நீங்கள் வேறு, நாங்கள் வேறு, ஆனாலும் சமரசமாய் வாழ்வோம்…

இந்தத் தலைப்பில் அல் குர்-ஆனில் ஒரு வசனம் உண்டு. ஔரங்ஸேப் நாவலில் அதை விரிவாக எழுதியிருக்கிறேன். ஜெயமோகனின் வாசகர் ராம்குமார் அருண் இன்று பின்வருமாறு எழுதியிருக்கிறார். விஷயம் விஷ்ணுபுரம் விழா பற்றியது.

”இந்த ஆண்டு சாரு நிவேதிதாவோ அவருடன் வந்தவர்களோ ஒரு அரங்கிலேகூட உட்கார்ந்து கவனிக்கவில்லை. அவர்கள் சாரு சந்திப்புக்கும் விழாவுக்கும் மட்டும்தான் வந்தார்கள்.”

சில விஷயங்களை நான் தெளிவுபடுத்த வேண்டும். ஏற்கனவே தெளிவு படுத்தியும் இருக்கிறேன். ஆனால் ராம்குமார் அருண் என் ப்ளாகைப் படிப்பதில்லை என்று யூகிக்கிறேன். ராம்குமாரின் அவதானத்தில் ஒரு தகவல் பிழை உள்ளது. நான் விழாவைத் துவக்கி வைத்துப் பேசினேன். பேசியதோடு போய் விடவில்லை. அம்மாதிரி ஒருபோதும் செய்தவன் இல்லை. கார்த்திக் பாலசுப்ரமணியத்துடனான விவாதம் முடியும் வரை இருந்து கேட்டு விட்டுத்தான் போனேன்.

எனக்கு எதிர்மறையான விஷயங்கள் எதையும் ஒரு புன்முறுவலோடு கடந்து போகும் பயிற்சியை நான் தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறேன். எதிர்மறையான விஷயம் என்றால் அது தவறாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. இரண்டு வெவ்வேறு விஷயங்கள், அவ்வளவுதான். இதில் எதுவுமே தவறு இல்லை. இரண்டு வெவ்வேறு நிலைப்பாடுகள். யார் கருத்து தவறு என்று யார் சொல்ல முடியும்? ஜெ. ஒரு துருவம், நான் ஒரு துருவம். இது தமிழ் இலக்கியம் பெருமைப்படக் கூடிய விஷயம். இருவருமே மிகத் தீவிரமாக படைப்பு உலகில் ஈடுபட்டிருப்பவர்கள். கொரோனா காலத்தில் ஜெ. நூறு நாளில் நூறு சிறுகதை வைத்தார். நான் 135 நாட்களில் 135 ஆட்டோஃபிக்‌ஷன் படைப்புகளை பூச்சி என்ற பெயரில் வைத்தேன். இப்போது அது 1300 பக்கங்கள் வந்துள்ளன. இப்படி உலக மொழிகள் எதிலுமே நடந்தது இல்லை.

கார்த்திக் பாலசுப்ரமணியன் இளம் எழுத்தாளர். இளம் எழுத்தாளர்கள் மீது நான் எந்த விமர்சனமும் வைப்பதில்லை. ஆனால் ராம்குமார் அருண் என்னைப் பற்றியும் என் வாசகர்கள் பற்றியும் ஒரு கருத்தை முன்வைத்திருப்பதால் நான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கார்த்திக் பாலசுப்ரமணியன் தெரிவித்த ஒவ்வொரு கருத்துக்கும் எனக்கு மிகக் கடுமையான எதிர்க்கருத்துக்கள் இருந்தன. உதாரணமாக, ஒருவர் கடவுள் ஒருவரே என்றால், நான் இல்லை, கடவுள் பலர் என்பேன். அல்லது, கடவுளே இல்லை என்பேன். ஒரு தீவிரமான முஸ்லிமும் ஒரு தீவிரமான ஹிந்துவும் எதிரெதிரே நின்றது போல் இருந்தது கார்த்திக்கின் விவாத அரங்கு. ஒரு சமயத்தில் எழுந்து விடலாமா என்று யோசித்த போது ஜெ. பதில் சொன்னார். சமாதானம் ஆனேன்.

எதற்கு ஐயா வம்பு? அதற்கு மேல் நான் பாட்டுக்கு அறையிலேயே இருந்து விட்டேன். ஆனால் மமாங் தய் அரங்குக்கு வந்திருக்கலாம். முடியவில்லை. ஏற்கனவே எழுதியிருந்தேன். வெள்ளிக்கிழமை காலை மூன்றரை வரை கண் விழிக்க வேண்டியிருந்தது. ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத் தொடக்க விழா. இரவு பத்து மணியிலிருந்து ஒரு மணி வரை நடந்தது. நூறு பேர் வந்திருந்தார்கள். ஐந்து பெண்கள். நான்கு மணிக்குப் படுத்து எட்டுக்கு எழுந்து யோகா செய்து விட்டு பத்து மணிக்கு விஷ்ணுபுரம் தொடக்க விழாவுக்கு ஆஜரானேன்.

சனிக்கிழமை இரவு முழுவதும் ஆவணப் படத்துக்கான ஏற்பாடு. அதைப் பார்ப்பதற்காக விழித்திருந்தேன். காலை நான்கு மணிக்குத்தான் படம் தயாரானது. பார்த்தேன். ஒரே ஒரு திருத்தம் சொன்னேன். ஞாயிற்றுக் கிழமைதான் விழா. சனி இரவு முழுவதும் உறங்கவில்லை. ஆவணப்படம்தான் உங்களுக்கு எங்களுடைய படையல். ஸாரி ஜெ, சொன்னபடி படத்தை முடிக்க முடியவில்லை, எடிட்டர் லெனின் ஏமாற்றி விட்டார், ஸாரி, மன்னியுங்கள் என்று ஜெயமோகனிடம் சொல்லியிருந்தால் நான் எல்லா அரங்குகளிலும் வந்து பங்கேற்றிருக்க முடியும். ஆனால் நோக்கம் ஆவணப்படம். அரங்குகளில் நான் கலந்து கொள்வதல்ல.

கலந்து கொண்டாலும் என்னால் ரசித்திருக்க முடியாது, எனக்குப் பெரும் மன உளைச்சலாகத்தான் இருக்கும் என்பதைத் தயவுசெய்து ஜெ.வின் வாசகர்கள் புரிந்து கொள்ளுங்கள். ஜெ.யின் வாசகர்கள் எழுதிய இரண்டு சிறுகதைகளை நேற்று படித்தேன். நல்ல அசைவ உணவுக்குப் பழக்கமானவர்களிடம் பூண்டு வெங்காயம் போடாத, உப்பு போடாத பத்திய உணவைக் கொடுத்தால் என்ன பண்ணுவான்? அப்படி இருந்தது இரண்டு கதைகளும். நான் என்ன செய்ய? காலையில் ஆப்பமும் பாயாவும் சாப்பிடுபவனிடம் ரெண்டே ரெண்டு இட்லியைக் கொடுத்தால் அவன் வயிறு ரொம்புமா? அப்படி இருந்தன இரண்டு கதைகளும். ஆனால் அந்த ரெண்டு கதைகளையும் தமிழ்நாடே கொண்டாடுகிறது. என்ன செய்ய? என் ரசனை அப்படி.

பலவித ரசனைகள் இருக்கின்றன என்பதைத் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், நண்பர்களே!

என் வாசகர் வட்ட நண்பர்கள் பற்றி ஒரு வார்த்தை. அவர்கள் சாருவைத் தவிர வேறு யாரையும் வாசிக்க மாட்டார்கள். அது அவர்கள் விருப்பம். நான் அவர்களின் விருப்பத்தில் குறுக்கீடு செய்ய முடியாது. சுதந்திரம்தான் எங்கள் தாரக மந்திரம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. உதாரணமாக, காயத்ரி வட துருவம், அராத்து தென் துருவம். ஸ்ரீராம் யாரோடும் பேச மாட்டார். நான் விளையாட்டாக சொல்வதுண்டு, என்னுடைய இறுதி நாள் விசேஷத்தில் நடக்கும் சண்டையில் ஒரு கொலை கூட விழுவதற்கு சாத்தியம் இருக்கிறது என்று. பாலு மகேந்திரா விஷயத்தில் அப்படி ஒரு சாத்தியம் இருந்தது. அதைப் பார்த்துத்தான் அப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.

வாசகர் வட்டத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் விஷ்ணுபுரம் விருதைப் புறக்கணியுங்கள் என்றார்கள். அவர்கள் எல்லோரும் சொன்ன காரணம், நீங்கள் கொடுத்தால் ஜெ. மறுத்து விடுவார் என்பது. சரி, மறுப்பது ஜெ.யின் மனோபாவம். ஏற்பது என் மனோபாவம் என்றேன். அப்படியானால் நாங்கள் அனைவரும் விழாவைப் புறக்கணிக்கிறோம் என்றார்கள். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை அல்லவா? நான் குறுக்கிட முடியாது. சொன்னவர்களில் ஒருவர் அராத்து. இன்னொருவர் யார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. சொல்வதற்கு இல்லை. நீங்கள் வந்துதான் ஆக வேண்டும், இது என்னுடைய அன்புக் கட்டளை என்றேன். அராத்து ஒப்புக் கொண்டார். இன்னொருவர் அப்படியும் வருவதற்கில்லை என்று சொல்லி விட்டுக் கடைசி நேரத்தில் விமானத்தில் வந்து சேர்ந்தார். அதிலும் என்னுடைய பேச்சையும் ஜெ. பேச்சையும் மட்டுமே கேட்டார். (வராவிட்டால் நான் பழி வாங்குவேன் என்று பயந்திருக்கலாம்!)

இப்படிப்பட்டவர்களைப் போய் நீங்கள் எல்லா அரங்குகளிலும் உட்காருங்கள் என்றால் எனக்கு விஷம் வைத்து விடுவார்கள் ஐயா, ராம்குமார் அருண் அவர்களே! (சாருவை நாங்கள் நேசிக்கிறோம், வணங்குகிறோம். ஆனால் அவர் ஒட்டு மொத்தமாக ஜெ. பக்கம் போய் விட்டதால் விஷம் வைக்க வேண்டியிருக்கிறது. இதை சாருவே விரும்புவார்! – அராத்து அறிக்கை!)

டியர் ராம்குமார், நீங்கள் வேறு, நாங்கள் வேறு. ஆனாலும் நாம் ஒருவருக்கொருவர் மதித்து மரியாதை செய்து அன்பு பூண்டு வாழ்வோம். ஜெயமோகனை நான் தொடர்ந்து வாசிக்கிறேன். கொற்றவை போன்ற நாவல்களும் அறம் போன்ற சிறுகதைகளும் என்னை ஆகர்ஷிக்கின்றன. எல்லோரிடமும் கற்றுக் கொள்வதைப் போல ஜெயமோகனிடமிருந்தும் கற்றுக் கொள்கிறேன்.

ஜெயமோகன் இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருதை எனக்கு அளித்ததன் மூலம் என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார். அதை நான் ஏழேழு ஜென்மத்திலும் மறக்க மாட்டேன். விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள் அனைவரும் என்னை அன்பு மழையால் குளிப்பாட்டினார்கள். அதற்கெல்லாம் என் வாழ்நாள் நன்றி.

உங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்தான். நாங்கள் வேறு, எங்கள் கடவுள் வேறு, எங்கள் கலாச்சாரம் வேறு. எங்கள் உணர்வுகள் வேறு. உணவு வேறு. அதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு மௌல்வியிடம் ஒரு (ஹிந்து) பள்ளி மாணவி கேட்டாள்: ஏன் ஐயா, நாங்கள் கோவிலுக்குப் போவது போல் சர்ச்சுக்குப் போகிறோம். மசூதிக்குப் போகிறோம். ஆனால் நீங்கள் ஏன் கோவிலுக்கு வருவதில்லை? இப்படி இருந்தால் எப்படி மத நல்லிணக்கம் வரும்?

மௌல்வியின் பதில்: ”அம்மா, உங்கள் மதம் எல்லா கடவுள்களையும் எல்லா புனித ஸ்தலங்களையும் ஏற்றுக் கொள்கிறது. நீங்கள் எல்லாவற்றையும் வணங்கலாம். ஆனால் எங்கள் மார்க்கம் அல்லாஹ் ஒருவனே என்கிறது. அல்லாஹ்வின் செய்தியை எங்களுக்குத் தெரிவித்த நபியைக் கூட நாங்கள் வணங்குவதற்கு அனுமதி இல்லை. அதனால்தான் கோவிலுக்கு வருவதில்லை.”

அவ்வளவுதான் நானும் ஜெ. வாசகர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மௌல்வி சொன்னதற்கு அர்த்தம், அதனால் நாம் இருவரும் அடித்துக் கொள்ள வேண்டும் என்பது அல்ல. சமரசமாக வாழ்வதற்கு ஒருத்தரின் கடவுளை இன்னொருவர் வணங்க வேண்டும் என்பது இல்லையே? ஒருவரை ஒருவர் மதித்தால் போதுமே?