விக்ரம் – விமர்சனம்

விக்ரம் புத்திஜீவிகளுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது.  அவர்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரி இருக்கிறது.  வணிக/பொழுதுபோக்கு சினிமா என்றால் ஒரு பாட்ஷா, ஒரு கில்லி மாதிரியாகவாவது இருக்க வேண்டாமா?  ரசிப்பதற்கான நுணுக்கங்கள் – அவை கலாபூர்வமாக இல்லாவிட்டாலும் ஜனரஞ்சகமாகவேனும் – ஒன்றிரண்டு இருக்க வேண்டாமா?  பொழுதுபோக்கு சினிமா என்றால் அது இப்படியா மொண்ணையாகவும், தட்டையாகவும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஆதங்கம்.

விக்ரம் எனக்குப் பிடித்தது.  எந்த அளவுக்கு என்றால், தமிழர்களுக்கு எந்த அளவு பிடித்ததோ அந்த அளவுக்கு.  தமிழ் சினிமா வரலாற்றிலேயே விக்ரம் அளவு வசூலித்த படம் இல்லை என்கிறார்கள்.  அப்படியென்றால், மக்கள் அந்த அளவுக்கு விக்ரமை ரசித்திருக்கிறார்கள்.  நானும் அதே அளவு ரசித்தேன். 

புஷ்பா, கேஜிஎஃப் 2 ஆகிய இரண்டு படங்களையும் கூட சிலாகித்தே எழுதினேன்.  விக்ரமோடு ஒப்பிட்டால் கேஜிஎஃப் ஒன்றுமே இல்லை.  கேஜிஎஃப்பில் பார்த்த பாராளுமன்றத்துக்குப் போய் வில்லனை ஹீரோ போட்டுத் தள்ளுவது போன்ற முட்டாள்தனங்கள் எதுவும் விக்ரமில் இல்லை.  அதற்காக விக்ரமை ரொம்ப தர்க்கபூர்வமான படம் என்று சொல்லி விட முடியாது.  விக்ரம் ஒரு பக்கா வணிக சினிமா.  ஆனாலும் விக்ரமை ஏன் பாராட்டத் தோன்றுகிறது என்றால், இங்கே பலருக்கும் வணிக சினிமா கூட எடுக்கத் தெரியவில்லை.  எழுத்தாளர்கள் பாராட்டும் பல படங்களை என்னால் பத்து நிமிடம் கூடப் பார்க்க முடியவில்லை.  உ-ம்.  சூர்ரைப் போற்று, ஜெய் பீம். 

கில்லி, பாட்ஷா போன்ற படங்களில் இருந்த ரசிக்கத் தகுந்த காட்சிகள் எதுவுமே விக்ரமில் இல்லை.  ஏனென்றால், மக்களின் ரசனை மாறி விட்டது.  இப்போது கதை தேவையில்லை.  லாஜிக் தேவையில்லை.  கதை, கதாநாயகி, நகைச்சுவை, டூயட் எதுவுமே தேவையில்லை.  (அதையெல்லாம் ரஜினியே வைத்துக் கொண்டு அழட்டும்!)  மக்களுக்குத் தேவை, பிரம்மாண்டமான காட்சிகள். பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள்.  வெட்டுக் குத்து.  ரத்த ஆறு.  பிஸ்டல் எல்லாம் காணாமல் போய் இப்போது அதன் இடத்தை பீரங்கி பிடித்துக் கொண்டது.  சுதந்திர தினத்தின் ராணுவ அணி வகுப்பில்தானே மக்கள் பீரங்கிகளை பார்த்திருக்கிறார்கள்? அவர்கள் அதை எப்போதுதான் சினிமாவில் பார்ப்பது?  கேஜிஎஃப்பில் எல்லோருமே ஒசாமா பின் லாடன் மாதிரி நீண்ட தாடி வைத்திருந்தார்கள்.  அதனால் பல சமயங்களில் எனக்கு யார் ஹீரோ என்றே சந்தேகம் வந்து விட்டது.  அந்தப் பிரச்சினை விக்ரமில் இல்லை.  கமலின் தடிமனான புருவமும் அகன்று விரிந்த பெரிய கண்களும் கேஜிஎஃப் தாடியின் வேலையைச் செய்து விடுகின்றன.  போதாக்குறைக்கு கண்களின் கீழே பெரிதாக கருப்பு மை வேறு இட்டுக் கொள்கிறார் கமல். 

ஒரு விஷயத்தில் விக்ரமை தமிழ் சினிமாவின் மைல்கல் என்று சொல்லலாம்.  விக்ரம் ஒரு ஃபார்முலாவை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது.  இதுவரையிலான வெற்றிப் படங்களின் அடையாளங்கள் எல்லாவற்றையுமே அழித்து விட்டு, விக்ரம் ஒரு புதிய ஃபார்முலாவைத் தருகிறது.  படத்தில் எதுவுமே புரிய வேண்டாம்.  கதையே வேண்டாம்.  ஆனால் யாராவது யாரையாவது கொலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.  அதுவும் பிரம்மாண்டமாக.  பெரிய அளவில்.  கொலை என்றால் ஒரு பத்து இருபது பிணம் விழ வேண்டும்.  ஒரு கொலை என்றால், கால் தனியாகப் போய் கிடக்க வேண்டும்.  அதை க்ளோஸப்பில் காண்பிக்க வேண்டும்.  ஒரு காட்சியில் ஃபகத் ஃபாஸிலின் மனைவியின் கழுத்தை வில்லன்கள் வெட்டி எறிந்து விடுகிறார்கள்.  தலையில்லாத முண்டம் காரில் ஒரு பொம்மை போல் உட்கார்ந்திருக்கிறது.  பொம்மை என்றும் நன்றாகவே தெரிகிறது.  ஆனால் அது பற்றியெல்லாம் நமக்குக் கவலை இல்லை.  காரணம், படம் விடியோ விளையாட்டுகளைப் போல் ஜெட் வேகத்தில் ஒடுகிறது.  நாமும் சேர்ந்து அதனோடு ஓடுகிறோம்.  அவ்வளவுதான் எனக்குத் தேவை. 

இப்படிப்பட்ட படத்துக்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும் இசை.  இப்படிப்பட்ட இசையை இளையராஜா அமைத்திருக்க முடியாது.  அவருக்கு இது தெரிந்திருக்கவே நியாயம் இல்லை.  உலகம் பூராவும் உள்ள மதுபான நடன அரங்குகளில் (பப்) இம்மாதிரி இசைதான் ஒலிக்கிறது.   இம்மாதிரி இசையின் அடிமை நான். 

The little things என்று ஒரு க்ரைம் த்ரில்லர் படம்.  அப்படி ஒரு க்ரைம் த்ரில்லர் படம் இது வரை வந்ததே இல்லை.  முடிச்சே அவிழாத மர்ம நாவலைப் போன்ற ஒரு படம் அது.  படத்தின் இறுதியில் மேலும் பல முடிச்சுகள்தான் விழுகின்றன.  Collateral என்று ஒரு படம்.  அதுவும் ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் படம்தான்.  ஆனால் அதில் வில்லன் டாம் க்ரூஸும் டாக்ஸி டிரைவர் ஜேமி ஃபாக்ஸும் பேசிக் கொள்ளும் இடங்களெல்லாம் ஒரு ஐரோப்பியக் கலைப் படத்தைப் பார்ப்பது போல் இருக்கும்.  அப்படியெல்லாம் விக்ரமில் எந்த இடமும் இல்லை. 

ஒரே ஒரு இடத்தைச் சொல்லலாம்.  விக்ரம் தன் மகனின் மரணத்துக்காக வில்லன்களைப் பழி வாங்குகிறாரா என்று ஒருவரின் கேள்விக்கு விக்ரம் சொல்லும் பதில், புதுமைப்பித்தன் இந்தத் தமிழ்ச் சமூகத்தைப் பார்த்து சொன்னது.  நான் ஒரு நூறு முறை எழுதினது.  ”இங்கே தமிழ்ச் சூழலில் ஒரு எழுத்தாளனின் வேலை கதை எழுதுவது அல்ல, சி.சு.செல்லப்பாவிடமிருந்து தொடங்கி இங்கே நடப்பது ஒரு கெரில்லா போர்…” என்று நான் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறேன்.  அதைத்தான் தானும் செய்வதாக விக்ரம் சொல்கிறான். 

இந்தப் படத்தைப் பார்த்து விட்டு சினிமா ரசிகர்கள் தெரிவித்த மதிப்புரைகளிலேயே ஆகச் சிறந்த்தாக நான் கருதுவது “ங்கொம்மால… ங்கொம்மாலப் போட்றாண்டா…” என்று ஒரு ரசிகர் பரவசத்தின் உச்சத்தில், வெறியில் சொன்னதுதான்.  தன் பரவசத்தை வெளிப்படுத்துவதற்கு அவரிடம் வார்த்தைகள் இல்லை.  தமிழ்ச் சமூகத்திடமும் இல்லை.  தமிழ் வெறும் பேச்சு மொழியாக மாறி கால் நூற்றாண்டு ஆகி விட்டது.  வேற லெவல், ங்கொம்மால என்று லும்பன்கள் பேசலாம்.  ஆனால் ஒட்டு மொத்த சமூகத்தின் வார்த்தை வளமே இவ்வளவுதான்.  எனவே இவர்களுக்கான படம் இப்படித்தான் இருக்கும்.  படத்துக்கான மதிப்புரையும் ங்கொம்மால போட்றாண்டா மாதிரிதான் இருக்கும்.

நான் கிண்டலாக எழுதி விக்ரமைத் தாக்குவதாக உங்களுக்குத் தோன்றினால் நான் பொறுப்பு அல்ல.  படம் உண்மையிலேயே எனக்குப் பிடித்திருந்த்து.  நான் நாள் பூராவும் கடுமையான மூளை உழைப்பில் ஈடுபடுபவன்.  பொழுதுபோக்குக்கு என்று போய் அங்கேயும் சிந்தனை செய்து மண்டையை உடைத்துக் கொள்ளும் அளவு எனக்குப் பொறுமை இல்லை.  லும்பன்களுக்கான படத்தை நானுமே லும்பனைப் போல்தான் பார்த்து ரசிக்கிறேன்.  அன்பே வா என்ற படத்தை அக்காலத்திய தமிழர்கள் சுமார் இருபது முறையாவது கண்டு களித்திருப்பார்கள்.  அந்தக் காலமும் அந்த ரசனையும் காலாவதியாகி விட்டன.  இப்போதைய ரசனை விக்ரம்தான்.  ஒரு சண்டை என்றால் முந்நூறு பேராவது சாக வேண்டும்.  கால் தனி, கை தனி, தலை தனி என்று ஆக வேண்டும். 

இதனோடு சேர்த்துப் பார்க்க வேண்டிய இன்னொரு விஷயம், சிகரெட்.  கேஜிஎஃப்பில் எல்லோரும் சிகரெட் அடிக்கிறார்கள்.  அடிக்காதவர்கள் ஹீரோயினும் பிறந்த குழந்தையும்தான்.  விக்ரமிலும் அதேபோல் எல்லோரும் சிகரெட் குடிக்கிறார்கள்.  கமல், சூர்யா எல்லோரும்.  அநேகமாக சூர்யா சிகரெட் குடித்து நடிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.  இந்த சிகரெட் எதன் குறியீடு என்று தெரியவில்லை.  சிகரெட், பீரங்கி எல்லாம் phallusஇன் குறியீடு என்கிறார் என் நண்பர் ஸ்ரீராம்.  ஃப்ராய்ட் எல்லாம் எனக்கு மறந்து விட்ட்து.  ஆனாலும் படத்தில் எல்லோரும் சிகரெட் குடிப்பது என் மனதில் ஆழமாகத் தங்கி விட்டது.  ரஜினி படத்தில் குடித்த சிகரெட்டுக்கு டாக்டர் போராட்டமே நடத்தினார்.  இப்போதய விக்ரமில் வரும் அத்தனை பேருமே சிகரெட் குடிக்கிறார்கள்.  ஒன்றுமே நடக்கவில்லை.  அதுதான் சரியும் கூட.  இப்படியெல்லாம் தடை போட்டுக் கொண்டிருந்தால் கலையும் வளராது, பொழுதுபோக்கும் வளராது. 

விக்ரமின் வசூலையும் தாண்டக் கூடிய ஒரு படம் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.  கற்பனை செய்ய முடியவில்லை.   ஆனால் கமலே படத்தில் க்ளூ கொடுக்கிறார்.  ”டேய், குரங்கிலிருந்து மனிதனாக மாறுவதற்குப் பல லட்சம் ஆண்டுகள் ஆயிற்று. இப்போது மீண்டும் குரங்காக மாறுவேன் என்று அடம் பிடிக்கிறீர்களே, இது நியாயமா?”

கமலிடம் யாராவது சொன்னால் நல்லது.  ஏற்கனவே தமிழர்கள் அந்தத் திசையை நோக்கி வெகுவேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.   ரஜினியின் பிறந்த நாள் அன்று ரஜினி ரசிகர்கள் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்தால் நமக்கு அது புரியும்.  இப்போது விக்ரமுக்கு ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் (அடியேன் உட்பட) கொடுக்கும் வரவேற்பு கமல் படத்தில் சொன்னதை உறுதிப்படுத்தவே செய்கிறது.