தேவை ஒரு அய்யங்கார் நண்பர்

ராகவன் வினித்திடம் எக்கச்சக்கமாகப் பேசியிருக்கிறார். பேசக் கூடாததையெல்லாம் பேசியிருக்கிறார். அதில் ஒன்று, அராத்து என்னையும் சாருவையும் பிரிக்கப் பார்க்கிறான்.

எனக்கு அவர் சொன்னதில் பிரச்சினை இல்லை. ன் விகுதிதான் பெரும் மண்டைக் குடைச்சலாக இருக்கிறது, இன்னும்.

நானேதான் ஆயிடுக என்பது வெறும் வார்த்தை இல்லை ஸ்வாமி. நெஞ்சில் உணர வேண்டும். எலும்பு மஜ்ஜைக்குள் போக வேண்டும். பிரிக்கப் பார்க்கிறான் என்றால் நீங்கள் அவ்வளவு பெரிய ஆள், இல்லையா? அப்படித்தானே அர்த்தம்? தமிழிலேயே அறுபது ஆண்டுகளாகப் புழங்குகிறேன். வேறு அர்த்தம் இருந்தால் சொல்லுங்கள். ரஜினியையும் கமலையும்தான் பிரிக்கப் பார்ப்பார்கள்; ரஜினியையும் ரஜினியோடு அம்பது ஆண்டுகளுக்கு முன் வேலை பார்த்தவர்களையும் யாராவது பிரிக்கப் பார்ப்பார்களா? அப்படி நாம் நினைத்தால் இந்த உலகிலேயே நாம் ஒரு பெரிய புடுங்கி என்று அர்த்தமாகிறது. அப்படி நமக்கு நாமே அர்த்தப்படுத்திக் கொண்டு நானேதான் ஆயிடுக என்றால் அது ஃபேஷன் மாதிரி ஆகி விடுகிறதே? எல்லாத் தவறும் என்னுடையதாகவே இருக்கட்டும் என்று நினைக்கும் ஒரு ஆள் எப்படி ஒரு சம்பந்தமே இல்லாத மனிதன் மீது அபாண்டம் சுமத்துவான்? ஆக, நானேதான் ஆயிடுக என்பதும் ஒரு ஆயுதம்? அறிவு ஆயுதம்?

சரி விடுங்கள். ராகவன் வினித்திடம் சொன்ன இன்னொரு விஷயம், படு அயோக்கியத்தனமானது. என் சொந்த வாழ்வில் அத்துமீறும் ஒன்று. ராகவன் சொல்லியிருக்கிறார். எனக்கு சாருவினால் எந்தப் பயனும் இல்லை; சாருவுக்கும் என்னால் எந்தப் பயனும் இல்லை.

யோவ், உமக்கு என்னால் எந்தப் பயனும் இல்லாமல் இருக்கலாம். எனக்கு உம்மால் ஆயிரத்தெட்டு பயன் உண்டு. நான் சாதாரண கூழாங்கல், நாய் பூனையிடமிருந்தெல்லாம் ஞானம் பெறுகின்ற ஆள். சங்கத் தமிழும் நாலாயிரமும் அறிந்த உம்மிடமிருந்தா பெற்றிருக்க மாட்டேன்? எனக்கு உம்மால் பயன் இல்லை என்று சொல்ல உமக்கு என்ன உரிமை இருக்கிறதா? என் வாழ்வுக்குள் எட்டிப் பார்க்கும் அளவுக்கு அதிகாரம் படைத்தவரா நீர்? உம்மால் எனக்கு எக்கச்சக்கமான பயன் உண்டு. அது பற்றி கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருந்தேன். உமக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உமக்குத்தான் என்னால் எந்தப் பயனும் இல்லையே?

இப்போதே மிக அவசரமாக, என் ஷட்டகருக்கும் ஷட்டகரின் மனைவிக்கும் ஒரு அய்யங்கார் பெயர் வைக்க வேண்டும். நீர் இப்போது என் வாழ்விலிருந்து ஓடிப் போய் விட்டதால் நான் வேறொரு அய்யங்காரைத் தேட வேண்டியிருக்கிறது. என் மனைவி அய்யங்கார்தான் என்றாலும், அவளுக்கு வஞ்சிரம் குழம்புதான் தெரியுமே ஒழிய அய்யங்கார் விஷயங்கள் தெரியாது.

அராத்து பிறவியில் மட்டுமே அய்யங்கார். வாழ்வில் பட்டியல் இனம். ஏனென்றால், கடந்த வாரம் ஒருநாள் டார்ச்சர் கோவிந்தனை விட அதிக டார்ச்சரைக் கொடுத்து விட்டார் அராத்து. பேச்சை இப்படி ஆரம்பிக்கிறார்: அதாங்க அந்த ஆப்ப விஷயம். உங்க மனைவி ஆப்பம் சுட்டபோது நடந்தது…

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கு இட்லியை விட மிகவும் இஷ்டம் ஆப்பம் தேங்காய்ப் பால். ஆனால் இந்த முப்பது ஆண்டுகளில் அவந்திகா ஒருமுறை கூட எனக்கு ஆப்பம் சுட்டுக் கொடுத்ததில்லை. அவளுக்குத் தெரியாது, வராது என்று சொல்லி விட்டாள். அப்படி இருக்கும்போது அவள் எப்படி எப்போது எனக்கு ஆப்பம் போட்டுக் கொடுத்தாள், அதில் என்ன பிரச்சினை ஆயிற்று?

ஒரே குழப்பமாகி கேள்வி மேல் கேள்வி கேட்கிறேன் சீனியை. “அதாங்க, அவங்க ஆப்பம் போட்டாங்க, நீங்க போய் இந்த உலகத்திலேயே இப்படி ஒரு ஆப்பம் சாப்பிட்டதில்லைன்னு…”

சே சே சே… சீனி… இப்படியா அப்ராமண பாஷையைப் பேசி என்னைக் கொல்லறது. நான் எழுதினது அப்பம்ங்க. நீங்க சொல்றது ஆப்பம். அப்பம் வேறு, ஆப்பம் வேறு. ஆப்பம் அபிராமணா பண்றது, அப்பம் கேரளத்தில் பிரபலம். இங்கே பிராமணாள் பண்ணுவா.

வர வர நீங்க மைலாப்பூர்ல இருந்து நீங்களே பிராமணனா மாறிட்டீங்க

அதனால் சீனியையோ அவந்திகாவையோ கேட்க முடியாது. இன்னொரு அய்யங்கார் நண்பர் இருந்தார். விஷ்ணுபுரம் விருதுக்கு வாழ்த்து சொல்லாததால் அவரோடு பேசுவதில்லை. எனக்கு அய்யங்கார் இனம் பற்றி அடிக்கடி சந்தேகம் ஏற்படும். உங்களில் யாரும் விஷயம் தெரிந்த அய்யங்கார் இருக்கிறீர்களா?

charu.nivedita.india@gmail.com