நோபல்

அன்பின் சாரு!

இந்த ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு Annie Ernauxவுக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு இலக்கியம், வாழ்க்கை குறித்து அதிகம் பேசிய தாங்கள் இதைக் குறித்து ஏதும் சொல்லுங்களேன்…

நன்றி

கொள்ளு நதீம்

ஆம்பூர்.

அன்பு நதீம்,

எட்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் ரவிக்குமாரிடமிருந்து (விடுதலைச் சிறுத்தை) ஒரு தொலைபேசி அழைப்பு.  ”ஒரு ஃப்ரெஞ்ச் எழுத்தாளருக்கு நோபல் அறிவித்திருக்கிறார்கள்.  அவர் எப்படி?” என்று கேட்டார்.  அப்போது நான் பாத்ரிக் மோதியானோ பற்றிக் கேள்விப்பட்டதில்லை.  ஃப்ராங்கஃபோன் இலக்கியத்தில் எனக்குத் தெரியாத எழுத்தாளரே இல்லை.  ஆனால் ஃப்ரெஞ்சுக்காரர்கள் எழுதும் இலக்கியம் அதிகமாகத் தெரியாது.  இருந்தாலும் நோபல் கொடுத்திருக்கிறார்களே என்ற காரணத்தால் மோதியானோவைப் படித்தேன்.  தமிழில் ஒரே ஒரு சிறுகதை எழுதி எழுத்துலகில் நுழையும் ஆரம்ப கட்டத்து இளைஞர் கூட மோதியானோவை விட நன்றாக எழுதுவார்.  கொடூரமான அனுபவம்.  சேற்றில் விழுந்தது போல் உணர்ந்தேன்.  ஒரு நாவலோடு விடக் கூடாது என்று மூன்று நாவல்களைப் படித்தேன்.  எல்லாமே குப்பை.  குப்பை என்ற வார்த்தையை விட மட்டமான வார்த்தையைத்தான் போட வேண்டும்.

நோபல் பரிசு கிடைத்து அறிமுகமானவர்களில் முக்கியமானவர் எல்ஃப்ரீட் ஜெலினக்.  அவர் எழுத்துதான் எனக்கு நெருக்கமானதாக இருந்தது.  பியானோ டீச்சர் ஒரு உதாரணம். 

இப்போதைய உங்கள் கடிதம் எனக்கு ரவிக்குமாரின் தொலைபேசி அழைப்பை ஞாபகப்படுத்துகிறது.

நம்மைப் போன்றவர்கள் உண்மையில் நோபல் பரிசு பற்றிப் பேசவே கூடாது என்று நினைக்கிறேன்.  காரணம், எட்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ஃப்ரெஞ்சுக்கு நோபல் கிடைத்தது.  பத்து ஆண்டு முடிவதற்கு இப்போது இன்னொரு நோபல் ஃப்ரெஞ்சுக்கு.  இதை விட கேவலம் எதுவும் இருக்க முடியாது.  நோபல் பரிசை சர்வதேச விருது என்று சொல்லாமல் ஐரோப்பியப் பரிசு என்றே அவர்கள் அழைத்துக் கொள்ளலாம். 

நோபல் இத்தனை பிரபலமாக இருப்பதற்கு ஒரே காரணம், அதன் பண மதிப்பு.  இந்தியாவில் ஃப்ரான்ஸை விட பணக்கார்ர்கள் அதிகம்.  அவர்களில் ஒருவர் நினைத்தால் நோபலை விட பெரிய இலக்கியப் பரிசை நிறுவலாம்.  5000 கோடி ரூபாய்க்கு வீடு கட்டுவார்களே தவிர இந்தியப் பணக்காரர்களுக்கு வேறு எதுவும் தெரியாது.  அவர்களுக்குத் தெரிந்தது செங்கல்லும், பணமும்தான்.  பாவம், அந்தப் பிச்சைக்காரர்கள் இம்மாதிரி வேலையை செய்ய மாட்டார்கள். 

இப்போது நோபல் வாங்கியிருக்கும் ஆனி எர்னோவை நான் படித்த்தில்லை.  படிக்கவும் போவதில்லை.  நோபலை விட டப்ளின் இம்பாக் விருது மதிப்புக்குரியது.  அதன் குறும்பட்டியல் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.  ஓர்ஹான் பாமுக் நோபல் வாங்குவதற்கு முன் இந்த டப்ளின் இம்பாக் விருதை வாங்கினார். 

டப்ளின் விருதுக்கு ஒவ்வொரு தேசத்திலும் இருக்கும் மதிப்புக்குரிய நூலகம்தான் புத்தகத்தைப் பரிந்துரை செய்ய வேண்டும்.  அமெரிக்காவில் பத்துப் பதினைந்து நூலகங்கள் பரிந்துரை செய்ய முடியும்.  ஆனால் இந்தியாவில் அப்படி ஒரே ஒரு நூலகம்தான் உள்ளதாக டப்ளின் இம்பாக் கருதுகிறது.  இது எல்லாம்தான் வெள்ளையர் ஆதிக்கம் என்கிறேன்.  நம்மவர்கள் நினைத்தால் மாநிலத்திற்கு ஒரு நூலகம் என்று சேர்க்கலாம்.  ஆனால் சொல்லவோ எடுத்துப் பேசவோதான் ஆள் இல்லை.  தில்லியில் உள்ள இண்டியா இண்டர்நேஷனல் செண்டர் நூலகம் மட்டுமே ஆண்டுதோறும் டப்ளினுக்கு நூல்களைப் பரிந்துரை செய்கிறது.  அந்த நூலகம் வங்காளிகளின் ஆதிக்கத்தில் இருப்பதால் ஆண்டு தோறும் வங்காள மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்களே இந்தியாவின் சார்பாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.  நான் மார்ஜினல் மேன் நாவலை நுழைக்க முயன்றேன்.  வங்காளிகளால் அடித்துத் துரத்தப்பட்டேன்.  இந்தியா இண்டர்நேஷனல் செண்டரில் தமிழர்கள் இருந்தால் வைரமுத்துவையும் கமல்ஹாசனையும் (கவிதைகள்) அனுப்பியிருப்பார்கள். 

Incidentally, இந்த ஆண்டு டப்ளின் விருதும் ஒரு ஃப்ரெஞ்சுக்காரருக்கே அளிக்கப்பட்டது.  பரிசுத் தொகை ஒரு கோடி ரூபாய் என நினைக்கிறேன்.  இதை நடத்துவது டப்ளின் முனிசிபாலிட்டியும் டப்ளின் நூலகமும். 

சாரு