வீட்டில் அவந்திகா இருக்கும் போது நான் போன் பேசுவதில்லை. எனக்கு வரும் அழைப்புகளுக்கும் ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பதில். இப்படி இருப்பதற்கே அவந்திகா அடிக்கடி சொல்லும் புகார், நான் எப்போதும் போன் பேசிக் கொண்டே இருக்கிறேன் என்பது. ஒரு முழு நாளிலும் சீனியோடு நாலு நிமிடம் பேசினால் பெரிது. வேறு யாரோடும் பேசுவதில்லை. ஒரே ஒரு நாள், நம் வளன் பாதிரியார்தானே, பேசினால் என்ன பிரச்சினை வரப் போகிறது என்று அவன் அழைத்தபோது எடுத்தேன். 95 வயதுக்கு மேல் ஆன ஒரு அமெரிக்கர் “தனியாக இருப்பது சலிப்பாக இருக்கிறது” என்று வளனிடம் அடிக்கடி சலித்துக் கொள்வது பற்றி அவன் ஒரு கதை போல் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
யார்ப்பா அது என்றாள் அவந்திகா.
சொன்னேன்.
ஆ, நாம் இருக்கும் எக்கங்கர் அமைப்பில் இது எல்லாம் தடை செய்யப்பட்டிருக்கிறது, மற்றவர்களின் பிரச்சினைகளை நாம் செவி கொடுத்துக் கேட்கலாகாது. நம் பாவக் கணக்கில் அது சேரும்.
இதையே ஒரு பத்து நிமிடம் விளக்கினாள். இனிமேல் வளனிடமும் பேசக் கூடாது என்று முடிவெடுத்தேன்.
அவந்திகா ஊருக்குப் போய் இப்போது இரண்டு வாரம் ஆகிறது. யாரிடமிருந்தும் ஒரு ஃபோன் அழைப்பு இல்லை. அன்னபூரணிக்கு எப்போதும் வேலை. ஆனந்திக்கும் எப்போதும் வேலை. ப்ரியாவுக்கு உடம்பு சுகம் இல்லை. உடம்பு சுகம் இல்லாமல் போகும் என்பது எனக்கு முன்பே தெரிந்து விட்டது. ஒருநாள் அவர் என்னோடு பேசும்போது “எனக்கு இதுவரை ஜுரமே வந்ததில்லை, ஜலதோஷம் தலைவலி எதுவுமே வந்தது இல்லை” என்றார். ஆ, இப்படிப் பேசக் கூடாதே, நாளைக்கே வந்து தொலைக்குமே என்று நினைத்தேன். மறுநாளிலிருந்து பேசக் கூட முடியாத அளவுக்கு ஜுரம். முதல் முறையாம். நான் அவரிடம் பூரான் கதையைச் சொன்னேன். ஏற்கனவே எழுதியிருக்கிறேன். டார்ச்சர் கோவிந்தனைக் கூப்பிட்டுப் பேசலாம் என்றால் அவருக்கும் உடம்பு சுகம் இல்லை. வினித்தை அழைத்தேன். எது கேட்டாலும் லொக் லொக் என்றே பதில் சொன்னார். என்ன ஆச்சு? ஜுரம், இருமல். புதிதாகக் கண்டெடுத்த நண்பர் ஒளி முருகவேளுக்கு ஃபோன் போட்டேன். ஒளிப்பதிவாளர். அவருக்கும் உடம்பு சரியில்லை. அதன் காரணமாக, படப்பிடிப்பு ஒரு வாரம் ஒத்திவைப்பு.
எட்டரை மணி ஆகி விட்டால் பார்க்கிலிருந்து பின்னங்கால் பிடறியில் அடிக்க வீட்டுக்கு ஓடி வருவேன். இப்போது கொஞ்சம் ஆசுவாசமாகத் திரும்பலாம். ஒன்பதரை மணிக்குத்தான் பணிப்பெண் வருவார். ஆனால் பார்க்குக்கு ராகவன் வருவதில்லை. அதனால் எட்டு மணிக்கே வீடு திரும்பி விடுகிறேன்.
ஒருநாள் இரவு ஒன்பதரை மணிக்கு ஆத்மார்த்தியை அழைத்தேன். போனில் சார்ஜ் இல்லை, காலையில் அழைக்கிறேன் என்று மெஸேஜ் வந்தது. எனக்கு கோபி கிருஷ்ணன் ஞாபகம் வந்து விட்டது. அவர் அழைத்து, நான் போகாமல் இருக்க, ஆள் மேலே போய் விட்டார். ஆத்மார்த்திக்கு பதில் மெஸேஜ் அனுப்பினேன். காலைக்குள் நான் உயிரோடு இல்லையானால் என்ன செய்வீர்? ஆத்மார்த்தியிடமிருந்து பதில் இல்லை. மறுநாளும் அவர் பேசவில்லை. நானும் மறந்து போனேன். இரண்டு தினங்கள் கழித்து இருவருமே மிகுந்த நட்புடன் பேசிக் கொண்டோம். ஔரங்ஸேப் பிரதியைச் செப்பனிடும் நால்வரில் ஒருவர்.
இதற்கிடையில் ஒரு நண்பரிடம் தனியாக வேலை செய்வது அலுப்பாகத் தெரிகிறது என்றேன். அதற்கு அவர், சிறைச்சாலையில் கண்டவனிடமும் அடி உதை வாங்கிக் கொண்டு இருப்பவனை அரண்மனையில் கொண்டு வந்து விட்டால், அவனுக்கு அது சலிப்பாகத்தான் தெரியும். இதற்குத்தான் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரம் என்பார்கள் என்றார்.
இன்றிலிருந்து ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் வேலை செய்ய வேண்டும் என்று பிரதிக்ஞை செய்து கொண்டேன்.