இளையராஜா

வணக்கம் சாரு ஐயா,

இளையராஜா குறித்தான உங்கள் விமர்சனங்களைப் பல பதிவுகளில் கண்டேன் .மேலும் நீங்கள் பகிர்ந்திருந்த றியாஸ் குரானா(நன்றி:றியாஸ் குரானாவை உங்கள் மூலமாகத்தான் தெரியவரும்) அவர்களின் பதிவையும் கண்டேன். ஆரம்பத்தில் இளையராஜா மீதான உங்கள் விமர்சனங்கள் குறித்து, எனக்கு இவர் யாரையுமே விட்டு வைக்க மாட்டாரா? அனைவருமே விமர்சனம் செய்வாரா? இளையராஜாவின் இசைக்கு என்ன குறை ?என்று தான் தோன்றியது.இசை பற்றிய ஞானம் எல்லாம் எனக்கு கிடையாது.நான் இளையராஜாவின் தீவிரமான ரசிகை. ஆனால் எனக்கு இப்பொழுதுதான் ஒரு விஷயம் துலங்கத் தொடங்கியிருக்கிறது.

இதுவரை திரைத்துறையில் உள்ளவர்களோ நான் நேரில் கண்டவர்களோ இளையராஜாவை விமர்சனம் செய்து பார்த்ததேயில்லை .அவரை ஒரு இசைக் கடவுளாகவே இங்கு பார்க்கின்றனர் .அவரின் சில பாடல்களைக் கேட்கையில் வயல்வெளியில் திரிவது போலவே உணர்வேன்.  அவரின் மூளையிலிருந்து எப்படி தான் இப்படி இசை பிறக்கிறதோ என்று தோன்றும்.  அவரின் இசை அவ்வளவு பிடிக்கும். 

அவரைப் பற்றிய உங்கள் விமர்சனங்கள் பலவற்றைப்  படித்த பிறகு ஆமாம், நமக்கு ஏன் திரை இசையைத் தாண்டி வேறு எந்த இசையுமே தெரியவில்லை?.  தமிழ் திரையிசை என்றால் இளையராஜாவும் ஏ ஆர் ரகுமான் மட்டும் தானா? என்று தோன்றியது. எனக்கு சமீபத்தில் தான்  இளையராஜா இசையமைத்தது என்று எண்ணிக் கொண்டிருந்த சில பாடல்கள் தேவா இசையமைத்தது என்றும் தேவா இசையமைத்த பாடல்கள் என்று நினைத்துக் கொண்டது எஸ்ஏ ராஜ்குமார்  இசையமைத்தது என்றும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்தது என்று நினைத்த பாடல்கள் வித்யாசாகர் இசையமைத்தது என்று  .இப்பொழுது எந்த படத்தில் எந்த பாடல் வெளியானாலும் அது அனிருத் இசை அமைத்ததாகத் தான் இருக்கும் என்று முடிவுசெய்து விடுகின்றனர். திரைப்படங்களில் வரும் பாடல்களைக் கேட்பதைத் தவிர இசைக்குறித்து வேறு எந்த அறிவும் எனக்கோ என் வட்டத்தில் யாரிடமோ நான் கண்டதில்லை .

எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பாட்டி , சிறுவயதில்,” நா செத்தா இப்படி சொல்லி அழு” என்று ஒரு பாட்டைச் சொல்லிக் கொடுத்தார். அதுவும் எனக்கு நினைவில் இல்லை. ஒப்பாரிப் பாடல்கள் பாடும் வழக்கம் கிட்டத்தட்ட எங்கள் பகுதியில் அழிந்தே விட்டது என்று சொல்லலாம். வயல்வெளிகளில் உடல் கலைப்பு போக, பாடும் வழக்கமும்  குறைந்து வருகின்றது.

நான் என் முந்தைய தலைமுறையினர் உடனான தொடர்பு இல்லாததைப் போல் உணர்கிறேன்.இப்போது உள்ள என் தலைமுறையினருக்கு திரை இசை பாடல்களைத் தாண்டி வேற எந்த பாடல்களும் தெரிவதாகத்  தெரியவில்லை. கொரியன் பாடல்களை சிலர் மிகவும் ரசித்து கேட்கின்றனர். இசையில் பொதுவாக சொல்லப்படும் சரணம், பல்லவி போன்ற சொற்களுக்கான அர்த்தம் என்னவென்றே  தெரியாது. எதுவுமே தெரியாமல் இத்தனை நாளாக நான் ஒரு இசை பிரியை என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

உங்களின் இளையராஜா குறித்த விமர்சனங்களை படித்து எனக்கு இன்னொன்று விஷயமும் தோன்றியது. ஆமாம், நமக்கு இசையைத் தாண்டி ஏன் வேற எந்த கலையும் கலைஞர்களையும் பெரிதாக தெரியவில்லை?. கலை மீதான ஆர்வமும் அறிவும் குறைந்து வருகின்ற போக்கை உங்களைப் போன்றவர்கள் சுட்டிக் காட்டும் பொழுது தான் தெரிகிறது .அந்த விமர்சனங்களை உங்கள் மொழியில் வைக்கிறீர்கள். அதனால் நீங்கள் பயன்படுத்தும் மொழியை விட்டுவிட்டு நீங்கள் சொல்ல வரும் கருத்தை சிந்தித்துப் பார்ப்பது நம் கலை ரசனையே மேம்படுத்த உதவும் என்று எண்ணுகிறேன் .தமிழர்களின் நாட்டுப்புற பாடல்கள் குறித்தான உங்கள் கருத்து என்ன?

த.செந்தமிழ்  

அன்புள்ள செந்தமிழ்,

உங்களுக்கு என் எழுத்து பத்துப் பன்னிரண்டு தினங்களாகத்தான் அறிமுகம் இல்லையா?  ஆனாலும் நீங்கள் ஒரு தீவிரமான வாசகி என்பதைப் புரிந்து கொள்கிறேன்.  அதனால்தான் இத்தனை கேள்விகள் எழுகின்றன.  நல்லதுதான்.  தொடர்ந்து படியுங்கள்.  உங்களுடைய அத்தனை கேள்விகளுக்கும் என்னுடைய இணையதளத்திலேயே பதில்கள் உள்ளன.  கடந்த பத்து ஆண்டுகளாக எழுதியுள்ளதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் படியுங்கள். 

இப்போது நான் உங்களுக்கு பதில் சொன்னால் பழைய வாசகர்களுக்கு அது ஏற்கனவே படித்ததாக இருக்கும்.  இருந்தாலும் கேள்விக்கு பதில் சொல்வது என் வழக்கமாகி விட்டதால் சுருக்கமாகச் சொல்கிறேன்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் மேதை என்று சொல்லுமளவுக்கு இருந்திருக்கிறார்கள்.  பாடகர்களும் அப்படியே.  எம்.கே. தியாகராஜ பாகவதர், பி.யு. சின்னப்பா, எம்.எம். தண்டபாணி தேசிகர் தொடங்கி இன்றைய பாடகர்கள் வரை நிறைய பேர்.  இவர்களில் எனக்குப் பிடித்தவர்கள் ஏ.பி. கோமளா, பானுமதி, ஜமுனா ராணி, என்.சி. வசந்த கோகிலம், பி. சுசிலா போன்றவர்கள்.  ஆண் பாடகர்களில் ஏ.எல். ராகவன், ஏ.எம். ராஜா, சிதம்பரம் ஜெயராமன், தாராபுரம் சுந்தர்ராஜன், கண்டசாலா, சந்திரபாபு, பி.பி. ஸ்ரீனிவாஸ் (இவர்தான் எனக்கு ஆகப் பிடித்தவர்), எஸ்.வி. சுப்பையா பாகவதர், திருச்சி லோகநாதன், டி.ஆர். மகாலிங்கம் போன்றவர்கள். 

இசையமைப்பாளர்களில் சி.ஆர். சுப்பராமன், ஜி. ராமனாதன், ஜி.என். பாலசுப்ரமணியன், கே.வி. மஹாதேவன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, விஸ்வநாதன் – ராம்மூர்த்தி, பாபநாசம் சிவன், ஆர். சுதர்ஸனம் என்று பலர் இருந்திருக்கிறார்கள்.  இந்த வரிசையில் இளையராஜாவும் ஒருவர்.  அவ்வளவுதான்.  என் இசை ரசனை பரந்துபட்டது என்பதால் இளையராஜா என்ற ஒருவரோடு என் ரசனை முடிந்து விடவில்லை.  மேலும், நமக்கென்று சில விருப்பு வெறுப்புகள் இருக்கும்தானே?  மணி ரத்னம், கமல்ஹாசன் போன்றவர்களுக்கு இசையமைக்கும் இளையராஜாவை மட்டுமே எனக்குப் பிடிக்கும்.  உதாரணங்கள்: ஹே ராம், குணா. 

மற்றபடி இளையராஜாவை இசை ஞானி என்றெல்லாம் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடும் அளவுக்கு எனக்கு அவர் மீது ஈடுபாடு இல்லை.  என்னால் யாரையும் ஜாதி, மதம் பார்த்து அன்போ மரியாதையோ செலுத்த முடியாது.  அப்துல் கலாம் தன்னுடைய மத அடையாளத்தை ஒதுக்கி வைத்துவிட்டு பிராமண அடையாளத்தைத் தன் அடையாளமாகக் கொண்டதால் அவர் புகழ் மேலும் அதிகமாயிற்று என்பதையும் இங்கே நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், எல்லா சினிமாக்காரர்களையும் போலவே இளையராஜாவும் தன்னை எல்லா விஷயங்களிலும் மேதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.  அதனால்தான் பாப் மார்லியை இளையராஜா குப்பை என்று வர்ணித்தார்.  பாப் மார்லி தன்னுடைய தேசத்துக்காக மட்டுமல்லாமல், உலகில் வாழும் அத்தனை கருப்பின மக்களின் சார்பாகவும் பாடியவர்.  ஒடுக்கப்பட்ட மக்களின் குறியீடு பாப் மார்லி.  அப்படிப்பட்ட ஒரு கலைஞனை அதே போன்றதொரு ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வந்த ராஜா குப்பை என்று சொன்னது ராஜா பிராமணராகி விட்டார் என்பதையே காண்பித்தது.  மட்டுமல்லாமல் ஆந்திர தேசத்தின் பாட்டாளி வர்க்க விடுதலைக்காக பாடிய கத்தாரையும் குப்பை என்று வர்ணித்தார் ராஜா.  ஆனால் ராஜா இசை கற்றுக் கொண்ட்தே கத்தார் போன்ற மற்றொரு பாடகனான பாவலர் வரதராசனிடம்தான்.  அந்தப் பாவலர் வரதராசன் இளையராஜாவின் அண்ணன் என்பது ஒரு நகைமுரண்.  பாவலர் வரதராசன் அந்நாளில் கம்யூனிஸ்ட் இயக்கக் கூட்டங்களில் பாடியவர்.  அவர் கூட இருந்து பாடி இசை கற்றவர் ராஜா.  இப்போது கற்று வந்த இடத்தின் முதுகில் குத்துகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு இளைய ராஜா என்ற மனிதர் மீதே மரியாதை இல்லை.  ஏனென்றால், ராஜாவுக்கு சகமனித மரியாதை இல்லை என்பதுதான். ஏ.ஆர். ரஹ்மானை ஒரு இசை நிகழ்ச்சியில் மேடைக்கு அழைத்து “உனக்கு இசை பொழுதுபோக்கு, எனக்கு சுவாசம்” என்று சொன்னவர் ராஜா.  யாராவது இன்னொரு சக கலைஞனை இப்படிப் பொது நிகழ்ச்சியில் அவமானப்படுத்துவார்களா?  ரஹ்மான் அதைப் பொருட்படுத்தவில்லை.  வழக்கம் போல் சிரித்துக் கொண்டார்.

எல்லாவற்றையும் விடக் கொடுமையானது என்னவென்றால், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த, பாட்டாளி வர்க்கப் பாடகனான கே.ஏ. குணசேகரன் மீது ராஜா வழக்குப் போட்டது.  ஏன் போட்டார்?  குணசேகரன் ராஜா பற்றி ஒரு போற்றிப் புத்தகம் எழுதினார்.  இசை ஞானியே போற்றி!  இசை மேதையே போற்றி!  இசைக் கடவுளே போற்றி! அப்படி ஒரு புத்தகம் அது.  அதில் குணசேகரன் “எங்கள் தலித் இனத்தில் இப்படி விடிவெள்ளி தோன்றியது” என்பது போல் ஏதோ எழுதி விட்டார்.  குணசேகரன் என் ஜாதியைச் சொல்லி எழுதி விட்டார் என்று அவர் மீது வழக்குப் போட்டு விட்டார் ராஜா.  குணசேகரன் அந்த வழக்குக்காக பாண்டிச்சேரிக்கும் சென்னைக்குமாக அலைந்த போது பலமுறை என்னிடம் இதைச் சொல்லி அங்கலாய்த்து இருக்கிறார். 

இப்படிப்பட்டவர்தான் இளையராஜா. 

நீங்கள் நிறைய வாசியுங்கள் செந்தமிழ். 

அன்புடன்,

சாரு