எனக்கு ஜெயமோகன் மீது ஒரே ஒரு விஷயத்தில்தான் பொறாமை. அவருடைய வாசகர்கள். கோவையில் ஒவ்வொரு வருடமும் பிரம்மாண்டமான முறையில் ஒரு விழாவை நடத்திக் காண்பிக்கிறார்கள். அது தவிர மாதாமாதம் ஒவ்வொரு ஊரிலும் வெண்முரசு கூட்டம். அமெரிக்காவிலோ கேட்கவே வேண்டாம். இங்கே இருந்தபடியே அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய அளவுக்கு அவரது அமெரிக்க வாசகர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
விஷ்ணுபுரம் வட்டத்தில் உள்ள ஒரு பத்து முக்கியஸ்தர்களுக்கு ஒரு கொக்கரக்கோ சமம்தான் என்றாலும் என்னுடைய வாசகர் வட்டத்தின் மற்ற நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை கதை கதையாகச் சொல்லலாம். ஒரு நண்பரை கொக்கரக்கோவிடம் அறிமுகம் செய்து இவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், பிரமாதமாக எனக்கு வேலை செய்து கொடுக்கிறார் என்றேன். அதற்கு அடுத்த நாள் அந்த நண்பர் கொக்கரக்கோவுக்கு ஃபோன் போட்டிருக்கிறார். கொக்கரக்கோ எப்போதும் பிஸி. விட்டு விட்டு பல்வேறு நேரங்களில் நான்கு முறை அழைத்திருக்கிறார் புதிய நண்பர். கடைசியாக கொக்கரக்கோவும் எடுத்திருக்கிறான்.
நண்பரின் கேள்வி: தல, நேத்துதான் மலையிலேர்ந்து திரும்பினேன். விரதமெல்லாம் முடிஞ்சது. சென்னையில எங்கே நல்ல பிரியாணி கிடைக்கும்?
கொக்கரக்கோ என்ன பதில் சொன்னான் என்று தெரியவில்லை.
***
நான் ஏப்ரல் மாதம் இலங்கை செல்கிறேன். அதற்கு வீசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இலங்கை செல்வதற்கு ஆன் அரைவல் வீசா வசதி இருக்கிறதா தெரியவில்லை. இருந்தாலும் எனக்கு அது ஆகாது. அப்படித்தான் ஒருமுறை பாங்காக் விமான நிலையத்தில் மாட்டிக் கொண்டேன். வீசா விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்ட வேண்டும். சென்னையிலிருந்து கிளம்பும்போதே பத்திரமாக பர்ஸில் புகைப்படத்தை வைத்துக் கொண்டேன். ஆனால் விண்ணப்பத்தில் ஒட்டுவதற்கு கோந்து இல்லை. என்னைப் போலவே இன்னொரு அழகிய மங்கையும் அவள் அம்மாவும் கோந்து தேடிக் கொண்டிருந்தார்கள். தமிழில் பேசிக் கொண்டார்கள். என்னிடமும் கோந்து கேட்டாள் அந்தப் பெண். நான் தமிழில் பதில் சொல்லியும் ஆங்கிலத்திலேயே பிடிவாதமாகத் தொடர்ந்தாள். தமிழில்தான் பேசித் தொலையேன், நான் என்ன காதல் கடிதமா கொடுத்து விடப் போகிறேன்? கடைசியில் எங்கேயோ தேடிப் பிடித்து ஒட்டிக் கொடுத்தால் வீசா அதிகாரி புகைப்படத்தின் அளவு வேறு மாதிரி இருக்கிறது என்று சொல்லி விட்டார். அது ஒரு பெரிய அபத்தக் கதை. நீங்கள் இதையே கொக்கரக்கோவிடம் கேட்டால், பாங்காக்கில் வீசா விண்ணப்பத்தில் புகைப்படமே ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை, அல்லது, புகைப்படமே தேவையில்லை, நான் மாதம் ஒருமுறை பாங்காக் செல்பவன் என்பான்.
நானும் பொய் சொல்லவில்லை. கொக்கரக்கோவும் பொய் சொல்லவில்லை. உண்மையும் இங்கேதான் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது.
இந்தத் தலைவலியின் காரணமாகத்தான் வீசா ஆன் அரைவல் வசதி உள்ள நாடுகளுக்குப் போனால் கூட கிளம்பும் போதே வீசா எடுத்துக் கொள்ள நினைப்பேன். அப்படித்தான் இலங்கை விஷயத்திலும் நினைத்தேன். மேலும், இலங்கையில் போய் வீசா கட்டணத்தை டாலரில் கொடு என்று கேட்டு நம்மிடம் அந்த சமயத்தில் டாலர் இல்லாவிட்டால் என்ன செய்வது? எல்லாவற்றையும் விட க்யூதான் பெரிய பிரச்சினை. கையில் வீசா இருந்தால் நாம் பாட்டுக்குப் போய் விடலாம்.
வழக்கமாக இந்த உதவிகளையெல்லாம் எனக்கு செய்து கொடுப்பவன் கொக்கரக்கோதான். அதேபோல் இந்த முறையும் கேட்டேன். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கட்டணம் கட்டி எல்லாம் செய்ய வேண்டும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை – மிக அவசரமாக ஒரு விஷயத்தைத் தட்டச்சு செய்து கொண்டிருந்தபோது மடிக்கணினியில் ஒரு பிரச்சினை. ரொம்பச் சின்ன பிரச்சினைதான். கொக்கரக்கோவிடம் கேட்டால் சில நொடிகளில் சரி பண்ணி விடுவான். ஆனால் எதற்கெடுத்தாலும் கொக்கரக்கோவையே கேட்க வேண்டுமா என்று நினைத்து நானே சரி செய்ய முயன்றேன். அரை மணி நேரம் செலவாகியும் பிரச்சினை சரியாகவில்லை. அப்போது என் புத்திரன் மோகன் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்ததால் அவனிடம் கேட்டேன். அரை நிமிடத்தில் சரி பண்ணி விட்டு “இதெல்லாம் நீங்களேதான் கற்றுக் கொண்டு செய்ய வேண்டும், இன்னொருத்தரை எதிர்பார்க்கக் கூடாது” என்று எரிச்சலும் அதிகாரமும் கலந்த குரலில் சொன்னான். அப்போது அவன் வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தான். மரீன் எஞ்ஜினியர். அவன் படிப்புக்காக நான் பலரிடமும் பிச்சை எடுத்திருக்கிறேன். பணத்தைத் திருப்பிக் கொடுத்தாலும் அவர்கள் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். மோகனோ பணத்தைப் பற்றிப் பேசுவதே இல்லை. அவனுக்கு எவ்வளவு சம்பளம் என்று கூடத் தெரியாது. வேலைக்குப் போய் ஒரு நயா பைசா கூட அவன் எனக்குக் கொடுக்கவில்லை. என் தர்ம பத்தினி வைதேகிக்கும் கொடுக்கவில்லை. பணத்தை என்ன செய்கிறான் என்றும் தெரியவில்லை. அவன் வைதேகிக்கு வாங்கிக் கொடுத்த இரண்டு நாய்களுக்காக மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் செலவு செய்து கொண்டிருந்தேன். இந்த மனநிலையில் அவன் அப்படிச் சொன்னதும் எனக்குக் கொலைவெறி ஆகி விட்டது. மடிக்கணினியைத் தூக்கிப் போட்டு உடைத்து விட்டேன். அறுபது எழுபது ஆயிரம் ரூபாய் நஷ்டம் என்பதை விட அதில் நான் சேமித்து வைத்திருந்த அத்தனை எழுத்துக்களும் ஆய்வுக் குறிப்புகளும் அழிந்து விட்டன. நான்கு வருட உழைப்பு காணாமல் போனது. அது பற்றி நான் கவலையும்படவில்லை. இனிமேல் எந்த நிலையிலும் மோகனிடம் எந்த உதவிக்கும் போகக் கூடாது என்று மட்டும் நினைத்துக் கொண்டேன்.
கொக்கரக்கோ எந்தச் சூழ்நிலையிலும் “நீங்களே கற்றுக் கொள்ளுங்கள்” என்று சொன்னதில்லை. சொன்னாலும் அதை ரொம்பவும் பாந்தமாகத்தான் சொல்லுவான். “அதைச் செய்ய எனக்கு ஓரிரு நிமிடங்கள்தான் ஆகும் பெருமாள். அது எனக்குப் பிரச்சினையே இல்லை. ஆனால் நான் இல்லை என்றால் நீங்கள் வேறு எவனையாவது தொங்க வேண்டியிருக்கும்” என்று பணிவான குரலில் சொல்லுவான். நான் தவறாக நினைத்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை அவன் குரலில் தொனிக்கும்.
இதை வாசிக்கும் நீங்கள் நினைக்கலாம், இதையெல்லாம் இவரே கற்றுக் கொண்டால் என்ன என்று. ரொம்பக் குழப்பாமல் ஸிம்பிளாகச் சொல்லி விடுகிறேன், நானே கற்றுக் கொண்டால் நான் எழுத்தாளனாக இருக்க முடியாது. அவ்வளவுதான். முப்பது ஆண்டுகளுக்கு முன் எனக்கு விவாகரத்து நடந்த போது நான் நீதிபதியின் எதிரே அவரது தனியறையில் நின்றேன். என் முகவரி கேட்டார். எனக்கு எப்போதுமே என் முகவரி ஞாபகத்தில் இருக்காது. மறந்து விட்டேன் சார் என்றேன். உடனே விவாகரத்து கொடுத்து விட்டார். என்னோடு எந்தப் பெண்ணும் வாழ முடியாது என்று அவருக்குத் தெரிந்து விட்டது.
இப்போது நான் வசிக்கும் வீட்டு முகவரியைக் கூட என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிந்ததில்லை. ஆனால் 1980இல் இலக்கிய வெளிவட்டம் என்ற சிறுபத்திரிகையில் ஹங்கேரிய ஓவியன் இஸ்த்வான் ஸாண்டார்ஃபி பற்றி நான் என்ன எழுதினேன் என்பது எனக்கு ஞாபகம் இருக்கும்.
ஆன்லைன் வணிகத்தில் எதற்கெடுத்தாலும் முகவரி கேட்கிறார்கள். முகவரி ஞாபகம் இல்லாமல் ஆன்லைனில் நாம் ஒரு பொருளை வாங்க முடியாது. ஒவ்வொரு முறையும் எனக்கு முகவரி மறந்து விடும். என்ன முகவரி என்று வைதேகியையும் கேட்க முடியாது. அவளிடம் ஒரு வார்த்தை பேசுவதற்கே நான் மாலை ஆறு மணி வரை காத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு அவள் பிஸி. அதனால் முகவரி தேவைப்படும் ஒவ்வொரு முறையும் ஸ்ரீராமுக்குத்தான் ஃபோன் போடுவேன். அவர் மருத்துவர். நான் ஃபோன் அடிக்கும்போது அவர் நோயாளிகளை கவனித்துக் கொண்டிருப்பார். நோயாளி போனதும் அடுத்த நோயாளி வருவதற்குள் என்னைத் திருப்பி அழைப்பார். முகவரி கேட்டதும் சட்டென்று ஒப்பிப்பது போல் சொல்வார். நானும் அவருக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்றுதான் முகவரியை எங்கெங்கோ குறித்து வைப்பேன். தேவைப்படும்போது கிடைக்காது. பிறகு ஒருவாறாக நானே மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டேன். அதிலும் ஒரு நுட்பத்தை உபயோகித்து மனப்பாடம் செய்தேன். இல்லாவிட்டால் என்னதான் மனப்பாடம் பண்ணினாலும் ஏறாது. என் முகவரியில் நான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் பெயர்தான் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. K.G. Marina Bay Apartments. இதில் கே.ஜி. என்பது எப்போதும் மறந்து விடும். அதனால் கே.ஜி. என்பதற்கு கிண்டர் கார்ட்டன் என்ற வார்த்தையை மனதில் பதித்துக் கொண்டேன். இப்போது யார் உதவியும் இல்லாமல் முகவரி கொடுக்கத் தெரிந்திருக்கிறது.
இந்தப் பிரச்சினையெல்லாம் இல்லாமல் ஒருவருக்கு இயல்பாகவே முகவரி மனதில் நிற்கிறது என்றால் அவரால் எந்தக் காலத்திலும் எழுத்தாளராக முடியாது. முடியவே முடியாது.
சில தினங்களுக்கு முன் ஒரு சம்பவம் நடந்தது.
மோகனுக்கும் சாயாவுக்கும் திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. திருமணமெல்லாம் விமரிசையாகக் கொண்டாடினாலும் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை போல. தேவையில்லை என்று விட்டு விட்டார்கள். குழந்தையும் பெற்றுக் கொள்ளவில்லை. லிவிங் டுகெதர் என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால் ஐந்து ஆண்டுகள் கழித்து திடுதிப்பென்று குழந்தை பிறந்து விட்டது. மோகனுக்கு துபாயில் வேலை. அடிக்கடி துபாய் செல்ல வேண்டி வரும். துபாயிலும் வாடகைக்கு வீடு எடுத்தாகி விட்ட்து. திடீரென்று சாயாவையும் குழந்தையையும் அழைத்துச் செல்லலாம் என்று நினைத்தால், பெற்றோர் பெயர் போடாமல் குழந்தைக்குப் பாஸ்போர்ட் எடுக்க முடியாது. பெற்றோர் பெயர் போட வேண்டுமானால் பெற்றோரின் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும். அடப்பாவிகளா, லிவிங் இன் என்ற புரட்சிகரமான வாழ்க்கை முறைக்கு சட்டமே இடைஞ்சலாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். ஆக, ஐந்து ஆண்டுகளாக புரட்சிகரமாக வாழ்ந்து கொண்டிருந்த இளம் தம்பதி தங்கள் குழந்தையின் பொருட்டு திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்கள். இதில் என்ன சிக்கல் என்றால், பிறிதொரு நாளில் பிரிந்து போகலாம் என்று நினைத்தால் குடும்பநல நீதிமன்றத்தில் உங்களை உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்கள். தேதி கொடுத்து தேதி கொடுத்துத் தாலியறுத்து விடுவார்கள். நாமே தாலியறுக்கத்தான் போயிருக்கிறோம் என்றாலும் அவர்கள் வேறொரு மாதிரி தாலியறுப்பார்கள்.
நான் 1978இலிருந்து 1988 வரை பத்து ஆண்டுகள் தில்லி நிர்வாகத்தின் சிவில் சப்ளைஸ் துறையில் வேலை பார்த்தபோது என் பிரிவில் ஆனந்த் என்ற பஞ்சாபி இளைஞன் இருந்தான். லோவர் டிவிஷன் கிளார்க். ஆனால் பெரிய செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் உயர்தரமான கான்வெண்ட்டில் படித்தவன். அமெரிக்கரைப் போல் ஆங்கிலம் பேசுவான். நீ ஏன்டா இந்தத் தறுதலை கிளார்க் வேலையில் இருக்கிறாய் என்று கேட்டேன். பல காரணங்கள் என்றான். அவனுடைய தகுதிக்கு அவன் இதை விடப் பல மடங்கு சம்பாத்தியம் உள்ள பெரிய வேலையில் இருக்கலாம். அது வேண்டாம் என்றுதான் இங்கே இருக்கிறான். காரணம், அவன் மனைவிக்கும் அவனுக்கும் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருந்தது. விவாகரத்துக்கு இரண்டு பேருக்குமே சம்மதம் என்றாலும் தேதி கொடுத்து தேதி கொடுத்து இழுத்தடித்துக் கொண்டிருந்தது நீதிமன்றம். எல்லா தேதிகளிலும் இவன் ஆஜராக வேண்டும். தனியார் துறை என்றால் இப்படி நீதிமன்றத்துக்குப் போய் விட்டு தாமதமாக அலுவலகம் வர முடியாது. இஷ்டத்துக்கு விடுப்பு எடுக்க முடியாது. வழக்குக்காக வேலையையே விட வேண்டியிருக்கும். அடுத்து, நீதிமன்றத்தில் இவன் ஒரு அரசு ஊழியன் என்றால் அதற்கென்று ஒரு தனி மரியாதை கிடைக்கும். மூன்றாவது காரணம், இந்த வழக்கு முடிந்து அடுத்து திருமணம் முடிக்கும்போது இவன் அரசு ஊழியன் என்பது பலம் வாய்ந்த விஷயமாகக் கருதப்படும்.
இதையெல்லாம் யோசித்துத்தான் மோகனும் சாயாவும் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்பது என் யூகம். நம்மால் கேட்க முடியுமா என்ன?
திருமணப் பதிவுக்கு மூன்று சாட்சிகள் தேவை. பொதுவாக இம்மாதிரி விஷயத்துக்கெல்லாம் நான் போவதில்லை. ஆனாலும் மகன் ஆயிற்றே, நான் போகாமல் யார் போவது? வைதேகி இரண்டாவது சாட்சி. என் நண்பர் சுரேஷ் மூன்றாவது சாட்சி. பத்து நிமிடத்தில் வேலை முடிந்தது. ம்ஹும். அப்படி சுலபமாகச் சொல்லி விட முடியாது. பதிவாளர் அலுவலகத்துக்கு வருவதற்கு முந்தின தினமே பதிவாளர் எல்லா சான்றிதழ்களின் நகல்களையும் அவருக்கு அனுப்பச் சொல்லி, நானும் அனுப்பியிருந்தேன். பிறகு விண்ணப்பத்தையும் நிரப்பச் சொல்லி அனுப்பச் சொன்னார். அனுப்பினேன். உடனே அவரிடமிருந்து ஃபோன் வந்தது.
“சார், மோகனின் முழுப் பெயர் மோகன் செங்குட்டுவன். செங்குட்டுவன் என்பது அப்பாவின் பெயர் என்றால், அதாவது உங்கள் பெயர் என்றால், மோகன் பெருமாள் என்று அல்லவா இருக்க வேண்டும்? மோகன் செங்குட்டுவன் என்றால் செங்குட்டுவன் யார்?”
மோகன் செங்குட்டுவன்தான் அவன் முழுப் பெயரே என்று பொய் சொல்லி விட்டேன். என் நினைப்பு என்னவென்றால், வருவோர் போவோரிடமெல்லாம் என்னுடைய முழுக் கதையையும், வைதேகியின் முழுக் கதையையும், மோகனின் முழுக் கதையையும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன என்பது. சுருக்கமாகச் சொன்னால், வைதேகி மோகனை கர்ப்பம் தரித்திருக்கும்போதே வைதேகியின் கணவன் செங்குட்டுவன் செத்து விட்டான். பிறகு பத்து ஆண்டுகள் கழித்துத்தான் நான் வைதேகியைத் திருமணம் செய்து கொண்டது. ஆக, மோகன் என்னைப் பார்த்த போது அவனுக்கு ஒன்பது வயது. அவனுடைய ரத்த உறவுத் தந்தையான செங்குட்டுவனை அவன் பார்த்ததே இல்லை. நானும் பொதுவாக எதையும் முறையாக செய்யக் கூடியவன் இல்லை என்பதால் மோகனின் சட்டரீதியான தந்தை கண்ணாயிரம் பெருமாளாகிய நான்தான் என்பதை நீதிமன்றத்திலோ அல்லது அதற்குரிய அரசுத் துறையிலோ சொல்லி சான்றிதழ் எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. இப்போது இடிக்கிறது.
பதிவாளரும் என் பொய்யை நம்பி விட்டார். ஆனால் ஐந்து நிமிட்த்திலேயே அவரிடமிருந்து மீண்டும் ஃபோன். சார், விண்ணப்ப்ப் படிவத்தில் ஒரு பெரிய குழப்பம் நேர்ந்திருக்கிறது. மோகனின் தந்தை பெயர் செங்குட்டுவன் என்று இருக்கிறது. கண்ணாயிரம் பெருமாள் என்றல்லவா இருக்க வேண்டும்?
ஹீஹீ என்று இளித்தபடி நான் முந்தின பத்தியில் சொன்ன கதையை அவரிடம் சொன்னேன். ஓ, அப்படியா என்று இழுத்தவர் சரி சார், அப்படியே இருக்கட்டும், உங்கள் பெயரை சாட்சியாக மட்டும் சேர்த்து விடுகிறேன் என்றார்.
இதெல்லாம் முடிந்த பிறகு மீண்டும் விண்ணப்பப் படிவத்தை அனுப்பி வைத்து எல்லா விவரமும் சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்கச் சொன்னார் பதிவாளர். நான் மோகனிடம் அனுப்பினேன். அவனும் எல்லா விவரமும் சரியாக இருப்பதாகச் சொன்னான்.
அன்றைய இரவு பத்து மணி சுமாருக்கு மோகன் வந்தான். இரண்டு விவரம் தப்பு என்றான். நாள் முழுவதும் செம வேலையாக இருந்ததால் முதலிலேயே மாட்டாமல் போய் விட்டது என்று மேலும் சேர்த்தான்.
சாயாவின் பெயரில் ஒரு A சேர்ந்து விட்டது. சாயா பாண்டுரங் என்பது பெயர். ஆனால் சாயா பாண்டுரங்கா என்று இருக்கிறது. பின்னால் அது பிரச்சினை ஆகும். அடுத்தது, திருமண நாளின் தேதி தப்பு. ரிஸப்ஷன் நாள் மண நாளாக வந்து விட்டது. இரண்டு பிழைகளையும் பற்றி பதிவாளருக்கு வாட்ஸப் பண்ணினேன். அவர் பார்க்கவில்லை. மறுநாள் அவர் ஃபோன் செய்த போது சொன்னேன். பதறி விட்டார். ஐயோ, முக்கியமான தவறு ஆயிற்றே என்று சொல்லி அவசர அவசரமாக சரி பண்ணினார்.
பிறகு பதிவாளர் கொடுத்திருந்த நேரத்துக்கு அவர் அலுவலகம் சென்றோம். அவரது உதவியாளர் என்னிடமிருந்து ஒரிஜினல் சான்றிதழ்களையெல்லாம் வாங்கிப் பரிசோதித்து பூர்வாங்க வேலைகளையெல்லாம் செய்தார். பிறகு சான்றிதழ்கள் அனைத்தும் பதிவாளரிடம் சென்றது. அவர் மோகனை அழைத்து அவனுக்கு முன்னே எல்லா சான்றிதழ்களையும் எழுத்து எழுத்தாகத் திரும்பவும் பரிசோதித்தார்.
இப்போது வைதேகி செய்த ஒரு காரியத்தால் கதையில் வெறுமனே எந்த முக்கியத்துவமும் இல்லாமல் வந்து போயிருக்க வேண்டிய பதிவாளரின் உதவியாளரையும் கதையில் ஒரு பாத்திரமாகக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. உதவியாளர் பெயர் சேகர் என்று வைத்துக் கொள்வோம். அந்த சேகரின் தொலைபேசி எண் உன்னிடம் இருக்கிறதா, இல்லை என்றால் நம்பரைக் கேட்டு வாங்கி வைத்துக் கொள் என்றாள் வைதேகி. அவர் நம்பர் என்னிடம் இல்லை, எனக்குத் தேவையும் இல்லை என்றேன். ”ஐயோ, அப்படிச் சொல்லாதே, நாளையே நமக்கு ஏதாவது தேவை என்றால் அவரிடம் நாம் கேட்கலாம்” என்றாள். “இல்லை வேண்டாம், தேவை என்றால் நான் பதிவாளரையே கேட்டுக் கொள்கிறேன்” என்றேன்.
அப்போது ஒருவர் என்னைப் பார்த்து ஹலோ சார் என்று சொல்லி சிரித்து விட்டுப் போனார். நான் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்த காலத்தில் என்னுடைய பழைய நண்பர் உலகளந்தானோடு நடந்தவர். அப்போது அவர் சிரிப்பார். நானும் சிரிப்பேன். அவ்வளவுதான் பழக்கம். ஆனால் அப்படி ஒரு பத்து வருடம் தொடர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்திருக்கிறோம். பேசிக் கொண்டதில்லை. அது கூட எப்படியென்றால், உலகளந்தான் தன் எதிரே வரும் எல்லோருடனும் பேசிச் சிரித்து நட்பு கொள்ளும் பழக்கம் கொண்டவர். அவர் காரணமாகத்தான் இந்த நண்பரிடமும் பத்து வருடங்களாக சிரித்துக் கொண்டிருந்தேன். ஆனால் பாவம், எல்லோரிடமும் வலியச் சென்று சிரித்து நட்பு பாராட்டும் உலகளந்தான் முப்பது வருடப் பழக்கமும் நட்பும் கொண்ட என்னைப் பற்றி வினித்திடம் புறம் சொல்லி நட்பைக் கெடுத்துக் கொண்டார். போகட்டும்.
ஒருவரை நான் பத்து ஆண்டுகளோ இருபது ஆண்டுகளோ தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரே இடத்தில்தான் சந்திக்கிறேன். சரியா? ஆனால் பேசினதில்லை. அந்த ஆளை நான் வேறு ஒரு இடத்தில் பார்த்து விட்டேன் என்றால், அவரை இதுவரை எங்கே பார்த்திருக்கிறோம், எந்தச் சூழ்நிலையில் பார்த்திருக்கிறோம் என்று மறந்து விடுவேன். ஆனால் நல்லவேளையாக, இந்த நாகேஸ்வர ராவ் பூங்கா நண்பரை அப்படி மறக்கவில்லை. நடைப் பயிற்சி நண்பர் என்பது அவரைப் பார்த்த உடனேயே ஞாபகம் வந்து விட்டது.
பதிவாளர் சான்றிதழ்களை சரி பார்த்துக் கொண்டிருந்த வேளையில் நாங்கள் அங்கே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்தோம். அப்போதும் அந்த நாகேஸ்வர ராவ் பூங்கா நண்பர் அந்தப் பக்கமாக வந்தார். சிரித்தார். நானும் சிரித்தேன். பிறகு அங்கேயிருந்த ஒரு கிளார்க்கிடம் நின்று ஏதோ நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எனக்கும் வைதேகிக்கும் நடந்த உரையாடல் கீழே:
அவர் யார்?
நாகேஸ்வர ராவ் பூங்கா விஷயத்தைச் சொன்னேன்.
பெயர் என்ன?
தெரியவில்லை.
அவர் இங்கேதான் வேலை செய்கிறார் போலிருக்கிறது.
இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
என்னப்பா, அவர் பெயர் கூடத் தெரியவில்லை என்கிறாய்? வேண்டுமானால் நான் போய்க் கேட்கவா?
உன்னை இங்கேயே இப்போதே கொன்று விட்டு ஜெயிலுக்குப் போய் விடுவேன்.
சரி, கேட்கவில்லை. நீ போய்ப் பேசு. பேசுகிற போது அப்படியே பெயரைக் கேட்டு விடு.
ஏன்டி, உனக்கு மூளை என்று ஒன்று இருக்கிறதா, இல்லையா? பத்து வருடமாகத் தெரிந்த ஒரு ஆளிடம் போய் உங்கள் பெயர் என்ன என்று கேட்கவா?
எப்படி இருந்தாலும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதுதானே?
இல்லை, எனக்கு நல்லது இல்லை.
இல்லப்பா, ஒரு ஆத்திர அவசரத்துக்கு உதவும் இல்லையா?
இல்லை.
ஏன்?
இப்படிக் கண்டவர்களின் பெயரையெல்லாம் தெரிந்து வைத்திருந்தால் என்னால் எழுத்தாளனாக இருக்க முடியாது.
ரொம்பப் பண்றே.
இல்லை. உண்மையில் என் வீட்டுக்குப் போக எனக்கு வழி தெரியக் கூடாது. அப்படியிருந்தால்தான் நான் ஒரு எழுத்தாளனாக இருக்கவே தகுதி இருக்கிறது என்பேன்.
சரி, நான் ஆரம்பித்த கதைக்கு வருகிறேன். இலங்கை செல்வதற்கான வீசா மற்றும் டிக்கட்டுக்கு கொக்கரக்கோவிடம் கேட்டேன். அவன் அப்போது கொஞ்சம் பிஸியாக இருந்தான் போல. இன்று நாளை என்று போய்க் கொண்டிருந்தது. சரி, நாமே போட்டு விடலாம் என்று முயன்றேன். முதல் முறை. கொக்கரக்கோ அனுப்பியிருந்த லிங்கை வைத்துக் கொண்டு இணையத்திலேயே விண்ணப்பத்தை எடுத்துக் கொண்டேன். அதன் உள்ளே போனேன். தனிநபருக்காக, குழுவாக, வேறு ஒருவருக்காக என்று மூன்று பிரிவுகள் இருந்தன. அவ்வளவுதான். அதில் உங்கள் பெயர், முகவரி, இலங்கையில் தங்கும் முகவரி, பாஸ்போர்ட் எண் என்று எந்த விவரமும் கேட்கப்பட்டிருக்கவில்லை. எதுவுமே இல்லை. ஏதோ ஒரு பிட் நோட்டீஸ் போல் இருந்தது. ஒன்றுமே புரியவில்லை. திரும்பத் திரும்ப்ப் படித்துப் பார்த்தேன். தனிநபருக்காக, குழுவாக, வேறு ஒருவருக்காக. வேறு ஒரு கட்டத்தில் வியாபார விஷயமாகச் செல்பவர்களுக்கு என்று போட்டிருந்தது. அடுத்த கட்டத்தில் வேறு நாடுகளுக்குச் செல்வோர் கொழும்புவில் நின்று போகிறார் என்றால் அவர்களுக்கானது.
எனக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்த்து. அதனால் நான் பாஸ்போர்ட் கணேசன் என்ற நண்பரை அணுகினேன். அவர் ஏற்கனவே என்னுடைய பாஸ்போர்ட் புதுப்பித்தல் விஷயத்தில் பிரமாதமாக உதவி செய்திருக்கிறார். அவர் வீசா விஷயம் செய்ய மாட்டார் போல. அதனால் கண்ணன் என்பவரைக் கை காட்டினார். என் பெயரைச் சொல்லுங்கள், ரொம்ப அருமையாக வேலை செய்து கொடுப்பார் என்றார். கண்ணனிடம் பேசினேன். வாட்ஸப்பில் பாஸ்போர்ட்டின் புகைப்பட நகலை அனுப்பச் சொன்னார். அனுப்பினேன். ஒரு நாள் முழுவதும் எந்த பதிலும் இல்லை. நானும் ரொம்பவும் நை நை என்று அரிக்கும் வழக்கம் இல்லாதவன் என்பதால் அப்படியே விட்டு விட்டேன். ஒரு முழுநாள் ஆன பிறகு “ஸாரி சார், என் வாட்ஸப் நம்பர் வேறு, இந்த நம்பரில் அனுப்பியதை இப்போதுதான் பார்த்தேன், இன்று முடித்து விடலாம்” என்றார். அதற்குப் பிறகு அன்று இரவு பத்து மணி வரை அவரிடமிருந்து எந்த சலனமும் இல்லை. இதற்கிடையில் கொக்கரக்கோ வேறு “இந்த ஏஜெண்ட் எல்லாம் எதற்கு பெருமாள்? நான்தான் சென்னை வந்ததும் செய்து விடுகிறேன் என்று சொன்னேனே?” என்றான். உடனடியாக கண்ணனுக்கு “நானே முடித்து விட்டேன்” என்று செய்தி அனுப்பினேன். அவரும் உடனடியாக பதில் அனுப்பினார். “அடுத்த முறை வேகமாக செய்து விடலாம்.” அது சரி என்று நினைத்துக் கொண்டு அவர் நம்பரை என் ஃபோனிலிருந்து நீக்கி விட்டேன்.
கொக்கரக்கோவுக்கு பாஸ்போர்ட்டின் நகலை அனுப்பி பணமும் அனுப்பி வைத்தேன். நானே செய்யலாம்தான். டிக்கட் போடுவதுதான் பிரச்சினை. மூன்று முறை தப்பான தேதியில் டிக்கட் போட்டிருக்கிறேன். எப்படி நடக்கும் என்றால், எனக்கு தேதியோ மாதமோ வருடமோ நினைவில் இருக்காது. ஆனாலும் மிக நிதானமாக, கவனமாகத்தான் போடுவேன். ஆனாலும் வருடத்தை ரொப்புவதில் தவறு நேர்ந்து விடும். ஒரு வருடம் தள்ளிப் போட்டு விடுவேன். ஒருமுறை விமான நிலையத்தின் உள்ளேயே விட்டு விட்டார்கள். டிக்கட் கௌண்டரில் உள்ளவர்தான் இது அடுத்த வருடத்துக்கான டிக்கட் என்று சுட்டிக் காட்டினார். அப்புறம் ஒரு புதிய டிக்கட் எடுத்துக் கொண்டு போனேன். இன்னொரு முறை தேதி தப்பாகப் போயிற்று. மூன்றாவது முறை, மாதம் தப்பு. ஒரு முறை மிகப் பெரிய தப்பில் போய் முடிந்தது. ஒரு வங்கியிலிருந்து ஒரு பெண் தேனினினும் இனிய குரலில் கடன் அட்டை வாங்கிக் கொள்ள வற்புறுத்திக் கொண்டே இருந்தாள். சரி, என்ன போயிற்று என்று வாங்கினேன். ஒருநாள் புவனேஸ்வரியின் (என் முன்னாள் கேர்ள் ஃப்ரெண்ட்) வீட்டில் வைத்து என்னுடைய கடன் அட்டையின் மூலம் இரண்டு பேருமாகச் சேர்ந்து தில்லிக்கு டிக்கட் போட்டோம். நான் ஒருத்தன்தான் போகிறேன். ஆனால் புவனேஸ்வரி உதவி செய்தாள். அதுதான் அடுத்த ஆண்டுக்கான டிக்கட். கடன் அட்டையில் பணம் செலுத்தவில்லை. அப்போதெல்லாம் நெட் பேங்கிங் இல்லையென்று நினைக்கிறேன். அல்லது, அப்போதுதான் ஆரம்பித்திருக்கும். வட்டிக்கு மேல் வட்டி சேர்ந்து ஐயாயிரம் ரூபாய் இருபத்தைந்தாயிரம் ரூபாயை எட்டி விட்டது.
ஐயா, நான் இருபத்தைந்தாயிரத்தையும் கொடுத்து விடுகிறேன், கடன் அட்டையை ரத்து செய் என்றால் அதற்குப் பெரிய பிரச்சினை. நாய் அலை பேய் அலை அலைந்து அந்த அட்டையை ரத்து செய்ய வேண்டியதாயிற்று.
அப்புறம்தான் புவனேஸ்வரி சொல்கிறாள், அவள் விமான டிக்கட்டே போட்டதில்லையாம். அவள் கணவன்தான் அவளுக்காகப் போடுவானாம். அட நாதாரிங்களா என்று நினைத்துக் கொண்டேன்.
இந்தப் பிரச்சினைக்குத்தான் கொக்கரக்கோவை அணுகுவது.
கொக்கரக்கோவிடமிருந்து உடனடியாக வீசா விண்ணப்பத்தின் பிரதி வந்தது. ஆரம்பத்தில் ஏன் என்னால் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், தனிநபருக்காக என்று எழுதியிருந்ததை நான் க்ளிக் செய்திருக்க வேண்டும். க்ளிக் செய்திருந்தால் அது விண்ணப்பத்தின் உள்ளே போயிருக்கும்.
இப்போது கொக்கரக்கோவே விண்ணப்பதை நிரப்பி அனுப்பி விட்டான். இலங்கைத் தூதரகத்திலிருந்து பெற்றுக் கொண்டதற்கான ரசீதும் வந்து விட்டது. பொதுவாக அதோடு விட்டிருப்பேன். எந்த ரசீதையும் ஓட்டல் பில்லையும் நான் பார்த்ததே இல்லை. அன்றைய தினம் என்னவோ தெரியவில்லை, விண்ணப்பத்தைப் பார்த்தேன். என் பிறந்த நாள் 18.12.1954 என்று கண்டிருந்தது. தூக்கிவாரிப் போட்டது எனக்கு. பாஸ்போர்ட்டில் இருந்த பிறந்த நாள் 10.4.1954. இப்படியெல்லாம் கொக்கரக்கோ செய்ய மாட்டானே என்று தோன்றியது. கொக்கரக்கோ கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக எனக்கு டிக்கட் போடுகிறான். எப்படி இந்தத் தவறு நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமாயிற்று.
கொக்கரக்கோவின் டிக்கட்டை கொக்கரக்கோவும் என்னுடைய டிக்கட்டை வினித்தும் போட்டார்களாம். என்னைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் பாஸ்போர்ட்டில் இருக்க, அதை அப்படியே விண்ணப்பத்தில் பிரதி பண்ண வேண்டியதுதான். ஆனால் வினித்துக்கு என் நிஜமான பிறந்த நாள் தெரிந்திருந்ததுதான் பிரச்சினை. அதனால் 18.12.1954 என்று போட்டு விட்டான். அப்படிப் போட்டிருந்தாலும் 1953 என்றல்லவா போட்டிருக்க வேண்டும்? வருடத்தை மட்டும் பாஸ்போர்ட்டில் பார்த்துப் போட்டு விட்டு தேதிதான் நமக்குத் தெரியுமே என்று 18.12. என்று போட்டு விட்டான்.
இதற்காக கொழும்பு விமான நிலையத்தில் மறுபடியும் தண்டம் அழுது இன்னொரு வீசா வாங்க வேண்டும்.
ஏன் இப்படி எனக்கு இரண்டு பிறந்த நாள் என்றால், என் நைனா கௌதியா ஸ்கூலில் ஒண்ணாங்கிளாஸ் வாத்தியார். அப்போது நாங்கள் கௌதியா ஸ்கூலுக்கு அருகில் உள்ள வெங்கிட்டு சந்தில் குடியிருந்தோம். இப்போது அந்த இடம் பஸ் ஸ்டாண்டாக மாறி விட்டது. அப்புறம் என்ன ஆயிற்றோ, கொசத்தெருவுக்குக் குடி பெயர்ந்தோம். கொசத்தெருதான் நாகூரின் கடைசி. பெயர் கொசத்தெரு என்றாலும் குயவர்களோடு கூட தொம்பர் சமூகத்தினரும் அங்கே வசித்தனர். வாடகை கம்மி என்பதால் அங்கே மாறியிருக்கலாம். கௌதியா ஸ்கூலில் ஒன்றாம் வகுப்பு படித்த நான் இரண்டாம் வகுப்புக்கு செட்டியார் ஸ்கூலில் சேர்ந்தேன். அப்போது டி.சி. இல்லை போல. என் நைனாதான் வாத்தியார் ஆயிற்றே? ஸ்கூலில் சேர்க்கும் தேதிக்குத் தகுந்தாற்போல் என் பிறந்த நாளை மாற்றி விட்டார்கள் போல நைனா. அதுதான் இத்தனை குழப்பத்துக்கும் காரணம். என் நைனா வைத்த அறிவழகன் என்ற பெயரைப் போலவே இந்தப் பொய்யான பிறந்த தேதியையும் இத்தனை ஆண்டுகளாக சுமந்து கொண்டிருக்கிறேன்.
ஆக, இப்படித்தான் இருக்கிறார்கள் என் வாசகர் வட்ட நண்பர்கள்.
நேற்று மகாதேவன் என்ற இருபத்தைந்து வயது வாசகன் எனக்குக் கடிதம் எழுதினான். என்னை அவன் சந்திக்க வேண்டுமாம். அவன் ஆரணியைச் சேர்ந்தவன். இங்கே லஸ்ஸில் அவனுக்கு ஒரு போட்டித் தேர்வு இருக்கிறதாம். அதை முடித்து விட்டு என்னைச் சந்திக்க வேண்டும். சந்திக்கலாம். என் வீடு லஸ்ஸுக்குப் பக்கம்தான்.
அடுத்த கடிதம் வந்தது. பெருமாள், சென்ட்ரலிலிருந்து லஸ்ஸுக்கு எப்படி வருவது?
நான் பதில் எழுதவில்லை. அன்று மாலையே இன்னொரு கடிதம் வந்தது. நான் கேட்டிருந்த விவரத்தை கொக்கரக்கோவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
வக்காளி.
பின்குறிப்பு 1: இரண்டு நாளில் திருமணப் பதிவுச் சான்றிதழ் கைக்குக் கிடைத்தது. கவரைப் பிரித்துக் கூடப் பார்க்காமல் அதை மோகனிடம் ஒப்படைக்கப் போன என்னைத் தடுத்து கவரை வாங்கிப் பிரித்துப் பார்த்தாள் வைதேகி. சான்றிதழை கைகளில் பாந்தமாகப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து ஒவ்வொன்றாகப் பார்க்க ஆரம்பித்தாள். அப்போது அவளைப் பார்த்தபோது அந்தப் பதிவாளர் போலவே இருந்தது. பார்த்துக் கொண்டே வந்தவள் திடீரென்று, “என்ன இது பெருமாள், வைதேகி wife of செங்குட்டுவன் என்று இருக்கிறது? நான் என்ன செங்குட்டுவன் மனைவியா? அந்த இடத்தில் wife of கண்ணாயிரம் பெருமாள் என்றல்லவா இருக்க வேண்டும்?” என்று பதறியபடி சொன்னாள். அதற்கு நாம் ”மோகன் என் வாரிசு” என்று சொல்லி legal heir சான்றிதழ் வாங்க வேண்டும் வைதேகி என்றேன். உடனே அதையும் எடுத்து விட வேண்டியதுதான் என்றாள்.
பின்குறிப்பு 2: மகாதேவன் என்னைப் பார்க்க வரும் நாள் இன்றுதான். அதாவது, மார்ச் 11, 2023. மாலை ஆறு மணிக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறான். வீட்டுக்கே வந்து விடுங்கள் என்றேன். வீட்டில் சந்தித்தால் பிரச்சினை என்று எழுதியிருக்கிறீர்களே என்றான். பிரச்சினைதான், நாம் மொட்டை மாடிக்குப் போய் விடலாம் என்றேன். இப்போது “உங்களுக்கு ஏதாவது வாங்கி வர வேண்டும், என்ன வாங்கி வரலாம்?” என்று கேட்டு வாட்ஸப் செய்தி வந்திருக்கிறது. உங்களுடைய பட்ஜெட் என்ன என்று கேட்டு எழுதியிருக்கிறேன். சந்திப்பும் ஒரு கதையாக ஆகாமல் நல்லபடியாக முடிந்தால் சரி என்று நினைத்துக் கொண்டு இந்தக் கதையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
பின்குறிப்பு 3: வினித் மதுரை போயிருக்கிறான். அவனும் கொக்கரக்கோவும் ஜாலியாக மதுரை குமார் மெஸ்ஸில் சாப்பிடுவதை ஃபோட்டோ எடுத்து அனுப்பினான். மவனே, உனக்குத் திருமணம் ஆகட்டும், இருக்கிறது கச்சேரி என்று பதில் அனுப்பியிருக்கிறேன். பார்ப்போம்.