கருப்பு நகைச்சுவையும் சுய பகடியும் கலந்த கதைகள் : ந. முருகேச பாண்டியன்

1981ஆம் ஆண்டு, கோவை மாநகரில் நடைபெற்ற ‘இலக்கு’ கருத்தரங்கில், ‘சாரு’ என்று அழைக்கப்படுகிற சாரு நிவேதிதாவை முதன்முதலாகப் பார்த்தேன். மதுரை நிஜ நாடக இயக்கம், கருத்தரங்கில் நடத்திய வீதி நாடகங்களில் நடிப்பதற்காக நானும் போயிருந்தேன். தீவிரமான இடதுசாரிப் பின்புலத்தில் பல்வேறு தரப்பினர் பங்கேற்ற அந்தக் கருத்தரங்கு அரசியல்ரீதியில் முக்கியமானது. மாறுபட்ட தோற்றத்தில் கவர்ச்சிகரமாக விளங்கிய இளைஞரான சாருவின் உடல்மொழியும், கருத்தரங்கில் தீவிரமாக எதிர்வினையாற்றிய செயலும் பல்கலைக்கழக மாணவனான எனக்குப் பிடித்திருந்தன.

அன்றைய காலகட்டத்தில் கணையாழி பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த சாருவின் ’முள்’ கதை வித்தியாசமான கதைசொல்லல் காரணமாக, பலருடைய கவனத்தையும் கவர்ந்திருந்தது.

அதன்பின் வெளியான சாருவின் ‘கிரிக்கெட்டை முன்வைத்துப் புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொல்லிக்கொண்டது’, ‘கர்நாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின்மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும்’, ‘நேநோ’ போன்ற கதைகள், இறுகிக் கெட்டிதட்டியிருந்த தமிழர் மனங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மாறுபட்ட மொழியில் விரிந்திடும் கதைசொல்லலும், கதையாடலில் பொதிந்திருக்கிற பாலியலும், வன்முறையும் தமிழில் இதுவரை சொல்லப்பட்ட கதைப்போக்கை மறுதலித்தன.

அதேவேளையில், சாருவின் தடாலடியான விமர்சனங்களும், வித்தியாசமான நாடக முயற்சிகளும், இலக்கியக் கூட்டத்தில் அதிரடியான பேச்சுகளும் அவரை கலகக்காரனாகச் சிறுபத்திரிகை சார்ந்த இலக்கிய உலகில் கட்டமைத்தன. அன்றைய காலகட்டத்தில், சிறுபத்திரிகைக்காரன் என்றால் கலகக்காரன் என்ற பிம்பம் உருவாவதற்குச் சாருவும் அவருடைய சகாக்களும் ஒரு காரணம்.

அதற்குப்பின்னர் ஜீரோ டிகிரி முதலான நாவல்கள், வித்தியாசமான கட்டுரைகள் எனச் சாரு எழுதிய எழுத்துகள், அவருடைய ‘கலகக்காரன்’ பிம்பத்திற்குப் பொருந்திப்போயின.

அவ்வப்போது அரசியல், திரைப்படம் தொடர்பாகச் சாரு தெரிவிக்கிற முரண்பாடான கருத்துகள் காரணமாக, அவரை அராஜகவாதியாகச் சிலர் கருதுகின்றனர்.

அண்மையில், சாரு எழுதிய சிறுகதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்தபோது, சிறுகதை உலகில் அவருடைய தனித்துவம் புலப்பட்டது. எழுபதுகளில் நட்சத்திரமாக மின்னிய சிலரின் சிறுகதைகளை இன்று மறுவாசிப்புள்ளாக்கும்போது அலுப்பாக இருக்கிறது. முன்னர் கொண்டாடப்பட்ட சில படைப்பாளர்கள் இலக்கிய வரலாற்றில் பெயர்களாகக்கூட இடம்பெறாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ந. முருகேச பாண்டியன்

சாருவின் இலக்கிய பிம்ப ஆளுமையில், சிறுகதைகள் ஒப்பீடற்றவை என்று தொடக்கத்திலே சொல்வதில் எனக்குத் தயக்கம் எதுமிவுமில்லை.

சாரு என்ற பெயர் பொதுப்புத்தியில் உருவாக்கியிருக்கிற கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு அவர் எழுதியுள்ள 63 கதைகளை வாசிக்கும்போது ஏற்படுகிற அனுபவங்கள்தான் முக்கியமானவை.

சாரு, இலக்கிய உலகில் நுழைந்த எழுபதுகள் காலகட்டம், அரசியல்ரீதியில் நெருக்கடியானது. இந்தியாவெங்கும் நக்சல்பாரி இயக்கத்தில் சேர்ந்து புரட்சிக்கான ஆயத்தங்களில் ஈடுபட்ட இளைஞர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருந்தது. காங்கிரஸின் ஆட்சியதிகாரத்தில் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலையானது நாடெங்கும் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக, படித்த இளைஞர்களிடையில் ஒருவிதமான நம்பிக்கை வறட்சியும் விரக்தியும் நிலவின. இத்தகைய சூழலில் எழுதத் தொடங்கிய சாரு, அன்றைய பெரும்பான்மையான இலக்கியவாதிகளைப் போலவே இடதுசாரிக் கருத்தியலில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது அவருடைய புனைவு எழுத்துகளில் வெளிப்பட்டுள்ளது.

புதுதில்லியில் அரசு அலுவலகத்தில் பணியாற்றியபோது எதிர்கொண்டிருந்த பொருளியல் சிக்கல்கள் ஒருபுறமும், சராசரி தமிழர் சமூகப் பண்பாட்டு வாழ்க்கையுடன் பொருந்திப்போகவியலாமல் குழம்பிய மனநிலை இன்னொருபுறமும் எனச் சாரு உழன்றுகொண்டிருந்தார். அதுவரை, எழுத்து எனில் ஒருவகையான புனிதப்பொருள் என்ற பிரேமையைச் சிதிலமாக்கி, விளிம்புநிலையினர்குறித்து கலக மொழியில் எழுதிய சாருவின் புனைவெழுத்துகள் விவாதிக்கப்பட வேண்டியவை.

சாருவின் கதையாடலில் முக்கிய அம்சங்களாகச் சுய பகடியும், அங்கதமான விவரிப்பும் தொடர்ந்து வெளிப்படுகின்றன. இக்கட்டான சூழலில்கூட விலகி நின்று, தன்னை அந்நியனாக பாவித்துச் சொல்லப்பட்டுள்ள மொழியில் சாருவின் கதைகள், வெளியெங்கும் மிதக்கின்றன. குழப்பமும் நெருக்கடியும் நிரம்பிய சூழலிலும் சாரு புனைந்திடும் எள்ளல் என்பது ஒருவகையில் உளவியல் மருத்துவர் ஃபிராய்டு குறிப்பிட்டிருக்கிற கருப்பு நகையுணர்வுதான் (Black Humour). மனிதனின் அகத்தில் அடங்கியொடுங்கி நினைவிலி நிலையில் பொதிந்திருக்கிற அச்சமானது, நரம்புகளை அதிரச்செய்யும் நகையுணர்வாக மாற்றீடு செய்யப்பட்டு வெளிப்படுவது கருப்பு நகைச்சுவையின் ஆதாரமாகும். சூழலில் ஆதிக்கம் செலுத்துகிற அதிகாரம் அல்லது வன்முறையின் கசப்பை புனைவு மொழியின்மூலம் மெல்லிய நகைச்சுவையுடன் வாசகரின் மனதில் உறையச்செய்கிற செயலைச் சாருவின் கதைகள் செய்கின்றன.

கிரிக்கெட்டை முன்வைத்துப் புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொல்லிக்கொண்டது கதை, எழுத்தாளன் என்றநிலையில் தன்னை முன்வைத்து சூழலைப் பகடிக்குள்ளாக்குகிறது. தொடர்ச்சியறு முறையில் சொல்லப்பட்டுள்ள பிரதியானது, பின்னப்பட்ட நிலையில் வேறுபட்ட தளங்களில் விரிந்துள்ளது. தில்லி வாழ்க்கை, எழுத்துச் சூழல், பாலியல்குறித்த பேச்சுகள் எனப் பல்வேறு தகவல்களால் ததும்பிடும் கதைகள் மேலோட்டமாக கேலியான தொனியில் புனையப்பட்டாலும். புதைநிலையில் கருப்பு நகைச்சுவை வெளிப்படுகிறது.

இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, தில்லியில் சீக்கிய இனத்தவர்மீது நடத்தப்பட்ட வன்முறையும் கூட்டக்கொலையும் அராஜகமும் குறித்துத் தமிழகத்தில் வாழ்கிற தமிழர்கள் விரிவாக அறியாதவர்கள். வகுப்புக் கலவரத்தின்போது நடந்த வன்முறையானது மனித உடல்கள்குறித்த பிரக்ஞையை குறிப்பிட்ட எதிர்பிரிவினரிடம் அழித்துவிட்டது. இந்து மதத்தை முன்னிறுத்தி வெறியூட்டப்பட்ட உடல்கள், ஏதோ ஒருவகையில் எதிராகப் புனையப்பட்ட அப்பாவி உடல்களை அழித்தொழிப்பது என்பது வரலாற்றின் கொடூரமாகும். இந்து மதத்தின் வன்முறை அடையாளம் உக்கிரத்துடன் வெளிப்படும் பிளாக் நம்பர் 27: திர்லோக்புரி என்று சாரு விவரித்துள்ள கதையானது, தமிழ்க் கதையாடலில் இதுவரை யாரும் எழுதிடாத தளத்தில் விரிந்துள்ளது. மதமானது, கலவரம் என்ற பெயரில் தீயில் கரியாக்கிய மனித உடல்களைத் தெருவில் வீசிக்கொண்டிருந்த சூழலில், சீக்கியர்களைத் தங்களுடைய வீட்டில் ஒளித்துவைத்துப் பாதுகாத்திட்ட இந்துக்களின் செயல்கள் கவனத்திற்குரியன. ஏன், இப்படி மனிதர்கள், சக மனிதர்கள்மீது ஏதோவொரு அடையாளத்தைச் சுமத்தி, கையில் பெட்ரோல் டின்னுடன் தெருக்களில் அலைந்து, உயிருடன் தீயிலிட்டுக் கொளுத்திடத் துடிக்கின்றனர் என்று வாசிப்பின்வழியாகச் சாரு எழுப்பியுள்ள கேள்வி, இன்றைக்கும் பொருந்துகிறது.

சங் பரிவாரங்கள் காவிப் பின்புலத்தில் எந்தக் கணத்திலும் அதுபோன்ற கூட்டக்கொலைகளில் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்திருக்கிற இன்றைய சூழலில், நிகழவிருக்கிற அபாயங்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? இந்தியா போன்ற நாட்டில் நிலவும் பன்முகப் பண்பாடுகளை அழித்தொழித்து, ஒற்றைத்தன்மையை உருவாக்கிட முயலுகிற மத அடிப்படைவாதிகள் செய்கிற செயல்களுக்கு எதிரான மனநிலையைச் சாருவின் பிளாக் நம்பர் 27: திர்லோக்புரி,, வெகுஜனத்தளத்தில் உருவாக்கிடும் வல்லமையுடையது. மதங்களின் அதிகாரம் இருக்கிறவரையில், சாருவின் பிளாக் நம்பர் 27: திர்லோக்புரி கதை, மனிதகுல மேம்பாட்டுக்கு அவசியமானதாகும். ஒவ்வொரு உடலுக்குள்ளும் இருக்கிற புனிதமான ஆன்மா குறித்தும், விண்ணுலகில் இருக்கிற பாசாங்குக்காரரான கடவுள்குறித்தும் இந்தியத் தத்துவங்கள் சித்திரிக்கிற புனைவைச் சாருவின் கதைகள் புறக்கணிக்கின்றன.

உடல்தான் முதன்மையானது என்ற அடிப்படையில் உடலின் வலிகள், வதைகள், காதல், காமம், துக்கம், ஏக்கம், வெறுப்பு போன்ற மன உணர்வுகளின் பின்புலத்தில் சாருவின் கதைகள் விரிந்துள்ளன. புலன்களை ஒடுக்கி, ஆன்மாவின் விடுதலையை முன்னிறுத்துகிற மதங்கள், யதார்த்தத்தில் உடல்களை வன்முறையால் சிதலமாக்குகின்றன.சாருவின் ’முள்’ கதை, பதின்ம வயதான இளைஞனின் மனவோட்டத்தில் விரிந்துள்ளது. இளம்பிராயத்தில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முன்னர் நடைபெற்ற சம்பவங்கள் உருவாக்கிடும் மனப்பதிவுகள் ஒருபோதும் அழிவதில்லை. நினைவின் பறவை விரிக்கிற சிறகின் நிழல், புனைவாக மனதில் ததும்புகிறது. எல்லாம் கதைகளாக உருமாறும் விந்தையில் கதைசொல்லியுடன் வாசகனும் பயணிக்கிறான். கதைமாந்தரின் அனுபவம் என்பது வாசிப்பின்வழியாக கூட்டுக் கற்பனையால் ஏதோ ஒருவகையில், உண்மையான மனிதராக மாறிடும் அற்புதம் நிகழ்கிறது. காலங்காலமாக, கதைகளில் இடம்பெறுகிற கதைமாந்தர்கள்மீது அளவற்ற உணர்ச்சிகளை முதலீடு செய்வதுடன், வாசகர்கள் பலரும் அரைமயக்கத்தில் கதைமாந்தருடன் சேர்ந்து கதைமாந்தராகவே வாழ்கிற நிலை ஏற்படுகிறது. அன்றாட வாழ்வில் ஒருவரின் நடத்தையைத் தீர்மானிக்கிறவகையில் கதைமாந்தர்கள், சொற்களுக்கு இடையில் எங்கோ வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

‘முள்’ கதையில் வருகிற பதின்ம வயதான கதைசொல்லியுடன் வாசகரும் சேர்ந்துகொள்வது இதனால்தான். அத்தையின்மீது ஏற்படுகிற ப்ரியம் பூவைப்போல மென்மையானது. கதைசொல்லியின் தொண்டைக்குள் சிக்கிய கோலா மீனின் முள் என்பது குறியீட்டுநிலையில் உள்ளது. அற்பமான சம்பவம் எனினும் மனம் புனைகிற புனைவானது அத்தையை முன்வைத்து விரிந்திருப்பது, சாருவின் தொடக்ககாலக் கதைசொல்லலுக்குச் சான்றாகும். காதல் என்ற ஒற்றைச்சொல்லின்மூலம் சமூகம் புனைகிற புனைவின் பின்னர் பொதிந்திருக்கிற நுண்ணரசியல் முக்கியமானது.

சாரு, காதல் என்ற சொல்லின் பின்னர் பொதிந்திருக்கிற உலகை அவதானிப்பது சுவராசியமானது. ‘என் முதல் ஆங்கிலக் கடிதம்’ கதையானது, தமிழ் பேசத்தெரிந்த அமெரிக்கப் பெண்ணான பார்பராவிற்கும் கதைசொல்லிக்கும் இடையிலான உறவானது மெல்லிய காதல் என்ற இழையில் அற்புதமாகச் சொல்லப்பட்டுள்ளது. பார்பரா ஒரு கனவு என்று நினைப்பில் மூழ்கியிருக்கிறவனின் நினைவுகள் கொப்பளித்துக் கொண்டேயிருக்கின்றன. ‘ப்ரிய சிநேகிதிக்கு…’ எனத் தொடங்குகிற கதை, மனதின் அளவற்ற நினைவுகளில் ததும்பிடும் உணர்ச்சிகளின் குவியலாக இருக்கிறது. கண்ணி நுண் சிறு தாம்பு என்ற மதுரகவி ஆழ்வாரின் பாசுர வரி, கதையை வேறு ஒன்றாக மாற்றுகிறது. காலங்காலமாக கடக்கமுடியாத தொலைவில் தத்தளித்திடும் ஆணுக்கும் பெண்ணுக்குமான இடைவெளி விரிந்துகொண்டேயிருக்கிறது. ஒழுங்கு என்று காலந்தோறும் வலியுறுத்தப்படும் முறைமையில் அதிகாரம் நுட்பமாகச் செயல்படுவதால், மொழியால் உருவாக்கப்படுகிற பிரதியைக் கலைத்துப்போடுகிற அரசியல் சாருவின் கதைகளில் வெளிப்பட்டுள்ளது.

அதிகாரம் என்பது மெல்ல பாசிசத்திற்கான உடல்களைத் தயாரிக்கிற பணியை நுட்பமாகச் செய்வதால், பிரதியைக் கலைத்துப்போட்டு உருவாக்குகிற எழுத்துமுறையை மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள், கிரிக்கெட்டை முன்வைத்து புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொல்லிக்கொண்டது, நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டுவந்தவர்களும் பிணந்தின்னிகளும், பிணவறைக் காப்பாளன் போன்ற கதைகளில் சாரு பின்பற்றியுள்ளார்.

குடும்ப அமைப்பில் ஆண் மேலாதிக்கச் சூழலில் குடும்பத்தினரின் பாலியல் விழைவுகளையும் வேட்கைகளையும் எப்பொழுதும் கண்காணிப்புக்கு உள்ளாக்குகிற அரசியல், தமிழர் வாழ்க்கையில் எப்பொழுதும் மேலோங்கியுள்ளது. இன்னொருநிலையில் நிறுவனங்களின் சட்டக வரம்புக்குட்பட்ட உடல்களை உருவாக்குகிறநிலையில், மனிதனின் இயல்பான செயல்பாடுகளை விலக்காக மாற்றுகிற மொழியின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது. வெறுமனே வசவுச்சொற்களாக வெளிப்படுகிற சொற்களின் பின்னால் இருக்கிற அசுத்தம், அழுக்கு, கபடம், தந்திரம், அபத்தம்குறித்து வெவ்வேறு அலைவரிசையில் உருவாக்கப்பட்ட புனைவுகளைச் சித்திரிப்பதன்மூலம் சாருவின் கதையாடல் முடிவிலியாக விரிகிறது. பாலியல் என்பது பேசாப் பொருளாகக் கட்டமைக்கப்பட்டு, உடல்களின்மீது செலுத்தப்படுகிற அதிகாரம், ஒருநிலையில் அறத்தை வலியுறுத்துகிறது. இதிலிருந்து விடுபட விழைகிற மனிதனின் மனம் பாலியல் பிறழ்வுகளில் கவனம் செலுத்துகிறது.

சாருவின் கதைகளில் வெளிப்படும் பாலியல் அரசியல், ஒருவகையில் மரபான அழகியலுக்கு மாற்றான பிரதியை உருவாக்கியுள்ளது. நனவிலி மனதில் ஒடுங்கியிருக்கிற பாலியல், வன்முறை உள்ளிட்ட பிறழ்வுகளை அடையாளப்படுத்தி, ஒழுங்கிற்கும் ஒழுங்கின்மைக்கும் இடையில் இருக்கிற மதிப்பீடுகளை அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. எதிர்அழகியல் சொல்லாடல்கள், சாருவின் பாலியலை முன்வைத்த கதைகளில் நுட்பமாகப் பதிவாகியுள்ளன. விளிம்புநிலையினரான அரவாணிகள், மனப்பிறழ்வாளர்கள், பாலியல் பிறழ்வாளர்கள், தெருப்பொறுக்கிகள், கூலிப்படையினர், விலைமகளிர், பூசாரிகள், பிக்பாக்கெட்காரர்கள் போன்றோரும் சேர்ந்துதான் சமூகத்தின் வரலாற்றை உருவாக்குகின்றனர். ஒருநிலையில், சமநிலையை இழந்தவர்களின் குற்றமனம் அற்ற நிலையைப் புரிந்திட முயன்றதன் விளைவுதான் மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள் என வடிவெடுத்துள்ளதா? யோசிக்கவேண்டியுள்ளது. கதையில் இடம்பெற்றுள்ள விவரணைகள், கதையாடலில் சொல்லப்படாத இடைவெளியில் பயணிக்கிற வாசகன், தனக்கான பிரதியை உருவாக்கிக் கொள்கிறான்.

நவீன வாழ்க்கையின் நெருக்கடி, தன்முனைப்பான சுயபிம்பத்தைச் சுய வழிபாட்டுக்குரியதாக மாற்றுகிறது. குறிப்பாக, நுகர்பொருள் பண்பாட்டின் மேலாதிக்கத்தில் எது அசல்? எது நகல்? என்ற பேதம் சிதலமாகியுள்ளது. ஆன்மீகம் என்பது கார்ப்பரேட் சரக்காகிவிட்டநிலையில் தியானம், யோகா போன்ற சொற்களும் அர்த்தமிழந்த பின்புலத்தில், ’இஞ்சி தின்ற குரங்கு’ கதையை வாசிக்கவேண்டியுள்ளது.

திருகல் எதுவும் இல்லாமல், அதிவீரபாண்டியன் எளிய மொழியில் சொல்கிற கதையில் தொனிக்கிற பகடி சுவராசியமானது. ’வாழ்க்கையில் நீங்கள் சில மனிதர்களிடம் பிரியமாக இருப்பதுபோல் நடித்தே ஆக வேண்டும். முகத்திலே இரண்டு விடலாமா என்று தோன்றும். ஆனல் ஹிஹி… என்றுதான் இளிக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் மனைவியின் தங்கை கணவர்’. காலையில் வாக்கிங் செல்கிறவனிடம் மொக்கைபோடுகிற ஆசாமியைச் சமாளித்துக்கொண்டு ‘எல்லாம் ட்டி.ஓ.வி.ஐயா, ட்டி.ஓ.வி (.தலையில் ஓத்த விதி என்பதன் சுருக்கம்) என்று, சுய பகடியை அதிவீரன்மீது ஏற்றிச் சாரு விவரிக்கிற கதையாடல் தற்செயலானது அல்ல. Tell him, not to kill me! என்ற ஆங்கிலத் தலைப்பிலான கதையில், சாரு மனத்தடை இல்லாமல், எள்ளலை முன்வைத்து விவரித்திருப்பது, சமூக அங்கதமாக வெளிப்பட்டுள்ளது. உலகத்திலேயே நகைச்சுவை உணர்வு கம்மியானவர்கள் தமிழர்கள் என்று கதைக்கிற சாரு, ‘இந்த நகரத்துப் பேர்வழிகள் கொஞ்சமும் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்கள். இந்த உலகத்திலேயே மிகப்பெரிய தண்டனை என்னவென்றால், நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களிடம் உரையாடுவதுதான்’ என்று சொல்கிற கதை, கேலியான தொனியில் விரிந்துள்ளது. கதைசொல்லியான சாரு, முன்னர் நெருக்கமாக இருந்த சாந்தகுமார் என்ற நண்பருடன் தற்செயலாக மீண்டும் ஏற்பட்ட தொடர்புகுறித்துச் சொல்கிற கதையில் தொனிக்கிற பகடி, நுட்பமானது. பிரபலமான எழுத்தாளரான சாருவிற்கு மின்னஞ்சல் செய்கிற சாந்தகுமாரைப் பார்த்து அவருடைய எட்டுவயது மகள், சாருவிடம் கேட்டு ஷேக்ஸ்பியரின் மெயில் ஐ.டி.யை வாங்கிக் கொடு என்று கேட்பதை எப்படி புரிந்துகொள்வது? வெறுமனே பகடி மட்டும்தானா?

புதுதில்லி என்ற மாநகரின் பிரமாண்டமான உலகில், அரசாங்க இயந்திரத்தில் குட்டித் திருகாணியாக விளங்குகிற கடைநிலை ஊழியன், டீ குடிப்பதற்காகப் படுகிற பாடுகள், அவல நாடகத்தின் உச்சம். சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கா வந்ததிந்த பஞ்சம் என்று பாடிய பாரதியின் காலத்திற்குப் பின்னர், சாருவின் கதைசொல்லி வெறும் டீ குடிக்க அல்லாடுவதுபற்றிய சாருவின் புனைவு, நிச்சயம் வெறும் கற்பனையல்ல; யதார்த்தச் சித்திரிப்பு.

’வெளியிலிருந்து வந்தவன்’ கதையில் இரவுவேளையில் குடித்துவிட்டு, வீட்டுக் கதவைத் தட்டுகிற சுந்தரம்குறித்த கதைசொல்லியின் மனவோட்டமும் அனுபவமும் ஏற்படுத்துகிற விளைவுக்கு அப்பால் ஜென்னி சொல்கிற வாசகம் முக்கியமானது. தொண்ணூறுகளில் தினமலர் பத்திரிகையில் தொடர்ந்து எழுதத் தொடங்கிய சாருவின் சிக்கனம், பின்தொடரும் நிழல், கையருகே ஆகாயம், காஞ்சனா போன்ற கதைகள் மேலோட்டமான சித்திரிப்புபோலத் தோன்றினாலும் புதைநிலையில் வாழ்க்கைகுறித்த அடிப்படையான கேள்விகளை முன்வைத்துள்ளன. வெறுமனே அனுபவங்கள் என்பதற்கு அப்பால், சாருவின் கதையாடல்கள் புதிய தளங்களில் விரிந்துள்ளன.’பிணவறைக் காப்பாளன்’ சிறுகதை, பல்வேறு கடந்தகாலச் சம்பவங்களையும் மனவோட்டத்தையும் கால ஒழுங்கைச் சிதைத்து, கொலாஜ் பாணியில் விரிந்துள்ளது. ஏன் இப்படி யதார்த்த வாழ்க்கை பின்னப்பட்டு முடிவற்ற துயரங்களில் தோய்ந்திருக்கிறது என்ற கேள்வியை வாசிப்பில் தோற்றுவிக்கிறது.

எந்தவொரு மையமும் இல்லாமல் தொடர்சியற்ற நிலையில் சாரு அடுக்கியுள்ள பிம்பங்கள், சூழலின் மறுபக்கத்தைச் சித்திரித்துள்ளன. வன்முறையும் வதைகளும் நிரம்பிய வெளியில் எல்லோரும் ஏதோவொருநிலையில் பிணவறைக் காப்பாளராக மாறியுள்ளதைக் கதையாடல் நுட்பமாகப் பதிவாக்கியுள்ளது. அரசியல் இன்றி எதுவும் இல்லை எனவும் பிரதியை வாசிக்கலாம். இன்னொருநிலையில் நவீன வாழ்க்கையில் எல்லாம் அபத்தக் கதைகளாகியுள்ளன என்று சொல்வதற்கும் சாத்தியமுண்டு,எழுத்துகளின் வழியாகச் சாரு யாரென்று சித்திரிக்கிற புனைவு உலகம் சவால் நிரம்பியது.

சாரு எழுதியுள்ள கதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது, வெறுப்பினால் பீதியடைய நேரிடலாம்; மனித உடல்கள் எவ்வாறெல்லாம் கொண்டாடப்பட்டன; விலக்கி வைத்துக் கேவலப்படுத்தப்பட்டன; வன்முறைக்குள்ளாக்கப்பட்டன என விருப்பு வெறுப்பு இல்லாமல் புனைந்திருப்பது புலப்படுகிறது. சாரு, மனத்தடை இல்லாமல், தயக்கமின்றிச் சித்திரிக்கிற புனைவுத் தகவல்களால் வாசகரின் சமநிலை பாதிக்கப்படலாம்.

சாரு மனிதர்களின் பழக்கவழக்கம், நம்பிக்கை, உணர்ச்சி, பயம், மகிழ்ச்சி போன்ற ஆதாரமான விஷயங்களை மறுகட்டுமானம் செய்ய முயலுகிறார். ஒவ்வொருவரும் அவரவருக்குள் உற்றுப் பார்த்து, வாழ்வின் விநோதங்களும் மர்மங்களும் நிரம்பிய வெளியில் பயணிக்கத் தூண்டுகிறார்.உலக இலக்கியப் படைப்புகளை ஆர்வத்துடன் வாசிக்கிற சாரு, பிறமொழிப் படைப்புகள் போலத் தமிழிலும் வரவேண்டும் என்ற விருப்பத்துடன் படைத்திருக்கிற சிறுகதைகள் தனித்துவமானவை. பாலியல்குறித்து வெளிப்படையான சொல்லாடல் இல்லாத தமிழ்ச் சமூகத்தில் கர்நாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும், உன்னத சங்கீதம் போன்ற கதைகள், சாருவை விநோதமான Alien ஆக்கிவிட்டன. சாரு எப்படி இதுபோல ஆபாசமாக எழுதலாம் எனக் கொந்தளித்தவர்கள் அதிர்ச்சியுடன் எதிர்க்கதையாடலை உருவாக்கியது தனிக்கதை. சரி, போகட்டும்.

எண்பதுகளில் அறிமுகமான புதிய கோட்பாடுகள் தந்த கொண்டாட்டத்தினால் சாரு எழுதிய அநேர்கோட்டுக் கதைகள், புதிய வகைப்பட்ட கதைசொல்லலுக்கு வழிவகுத்தன. அப்போது முகம்சுளித்த மரபு இலக்கியவாதிகள், சாரு எழுதிய சில கதைகளை முன்வைத்து அவருடைய நுட்பமான பிற கதைகளையும் வாசிக்காமல் புறக்கணித்த செயல்பாடு, ஒருவகையில் அபத்தமானது. புனைவு மொழியின் அதிகபட்ச சாத்தியங்களைச் சோதனை முயற்சியால் கண்டறிந்திட்ட சாருவின் கதையாடல், வழமையான புனைவெழுத்துகளில் இருந்து முழுக்க மாறுபடுகிறது.

பூமியில் மனித இருப்பு என்பது வலிகளும் கொண்டாட்டங்களும், வதைகளும், விநோதங்களும், அமானுடங்களும் நிரம்பிய சூழலில், வாழ்க்கையின் விசித்திரம் நிரம்பிய மறுபக்கத்தைப் புனைவாகியுள்ள சாருவின் சிறுகதைகள், சமகாலத்தின் குரலாக விரிந்துள்ளன.