ஜீஜி: நெடுங்கதை : ப்ரஸன்னா

கதைக்குள் செல்வதற்கு முன்னால் ப்ரஸன்னா பற்றி ஒரு வார்த்தை:

இன்று காலை எழுந்து பூனைகளுக்கு உணவு கொடுத்து விட்டு, இரவு உறங்கச் செல்லுமுன் அணைத்து விட்டுப் போயிருந்த கைபேசியைத் திறந்தேன். ப்ரஸன்னாவின் கடிதம். கூடவே ஒரு கதையும் இருந்தது. நெடுங்கதை. எழுந்து இன்னும் பல் கூடத் துலக்கியிருக்கவில்லை. கதை அப்படியே என்னை உள்ளிழுத்துக் கொண்டது.

ப்ரஸன்னாவை எனக்கு ஒரு வருடமாகத் தெரியும். ஆரம்பத்தில் என் கட்டுரைகளைக் கடுமையாக விமர்சித்து எழுதுவார். ஆனாலும் இவரிடம் ‘தீ’ இருக்கிறது என்பதை அந்த நீண்ட கடிதங்களிலிருந்து கண்டு கொண்டேன். பிறகு பேசச் சொன்னேன். பேச மாட்டேன் என்று சொல்லி விட்டார். அப்போது எனக்கு அவர் பெயர் கூடத் தெரியாது. அய்யன் என்பதே பெயர். புனைப் பெயர். இருந்தாலும் பேசச் சொல்லி வறுபுறுத்தினேன். அவர் சொன்ன கதைகள் எல்லாம் எனக்கு ஒருவர் ஹோலோகாஸ்ட் வதைமுகாமிலிருந்து உயிர் தப்பியவர் சொல்லும் கதைகள் போல் இருந்தன. உதாரணமாக, அவர் சொன்ன தாராவி கதைகள். தாராவி கதைகள் என்றே ஒரு ஆயிரம் பக்கம் எழுதலாம். கதைக் களஞ்சியம். பிறகு எழுத ஆரம்பித்தார். ஏழெட்டு கதைகள் எழுதி விட்டார் என நினைக்கிறேன். பின்வரும் ஜீஜி கதை எனக்கு அசோகமித்திரனைப் படிப்பது போன்ற ஒரு மகிழ்ச்சியை அளித்தது. அசோகமித்திரன் பாதிப்பு இல்லை. நான் சொல்வது pleasure of the text. ப்ரஸன்னா அசோகமித்திரனைப் படித்திருக்கிறாரா என்று எனக்குத் தெரியாது. ஜீஜி ஒரு அற்புதமான கதை. அவர் எழுதும் சமூகத்திலிருந்து வந்துள்ள முதல் கதை இதுதான் என்று நினைக்கிறேன். படித்துப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.

ப்ரஸன்னா தொடர்ந்து நிறைய எழுத வேண்டும். கதைக்கான லிங்க் கீழே உள்ளது.

சாரு

டியர் சாரு,
இந்தக்கதையை என்னால் எழுதிக் கடக்க முடியுமா என்று முதலில் சந்தேகம் வந்தது. முயன்றுதான் பார்க்கலாமே என்று எழுதி முடித்தேன். இதற்கு முன்பு நேரம் இருந்தால் வாசியுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தேன் இதைப் பொறுத்தவரை கண்டிப்பாக வாசியுங்களேன் என்று கேட்பேன். 

https://prasannavenkatesans.blogspot.com/2022/01/blog-post_23.html

இது நடக்கும் காலமும் சூழலும் மற்றும் இச்சமூகத்தில் இருந்து வந்திருக்கும் முதல் கதை என்று அவதானிக்கிறேன். சில இடங்களில் எழுதும்போது நானே அவஸ்தைப்பட்டேன் ரொம்ப உள்ளிழுத்துவிட்டது ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமே என்று கூடத் தோன்றியது. தடைபட்டு தடைபட்டு எழுதினேன். ஒரே அடியாக உட்கார்ந்து எழுதியிருந்தால் இப்படித் தோன்றியிருக்காதோ என்னவோ. ஒரு வேளை என் சித்தப்பாக்களின் மற்றும் மாமாக்களின் கதையாக இருக்கக்கூடும். எனக்கு சத்தியமாகத் தெரியாது. நடு நடுவில் யாரோ எனக்குள் வந்து போனதைப்போல் இருந்தது.

மனைவியின் நச்சரிப்பு காரணமாக இந்த இடத்தில் நிறுத்தி விட்டேன். தவிர ஒரு சிறுகதையாக இது முற்றுப்பெறும் இடம் இதுதான் என்று எனக்கே ஒரு நிறைவு உணர்வு ஏற்பட்டது. உண்மையில் இது ஒரு குறு நாவல். இது வளரும். இன்னொரு க்ளைமாக்ஸ் இருக்கிறது.

-ப்ரஸன்னா