வரும் இருபத்தெட்டாம் தேதி இங்கிருந்து ஹைதராபாத் வரை விமானத்தில் சென்று விட்டு, பிறகு இருபத்தொன்பதாம் தேதி ஹைதராபாதிலிருந்து கோவாவுக்கு நண்பர் கணபதியின் காரில் செல்வதாக ஏற்பாடு. வழியில் ஹம்ப்பியில் இரண்டு நாள் தங்கலாமா என்று கேட்டார் சீனி. என் வீட்டில் சீனியோடு நான் பேசுவதற்குத் தடை என்பதால் போன் சாட் மூலம்தான் உரையாடல். ஓ தங்கலாமே, இரண்டு நாட்களுக்கும் ஹம்ப்பியில் வேலை இருக்கிறது என்றேன். மற்றவர்களாக இருந்தால் ஓகே என்று விட்டு விடுவார்கள். சீனி எழுத்தாளராக மாறிய பிறகும் பிடியை விடவில்லை. ஹம்ப்பியில் குடிப்பதற்குத் தடை உண்டு சாரு என்றார். ஆஹா, அப்படியானால் ஒரே ஒரு பகல் போதும் என்று சொல்லி விட்டேன். ஏனென்றால், நான் இப்போது வீட்டை விட்டு வெளியே வருவதே வைன் அருந்துவதற்காகத்தான். ஏனென்றால், நாவல் எழுதும் பொருட்டு காலையில் எட்டு எட்டரையிலிருந்து இரவு பத்தரை வரை பதினெட்டாம் நூற்றாண்டு கெஸட்டுகளையும், சென்ஸஸ் ரிப்போர்ட்டுகளையும் ஆய்வு செய்து கொண்டும் குறிப்புகள் எடுத்துக் கொண்டும் இருக்கிறேன். இடையில் யாரோடும் பேசுவது கூட கிடையாது. வெளியிலும் செல்வது இல்லை. நாவல் எழுத வேண்டும் என்றால் இப்படி ஒரு தனிமைச் சிறை போட்டுக் கொண்டால்தான் முடியும். அதே சமயம் மூளையும் சிதைந்து விடாமல் இருக்க மாதத்தில் இப்படி ஒரு நாலு நாள் வெளியே போய் வைன் அருந்தவும் வேண்டும். அதனால்தான் ஹம்ப்பி ஒரு பகல் போதும் என்று சொல்லி விட்டேன்.
சீனி எனக்கு ஒரு கொடுப்பினை. மற்றவர்களாக இருந்தால் நீங்கள்தானே இரண்டு நாள் என்று சொன்னீர்கள் என்று சொல்லி என்னைத் தாளித்திருப்பார்கள்.
பின்குறிப்பு: கார் ஓட்ட வேண்டும் என்பதால் கணபதியும் சீனியும் இரவில் குடிக்க மாட்டார்கள். ஆனால் எனக்குக் கார் ஓட்டத் தெரியாது என்பதாலும் மேலே சொன்ன கசப்பான காரணங்களாலும் இரவு பகல் எந்நேரமும் வைன் அருந்திக் கொண்டாடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.