with you, without you

நான் சுமார் இருபது ஆண்டுகளாக ஒரு விஷயத்தை வலியுறுத்திச் சொல்லி வருகிறேன்.  ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்று நண்பர்களுக்குப் புரிந்ததா என்று கூட எனக்குத் தெரியவில்லை.  இலங்கைத் தமிழர் பிரச்சினை உலகமெல்லாம் தெரிய வர வேண்டும் என்றால் அங்கிருந்து நல்ல காத்திரமான இலக்கியம், சினிமா என்ற இரண்டும் சர்வதேசத் தரத்தில் வர வேண்டும்.  ஏனென்றால், பாலஸ்தீனம், லெபனான் போன்ற பகுதிகளில் நடக்கும் போராட்டங்களை அங்கே உள்ள கலைஞர்கள் சர்வ தேச அளவில் சர்வ தேசத் தரத்தில் முன்வைக்கிறார்கள்.  ஆனால் இலங்கைத் தமிழர்களிடமிருந்து அப்படிப்பட்ட படைப்புகள் சர்வதேசத் தரத்தில் வெளிவரவில்லை.  அறவே இல்லை என்று சொல்லவில்லை.  ஷோபா சக்தி போன்ற ஒன்றிரண்டு படைப்பாளிகள் மட்டுமே போதாது என்கிறேன்.  அதிலும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி வந்துள்ள படங்கள் அனைத்தும் குப்பை.  மணி ரத்னத்தின் படத்தையும் சேர்த்தே சொல்கிறேன்.  இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி சர்வதேசத் தரத்தில் ஒரு படம் வந்திருந்தால் கூட அது பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்.  ஈழத் தமிழர்கள் அடைந்த வரலாற்றுக் கொடுமைகளை நாம் ஆவணப் படங்களின் மூலமே அறிந்தோம்.  ஆனால் சிங்கள மொழியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா?  அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளையும் மீறி, அரசாங்கத்தின் அடக்குமுறையையும் மீறி அவர்கள் சர்வதேசத் தரம் வாய்ந்த இலக்கியத்தையும் சினிமாவையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  இதைத்தான் நான் 20 ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  அது என்னய்யா சர்வதேசத் தரம்?  எங்கள் மணி ரத்னம் கொடுத்த கன்னத்தில் முத்தமிட்டால் சர்வதேசத் தரம் இல்லையா என்று என்னிடம் பல அன்பர்கள் எப்போதுமே கேட்டு வருகிறார்கள்.

இன்று ஒரு சிங்களப் படைப்பாளி எடுத்த சிங்களப் படமான with you without you படத்தைப் பாருங்கள்.  சர்வதேசத் தரம் என்று எதை அர்த்தப்படுத்துகிறேன் என்று உங்களுக்குப் புரியும்.  ஒரு வட இந்தியப் பத்திரிகையாளர் ஒரு பிரபலமான தமிழ்ப் போராளியைச் சந்தித்தார்.  போராளி மிகப் பெரிய படிப்பாளி என்று அவருக்குச் சொல்லப்பட்டது.  போராளியிடம் பத்திரிகையாளர் கேட்கிறார் என்ன என்ன புத்தகங்கள் படிப்பீர்கள்… உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் யார்?  இதே கேள்வியை ஒருவர் ஃபிடல் காஸ்ட்ரோ என்ற போராளியிடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டார்.  ஃபிடல்  சொன்ன பதில் கார்ஸியா மார்க்கேஸ், கார்லோஸ் ஃபுவெந்தெஸ் போன்ற உலகத் தரமான படைப்பாளிகள்.  நம் போராளி சொன்னார் நான் குமுதம் விகடன் எல்லாம் படிப்பேன்.    சாண்டில்யனின் கடல் புறா, அகிலனின் சித்திரப் பாவை எல்லாம் ரொம்பப் பிடிக்கும்.

இதுதான் காரணம்.   இன்றைய திரையிடலுக்கு வாருங்கள் என்று உங்களை அழைக்கிறேன்.  எங்கே எப்போது என்ற விபரங்கள் முந்தைய பதிவில் உள்ளது.  with you, without you கதை, ஒரு தமிழ்ப் பெண்ணுக்கும் ஒரு சிங்கள இளைஞனுக்கும் உள்ள காதலை அடிப்படையாகக் கொண்டது.  தஸ்தயேவ்ஸ்கியின் ஒரு சிறுகதையைத் தழுவியது.  என்ன கதை என்று தெரியவில்லை.

with you, without you சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறது.

 

Comments are closed.