தமிழ்

எனக்கு எந்த மொழியின் மீதும் தனிப்பட்ட முறையில் பற்றோ பாசமோ வெறியோ கிடையாது.  எல்லா மொழியும் ஒன்றே.  எல்லா தேசமும் ஒன்றே.  எந்த விதமான இனப் பற்றும், மொழிப் பற்றும், தேசப் பற்றும் இல்லாதவன் நான். மேலும் மனிதனின் வயது அதிகப் பட்சம் நூறு.  அதிலும் லட்சத்தில் ஒருவர்தான் நூறை நெருங்குகிறார்கள்.  மற்றபடி எண்பது தொண்ணூறுதான்.  அதுவே பெரிய சாதனை.  இந்தத் துக்கடா வாழ்வில் தமிழ் என்ற மொழி இருந்தால் என்ன, அழிந்தால் என்ன?  வாழ்ந்தால் மகிழவும் மடிந்தால் துக்கம் செய்யவும் நான் யார்?  நான் என்ன செய்ய முடியும்? 

தமிழின் இப்போதைய நிலையைப் பார்த்தால் அழிந்துதான் போய் விடும் போல் தெரிகிறது.  உலகமே வியந்து பார்த்த மெரீனா புரட்சியின் போது, மெரீனாவின் அருகில் வசிப்பவன் என்பதால் நேராகப் போய்ப் பார்த்தேன்.  அதில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் பலருக்கு தமிழைப் பிழையின்றி எழுதத் தெரியுமா என்பது சந்தேகம்தான்.  இன்னும் பலருக்குத் தமிழ் எழுதத் தெரியுமா என்பதே சந்தேகம்.  தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மேட்டுக்குடித் தமிழருக்கு தமிழ் வெறும் பேச்சு மொழிதான். 

எழுத்தாளர்களுக்கே தமிழைப் பிழையின்றி எழுதத் தெரியவில்லை.  ஆனால் முந்தைய தலைமுறை வரை பிழையின்றிதான் எழுதினார்கள்.  யாருக்கும் இலக்கணம் சொல்லித் தரப்படவில்லை.  நானும் இலக்கணம் கற்றதில்லை.  ஆனாலும் இலக்கணப் பிழையின்றிதான் எழுதுகிறேன்.  இல்லை, பிழையிருக்கிறது என்று ஒருசிலர் சொல்லலாம்.  அந்தப் பிழைகளை நான் என் மொழியின் லயம் கருதிச் செய்கிறேன்.  ”ஒரு ஊரில் ஒரு எழுத்தாளன்” என்றுதான் நான் எழுதுவேன்.  ஓர் ஊரில் ஓர் எழுத்தாளன் என்று எனக்குத் தெரியும்.  அப்படி எழுதினால் லயம் கெட்டுப் போகும் என்று நான் நம்புகிறேன்.  அதன் காரணமாகவே பிழை திருத்துவோர் என்ற இனத்துக்கும் எனக்கும் தீராப் பகை இருந்து வருகிறது. 

நான் பல சிறுகதை/குறுநாவல்/நாவல் பரிசுப் போட்டிகளில் நடுவராக இருந்திருக்கிறேன்.  அந்தப் போட்டிக்கு வரும் கதைகள் எல்லாமே மிகக் கடுமையான எழுத்துப் பிழைகளோடுதான் இருக்கின்றன.  ஒன்றிரண்டு பிழைகள் இருந்தால் சகித்துக் கொள்ளலாம்.  ஒரு வாக்கியத்தில் நாலு பிழைகள்.     

என் நண்பன் வளன் நிறைய எழுத்துப் பிழைகளோடு எழுதுகிறான்.  வளனை மட்டும்தான் நான் பெயர் குறிப்பிட்டு எழுத எனக்கு உரிமை இருக்கிறது.  மற்ற விஷயங்களில் சீனி, ஸ்ரீராம், வினித்.  இப்படி ஒருசிலரைத் தவிர்த்து நான் யார் பெயரையும் குறிப்பிட்டு விமர்சிக்க உரிமை இல்லை.  போகட்டும்.  சீனியும் முன்பு பிழையோடுதான் எழுதிக் கொண்டிருந்தார்.  பிறகு என் மிரட்டலுக்கு அஞ்சியோ என்னவோ இப்போது தேவலாம்.  ஆனால் வளன்தான் இன்னமும் விடாப் பிடியாக இருக்கிறான்.  இப்போது அவன் ஒரு நிலையை அடைந்திருக்கிறான்.  சந்திப் பிழைதானே நிறைய வருகிறது என்கிறீர்கள், கவலையே படாதீர்கள் அப்பா என்று சொல்லி விட்டு ஒற்றெழுத்துகளை ஜேபி நிறைய ரொப்பி வைத்துக் கொண்டு புறாக்களுக்கு தானியம் போடுவது மாதிரி அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறான்.  இப்போது என்ன ஆகி விட்டது என்றால், எங்கெல்லாம் ஒற்று தேவையில்லையோ அங்கெல்லாம் ஒற்று.  எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் ஒற்று இல்லை.  இது முந்தைய நிலையை விடக் கொடுமை.  ஒற்றுப் போடாமல் கூட எழுதுவதைக் கூட சகித்துக் கொள்ளலாம்.  ஒற்று மிகவே கூடாத இடத்தில் போட்டால் பைக்கில் போகும் போது நடுவில் கட்டை போடுவது போல் ஆகும்.  உதாரணமாக, புரிந்துக் கொண்டார். 

என் நண்பர் தனக்கு வரும் வாசகர் கடிதங்களையெல்லாம் தினமும் தன் தளத்தில் பதிவேற்றுகிறார்.  கடிதங்களின் உள்ளே சரக்கு பிரமாதமாக இருக்கிறது.  நல்ல நல்ல கேள்விகள், சந்தேகங்கள், அவதானங்கள்.  ஆனால் அக்கடிதங்களை என்னால் இப்போதெல்லாம் படிக்கவே முடியவில்லை.  ஒரே வாக்கியத்தில் நாலு இடங்களில் ஒற்றைக் காணோம்.  முன்பெல்லாம் சந்திகளில் மட்டும் ஒற்று இருக்காது.  இப்போது அதில் முன்னேற்றம் கண்டு வார்த்தைகளுக்கு இடையிலும் ஒற்றை எடுத்து விடுகிறார்கள்.  பார்கவும்.  பார்கிறாள்.  வாழ்கை.  (கிட்டத்தட்ட எல்லோருமே வாழ்கை என்று எழுதுகிறார்கள்!)

இது தவிரவும் இன்னும் பலவிதமான பிழைகள். 

உச்சரிப்பு, அது ஒரு தனி ஏரியா.  பேச்சுத் தமிழ் செத்து இருபது ஆண்டு ஆகிறது.  ஒரு பத்தியைக் கொடுத்து யாரையாவது படிக்கச் சொல்லுங்கள்.  அங்கே ஒரு தமிழ்க் கொலையே நடக்கிறது.  கவிஞர்கள் கவிதை வாசிப்பு அரங்கம் ஒரு உதாரணம்.  மற்றபடியும் யார் படித்தாலும் அவர்களின் உச்சரிப்பு நம் செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இருக்கிறது.  எங்கே அழுத்தம் கொடுக்க வேண்டுமோ அங்கே லேசாக மிதக்கிறார்கள்.  எங்கே அழுத்தம் கொடுக்கக் கூடாதோ அங்கே குரல்வளையை நெறிக்கிறார்கள்.  Prema என்ற பெயரை பலரும் Brema என்று உச்சரிப்பதையே பார்க்கிறேன்.  பாப்லோவின் ரசிகர் போலிருக்கிறது ஒருவர்.  அவருக்குத் தெரிந்த ஒரே ‘ஃபாரென்’ கவிஞர் பாப்லோவாகத்தான் இருக்கும்.  அவர் Pabloவை Boblow என்று உச்சரிக்கிறார்.  உன் நாக்கில் வசம்பை வச்சுத் தேய்க்க.  படுபாவிகள்.  இதேபோல் G க்கு K. இன்னும் இதுபோல் நூற்றுக்கணக்கான குளறுபடிகள்.  யாருக்குமே ழ வரவில்லை.  யாரும் அது பற்றிக் கவலையும் படவில்லை.  அதைவிடக் கொடுமை ள வர  வேண்டிய இடத்திலெல்லாம் ல போடுகிறார்கள்.  இப்படியெல்லாம் நான் எழுதினேனா, உடனே பல்லக்கைப் பள்ளக்கு என்கிறார்கள்.  பள்ளத்தாக்கு பல்லத்தாக்கு ஆகி விடுகிறது. 

30 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இருப்பவர் பத்திரிக்கை என்று எழுதுகிறார். 

பாவம், ஒரு அற்புதமான மொழியைக் கொலை செய்வது தெரியாமல் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படுகொலையில் முன்னணியில் நிற்பவர்கள் தொலைக்காட்சி மற்றும் தனியார் சேனல் அறிவிப்பார்கள்.  அடுத்து, பத்திரிகையாளர்கள்.  மூன்றாம் இடத்தில் எழுத்தாளர்கள்.  மற்றபடி காமன்மேன் பாவம்.  அவன் இப்போது கூட தமிழுக்காகத் தீக்குளிக்கத் தயாராக இருக்கிறான்.  ஆனால் அவனுக்குப் பிழையின்றி தமிழ் எழுதவோ பேசவோ தெரியாது.  அவனை விட்டு விடுவோம்.

இந்த நிலையில் என் நண்பரும் இளம் பத்திரிகையாளருமான த. ராஜன் பிழையின்றித் தமிழ் எழுதக் கற்பிக்கிறார்.    

தமிழும் நடையும் என்ற தலைப்பில் வந்து கொண்டிருக்கும் அந்தத் தொடரை அவசியம் வாசியுங்கள்.  இந்தத் தொடரில் இலக்கணப் பிழைகள் பற்றி எழுதுவாரா என்று தெரியவில்லை.  சந்திப்பிழை, ஒற்றுப் பிழை ஆகிய விஷயத்தில் சந்தேகம் இருப்பவர்கள் Bhanumathy K என்ற பெண்மணியின் யூட்யூப் உரைகளைக் கேட்கலாம்.  பத்தே நிமிடம் கேட்டால் கூட ஒற்றுப் பிழை இல்லாமல் எழுத முடியும். 

ராஜனின் தளம்:

பானுமதியின் யூட்யூப்: