனை பெரிய அயோக்கியத்தனம் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியும்.  எவனாவது என்னிடம் அன்பு என்று சொன்னால் கன்னத்திலேயே அறைந்து விடுவேன்.

ஆனாலும் என் உயிர் மூச்சு அன்புதான். 

நான் என்னைப் பெரிதும் நேசிக்கிறேன்.  என் மீது அன்பு செலுத்துகிறேன்.

ஆனாலும் எனக்காக மற்றவர் யாரும் துன்புறுவதை விரும்ப மாட்டேன்.

இதுவரை என் பொருட்டு நான் யாரையும் துன்புறுத்தியதில்லை.

இதுவரை நான் பிறர் உழைப்பில் சாப்பிட்டது கூட இல்லை. உணவு விடுதி விஷயம் வேறு. விருந்துக்கு அழைத்து சாப்பிடுவதும் வேறு.  வீட்டில் மனைவி மட்டுமே சமைத்து நான் இதுவரை ஒரு வேளை கூட உண்டதில்லை.  இருவரும்தான் சேர்ந்தேதான் சமைப்போம். 

ஆனால் இதுவரை யாரையும் – என் மகன் உட்பட – அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று உத்தரவு போட்டதே இல்லை.  Don’t என்ற வார்த்தையே என் அகராதியில் இருந்தது இல்லை.  ஆனால் என்னிடமும் யாரும் டோண்ட் என்று சொல்வதை அனுமதித்தது இல்லை.  இருந்தாலும் அன்பு என்ற பெயரால் நடக்கும் போது அதிலிருந்து நான் தப்பிக்கவே முயல்வேன்.  அல்லது, நடிப்பேன்.  ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன்.  நான் ஒரு நாஸ்திகன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  என் அன்புக்குரிய ஒருத்தர் விபூதி கொடுத்தால் பயபக்தியுடன் வாங்கிப் பூசிக் கொள்வேன்.  நடிப்புதான்.  வேறு வழியில்லை.  குடும்பம் என்ற கொடூரமான வன்முறையால் இயங்கும் அமைப்பில் சிக்கிக் கொண்டதால் இப்படிப்பட்ட பாவனைகளை ஏற்க வேண்டியிருக்கிறது.

ஆனாலும், எங்கோ கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று இருந்து கொண்டு, தங்களுடைய தோழன் என்றோ, ஆசான் என்றோ, எழுத்தாளன் என்றோ எண்ணி எனக்குப் பணம் அனுப்புகிறார்கள்.  25000 ரூ. சம்பளம் வாங்கும் ஒருவர் 300 ரூ அனுப்புகிறார்.  எந்த ஊதியமுமே இல்லாத ஒரு பெண் சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து எனக்குப் பணம் அனுப்புகிறார்.  ஒருத்தர் தன் வேலையையே விட்டுவிட்டு என் புத்தகங்களைப் பதிப்பிக்கத் தயாராகிறார்.  ஒருத்தர் உனக்கு எப்போதெல்லாம் பசிக்கிறதோ, எனக்கு ஒரு மெஸேஜைத் தட்டி விடு, ஸ்விக்கியில் நீ கேட்ட உணவு உன் வாசலுக்கு வந்து சேரும் என்கிறார்.  ஒரு வனத்தில் பத்து ஏக்கர் நிலத்தில் ஒரு காட்டு பங்களாவை போகியத்தில் எடுத்து, ”நீங்கள் உங்கள் இறுதி நாள் வரை இந்த இடத்தில் இருந்து எழுதிக் கொள்ளலாம், ஒரு கிலோமீட்டர் தூரம் வனத்தில் நடந்தால் சாலை வரும்,  அந்தச் சாலையில் எல்லா தேசத்தின் உணவும் கிடைக்கும்” என்கிறார். 

இது எல்லாம் கூட அன்புதான்.  எந்த வித நிபந்தனையும் இல்லாமல் பிறர் மீது காட்டும் அக்கறையே அன்பு.  அது இன்னமும் உலகில் மிச்சமிருக்கிறது.  சமீபத்தில் “உங்களுக்கு என் ஆசீர்வாதம்” என்று என் சிநேகிதி ஒருவருக்கு மெஸேஜ் அனுப்பினேன்.  தியானத்திலிருந்து எழுந்து அந்த மெஸேஜை அனுப்பினேன்.  அமெரிக்காவில் வசிப்பவர்.  அடுத்த சாலையில் சென்று கொண்டிருந்த கார் அப்படியே ஆகாயத்தில் பறந்து வந்து இவருடைய கார் மீது விழுந்திருக்கும், இரண்டு நொடிகள் இவருடைய கார் முன்னே போகாமல் இருந்திருந்தால்.  இவர் கார் முன்னே போய் விட அந்தக் கார் பின்னால் விழுந்திருக்கிறது.  திரும்பிக் கூட பார்க்க முடியாது.  நெடுஞ்சாலை. 

பல சமயங்களில், அன்பு இப்படிப்பட்ட கராமத்துகளையும் நிகழ்த்தும்.  அந்த அன்பு எந்த நிபந்தனையும் இல்லாததாக இருந்தால். 

சாரு  

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai