இன்று மூன்றரை மணிக்கு…

இன்று அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் மூன்றரை மணிக்கு உரையாற்றுகிறேன். ஐந்து மணிக்கு எஸ்.ரா. பேசுவதால் சரியாக மூன்றே முக்காலுக்கு ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

நல்ல முறையில் உரையாற்றும் எழுத்தாளர் பட்டியலில் என் பெயரை யாரும் சேர்ப்பதில்லை. நாற்பது ஆண்டுகள் கழித்துத்தான் என்னை எழுத்தாளர் பட்டியலிலேயே சேர்த்திருக்கிறார்கள். கொரோனா காலத்தில் சுமார் எட்டு முறை நான்கு மணி நேரம் தொடர்ந்து உரையாற்றியிருக்கிறேன். காலை ஆறு மணிக்குத் தொடங்குவேன். இடையில் தண்ணீர் கூட அருந்தாமல் ஒன்பது வரை உரையாற்றுவேன். ஒன்பது மணிக்குக் கேள்வி நேரம் ஆரம்பிக்கும்போதுதான் தண்ணீர் குடிப்பேன். பத்து மணி வரை போகும் உரையாடல். காலையில் ஆறு மணிக்குத் தொடங்கி ஒன்பது வரை தங்கு தடையின்றிப் பேசுவதெல்லாம் பேச்சு இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாம் ஸூம் மூலம் நடந்ததால் அதை பேருரை என்று எடுத்துக் கொள்ளவில்லை போல.

போகட்டும். இன்றைய என்னுடைய பேச்சு மிக முக்கியமானதாக இருக்கும். ஆம். மிக முக்கியமானதாக. இரண்டு விஷயங்கள் பற்றிப் பேச இருக்கிறேன். இரண்டைப் பற்றியுமே இதுவரை எழுதியதில்லை. பேசியதும் இல்லை. இப்போது கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பொறி தட்டியது. ஷ்ருதி டிவியில் கேட்டுக் கொள்ளலாம் என்று இருந்து விடாதீர்கள். பேச்சு என்பது நிகழ்த்துக் கலை. அதை நேரில் கேட்பதுதான் நல்லது.

வந்து விடுங்கள்.