தடை

ஆண் பெண் ஜனன உறுப்புகள் பெயர் வருவதால் கார்ல் மார்க்ஸ், காயத்ரி கட்டுரைகள் ஃபேஸ்புக்கில் நீக்கப்பட்டன என அறிகிறேன். ஆனால் மார்க் மார்க் என்று வருகிறது. யார் அந்த மார்க்? ஃபேஸ்புக் முதலாளியா? அவருக்குத் தமிழ் தெரியுமா? இந்தத் தடையெல்லாம் எப்படி நடக்கிறது?

நான் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறேன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே என் நூல்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழில் யாரும் வாசிப்பதே இல்லை என்பதால் தடை செய்யப்படவில்லை. சவூதி அரேபியாவில் எத்தனை பேர் இலக்கியம் படிக்கிறார்கள்? அப்படிப்பட்ட சவூதியிலேயே சவூதி மன்னர் அப்துர்ரஹ்மான் முனிஃபை நாடு கடத்தினார். அவர் நாவலைத் தடை செய்தார். ஆனால் தமிழ்நாடு அநியாயத்துக்கு ஃபிலிஸ்டைன் சமூகம். எதுவுமே நடக்கவில்லை. ஏதோ அதிர்ஷ்டவசமாக இந்து மக்கள் கட்சி புண்ணியத்தில் பெருமாள் முருகனுக்கு அது நடந்தது. அவரும் நியூயார்க்கர் வரை போனார்.

இப்போது பாருங்கள், இந்த மனிதர் மார்க் கெட்டிக்காரராக இருக்கிறார். கார்ல் மார்க்ஸ், காயத்ரி இருவரின் கட்டுரைகளையும் தடை செய்து விட்டார். அந்த இரண்டு கட்டுரைகளும் என் எழுத்து பற்றியது. என்னை விடுங்கள், என் எழுத்து பற்றிய கட்டுரைகளுக்குக் கூட தடை. இப்போது புரிகிறதா, நான் வேறு எந்தச் சூழலிலாவது எழுதியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று? நான் பிரபலம் ஆகவில்லை என்பது என் புகார். ஆனால் அதே சமயம் நான் என்ன வேண்டுமானாலும் எழுத இங்கே சுதந்திரம் இருந்தது, என்னை யாருக்கும் தெரியாது என்பதால். இல்லாவிட்டால் காமரூப கதைகள் போல் ஒரு நாவலை நான் எழுதியிருக்க முடியுமா?

புகைப்பட விவரம்: புக்கெட் பங்க்ளா ரோட்டில் நானும் சீனியும் ஒளி முருகவேளும் மனோவும் ஒரு பப்புக்குப் போனோம். அதற்கு மேல் நடந்ததெல்லாம் ஒரு சிறுகதை. பிறகு எழுதுவேன். இரண்டு பெண்கள் (ஒரு பெண்ணைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.) இருவரும் தத்தம் பாய் ஃப்ரெண்டுடன். அதில் இந்தப் பெண் என்னிடம் வந்து “யூ ஆர் ஸம்படி?” என்றாள் சிரித்துக் கொண்டே. ஆம், எப்படிக் கண்டு பிடித்தாய் என்றேன். அதற்குள் மனோ என் விக்கிப்பீடியாவை நீட்டினார். உடனே அந்த இடம் பாரிஸாக மாற, அவள் என்னோடு நடனம். பிறகு அவளுடைய பாய் ஃப்ரெண்டும் என்னோடு ஒரு நடனம் ஆடினான். இதெல்லாம் தெ அவ்ட்ஸைடர் ஆவணப்படத்தில் வருமா என்பது இயக்குனருக்கும் எடிட்டருக்கும்தான் தெரியும். இப்போது ஓய்வே இல்லாமல் 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள் எடிட்டரும் மற்ற போஸ்ட் ப்ரடக்‌ஷன் நண்பர்களும். எல்லாம் ஒருத்தர் செய்த ஏமாற்று வேலையால் ஏற்பட்ட விளைவு. இல்லாவிட்டால் கொஞ்சம் ஆசுவாசமாகச் செய்திருக்கலாம்.