எலி
ஆடைகளின்றித் திரிந்துகொண்டிருந்த காலம். பெயர் வைக்கும் வழக்கமும் இல்லை. ஏதோ ஒரு பறவை கிளைக்குக் கிளைத் தாவுவதைத் பார்த்தபடி, செங்குத்தாக நிற்கும் விரைப்பான பாம்பு ஒன்று லேசாக குனிந்து நிமிர்ந்து செல்வது போல சென்றுகொண்டிருந்தாள். வாயில் ரத்தம் ஒழுக இறைச்சியைத் தின்றுகொண்டே வந்த ஒருவன் எதிர்ப்பட்டதும் நின்று நிதானித்து இளமரம் காற்றில்லாத போது நிற்பது போல நின்றாள்.
அவன் கொஞ்சமாக இறைச்சியைக் கொடுத்தான் . இவள் வாங்கவில்லை. இன்னும் சற்று அருகே வந்தவன் அவளுடைய முலைக்காம்புகளை வெறித்துப் பார்த்தான். பின் அதனை தொட்டு நிமிட்டினான். ரத்த வாயோடு அவள் முலைக்காம்பில் வாய் வைத்தான். அவன் செயலோடு சேர்ந்து கரைந்தவள், அவன் கடித்ததும் தட்டி விட்டாள். அவன் மீண்டும் மூர்க்கமாக முலையைக் கடித்து சப்ப ஆரம்பித்தான். அவன் தலைமயிரைப் பற்றி இழுத்தவள், அவன் தலையை தன் யோனியை நோக்கி இறக்கினாள். அவன் மீண்டும் முலையை நோக்கி மேலெழுவதும் அவள் அவனை யோனியை நோக்கிக் கீழ்த் தள்ளுவதுமாக நடந்துகொண்டிருந்தது.
அவன் அவளை அறைந்தான். அவளை கீழே தள்ளினான்.அவளுடைய இறுக்கமான முதுகில் கல்லோ, எந்த மிருகத்தினுடைய பல்லோ குத்தியது. மூர்க்கமாகப் புணர்ந்தான். அவள் புணர்ச்சியை அனுபவித்தாள். அவன் வாயில் ஓடியிருந்த ரத்தத்தைத் துடைத்தாள். புணர்ந்து முடித்ததும் இளித்தான். பக்கத்தில் சாய்ந்தான். உடனே விருட்டென எழுந்தான். பூட்டிய வில் போல விரைப்பாக ஆக முயற்சித்தான். அவன் குறியில் இருந்து இன்னும் விந்து சொட்டிக்கொண்டு இருந்தது. தப தபவென ஓட ஆரம்பித்தான்.
இவள் தன் கைகளால் துழாவினாள். காய்ந்த கட்டையொன்று தட்டுப்பட்டது. அதை இழுத்து அருகே வைத்துக்கொண்டாள். அதன் மேல் தன் தலையை ஏற்றினாள். இதுவரை, நடுவில், அவள் கவனிக்காமல் விட்ட ஏதோ ஒரு பறவையின் சிறகின் படபடப்பு மீண்டும் அவள் வாழ்க்கைக்குள் வந்தது.
*****
நான் ஒரு இளம் மனைவி. இப்படி அறிமுகபடுத்திக்கொள்வதே அபத்தமாகத்தான் இருக்கிறது. மனதில் என்ன தோன்றுகிறதோ அதை எழுத்தில் வடிக்க நான் ஒரு எழுத்தாளர் இல்லை. அதனால் மனதளவில் நான் ஒரு நவீன நங்கையாக இருந்தாலும் எழுத்தில் க்ளீஷே வருவது தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. தமிழின் நவீன எழுத்தாளர்களே ஒரு க்ளீஷே கிடங்குதான் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆம், நான் ஒரு நவீன தமிழிலக்கிய வாசகியும் கூட. எனக்கு ஒரு சின்ன விஷயம் நடந்தது. அதை எனக்குத் தெரிந்த ஒரு எழுத்தாளரிடம் சொல்லி இதை கதையாக எழுத முடியுமா என்று கேட்டதற்கு அவர் எழுதிக்கொடுத்த ஆரம்பப் பத்திகள்தான் மேலே நீங்கள் படித்தது. எனக்குக் கூட ஒரு எழுத்தாளரைத் தெரியுமா என்றெல்லாம் வாய் பிளக்க வேண்டாம். ஒரே ஒரு புத்தகம் வாசித்த எந்த ஒரு பெண்ணுக்குமே தமிழ்நாட்டில் ஒரு பிரபல எழுத்தாளரின் அறிமுகமும், அவரின் மொபைல் நம்பரும் தெரிந்திருக்கும். அந்த எழுத்தாளரும், ”ச்சாப்டீயா“ “இன்னும் தூங்கலீயா“ “புருஷன் நல்லா வச்சிருக்காரா?” “ஒடம்ப பாத்துக்கோ“ “நான் இருக்கேன் உனக்கு“ “நீ நேத்து பேசினதை கதைல டயலாக்கா வச்சிருக்கேன்” என்றெல்லாம் கேட்டுக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருப்பார்.
நானுமே டிராக் மாறுகிறேன். ஆ…சொல்ல மறந்து விட்டேன். நான் அவ்வப்போது சிறுபத்திரிகைகளும் படிப்பேன். அவர்களே இலவசமாக பி டி எஃப் அனுப்பி விடுவார்கள். அல்லது குறிப்பிட்ட எழுத்தாளரின் கதை அல்லது கவிதை வந்தால் அவர் குரியரில் அனுப்பி வைத்து விடுவார். அதன் காரணமாகக் கூட நான் டிராக் மாறியது நடந்திருக்கலாம். மனதை மொத்தமாகக் கலைத்து சேர்த்து விட்டு எனக்கு நடந்த சம்பவத்தைப் பற்றி மட்டும் சொல்ல முயற்சிக்கிறேன். அது ஒரு சாதாரண சப்பை சம்பவம் தான். அது முக்கியமல்ல. ஆனால் அதற்குப் பிறகு நடந்த விஷயங்கள்தான் எனக்குக் கொஞ்சம் முக்கியமாகப் படுகின்றன. முதலில் நீங்கள் படித்தீர்களே, அந்த எழுத்தாளரையே எழுத விட்டு நான் பாட்டிலும் சும்மா இருந்திருப்பேன். ஆனால் அவர் ஒரு சிறுகதையை 650 பக்க ஹார்ட் பவுண்ட் நாவல் ஆக்கி விடுவார் என்ற பயத்தில் அவரை பிளாக் செய்து விட்டு நானே சொல்கிறேன். கவனியுங்கள், நானே எழுதுகிறேன் என்று சொல்லவில்லை. எனக்கு இன்னும் எழுத்தின் மீதும் எழுத்தாளர்களின் மீதும் மரியாதை இருக்கிறது.
மீண்டும் மனதைக் கலைத்து சேர்த்து விட்டு நேரடியாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.
ஒன்றுமில்லை, என் வீட்டில் ஒரு எலி இருந்தது. என் வீட்டில் எப்போதும் இருக்கும் என்று சொல்ல முடியாது. வரும், போகும். அதற்கு நான்கைந்து வீடுகள் கூட சொந்தமாக இருக்கலாம். எனக்கு அதைப் பிடிக்காது. நான் ஒரு லவ் மேரேஜ் கேர்ள். நான்கைந்து வருடங்கள் உருகி உருகிக் காதலித்து திருமணம் செய்து கொண்டவள். கணவனானாலும் இப்போதும் அவனைக் கொள்ளை கொள்ளையாகக் காதலிக்கிறேன். இதற்கும் எலிக்கும் சம்பந்தம் இல்லை. நான்தான் சொன்னேனே, எழுத்தாளர் இல்லை என! அதனால் கோர்வையாக வரவில்லை. எலிக்கு வந்து விடுவோம். நான் ஒரு அபார்ட்மெண்டில் தனியாக வசிக்கிறேன். கணவனா? அவனுக்கு வேறு ஒரு ஊரில் வேலை. நல்லவன்தான். அழகன். வசீகரமானவன். அடிக்கடி என் வீட்டுக்கு வருவான். நாங்கள் ஒன்றாக ஜாலியாக இருப்போம். ஏன் என் வீடு என்கிறேனா? நான்தான் வாடகை கொடுக்கிறேன். அவன் வீட்டுக்கு அவன் வாடகை கொடுக்கிறான். நான் இருப்பது ஹைதராபாத். அவன் இருப்பது பெங்களூர். ஆனால் நாங்கள் தமிழர்கள். சென்னையிலும் எங்களுக்கு ஒரு வீடு இருக்கிறது. நான் பெரும்பாலும் அவன் பெங்களூர் வீட்டுக்குச் செல்வதில்லை. அவனுக்கு இந்த எலி பற்றி எந்த அக்கறையும் இல்லை. “வீடுன்னு ஒண்ணு இருந்தா எலின்னு ஒண்ணு வரத்தான் செய்யும்” என்பான். கதையின் போக்கில் இதே டயலாக்கை சொல்வான்.
அவன் வீட்டில் எலி வருகிறதா இல்லையா என்பதே அவனுக்குத் தெரியாது என்பான். இன்னும் ஓவராக “எலியோட வாழ்க்கைக்கு எல்லாம் நாம இம்பார்டன்ஸ் குடுக்கக் கூடாது “ என்பான்.
எனக்கு என்ன பிரச்சனை என்றால், எலி என் வீட்டு ரெஃப்ரிஜிரேட்டரில், காய்கறி போட்டு வைக்க இருக்கும் டிரேவில் டேரா போடுகிறது. எனக்கு அது ஒரு ஈகோ பிரச்சனை. இதில் என்ன ஈகோ என்கிறீர்களா?
எலி மனிதர்களுக்கு பயப்படுமா இல்லையா ?
இந்த எலி எனக்கு பயப்படாது. ஃப்ரிட்ஜின் கீழ் டிரேவை திறந்து, எலியை நேருக்கு நேர் பார்த்தாலும் பயப்படாமல் தன்னுடைய மஞ்சம் என்பது போல ஒரு சேப்பங்கிழங்கின் மீது தலை சாய்த்து என்னைப் பார்த்துத் தன் மீச்சிறு உதடுகளால் பழிப்புக் காட்டும். ஒரு வெளக்குமாறை எடுத்து அடிக்கலாம் என போக்குக் காட்டினால் வேண்டா வெறுப்பாக ஓடும்.
இதைப்பற்றி ஒரு முறை என் கணவன் பியர் அடித்துக்கொண்டே என்னிடம் விடியோ கால் செய்த போது பேச ஆரம்பித்தேன். அவனுடைய ரொமாண்டிக் முகம் மாறியது. எரிச்சலானான்.
”ஒரு எலியைப் பத்தில்லாம் ஏன் பட்டு பேசி டார்ச்சர் பண்ற“ என்றான்.
அதன் பிறகு நாங்களிருவரும் ஆர்டிஃபீஷியலாக காதல் மொழி பேசி போலியாக அந்த விடியோ உரையாடலை முடித்தோம்.
அந்த எலியைக் கொல்லலாம் என முடிவு செய்தேன். உடனே என்னை கொடூரமான பெண்மணி என முடிவு செய்து விடாதீர்கள். அது என் ஈகோவை காயப்படுத்தியது மட்டும் பிரச்சனை அல்ல. இன்னும் கேட்டால் அது ஒரு பிரச்சனையே அல்ல. அந்த எலி என் அன்றாட வாழ்வையே கேள்விக்குள்ளாக்கியது. என் உணவு மற்றும் உணவு தயாரிக்கத் தேவையான தானியங்களைச் சூறையாடியது. கொஞ்சம்தான் தின்னும், ஆனால் அருவருப்பாகும் அல்லவா? மொத்தமாகத் தூக்கிக்கொட்டுவேன்.
உணவைக் கூட விடுங்கள். நான் நன்கு இழுத்துப்போத்திக்கொண்டு, கோவில் திருவிழாவில் அரவான் களப்பலியில் படுத்துக் கிடப்பது போல தூங்கும் ஆள். என் மீதேறி ஓடும். போர்வை மீதுதான் ஓடுமென்றாலும் என் உடல் முழுக்க அருவருப்புத் தொற்றிக்கொள்ளும். அதோடு என் தூக்கம் போச்சு. மறுநாள் அலுவலகத்தில் அதன் பாதிப்பு தொடரும்.
இன்னொன்று, இந்த எலி ஒரு கிரேஸி எலி போல. ஒரு நாள் அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பிக்கொண்டு, கடைசியாக என் கைப்பையை எடுக்கும் போது அதிலிருந்து வெளி வந்து என் கையைக் கடித்து விட்டுப் போனது.
என் இருத்தலையே கேள்விக்குள்ளாக்கும் இதை கொன்றால்தான் என்ன?
விஷம் வைத்தேன். டெக்னிக்கலாக அதைத் தவிர்த்து விட்டது அல்லது விஷ வேசினேஷன் போல ஏதோ செய்து கொண்டது. ஏன் மனிதர்கள் மட்டும்தான் கரோனா வேசினேஷன் கண்டுபிடிப்பார்களா? இறைவன் படைப்பில் அனைத்தும் சமம்தானே?
இது கார்ட்டூனில் காட்டப்படும் ஒரு ஃபேண்டஸி எலியோ என்று கூட எனக்கு சந்தேகம் வந்து விட்டது. ஒரு விஷ கேக் வைத்து இருந்தேன். ஒன்று, அதை சாப்பிட்டு உயிரை விடலாம்; அல்லது, அதை சாப்பிடாமல் இருக்கலாம். இது அந்த கேக்கை கொறித்துக் கொறித்து வீடு முழுக்கத் துப்பி வைத்திருந்தது. மீதமுள்ள கேக்கை இழுத்து வந்து என் படுக்கையறையில் நட்ட நடுநாயகமாகப் போட்டு இருந்தது.
எலி ஒட்டிக்கொள்ளும் என ஒரு பட்டை வாங்கினேன். அதில் சில எறும்புகள்தான் ஒட்டிக்கொண்டு உயிரை விட்டன. ஒரு முறை அந்த பட்டைகள் என் பாதங்களில் ஒட்டிக்கொண்டன. என் கணவன் சிலாகித்து முத்தம் கொடுத்து நக்கி நக்கி சிவப்பாக்கிய பாதங்கள்.
எதுவும் வேலைக்காகவில்லை. கடும் எரிச்சலில் இருந்த நான், ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து தாமதமாகக கிளம்பி வீடு வந்து சேர்ந்தேன். என் அபார்ட்மெண்டில் பன்னிரண்டு ஃபிளாட்டுகள்தான். பத்து ஃபிளாட்டில் தெலுங்கு மக்கள். ஒரு ஹிந்தி, ஒரு தமிழ். அந்தத் தமிழ் நான்தான். அபார்ட்மெண்டை பராமரிக்க ஒரு குடும்பம் கார் பார்க்கிங்கில் இருந்த ஒரு சின்ன அறையில் வசித்துக்கொண்டு இருந்தது. ஒரு அப்பா, அம்மா, பையன், அவன் மனைவி மற்றும் குழந்தைகள்.
பையன்தான் வாட்ச்மேன் மற்றும் பராமரிப்பு. அப்பா துணிகளை சலவை செய்து அயர்ன் செய்து கொடுப்பார். அவர் மனைவி எப்போதும் சும்மா இருப்பார். பையனின் மனைவி எப்போதும் சமைத்துக்கொண்டு இருப்பாள். சமைக்கும் நேரம் போக ஒரு பேசினில் எதையோ போட்டு சாப்பிட்டுக்கொண்டே இருப்பாள். ஆனாலும் ஒல்லியாகவும் செக்ஸியாகவும் இருப்பாள். ஆனால் அது ஒரு அசட்டு செக்ஸி என வையுங்கள்.
வீட்டைத் திறந்தேன். மணி இரவு ஒன்பது இருக்கலாம். . திறந்தவுடனேயே எலியின் “கிறீச்” கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு அறையின் கதவின் மேல் அமர்ந்து கொண்டு ஏதோ ஜிம்னாஸ்டிக் செய்து கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து வாட்ச்மேன் படியேறி மேல் மாடிக்குப் போய்க்கொண்டு இருந்தான்.
அவனை அழைத்து இந்த எலியைக் கொல்லும்படி கூறினேன். அவனும் கர்ம சிரத்தையாக தேடிப்பிடித்து ஒரு தடியை எடுத்துக்கொண்டு வருகையில், இஸ்திரி போடும் அவன் அப்பா எதிர்ப்பட்டு, அந்தத் தடியை வாங்கிக்கொண்டார். அவருக்கு 60 அல்லது 65 வயதிருக்கலாம்.
”எலியை நான் அடிக்கிறேன்.நீ போய் மோட்டார் ஸ்விட்சைப் போடு “ எனத் தன் மகனிடம் சொல்லி விட்டு என் ஃபிளாட்டுக்குள் புகுந்தார். எலியை நோட்டமிட்டார். அது கதவின் மேலேதான் இருந்தது. இஸ்திரி போடுபவர் மெல்ல வேறெங்கோ செல்வது போலச் சென்று யாரும் எதிர்பாரா வண்ணம், நான் மற்றும் எலியே எதிர்பாராத தருணத்தில் கட்டையை எலி மீது இறக்கினார். ஒரு நேனோ செகண்டில் சுதாரித்த எலி நகர்வதற்குள் கட்டை அடி வாங்கி விட்டது. ஆனாலும் அது கடைசி நொடியில் லேசாக நகர்ந்ததால் உயிர் போகவில்லை. உயிர் போகவில்லையென்றாலும், உயிராபத்து என்ற செய்தி அதன் மூளைக்கு எட்டி, மாபெரும் சக்தி கடைசி நேரத்தில் உருப்பெற்று, கீழே விழுந்த அது வேகமாக ஓடியது. அது எங்கு ஓடும் எனக் கணித்த அவர், ஒரு தேர்ந்த எலி வேட்டைக்காரர் போல அதை எதிர்ப்புறமாக எதிர்கொண்டு, அந்த எலியை மூலையில் மடக்கி ஒரே குத்தில் கொன்றார்.
இதை எல்லாம் பரவசத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தேன்.
அந்த எலியின் வாலைப் பிடித்துத் தூக்கி என் மீது எறிந்தார். இதை எதிர்பார்க்காத நான் என் உடல் முழுக்க அருவருப்பு ஊற்றெனப் பெருகி வழிய என் இரு உள்ளங்கைகளையும், குழந்தை ஈன்றெடுக்கும் போது அல்லது எனக்குத் தெரிந்தே உயிர் பிரியும் போது எப்படி விடைத்துக்கொள்வோனோ அப்படி விடைத்துக்கொண்டும் விரைத்துக்கொண்டும் கண்களை மூடிக்கொண்டு அர்த்தமில்லாமல் கத்தினேன்.
அடுத்த நொடி அந்த முதிய நாய் ஓடி வந்து என்னை அணைத்துக்கொண்டது.
இதை உங்களால் கற்பனையே செய்து பார்க்க முடியாது அல்லவா? என்னாலும்தான். அடுத்த நொடி தள்ளி விட்டேன். நான் தள்ளி விட்டேன் என்று சொல்ல முடியாது. ஆயிரமாண்டு காலமாகப் பல பெண்கள் மெல்ல மெல்லத் தள்ளி விட்டு, பிறகு வன்மையாகத் தள்ளி விட்ட மரபணுவின் பலனாக நான் ஓரிரு நொடிகளில் தள்ளி விட்டேன்.
இப்போது, அப்போதிருந்த மனநிலையை என்னால் கோர்வையாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. முயற்சிக்கிறேன்.
எலி செத்துக்கிடக்கும் அருவருப்பு. எலியை விட மகா அருவருப்பான மாபெரும் மனிதனெனும் கிழட்டுப் பெருச்சாளி என்மீது பாய்ந்த அருவருப்பு, நான் நிலைகுலைந்துதான் போனேன். ஆனால் நான் நிலைகுலையாத ஆள் என்று பெயரெடுத்த பெண். இதனால்தான் என் கணவன் என்னை லவ் பண்ணுவதாகச் சொல்லுவான்.
ஒரு கட்டத்தில் மீண்டெழுந்த நான் கத்தினேன்.
அந்த கிழட்டு எலி கையெடுத்துக் கும்பிட்டு நின்றுகொண்டு இருந்தது.
எலி நடு வீட்டில் செத்துக் கிடந்தது. அதேபோல இந்தப் பெரிய எலியும் பக்கத்தில் கிடக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். விளக்குமாறு என் கண்ணில் பட்டது. இதனால் அடித்து இந்தக் கைகூப்பிக்கொண்டிருக்கும் எலியை சாகடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
உண்மையில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
அப்படியே அமர்ந்தேன். அந்தப் பெரிய எலி வெளியேறியது.
என் கணவனுக்குக் கால் செய்தேன். இதை விவரித்தேன். என் காதல் கணவன், வழக்கமாக மற்றவர்கள் போல, எரிச்சல் ஊட்டும் விதமாக ஏதும் சொல்லாமல் …
“யூ ஹேவ் டூ ஹேண்டில் இட். கால் தி போலீஸ் அண்ட் இன்ஃபாம், ஐ வில் பீ வித் யூ“ என்றான்.
எனக்கு இது ஓக்கேதான். ஆனாலும் எனக்கு ஏனோ இது பத்தவில்லை. உண்மையில் எனக்கு இப்போது அவனிடம் இருந்து என்ன வேண்டும் ?
லவ் யூ வா? இல்லை.
அவன் உடனே புறப்பட்டு வர வேண்டுமா ?
ஆம்…அது எனக்குத் தேவையாக இருந்தது…அதை அவனிடம் சொல்லவில்லை. ஆனால் அது முழு உண்மையுமல்ல.
நான் கொலாப்ஸ் ஆகி இருந்தேன்.
”ஏய் …நான் ஒரு மாதிரி கொலாப்ஸ் ஆகி இருக்கேன்“ என்றேன்
“நான் இப்ப என்ன செய்யணும்னு சொல்லு குட்டிமா… நீயே அட்வான்ஸான ஆளுதானே … காண்ட் யூ ஹேண்டில் இட்?“ என்றான்.
நான் நவீனமான முற்போக்கான தைரியமான பெண்தான். மிக மிக சுதந்திரமான பெண்ணும் கூட. தண்ணி அடிப்பேன், தம் அடிப்பேன், பார்ட்டிக்குப் போவேன். பொறுக்கிகள் ஏதேனும் கமெண்ட் அடித்தால் கெட்ட வார்த்தையில் திட்டி ஸ்தம்பிக்க வைப்பேன். எவ்வளவு பொறுக்கியாக இருந்தாலும் அவன் அம்மாவின் யோனியை இழுத்தால் முகத்தில் சூடான யானைச் சாணியை அடித்தது போல ஆகிவிடுகிறார்கள். ஒரு பெண்ணியவாதியான எனக்கு இந்தச் செயல் திருப்தி இல்லைதான். ஆனாலும் இந்தப் பொறுக்கிகளைச் சமாளிக்க அவன் அம்மாவின் யோனியிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அதை இழுத்து தெருவில் விடுவேன். சமயங்களில் அவனையும் அவன் அம்மாவின் யோனிக்குள் சம்மந்தப்படுத்துவேன். எல்லா மானிடருக்கும் அவரவர் அம்மா யோனியுடன் சம்மந்தம் இருக்கிறதுதான். நான் சம்மந்தப்படுத்துவது வேறுவிதமாக இருக்கும். அது பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும்.
எனக்குக் கதை எழுதிப் பழக்கம் இல்லாததால் கதை எங்கெங்கோ இழுத்துக்கொண்டு போகிறது. மனதை கட்டுக்குள் வைத்து இனி வெறும் சம்பவங்களை, நடந்தவைகளை மட்டும் கொடுக்க முயல்கிறேன்.
“ஐ கேன் ஹாண்டில் இட் … பட் “ என்று நிறுத்தினேன்.
எனக்கு அப்போது யாருடைய துணையாவது வேண்டும் என்று இருந்தது. யாரேனும் இதைக் கையில் எடுத்து அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிட்டு, செயல்படுத்தி அவனுக்குத் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என நினைத்தேன். நான் அப்போது மிகவும் பலகீனமாக இருந்தேன்.
“சொல்லுமா ..நான் என்ன பண்ணனும்?“
“ஒண்ணுல்ல, நான் பாத்துக்கறேன்.“
“சரிமா …ஒண்ணு பண்ணு …மொதல்ல விமன்ஸ் ஹெல்ப் லைன் நம்பருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லு. அது பத்தாதுன்னு நினைக்கிறேன். எதுக்கும் 100க்கும் போன் போட்டு சொல்லு. நிச்சயம் அவங்க ஆக்ஷன் எடுப்பாங்க. தேவைன்னா சொல்லு என் ஃபிரண்ட் சக்ரபாணியை உடனே அனுப்பறேன். சப்போர்ட்டா இருப்பான். நீ கீழ போய் அந்த நாயி பையன் கிட்டயும் , ஃப்ளாட் செக்ரட்டரி கிட்டயும் சொல்லு . எதுவா இருந்தாலும் எனக்கு போன் பண்ணு. ஐ ஆம் ஆல்வேய்ஸ் வித் யூ”என்றான்.
“சரி பண்றேன்.“
“கரக்டா பண்ணுவியா ? 100 … அப்புறம் விமன்ஸ் ஹெல்ப் லைன்.“
“பண்றேன்.“
என் கணவன் நல்ல மேனேஜ்மெண்ட் ஆசாமி. என்னவெல்லாம் செய்ய வேண்டும் என பாயிண்ட் பாயிண்டாக சொல்லி இருந்ததால், விமன்ஸ் ஹெல்ப் லைன் நம்பருக்குக் கால் செய்து சொன்னேன். அடுத்து , ஃபிளாட் செகரட்ட்டரியை போனில் அழைத்துச் சொன்னேன்.
இந்தச் சம்பவம் நடந்தது அரசல் புரசலாகத் தெரிந்து விட்டது போல. வெளியே சின்ன சலசலப்பு. என் ஃபிளாட்டுக்குப் பக்கத்தில் நான்கு பேச்சிலர்கள் குடியிருக்கிறார்கள். அதில் ஒருவனுக்கு என் மேல் ஒரு இது. அப்பட்டமாக சைட் அடிப்பான். ஆனால் பேசியதில்லை. போனை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். வெளியே நின்றுகொண்டிருந்த பேச்சிலர்களுக்கும் தெரியட்டும் என ஸ்பீக்கர் போன் போட்டு 100க்குப் பேசினேன். கால் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு ஒரு பெண் போலீஸ் எடுத்தார். ஆங்கிலத்தில்தான் பேசினேன். விஷயத்தைக் கேள்விப்பட்டதும், கடுப்பாகி விட்டார் அவர்.
“இவனுங்கள எல்லாம் கொட்டையிலயே மெதிச்சி சாவடிக்கணும்“ என்றார்.
தொடர்ந்து பேசி என்னை சமாதானப்படுத்தினார். என் வீட்டு விலாசம் வாங்கிக்கொண்டு லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிப்பதாகவும், நடவடிக்கை கட்டாயம் உண்டு என்றும் என்னைத் தேற்றினார்.
அந்தத் தெலுங்கு பேச்சிலர்கள் அரண்டு போயிருந்தனர். நானே அவர்களிடம் நடந்ததைச் சொன்னேன். கல் போல நின்றுகொண்டிருந்தனர். ஒருவன் மட்டும் அபத்தமாகத் தலையை வெவ்வேறு திசைகளில் ஆட்டினான்.
அந்தக் கிழட்டு எலியின் பையனை நேரில் சந்தித்துச் சொன்னேன். அவன் கையைப் பிசைந்தபடி கேட்டுக்கொண்டு, கடைசி வரை கையைப் பிசைந்து கொண்டே இருந்தான்.
100ல் அழைத்துச் சொன்னதால், லோக்கல் சப் இன்ஸ்பெக்டர் அழைத்து விவரம் கேட்டுக்கொண்டார். நாங்கள் விசாரிக்கிறோம் என்றார்.
ஃபிளாட் செக்ரட்டரி அழைத்து, அவனைக் கடுமையாக மிரட்டி விட்டதாகவும், இனிமேல் இப்படி நடக்காது என்றும் கூறினார்.
உள்ளூர் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது. ஆய்வாளர் நல்ல ஆங்கிலத்தில் பேசினார். இப்போது இரவென்பதால் எதுவும் செய்ய வேண்டாம். காலை காவல் நிலையம் வந்து புகார் அளிக்கச் சொன்னார்.
அதற்குள் சக்ரபாணி வந்து விட்டான். எனக்கும் என் கணவனுக்கும் நல்ல நண்பன். அவனுடன் மாடியில் இருந்து இறங்கிக் கீழே போனேன்.
சக்ரபாணி அந்த கிழட்டு நாயின் மகனிடம் சென்று, 100 ரூபாய் பொருளுக்கு 50 ரூ விலை கேட்டால், இதெல்லாம் நியாயமா? என்று கேட்பார்கள் அல்லவா? அந்தத் தொனியில் நியாயம் கேட்க ஆரம்பித்தான்.
அந்த மகன்,
“தெரியாம பண்ணிட்டாரு …குடிச்சி இருந்தாரு, அதான் அப்டி பண்ணிட்டாரு. இனிமே பண்ண மாட்டாரு” என்றான்.
அதற்கு சக்ரபாணி , “இந்த வயசுல தனியா இருக்குற பொண்ணு கிட்ட இப்டி பண்ணலாமா?” என்று கேட்டான்.
“தெரியாம பண்ணிட்டாரு …குடிச்சி இருந்தாரு. அதான் அப்டி பண்ணிட்டாரு. இனிமே பண்ண மாட்டாரு.”
“என்னங்க பேசறீங்க? இந்த வயசுல தனியா இருக்குற பொண்ணு கிட்ட இப்டி பண்ணலாமா?”
இப்படியே தொடர்ந்து போய்க்கொண்டு இருந்தது. எனக்கு பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது.
“சக்ரபாணி …லீவ் இட். இதெல்லாம் சரி வராது. நாளைக்கு காலைல போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெயிண்ட் குடுத்துக்கலாம்“ என்றேன்.
போலீஸ் ஸ்டேஷன் என்று சொல்லியும் அந்தக் கிழட்டு நாயின் மகனிடம் இருந்து எந்தச் சலனமும் இல்லை. அவனுடைய மனைவி பேசினில் எதையோ போட்டு சாப்பிட்டுக்கொண்டே சாதாரணமாக இந்தச் சம்பவத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள். சக்ரபாணிக்கு நன்றி சொல்லி அனுப்பி விட்டு மேலே வந்து என் கணவனுக்கு போன் செய்து அனைத்தையும் சொன்னேன்.
“கவலைப்படாதே, நாளை காலை சக்ரபாணியுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்” என சொல்லி விட்டான்.
எனக்குக் குளிக்க வேண்டும் போல இருந்தது. அந்த எலி செத்துக்கிடந்தது வேறு அருவருப்பாக இருந்தது. அதை ஒரு முறத்தில் அள்ளி கேரி பேகில் போட்டுக் கட்டி முதல் வேலையாக குப்பைத்தொட்டியில் போட்டேன். உடல் முழுக்க சீக்காய்த் தேய்த்து குளிக்க வேண்டும் போல இருந்தது. அந்தக் கிழட்டு நாய் அணைத்த போது அவன் மீதிருந்த ஏதோ ஒரு துர்நாற்றம் இப்போது என் உடல் முழுக்க இருப்பது போலப் பட்டது. அவன் மீது துர்நாற்றம் இல்லாமல் கூட இருந்திருக்கலாம். ஒரு தவறான செயலைச் செய்கையில் , அடுத்தவர் மீது அத்துமீறுகையில், அந்த அத்துமீறலே ஒரு துர்நாற்றமாக மாறிக்கூட மனதில் பதிந்திருக்கலாம்.
நல்ல காலம் அவன் என்னை முத்தமிடவில்லை. ஆனால் அவன் முகம் என் முகத்தருகில் இருந்தது நினைவிருக்கிறது. அதுவே எனக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது, இருக்கிறது. அவன் முத்தமிட்டிருந்தால் என்ன செய்திருப்பேன் என்றே தெரியவில்லை. அதில் இருந்து வெளிவருவதற்குள் தற்கொலை கூட செய்துகொண்டிருக்கலாம். இதற்கே நான் தற்கொலைக்கு எதிரானவள். சில பெண்கள் இதைப்போன்ற சம்பவங்களை சுலபமாகக் கடந்தும் மறந்தும் விடுகிறார்கள். அந்தச் சிலரில் ஏனோ நான் இல்லை. அந்தச் சில பெண்களில் நானும் ஒருத்தியாக இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். நிம்மதியாக இருந்திருப்பேன். ஏனோ எனக்கு இப்படித்தான் வாய்த்திருக்கிறது.
உடைகளை அவிழ்த்துப்போட்டு, உண்மையாகவே சீக்காய் தேய்த்து வெந்நீரில் குளித்தேன். பிறகு உடல் முழுக்க சந்தன பவுடர் பூசிக்கொண்டேன். வாசனை திரவியங்களை தெளித்துக்கொண்டேன். பிறந்த நாளுக்காக வாங்கி வைத்திருந்த புத்தம் புது உடையை அணிந்து கொண்டேன். வீட்டை டெட்டால் ஊற்றிக் கழுவி விட்டேன.
*********
மறுநாள் காலையில் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டரை பார்த்தேன். நினைவு வைத்திருந்தார். ஆள் ஸ்மார்ட்டாக இருந்தார். ஆங்கிலத்தில் கம்ப்ளெயிண்ட் எழுதிக்கொடுத்தேன். ”விரைந்து நடவடிக்கை எடுக்கிறேன். அவனைத் தூக்கி வந்து முட்டியைப் பேர்த்து விடுகிறேன்” என்றார். ஏனோ கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. சக்ரபாணிக்கு நன்றி தெரிவித்து அனுப்பி வைத்தேன். அலுவலகம் போய் விட்டேன்.
*****
மாலை வீட்டுக்கு வருகையில் எந்தப் பிரச்சனையும் இல்லாதது போல அந்த கிழட்டு நாய் துணிகளை இஸ்திரி போட்டுக்கொண்டு இருந்தான். அவனுடைய மகன் நானென்னவோ அவன் மனைவியுடன் கட்டாய லெஸ்பியன் உறவு கொண்டது போல முகத்தைத் திருப்பிக்கொண்டான். தின்றுகொண்டிருந்த அவன் மனைவி பாத்திரத்தை கீழே வைத்து விட்டு எழுந்து அவர்களுக்கான சிறிய அறைக்குள் புகுந்து கொண்டாள். நான் இனம் புரியா எரிச்சலுடன் என் வீட்டுக்குள் வந்தேன். அந்த எலி இறந்து கிடந்த இடம் எனக்குத் துல்லியமாகத் தெரிந்தது. சாலை விபத்தில் யாரேனும் இறந்து போனால் “மார்க்” செய்வார்கள் அல்லவா ? அதைப்போன்ற ஒரு மாயக் கோடு எலி இறந்த இடத்தைச் சுற்றி மின்னிக்கொண்டும் மறைந்துகொண்டும் இருப்பதாகப் பட்டது.
கணவனுக்குக் கால் செய்து இதையெல்லாம் சொல்லி விட்டு , “போலீஸ் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை” என்றேன்.
“கன்ஃபார்மா எடுப்பாங்க. 100 மூலமா வேற சொல்லிருக்கோம் , வெயிட் பண்ணு “ என்றான்.
“எனக்கு நம்பிக்கையே இல்லடா, கடுப்பா இருக்கு.“
“இல்லடீ … அவங்களுக்கு நிறைய கேஸ் இருக்கும். கொலை கேஸ், ராபரி, கலவரம் இதெல்லாம்தான் அவங்களுக்கு ப்ரியாரிட்டி.”
“ம்ம். “
“பட் ஷ்யூரா இதையும் எடுப்பாங்க. “
“ஓக்கே டா.”
********
மறுநாள் அலுவலகம் செல்லும் போது ஒரு ஃபிளாட்டில் இருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். எங்களுக்குள் ஓரளவு அறிமுகம் இருந்தது. புன்னகை அளவு அறிமுகம்தான் .
அவளே பேசினாள்.
“ஒரு பெண்ணாக என்னால் நன்கு புரிந்து கொள்ளமுடிகிறது. நான் இந்த விஷயத்தில் உன்னுடன் இருப்பேன்.“
அவளுக்கு நன்றி சொல்கையில், அவளுடைய அம்மாவும் வெளிப்பட்டார்.
“20 வருஷமா இங்க வேலை செய்யறான், இதுவரைக்கும் இப்படி பண்ணதே இல்லை “ என்றார்.
எனக்கு எரிச்சலாக வந்தது. இதற்கு நான் என்ன சொல்ல வேண்டும்? அவர் என்ன ஸ்தாபிக்க விரும்புகிறார்? எந்த ஒரு திருடனும் ஏதோ ஒரு நாளில்தானே முதன் முறையாகத் திருடுவான் ? எந்த ஒரு ரேப்பிஸ்டும் ஏதோ ஒரு நாளில்தானே ஒரு பெண்ணிடம் தன் கணக்கை ஆரம்பிப்பான்? கொலைகாரனும் அப்படித்தானே?
ஆந்த கிழட்டு நாய் என்னிடம் முதன்முறையாக அத்துமீறியிருக்கலாம்; அல்லது, பலரிடம் இப்படிச் செய்து யாரும் அதை பொதுவில் சொல்லாமல் இருந்திருக்கலாம்.
எனக்கு வந்த கடுப்பில் , ”இதுவரை செய்யாதிருந்திருக்கலாம் , அல்லது செய்தது தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இனிமேல் அவன் அப்படி எந்த பெண்ணிடமும் செய்ய நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது . அதற்கான என் நடவடிக்கை தொடரும்” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தேன்.
*********
அன்று மாலையும் எந்தச் சிக்கலும் இன்றி அமைதியாக இஸ்திரி போட்டுக்கொண்டு இருந்தான். மகன் முகத்தைத் திருப்பிக்கொள்தல் என எல்லாமும் ஸ்ருதி பிசகாத இசைக்கோர்வை வாழ்வானது போல நடந்துகொண்டிருந்தது.
கொஞ்சம் எரிச்சலுடன் கணவனுக்கு போன் அடித்தேன்.
“இன்னும் ஒரு ஆக்ஷனும் எடுக்கலை.”
”நான்தான் சொன்னேனே…”
“ஸ்டாப் இட். இந்த ப்ரியாரிட்டி அது இதுல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு தினம் தினம் சாவற மாதிரி இருக்கு.“
“ஏய்… என்ன நினைச்சிட்டு இருக்க? போலீஸ் எல்லாம் நம்ம இஷ்டத்துக்கு ஆட மாட்டாங்கடீ.“
“உனக்குதான் நிறைய பேரைத் தெரியுமே… அவங்க கிட்ட சொல்லி பிரஷர் பண்ணி…”
“எனக்குத் தமிழ்நாட்ல தெரியும். அங்க சொல்லி, அவங்க ஹைதராபாத்ல சொல்லி… இட்ஸ் கொய்ட் காம்ப்ளக்ஸ். இந்த சின்ன கேஸுக்கெல்லாம்…”
“ஓஹ்… ரைட் ரைட், இது ஒனக்கு சின்ன கேஸா?”
“சாரி… சாரி …ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன்டீ. அவங்களுக்கு இது சின்ன கேஸ்.“
“ஓஹ்… அப்ப ரேப் பண்ணியிருந்தா பெரிய கேஸ்.”
“எங்கிட்ட ஏண்டி சண்டைக்கி வர? நிலைமை அப்டித்தான் இருக்கு. அதச் சொன்னேன். “
“சோ… நீ எதுவும் பண்ண மாட்ட… நிலைமையை மட்டும் எடுத்துச் சொல்றதோட உன் ஹஸ்பண்ட் டூட்டி முடிஞ்சிடிச்சி இல்ல?“
“ ஏய்… இப்ப என்னா? என்ன கெளம்பி வந்து அவன அடிக்கச் சொல்றியா?”
“ஏன், அதுல என்ன தப்பு? பொண்டாட்டிய கட்டிப்புடிச்சி இருக்கான்… சுர்ருன்னு கோவம் வந்து வெளுத்து வாங்கறதில்ல ?”
“நான் அவன அடிச்சா, அது ஒரு கேஸ் ஆவும். உன் கேஸ் பின்னால போய்டும். என்னத் தூக்கி உள்ள போடுவானுங்க.“
“சோ … அப்ப பயப்படற “
“ச்சீ … நான் அவன அடிச்சா… அவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? அவன் பண்ணது ஒரு க்ரைம். நான் அவன அடிச்சா அதுவும் ஒரு க்ரைம். “
“அவன் பண்ணுன க்ரைமுக்கு ரியாக்ஷனாதான் உன்ன அடிக்கச் சொல்றேன்.“
“நீ அடிச்சிருந்தாதாண்டி அது ரியாக்ஷன். நான் அடிச்சா அசால்ட். நீதான் பெரிய தைரியமான பொண்ணு ஆச்சே ? எட்டி கொட்டைல எத்திருக்க வேண்டியதுதானே? இல்ல வெளக்குமாறு எடுத்து நாலு சாத்து சாத்திருக்க வேண்டிதானே? ஊர்க்கார பொண்ணுல்லாம் அப்டித்தான் பண்றாங்க . மேட்டர் அப்பவே ஓவர். நீங்க மாடர்ன், ஃபெமினிஸ்ட், தைரியமான பொண்ணு அது இதுன்னு சொல்லிகிட்டு ஜீன்ஸும் ஸ்லீவ்லெஸ்ஸும் போட்டுக்குறீங்க. அதான் உங்க மாடர்ன். ஒரு கெழப்புண்ட வந்து ஏறிருக்கான், அடிச்சி கொட்டைய நசுக்காம என்கிட்ட வந்து வம்பு வளத்துட்டு இருக்க… அப்ப ஏண்டி அப்டி பம்மிட்ட ?”
“ஏய் … ஏண்டா டார்ச்சர் பண்ற… எனக்கு அப்ப ஒண்ணுமே புரிலடா… பேனிக் ஆயிட்டேன்”
“அப்டி ஆவக்கூடாது.“
“வேணும்னா ஆனேன்…எனக்கும் நீ சொன்னதெல்லாம் செஞ்சிருக்கணும்னுதான் தோணுது. அவன் திடீர்னு பாஞ்சப்ப ஒண்ணுமே புரியாம நடுக்கமா ஆயிடிச்சிடா.“
“நீ எப்பவுமே ஒண்ணுல்லாத பிரச்சனைய பெரிய பிரச்சன ஆக்கிடுவ? ஒரு எலி அடிக்கத் தெரியாதா? என்ன மயிருக்கு அவன கூப்ட?”
“நான் அவன கூப்புடல…அவன் பையனதான் கூப்டேன்.“
“எவனா இருந்தா என்னா? எதுக்கு மத்தவன வீட்டுக்குள்ள கூப்புடற?”
“அந் எலி ரொம்ப நாளா டிஸ்டர்ப் பண்ணிட்டு இருந்திச்சி…”
“ஏய், வீடுன்னா எலி இருக்கும். எனக்குல்லாம் எலி இருக்கா இல்லையான்னே தெரியாது. அதப் பாத்தாலும் நான் பாட்டுக்கும் போயிட்டே இருப்பேன். எலி இருந்துச்சாம் ..அத அடிக்கக் கூப்டாளாம்.”
“சரி வுடு , நானே பாத்துக்கறேன்…நீ ஒண்ணும் புடுங்க வேண்டாம்”
“இளிச்ச வாயி நான்தான் . என்ன திட்டு … சரி நாளக்கி வரிக்கும் ஆக்ஷன் இல்லன்னா அந்த எஸ் ஐ நம்பர் குடு. நான் பேசிப்பாக்கறேன்”
“ஒண்ணும் வேணாம்… வையி…”
*******
மறுநாள் எந்த ஆக்ஷனும் இல்லை. வீடு திரும்புகையில் அந்த கிழட்டு நாயின் மகன் என்னை முறைத்துப் பார்ப்பது போல இருந்தது. என் கணவனையும் கொஞ்சம் அலைய வைக்க வேண்டும் என்று தோன்றியது. மட்டுமல்லாமல் அவன் உடனிருந்தால் நன்றாக இருக்கும் என்றும் தோன்றியது. அதனால் அவனுடைய பையன் என்னை முறைத்துப் பார்ப்பதாகவும், தன் ரௌடி நண்பர்களையும் அழைத்து வந்திருப்பதாகவும் பொய் சொன்னேன். நீ கொஞ்சம் கூட இரேன் என்று அழுதேன். அன்றிரவே கடைசி விமானத்தைப் பிடித்து வந்து விட்டான். லேசான சண்டையில் ஆரம்பித்து, ஊடலாக மாறி, கொஞ்சலில் தொடர்ந்தது. பியர், வைன், டக்கீலா என அடித்து புணர்ந்து முடித்து அதிகாலையில்தான் தூங்கினோம்.
தாமதமாக எழுந்தோம். கீழ் வீட்டுப் பெண் மெசேஜ் அனுப்பி இருந்தாள். போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் வந்ததாகவும், அந்த கிழட்டு நாயும் மகனும் சென்றிருப்பதாகவும் அந்தச் செய்தி சொன்னது. இருவரும் இரவு தாமதமாகத்தான் வீடு திரும்பினார்கள் என்றும் அன்று நள்ளிரவு மெசேஜ் அனுப்பி இருந்தாள்.
மறுநாளும் போலீஸ் ஸ்டேஷன் சென்றார்கள். அதே போல இரவு வீடு திரும்பினார்கள். இதற்கும் மறுநாள் எஸ் ஐ எனக்கு போன் செய்தார். இரண்டு நாட்களும் போலீஸ் ஸ்டேஷனில் காக்க வைத்து வெறுப்பேற்றியிருக்கிறார்கள். அவ்வப்போது அடித்திருக்கிறார்கள் என்று அவர் சொன்னதன் மூலம் தெரிய வந்தது. இதை கணவனிடம் சொன்னேன்.
“நான்தான் அப்பவே ஆக்ஷன் எடுப்பாங்கன்னு சொன்னேன் இல்ல? இப்ப திருப்தியா உனக்கு?”
இதில் என்ன எனக்கு திருப்தி? எரிந்துகொண்டிருக்கும் ஒரு புண்ணுக்கு மருந்து போட்டு களிம்பு தடவி விட்டு திருப்தியா என்றா கேட்பார்கள். என் காதல் கணவனே அவ்வப்போது கேனக்கிறுக்கனாக இருப்பது எனக்கு அயற்சியைத் தந்தது. இதைப்போன்ற இவனின் சின்னச் சின்னக் கேனத்தனத்தால் இவன் மேல் எனக்கு வெறுப்பு சின்ன அளவில் உருவாகி அது பூதாகரமாகி விடுமோ என்றும் கவலையுடன் யோசித்தேன்.
மறுநாள் காலை எஸ் ஐ அழைத்தார்.
“அடித்து உதைத்து மிரட்டியாகி விட்டது. பாலியல் பலாத்கார கேஸ் போட வேண்டுமா அல்லது பெட்டி கேஸ் போட்டு விட்டு விடலாமா?“
“என் கணவரிடம் கலந்து விட்டு சொல்கிறேன் சார்“
கணவனிடம் கேட்டேன்.
“நீ என்ன ஃபீல் பண்ற?”
“இல்ல, நீயே சொல்லுடா.“
“அவன் உள்ள போனா இன்னும் கெட்டவனா மாற வாய்ப்பிருக்கு. அவனுக்கான தண்டனை கெடைச்சிடிச்சி. எனக்கு விட்டுடலாம்னு தோணுது. பட், பாதிக்கப்பட்டவ நீதான். உன்னோட ஃபீலிங்க்ஸ் முக்கியம். நீயே டிசைட் பண்ணு “
“விட்டுடலாம்டா.“
போலிஸிடமும் அதையே சொன்னேன். அதற்குள் வீட்டைத் தட்டும் சத்தம் கேட்டது. கணவன் கதவைத் திறக்க நானும் பக்கத்தில் நின்றிருந்தேன். அப்பனும் மகனும் நின்றிருந்தார்கள். உடனே இருவரும் என் கணவன் காலில் விழுந்தார்கள். கணவன் பின்னால் நகர்ந்து கொண்டான்.
எனக்கு எரிச்சலாக இருந்தது. ஏண்டா செனப்பன்னிகளா? என் கால்ல இல்லடா விழணும்? பொம்பள கால்ல வுழ கௌரவம் தடுக்குது. ஆம்பள கால்ல வுழலாம்…. என்றெல்லாம் மனதுக்குள் திட்டிக்கொண்டேன். நாகரீகமான கெட்ட வார்த்தைகளையும் போட்டுத் திட்டினேன். மனதில்தானே? அதற்கென்ன தடை ?
அவர்கள் தெலுங்கிலும் , லேசான ஹிந்தியிலும் சொன்னதன் சுருக்கம் :-
மாபெரும் தவறிழைத்து விட்டார்கள். குடித்து இருந்ததால்தான் இந்தத் தவறு நடந்து விட்டது. இனி ஒரு போதும் இந்தத் தவறு நடக்காது. மன்னித்து கேஸை வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள்.
என் கணவன் தெலுங்கு , ஹிந்தி , ஆங்கிலம் என கலந்து அவர்களிடம் பேசியதன் சுருக்கம் :-
“ குடிச்சிருந்தா அவனோட அம்மாவ ஃபக் பண்ணுவானா?“
இதை என் கணவன், அவர்களுக்கு மொழி புரியாமல் போய் விடப் போகிறது என்ற எச்சரிக்கை உணர்வுடன் கையால் ஆக்ஷன் காட்டி கேட்டான்.
இதை அந்த கிழட்டு நாயின் மகன் சுத்த தெலுங்கில் மொழிபெயர்க்க, அந்த கிழட்டு நாய் மீண்டும் என் கணவன் காலில் விழுந்தான்.
“ஒரே வீட்லதான இருக்கீங்க? இதே ஆள் நாளக்கி குடிச்சிட்டு வந்து உன் பொண்டாட்டிய ஃபக் பண்ணா என்னா பண்ணுவ? இதே மாதிரிதான் ஒன் பொண்டாட்டி கால்ல விழுந்து எங்கப்பன விட்டுடு, குடிச்சதால தெரியாம ஒன்ன ஃபக் பண்ணிட்டான்னு கேப்பியா?“ என்றான் என் கணவன்.
இதையும் மகன் மொழிபெயர்க்க மீண்டும் என் கணவன் காலில் விழும் படலம்.
என் கணவனுக்கு இது ஜாலியாகி விட்டது போல. மீண்டும் அவர்களைச் சீண்டினான்.
“சரி, நானும் குடிகாரன்தான். நான் குடிச்சிட்டு வந்து உன் பொண்டாட்டிய கட்டிப்புடிச்சா வுடுவியா?” என்றான். எனக்கு இது ரசமாக இல்லை. லேசாக கடுப்பு வந்தது.
இதையும் அவன் மொழிபெயர்த்துச் சொல்ல மீண்டும் காலில் விழுந்து எழுந்தனர்.
கடைசியாக வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் என்று சொன்ன கணவன், இனி எந்த ஒரு பெண்ணிடமும் இப்படிச் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினான்.
நான் எஸ் ஐக்கு போன் செய்து கேஸ் வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் என்றேன். செக்ஸுவல் அஸால்ட் கேஸ் போடலம்மா. பெட்டி கேஸ் போட்டிருக்கேன். அதுக்கு மொபைல் கோர்ட்ல ஆஜர் ஆகி ஃபைன் கட்டித்தான் ஆகணும். அதை வாபஸ் வாங்க முடியாது என சொல்லி விட்டார்.
***************
அலுவலகத்தில் இருந்த போது கீழ் வீட்டுப் பெண்ணிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ்.
“நம் அபார்ட்மெண்டில் இஸ்திரி போடுபவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று 30,000 வரை பணம் கறந்திருக்கிறார்கள். கோர்டுக்கு வேறு செல்ல வேண்டும். அங்கும் 20,000 வரை அபராதம் போடுவார்கள். பாவம் , அது அவர் ஒரு வருடம் உழைத்து சம்பாதித்த சம்பாத்தியம். எனி வே …மிக்க நன்றி. “
அந்தப்பெண்ணுக்கும் என் வயது இருக்கலாம். எனக்கு ரத்தம் ஜிவ்வென்று கொதித்தது. கணவனுக்கு அந்த மெசேஜை ஃபார்வேர்ட் செய்தேன்.
அவன் பதில் அனுப்பினான்.
“அவன் செய்தது பாலியல் பலாத்காரம். போலீஸ் ரேப் அட்டம்ப்ட் கேஸ் கொடுக்கச் சொன்னார்கள். நான் தான் வேண்டாம் எனச் சொல்லி விட்டேன். போலீஸ் பணம் வாங்குவதற்கெல்லாம் நான் பொறுப்பேற்க முடியாது. அவனோ அவன் மகனோ நான் போலீஸில் கம்ப்ளெயின்ட் கொடுக்கும் முன்பு என்னிடம் மன்னிப்பு கோரவில்லை. நீங்களோ , உங்கள் அம்மாவோ , ஃபிளாட் செக்ரட்டரியோ , எனக்கு பக்கத்து ஃபிளாட்டில் இருக்கும் பேச்சிலர்களோ யாரும் ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. குறைந்த பட்சம் அவன் மகன் அவனை அறைந்து இருந்தால் கூட நான் விட்டிருப்பேன். எனக்கு பாதுகாப்பாக இருந்தது இந்திய அரசின் சட்டமும் போலிஸும்தானே தவிர நீங்களோ இந்த சமூகமோ அல்ல. இது ஒரு கேடுகெட்ட சமூகம். சட்டமும் போலீஸும் இல்லையென்றால் இந்த சமூகம் எப்போதோ அழிந்து ஒழிந்திருக்கும்.
எளிமையாகக் கேட்கிறேன். இதைக் கேட்க எனக்குமே பிடிக்கவில்லை. ஒரு புரிதலுக்காகக் கேட்கிறேன். இதையே அந்த கிழட்டு நாய் உனக்குச் செய்திருந்தால் நீ என்ன செய்திருப்பாய்? நீ ஒருக்கால் போலீஸுக்குப் போய், நீ அனுப்பிய மெசேஜை நான் உனக்க அனுப்பி இருந்தால் எப்படி எடுத்துக்கொள்வாய?”
இந்த மெசேஜை அப்படியே அவளுக்கு அனுப்பினேன்.
“நோ நோ நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. சும்மா தகவலுக்காகச் சொன்னேன் “ என்று பதிலளித்து விட்டு ஓடி விட்டாள்.
கணவன் மீண்டும் பெங்களூர் சென்று விட்டான். போகும்போது பெப்பர் ஸ்பிரே , தைரியம் , தன்னம்பிக்கை, எச்சரிக்கை , தற்காப்பு என அறிவுரை மூட்டைகளை அள்ளி விட்டுச் சென்றான். இந்த சம்பவத்தில் அவன் என்னுடன் தான் நின்றான். ஆனாலும் இந்தக் கிழட்டு நாய் செய்த காரியத்தாலும் அதன் பின்னான தொடர் உரையாடல்கள் மற்றும் நடந்தேறிய நிகழ்ச்சிகளாலும் சம்மந்தம் இல்லாமல் என் கணவன் மீதே எனக்குச் சற்று காதல் குறைந்திருப்பதை கசப்புடன் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. சில நாட்கள் தனியாக எங்கேனும் செல்ல வேண்டும் என்றும் தோன்றுகிறது.
ஒரே ஒரு திருப்தி தரும் விஷயம் நடந்தது. இன்னொரு எலி வந்தது. வெறி கொண்டவள் போலவும் எலி வேட்டைக்காரி போலவும் அதைத் துரத்தி அடி அடி என அடித்துக் கொன்று விட்டேன். அதன் வாலைப் பிடித்து எடுத்துக்கொண்டு கீழே இறங்கினேன். அவன் இஸ்திரி போட்டுக்கொண்டு இருந்தான். அவன் முன் அதை விசிறி அடித்து விட்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.
மற்றபடி , தினமும் அலுவலகம் சென்று வருகிறேன். நான் வீடு திரும்பும் போது பணிவுடன் தலை குனிந்துகொள்கிறது அந்த கிழட்டு நாய். அவனின் மகன், நான் எதிர்ப்பட்டால் , அதீத போலித்தன்மையுடன் ஒதுங்கி ஓரமாக நின்று கொள்கிறான். இந்தப் போலித்தனங்கள் எனக்குள் இன்னும் பயத்தையே உண்டு பண்ணுகின்றன. என்றேனும் ஒரு நாள் மீண்டும் பாயக்கூடும். பழி வாங்குதல் குணம் மட்டும் அனைத்து மானிடர்களிடமும் எந்தக் களங்கமும் இல்லாமல் இருக்கிறதே தவிர குற்றத்துக்கு வருந்துதல் , திருந்துதல் எல்லாம் இல்லையென்றே சொல்லலாம். நாகரீக மனிதர்கள் இதெல்லாம் எங்களுக்கு இருக்கிறது என்று சொல்கிறார்களே ஒழிய ப ஒரு சமூக கௌரவத்துக்காக சொல்லிக்கொள்கிறார்கள். உண்மையில் மனம் இன்னும் அதற்கெல்லாம் பண்படவில்லை. அதே போல் மன்னிப்பு என்றொரு காமடி இருக்கிறது. அவனை மன்னித்து விட்டேன் என்று சொல்வார்கள். ஒன்று வெற்றி பெற்றவர்கள், போதும் என மன்னிப்பார்கள். அல்லது கையாலாகாத் தனத்தால் மன்னிப்பார்கள். மன்னிப்பு என்ற மாபெரும் விஷயத்தை தங்களுக்கு ஏற்றார் போல ஒரு கருவியாகத்தான் (tool) பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த கிழட்டு நாயை நான் மன்னிக்கவே மாட்டேன். ஆனால் இதன் பொருட்டு இவனை நான் இனி பழி வாங்கவும் மாட்டேன்.
ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தேதான் மீண்டும் இந்தச் சுழலுக்குள் வாழ்ந்து வருகிறேன். வீட்டை மாற்றி விடலாம் தான். ஆனால் அட்வான்ஸ் , நோட்டிஸ் பிரியட் , அலுவலகம் அருகில் இருக்கும் இடங்களென நிறைய நடைமுறைச் சிக்கல்கள்.
இப்போதைக்கு நான் தற்காலிக வெற்றி போல ஒன்றைப் பெற்றிருக்கலாம். ஆனால் இனிதான் நான் கவனமாக இருக்க வேண்டும். காவல்துறையில் புகார் அளித்து தண்டனை வாங்கிக் கொடுத்ததால் நான் புனிதமானவளாகி விடுகிறேன். தைரியமான பெண் என்ற இமேஜோடு சேர்ந்து நேர்மையான பெண் என்ற பிம்பமும் நான் விரும்பாமலேயே வந்து ஒட்டிக்கொள்கிறது.இனி நான் புனிதமானவள். இதனால் இனி நான் இழக்க இருப்பது ஏராளம்.
இனி என்னை உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.
நான் இரவில் தாமதமாக வீடு திரும்பக்கூடாது.
குடித்து விட்டு தள்ளாடியபடி லிஃப்டில் ஏறலாகாது.
பால்கனியில் தம் அடிக்கக் கூடாது.
ஸ்கர்ட் , ஸ்லீவ்லெஸ் போன்ற உடைகள் அணியக் கூடாது.
க்ளீவேஜ் காட்டக் கூடாது.
இது எல்லாவற்றையும் விட இன்னொன்று இருக்கிறது. என் அபார்ட்மெண்டில் இரண்டாவது தளத்தில் இருக்கும் ஒருவனைப்பற்றி இதுவரை நான் எதுவும் சொல்லவேயில்லை. அவன் மீது எனக்கு ஒரு க்ரஷ். அவ்வளவு வசீகரமாகவும் துள்ளலாகவும் இருப்பான். எப்போதேனும் வாய்ப்பு கிடைத்தால் அவனுடன் ஒரு க்ளப் நைட் அல்லது கேண்டில் லைட் டின்னர் அல்லது ….வெளிப்படையாகச் சொல்லி விடுகிறேனே ….டேட்டிங் …இன்னும் வெளிப்படையாகச் சொல்லி விடுகிறேன் …ஓரிரு முறை மட்டும் அவனை போடலாம் என மனதுக்குள் ஒரு சின்ன “நாட்டி” ஆசை இருந்தது. அதை செயல்படுத்தாமல் கூட இருந்திருப்பேன். ஆனால் இப்போது அந்த சின்ன ஆசையைக் கூட கொன்று விட்டேன்.