பொன்னியின் செல்வன் டிக்கட் (ஒரு குறுங்கதை)

காலையில் எங்கள் குடியிருப்பு மேனேஜர் தன் குடும்பத்துக்காக நான்கு பொன்னியின் செல்வன் டிக்கட் ஏற்பாடு செய்து தர முடியுமா என்று என் பத்தினியிடம் கேட்டிருக்கிறார்.  மேனேஜரால்தான் என் அன்றாட வாழ்க்கை பளுவில் தொண்ணூறு சதவிகிதம் குறைகிறது.  நானாவிதமான கடைகளுக்குச் செல்வதிலிருந்து மின்வாரியம், ரேஷன் கடை என்று எல்லா அலைச்சல்களையும் செய்வது அவர்தான்.  பத்தினியும் தன் செல்வாக்கைக் காண்பிப்பதற்காகவோ அல்லது வேறு நல்ல எண்ணத்திலோ நான் சாருவிடம் சொல்லி வாங்கித் தருகிறேன் என்று மேனேஜரிடம் வாக்குக் கொடுத்து விட்டாள்.  விஷயம் என்னிடம் வந்தது.   

நான் சினிமா டிக்கட்டுக்காக எல்லாம் நண்பர்களைத் தொந்தரவு செய்யும் ஆள் இல்லை.  அதே சமயம் என் பத்தினிக்காக எதையும் செய்யத் துணிவேன்.  ஏனென்றால், வீட்டின் லயம் கெடாமல் இருந்தால்தான் என்னால் எழுத முடியும்.  அது பத்தினியின் கையில்தான் இருக்கிறது. 

இருந்தாலும் “என்னால் இதெல்லாம் செய்ய முடியாது, என் மரியாதை என்ன ஆவது?” என்று கேட்டு விட்டு விட்டு விட்டேன்.  ”ஏன், சதாசிவத்தைக் கேட்டால் என்ன?” என்றாள் பத்தினி.  கேட்கலாம்.  சதாசிவம் சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்.  அவரால் முடியும்.  ஆனால் அவரிடமுமே நான் இது போன்ற சில்லறை சமாச்சாரத்துக்காகவெல்லாம் உதவிக்குப் போவதில்லை.  ஆனால் பத்தினிக்காக எதையும் செய்யத் துணிந்தவன் ஆயிற்றே?

சதாசிவத்தை அழைத்து விஷயத்தைச் சொன்னேன்.  அவரோ தற்சமயம் பொன்னியின் செல்வன் டிக்கட் எங்குமே கிடைக்கவில்லை, புக் மை டிக்கட்டில் முயற்சி செய்தால் கிடைக்கும் என்றார். 

அலறி அடித்துக் கொண்டு ஃபோனை வைத்து விட்டேன்.  என்னாலெல்லாம் இந்த ஜென்மத்தில் புக் மை டிக்கட் போடுவது சாத்தியமில்லை.

பத்தினி கேட்டாள்.  விவரம் சொன்னேன்.  ”ஓ, புக் மை டிக்கட்டுல எங்களுக்கு வாங்கத் தெரியாதாக்கும்?  சரி, நீ ஜெயமோகன்ட்ட கேக்க வேண்டியதுதானே?” என்றாள். 

”என்னது, ஜெயமோகன்ட்டயா, உனக்கு ஏதாவது அறிவு கிறிவு இருக்கா?” 

”சரி, நீ கேக்க வேண்டாம்.  நீ பெரிய பிஸ்தா.  நானே கேக்குறேன்.  ஜெயமோகன் நம்பர் குடு.”

அதற்கு நான் சொன்ன பதிலை இங்கே எழுதினால் அப்புறம் தொடர்ந்து ஆட்டோஃபிக்‌ஷன் எழுதுவதில் எனக்குப் பிரச்சினை ஆகி விடும்.