சிற்றிதழ்கள் குறித்து ஒரு கேள்வி

வணக்கம் சாரு ஐயா,
இன்று அருஞ்சொல்லில் வெளியான உங்கள் பேட்டியை வாசித்தேன்.

பேட்டியில் நீங்கள் குறிப்பிட்ட சிற்றிதழ்களின் பெயர்களை எல்லாம் பள்ளியில் தமிழ் பாடத்தில் படித்ததாக ஞாபகம்.அதுவும் நான் தமிழை மொழிப் பாடமாக எடுத்ததால் அதன் பெயராவது தெரிந்தது. இல்லையெனில் அக்காலத்தில் வெளிவந்த சிற்றிதழ்களின் பெயர்கூடத் தெரிந்திருக்காது.
இலக்கிய இதழ்கள் நடத்த எழுத்தாளர்கள் சந்தித்த இன்னல்களையும் அவ்விதழ்கள் அக்கால எழுத்துலகில்  ஏற்படுத்திய தாக்கத்தையும் அப்பேட்டியில் விரிவாகக் கூறியிருந்தீர்கள். குறிப்பாக  ” இலக்கிய வெளிவட்டம்” என்ற சிற்றிதழ் நடத்திய ஜெனகப்ரியா அவர்களைப் பற்றிய உங்கள் குறிப்பு எனக்கு வியப்பாக இருந்தது.
காலமாற்றத்திற்கேற்ப எழுத்தாளர்கள் பலரும் தங்களுக்கென ஒரு ப்ளாகை உருவாக்கி அதில் எழுதி வருகின்றனர். வாசகர்கள் அதனை உபயோகிக்க எளிதாக இருந்தாலும் அக்கால இலக்கிய இதழ்கள் அளவிற்குத் தரமானதாகவும் அதிக எண்ணிக்கையில் இப்போது வாசிக்கிறார்கள் என்றும் எண்ணுகிறீர்களா? இன்றும் அச்சுப் பதிப்பில் வரும் சிற்றிதழ்களுக்கான எதிர்காலம் குறித்தான உங்கள் கருத்து என்ன?
நன்றி
த.செந்தமிழ்

அன்புள்ள செந்தமிழ்,

உங்கள் கேள்விகளுக்கெல்லாம் மற்றவர்கள்தான் பதில் கண்டுபிடித்துக் கூற வேண்டும். அல்லது, நீங்கள் சொல்லுங்கள், நான் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், பல சிறு பத்திரிகைகள் இன்று தொகுப்பாக வந்து கொண்டிருக்கின்றன. எழுத்து தொகுப்பு கிடைக்கிறது. கசடதபற கிடைக்கிறது. நிறப்பிரிகை தொகுப்பு கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

இன்றைய இணைய தளங்களையும் அன்றைய சிறுபத்திரிகைகளையும் நான் ஒப்பிட மாட்டேன். முடிந்த வரை எதிர்மறைக் கருத்துக்களைத் தவிர்க்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஏனென்றால், நாற்பத்தைந்து ஆண்டுகளாக நான் எதிர்மறை விமர்சனங்களை வைத்திருக்கிறேன். போதும் என்று தோன்றி விட்டது. ஆனால் ஒரு விஷயம் நிச்சயம். அச்சுப் பதிப்பில் வரும் சிற்றிதழ்கள் ஒருபோதும் நிற்காது. இப்போது கூட புது எழுத்து, உன்னதம் போன்ற சிற்றிதழ்களும், உயிர்மை, காலச்சுவடு போன்ற இடைநிலை இதழ்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

சாரு