இந்திய நகரங்களிலேயே ஆகக் கொடூரமானது சென்னை. இந்த நகரத்துக்கு வந்து இதையே தங்கள் வாழ்விடமாகக் கொண்ட எழுத்தாளர்கள் பலர் சென்னையை ஆகா ஓகோ என்று புகழ்ந்து எழுதுவதைக் கண்டு அவர்கள் மீது இரக்கம் கொண்டிருக்கிறேன். எல்லா வகையிலுமே ஆக மோசமான விஷயங்களையும் கலாச்சாரத்தையும் கொண்ட நகரம் சென்னை.
இன்று காலை அவந்திகா மும்பை சென்றதும் வீட்டுக்கு வந்தேன். வீட்டில் தனியாக இருப்பது புதிய அனுபவம். அதிலும் பணிப்பெண்கள் வீட்டு வேலையை முடித்து விட்டால் நான் பாட்டுக்கு எழுத்து வேலையைப் பார்க்கலாம். நண்பர்கள் யாரும் ஊரில் இல்லை என்பதால் கொண்டாட்டத்துக்கு வழி இல்லை. ஒரு நண்பர் ஞாயிறு காலை விக்ரம் படம் போகலாம் என்று சொல்லியிருந்தார். அது நேற்று காலையே முடிவானது. ஆனால் இன்று காலை அதற்கான நேரத்திட்டம் பற்றிய தகவல் வராததால் நான் மெஸேஜ் செய்து கேட்டேன். பதில் இல்லை. கேட்டு ஆறு ஏழு மணி நேரம் ஆகியும் பதில் இல்லை. ஆனால் அவ்வப்போது வாட்ஸப் வந்து வந்துதான் போகிறார் என்று தெரிந்தது. தகவல் உறுதி செய்யப்படாததால் நானே நாளைய சினிமா திட்டத்தை ரத்து செய்து விட்டேன். இப்படிப்பட்ட தகவல் இடைவெளிகள் என்னை எதுவுமே செய்வதில்லை. ஒவ்வொருவரும் ஏராளமான பிரச்சினைகளோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் மற்றவர்களும் என்னைப் போலவே தகவல் தொடர்பில் கில்லியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அராஜகம்.
வைன் அருந்தலாம் என்றால் தனியாக எப்படிக் குடிப்பது? சமையல் செய்யும் பெண் பன்னிரண்டரை மணி வரை வரவில்லை. இதற்கிடையில் அவருக்கு இதுதான் இரண்டாவது நாள். நேற்று அவர் வைத்த சாம்பாரும் ரசமும் இருந்ததால் தொட்டுக் கொள்ள நண்டு இருந்தால் போதும் என்று தோன்றியது. அன்னபூரணியிடம் சொன்னேன். அவர் தேடிப் பார்த்து விட்டு, சாம்கோ ஓகேவா என்று கேட்டார். மனதில் கௌளி அடித்தது. இப்போதைய சாம்கோ பழைய சாம்கோ இல்லை. பழைய சாம்கோ பற்றி கோணல் பக்கங்களில் எக்கச்சக்கமாக எழுதியிருக்கிறேன். பார்க் ஷெரட்டனில் வைத்து எழுதி விட்டு (ராஸ லீலா அங்கேதான் எழுதியது), குடித்து விட்டு சாம்கோவில் வந்துதான் சாப்பிடுவது. அற்புதமாக இருக்கும். இப்போதைய சாம்கோவில் சிப்பந்திகள் ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனால் தரம் வீழ்ந்து விட்டது. இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் சரி என்றேன்.
சாம்கோவில் நண்டுக் குழம்பு ஆர்டர் கொடுத்த பிறகு பன்னிரண்டரை மணிக்கு சமையல் செய்யும் பெண் வந்தார். ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அவர் கொஞ்சம் மேல் வேலை செய்து விட்டுக் கிளம்பி விட்டார்.
ஒரு மணிக்கு நண்டு சூப் வந்தது. அதுவும் வாயிலேயே வைக்க முடியவில்லை. சாம்கோவின் இன்றைய நிலை. ஆர்டரை மாற்றி அனுப்பி விட்டார்கள். அப்படியே இருந்தாலும் நண்டு சூப் இப்படியா இருக்கும்? அன்னபூர்ணிக்குக் காசைத் திருப்பி விட்டார்கள். 500 ரூ. கொள்ளை! மெரீனா பீச்சில் அரசாங்கத்தின் மீன் வளர்ச்சித் துறை வேனில் கிடைக்கும் நண்டு சூப் அம்பது ரூபாயோ அறுபது ரூபாயோ. உலகத் தரம்.
வெறும் ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு பழைய சாம்பாரை சாப்பிட்டேன். சூப்பைக் கொட்டி விட்டேன்.
நானும் அன்னபூரணியும் ஒரு முடிவு செய்தோம். இனிமேல் எந்த உணவு என்பது முக்கியம் அல்ல. எந்தக் கடை என்பதே முக்கியம். ஈரோடு அம்மன் மெஸ், கை மணம், விஸ்வநாதன் மெஸ். இங்கே எது கிடைக்கிறதோ அதுதான் அன்றைய தினம் பகவானின் அனுக்கிரஹம்.