டார்ச்சர் கோவிந்தனிடம் நேற்று நான் பொன்னியின் செல்வன் படம் பார்த்ததை மறைத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால், நேற்று காலையே அவர் படத்தைப் பற்றி ஏகமாய்ப் புகழ்ந்திருந்தார். ஆனால் சினிமா தெரிந்த மற்ற சில நண்பர்கள் ரொம்பவும் எதிர்மறையாகச் சொல்லியிருந்தார்கள். என்னைப் பொருத்தவரை நீங்கள் என்னதான் சொன்னாலும் அது எதுவுமே என்னை பாதிக்காது. எனக்கும் படத்துக்குமான உறவு ஒன்றுதான் நிற்கும். கமல்ஹாசனின் விக்ரம் படத்தையே நான் ஆஹா ஊஹூ என்று பாராட்டவில்லையா? பொழுதுபோக்குப் படம் என்றால் எனக்கு ஜாலியாகப் பொழுது போக வேண்டும், கில்லி மாதிரி. அதேபோல் இருவர் போன்ற சிக்கலான கதை அமைப்பு கொண்ட படங்களும் எனக்கு மிகவும் பிடித்தவைதான். ஒரே நிபந்தனைதான், படம் சுவாரசியமாக இருக்க வேண்டும்.
மறைக்க வேண்டும் என்று நினைத்தும் பொன்னியின் செல்வன் பற்றிப் பேச்சு வந்து விட்டது. நான் நண்பர்களின் எதிர்மறை அபிப்பிராயங்களால் பாதிப்பு அடைந்து விட்டேன் என்றார் டார்ச்சர். இப்படியெல்லாம் டார்ச்சர் கொடுத்தால் நான் திவ்யப் பிரபந்த மொழியில் இறங்கி விடுவேன். டார்ச்சர் உஷாராகி பேச்சை மாற்றி விட்டார். வேடிக்கை என்னவென்றால், கோவிந்தனுக்கு மணி ரத்னத்தின் இருவர் தவிர வேறு எந்தப் படமும் பிடிக்காதாம். ஆனால் பொன்னியின் செல்வனை இப்போது இரண்டாவது முறையாகப் பார்க்கப் போகிறாராம். உலகில் எத்தனையோ விஷயங்கள் எந்த தர்க்க ஒழுங்கிலும் அடங்காமல் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் இது என்று நினைத்துக் கொண்டேன்.
”பென்ஹர் பார்த்தபோது எனக்கு பைபிளில் ஒரு வார்த்தை தெரியாது, ஆனால் பென்ஹரை என்னால் ரசிக்க முடிந்தது. க்ளியோபாட்ரா படத்தைப் பார்த்த போது எனக்கு க்ளியோபாட்ரா என்ற பெயரைத் தவிர வேறு எதுவுமே தெரியாது, ஆனாலும் சஃபையர் தியேட்டரில் மூன்று தினங்கள் தொடர்ந்து போய்ப் பார்த்தேன், சினிமா என்றால் அப்படி இருக்க வேண்டும், கல்கியைப் படிக்காமல் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லையே?” என்று கேட்டார் ராகவன். பிரச்சினையே அதுதான்.
டார்ச்சர் கோவிந்தனும் நானும் இன்று முழுசாக ஒரு மணி நேரம் பொன்னியின் செல்வன் பற்றி காரசாரமாக விவாதம் செய்யும்படி ஆகி விட்டது. அதனால் ஒரு விஷயம் முடிவு செய்து விட்டேன். எப்படியாவது டார்ச்சர் கோவிந்தனை விஷ்ணுபுரம் வட்டத்தில் சேர்க்க வேண்டும். டியர் செல்வேந்திரன், உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி டார்ச்சர் கோவிந்தனை உங்கள் விஷ்ணுபுரம் வட்டத்தில் சேர்த்து விடுங்கள் ப்ளீஸ்.